Skip to main content
Karmayogi

Main navigation

  • Home
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home
  2. அன்னையின் தரிசனம்
  3. பாகம் 2

08. ஆன்மீக ஒளியும் கர்மப் பலனும்

‘பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய் கழல்கள் வெல்க’ என்பது திருவாசகம். பிறப்பு கர்மத்தால் ஏற்பட்டது. முற்பிறவியின் கர்மமே இப்பிறப்பு. பிறவியிலிருந்து இறைவனின் திருவடி நீழல் விடுதலை அளிக்கும். அத்திருவடிகளைக் கனவிலிருந்து தரிசிக்க வள்ளலார் அவாவுகின்றார். அதற்கும் அவன் கருணை வேண்டும் அன்றோ? ‘கண்ணேறு படுமென்றோ கனவிலேனும் காட்டென்றால் காட்டுகிலாய்’என்று வெதும்பிப் பாடுகின்றார் இராமலிங்க அடிகளார். பிறப்பிலிருந்து விடுபடுவது தவத்தின் நோக்கம். தவ முயற்சி பலித்தால், பிறப்புக்குக் காரணமான கர்மா கரைந்துவிடுகின்றது. அதனால், ‘ரிஷிகளைக் கர்மா பாதிக்காது’ என்பார்கள்.

‘புல்லாகி, பூடாகி, பல் விருகமாகி..... மனிதன் பிறப்பெடுத்தான்’ என்பது திருவாசகம். ‘தசாவதாரம்’ என்பது பூமியின் வரலாற்றைக் கூறுவது. ‘இறைவன் பூமியில் இது வரை 9 முறை அவதரித்து, சிருஷ்டிக்குத் தலைமை தாங்கி, அதன் போக்கை நிர்ணயித்தான்’ என்பதே இதன் பொருள்.

சிருஷ்டி மனிதனுடன் முடிந்துவிடவில்லை. மனிதனுக்கு அப்பால் ஓர் அவதாரம் உண்டு. தானாக அது நடைபெற வேண்டுமானால், பல இலட்ச வருடங்களாகும். மனிதன் உலகில் உற்பத்தியாவதற்கும், அதற்கு முந்தைய சிருஷ்டிக்கும் நடுவில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் இடைவெளி இருந்தது. அதே போல அடுத்த அவதாரம் தோன்றுவதற்கும் பன்னெடுங்காலம் ஆகலாம். ஆனால் இன்று இறைவன் வரும் தருணம். இது இறைவனுடைய நேரம் (Hour of God).

மனிதன் மோட்சத்திற்காகவே தவத்தைச் செய்கின்றான். அதற்கு மாறாக, இறைவனின் திருவுள்ளத்தைப் பூர்த்தி செய்வதற்காக மட்டுமே தவம் செய்தால், அவதாரத்தைச் சிருஷ்டி செய்ய முயன்றால் அந்தத் தவம் 300 ஆண்டுகளில் பலிக்கும். ‘இறைவனுக்கு ஏற்ற கருவிகளாக 12 பேர் அமைந்தால், இன்றே அந்த அற்புதம் நடக்கும்’ என்று ஸ்ரீ அரவிந்தர் கூறுகின்றார். அந்த யோகத்திற்கு ‘பூரண யோகம்’ என்று அவர் பெயரிட்டிருக்கின்றார்.

அந்தப் பூரண யோகம் அவருக்கும், அதற்கு அடுத்த கட்டத்தில் அன்னைக்கும் பலித்தது. அவர்கள் இறைவனின் கருவிகளாக மட்டுமே செயல்பட்டார்கள். ‘அந்த யோக சித்தியின் முழுப் பலன் பூவுலக மாந்தர் அத்துணைப் பேருக்கும் கிடைக்காத வரையில், தங்கட்குத் தனிப் பலன் தேவை இல்லை’ என்ற இலட்சியத்தை மேற்கொண்டு, பூவுலகம் அப்பலனை விரைவில் பெறுவதற்காக, அவர்கள் தம் யோகத்தை சூட்சும உலகிலிருந்து தொடர முடிவு செய்து, சமாதியானார்கள்.

இவை எல்லாம் யோகம்; தத்துவம். ‘பிறவியிலிருந்து விடுபட்டால், கர்மம் அழிந்துபோகின்றது’ என்பதை நாம் அறிவோம். பிறவியை அடுத்த சிருஷ்டிக்கு எடுத்துச் செல்லும் இந்த யோக சக்திக்குக் கர்மத்தை முழுமையாக அழிக்கும் வல்லமை உண்டு. கர்மத்தை அழிக்காமல் கர்மத்தால் எடுத்த பிறவியை என்ன செய்யலாம்? கர்மத்தை அனுபவிக்கலாம். பிறவியின் அடிப்படைக் கூறுகள் அறவே அழிக்கப்பட்டால்தான், பிறவியைத் தோற்றுவித்த கர்மம் கரைந்தால்தான், அதிலிருந்து அவதாரம் பிறக்கும். யோகத்தின் குறிக்கோள் அதுவேயாதலால், இந்த யோக சக்திக்குக் கர்மத்தின் வேரை அறுக்கும் திறன் முழுமையாக உண்டு.

