சாக்ரடீஸ், ஷேக்ஸ்பியர், நியூட்டன், ஐன்ஸ்டீன், பெர்னார்ட்ஷா போன்ற பெருமக்களை ‘மேதைகள்’ என்று உலகம் போற்றுகிறது. இந்த மேதைகளின் சிந்தனைகளும், கருத்துகளும் மனித அறிவு உச்ச நிலையை எட்டி இருக்கின்றன என்பதை எடுத்துக்காட்டுகின்றன. விஞ்ஞானம், இலக்கியம் போன்ற துறைகளில் மட்டுமன்று, தத்துவத் துறையிலும் அத்தகைய மேதைகள் தோன்றியுள்ளனர். அவர்களுடைய கருத்துகள் புரட்சிகரமானவையாக விளங்குகின்றன. அவர்கள் அறிவில் எவ்வளவுதான் மேம்பட்டு விளங்கினாலும், அறிவின் எல்லைக்கு உட்பட்டவர்களே. அறிவின் எல்லையைக் கடந்து செல்ல வேண்டுமானாலும், எண்ணங்களின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட வேண்டும்.