தவம் இறைவனை நோக்கி மனிதன் செல்லும் ஞானப் பாதை. அருள், இறைவன் மனிதனை நோக்கி வரும் செயல். இறைவன் வரும் தருணமான இன்று இறைவன், ‘மனிதன் தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என விரும்பி, மனிதனை நோக்கி விரைந்து வருகின்றான். இத்தகைய நலம் பயக்கும் தருணத்தில், ஆயிரம் ஆண்டுகளில் நடக்கக்கூடியவை கண நேரத்தில் நடக்கும்.

அன்னை, இறைவனின் சக்தி. அன்னை, இறைவனின் திருவுள்ளத்தை மனிதனுடைய பிறவியில் இட்டு நிரப்புவதற்காக ஆர்வத்துடன் செயல்படுகின்றார். அன்னையை ஏற்றுக்கொண்டவர்களின் வாழ்க்கையில் நடக்கும் செயல்களுக்கு மேற்சொன்ன பெரிய தத்துவங்களின் சாயல் உண்டு. அதாவது, மனிதனுடைய கர்மம் கரைந்துபோகின்றது. நெடுநாள் முயன்று பெற வேண்டியவை ஒரே நாளில் கிடைக்கின்றன. கேட்டது கிடைக்கின்றது; கேட்டதற்கு அதிகமாகவும் கிடைக்கின்றது; கேளாதவையும் கிடைக்கின்றன. மனிதன் உப்பு, புளி, மிளகாய், துணி, பணம் என்று மட்டுமே கேட்கப் பழகிக்கொண்டு இருக்கின்றான். மீதி அவனுக்குத் தெரியாது; தோன்றாது. ஸ்ரீ அரவிந்தர் அவனை நோக்கி, ‘இது உயர்ந்த யோகச் சக்தி. நீ எது வேண்டுமானாலும் கேட்கலாம். ஆனால், ‘எனக்கு இறைவன் மட்டுமே தேவை’ என்று கேட்பது ஒன்றுதான் சிறந்தது’ என்கிறார்.

யோகியின் தவமும், சாதாரண மனிதனின் நோன்புகளும் வாழ்வின் சிறப்பான பெருமுயற்சிகள். அன்னையை ஏற்றுக்கொள்பவர்கள் முழுமையாக அன்னையின் தெய்வ நிலையை உணர்ந்து ஏற்றுக்கொண்டால், அன்னையின் சக்தியும், அருளும் பேரளவில் திரண்டு அவர்கள் வாழ்க்கையில் இடையறாது செயல்படும். ஆனால் மனிதனால் அன்னையைப் பூரணமாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. எப்படிப் பூரணமாகப் புரிந்துகொள்வது? உண்மையான பக்தனுக்கும்கூட, பரம்பரை பரம்பரையாக ஊறிப்போன தியானம், மந்திரம், ஸ்தோத்திரம் ஆகியவற்றில் பூரண நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் அவன் மந்திரம் ஜபிக்கின்றான்; தியானம் செய்கின்றான்; அன்னையின் மீதுள்ள பக்தி உணர்ச்சிபூர்வமாகவும், பவித்திரமாகவும் இருந்தாலும், ஒரு மந்திரத்தை ஜெபித்தால்தான் அவனுக்கு நிம்மதியாக இருக்கின்றது.

ஆனால் இந்த மரபு வழிப் பழக்கங்களுக்கு அப்பால் செயல்படுகின்றது அன்னையின் அருள். அதற்கு இவை எல்லாம் தேவையில்லை. என்றாலும், மனிதன் இதை உணரமாட்டான். அவனுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிற விதத்தில்தான் அவனால் உணர முடியும். ‘தெய்வத்தைச் சேர்வதற்கு மந்திரம், தியானங்கள் அவசியமில்லை’ என்று கூறினால் வெறுப்பான்; அல்லது சொன்னவர்களை வெறுப்பான். இவற்றை எல்லாம் கருதி, மனிதனால் விட முடியாதவற்றை அவனுடைய உண்மையான பக்தியைப் போற்றி அப்படியே ஏற்றுக்கொண்டு, அவன் கோரியதற்கு ஏற்றவாறு மந்திரங்களை எழுதிக் கொடுக்கிறார் அன்னை. மேலும் வாரம் தவறாமல் தியானக் கூட்டங்களுக்கும் ஏற்பாடு செய்கின்றார்.

கர்மத்தைக் கரைக்க அன்னை கையாளும் முறைகள் பல. ஆணவம் கர்மத்தின் உறைவிடம். ஆகையால், ‘ஆணவத்தை முழுமையாகக் கரைத்துவிட வேண்டும்’ என்றார் அன்னை. அப்படிக் கரைந்துவிட்ட பிறகு கர்மம் தங்கிச் செயல்பட ஒரு முக்கியமான இடம் இல்லாமல் போய்விடுகின்றது அன்றோ?

ஜீவாத்மா ஆணவ மலத்தால் மூடப்பட்டிருக்கின்றது. யோகிக்கு தன் தவச் சிறப்பால் ஆண்டவனை அல்லது பராசக்தியை அடைய முடியும் என்ற நிலை ஏற்படும்பொழுது அவனது ஜீவாத்மா இறைவனை நோக்கிச் செல்கின்றது. முடிவில் வெற்றி பெறுகின்றது. வெற்றி கிட்டியவுடன் ஜீவனுக்கு ஒரு விஷயம் புரிகின்றது. ‘நான் என் மீது படிந்துள்ள கறையை நீக்காமல்தான் இருப்பேன். என்றாலும், தவச் சிறப்பினால் இறைவனை அடைந்தேன். நான் இடம் விட்டுப் பெயர்ந்து இங்கு வந்தபோதிலும்கூட, இன்னும் ஆணவத்தின் பிடியில்தான் இருக்கின்றேன். அதை மீறிச் செயல்பட என்னால் முடியவில்லை’ என்பது தான் ஜீவன் புரிந்துகொண்ட விஷயம்.

ஜீவன் இவ்வாறு கழிவிரக்கம் கொண்டு வாடும்பொழுது, ஆணவம் வேறொரு கதியில் விரைந்து, கிடைத்திருக்கும் பெரிய சக்தியை, இறைவனுடைய சக்தியை, கொண்டு தன் பெருமைகளைப் பூர்த்தி செய்யத் தொடங்குகின்றது.

இந்த ஆபத்தைத் தவிர்ப்பதற்கு உபாயம் கூறுகின்றார் ஸ்ரீ அரவிந்தர்: ‘ஜீவாத்மா சக்தியை நோக்கிப் போவதற்குப் பதிலாக, அந்த ஜீவாத்மாவின் மீதுள்ள கறையைக் கரைக்க பக்தன் முயல வேண்டும்’ என்கிறார்.

அவனுடைய முயற்சி பலித்து, ஜீவாத்மா கறையிலிருந்து விடுபட்டு விட்டால், சக்தி ஜீவனை நோக்கி வருகின்றது. அந்த நிலையில் அங்கு ஆணவம் இல்லை. இனி இறைவனின் திருவுள்ளமே செயல்பட முடியும். இது யோகத்திற்காக ஸ்ரீ அரவிந்தர் வகுத்த முறை. அதைப் பின்பற்றும்பொழுது மனிதனுடைய கர்மம் தானாகவே கரைந்துபோகின்றது. தன் உறைவிடத்தை இழந்து, உரிமையை இழந்து, கடைசியில் தன் உயிரையே இழந்து, தொலைந்துபோகின்றது கர்மம்.

கர்மம் வெளிப்பட மனிதனிடம் உள்ள கருவிகள் மூன்று. அவை: ஆணவம், குணச் சிறப்புகள், சுபாவம். ஆணவத்தை இழந்தால், கர்மம் பேர் அளவில் குறைந்துபோகும். யோகம் பலித்த நிலையில் ஆணவம் முழுவதும் அகலும்.

ஒருவர் அன்னையை ஏற்றுக்கொண்டவுடன், அவர் எந்த அளவு ஏற்றுக் கொண்டாரோ, அந்த அளவில் அன்னையின் ஒளி அவரை வந்து அடைகின்றது. அவ்வொளி ஆணவத்தின் ஆணிவேரை அரிக்க ஆரம்பிக்கின்றது. ஆணிவேரை அன்னையின் ஒளி அழிக்க முயன்றாலும், மனித சுபாவம் என்றும்போல் செயல்படுவதால், அதன் துணையை விடாப்பிடியாகப் பற்றிக்கொண்டு கர்மம் பிழைத்து இருக்கும். இதுவே குண இயல்புக்கும் பொருந்தும்.

எல்லாருக்கும் கோபம் வருகிறது. கோபம் எப்பொழுதுமே நன்மை விளைவிப்பதில்லை. ‘சுபாவம்’ என்பது கோபத்தின் மூலம்தான் வெளிப்படுகின்றது. ஒருவனுக்கு ஒரு வகையான கர்மம் இருந்தால், அந்தக் கர்மம் தான் வெற்றி அடைவதற்குக் கோபத்தைக் கருவியாகக் கொண்டால், அந்தக் குறிப்பிட்ட மனிதருக்குக் கோபமானது மற்றவர்களுக்கு விளைவிப்பதைப் போலன்றி, கர்மப்பலனை விளைவிக்கும்; பெரிய பாதகமான விளைவுகளை உண்டு பண்ணும். அன்னையின் ஒளி காரணமாகக் கர்மம் வேரிலேயே பலம் இழந்திருந்தாலும்கூட, அவருக்குக் கோபம் வரும்வரையில் கர்மம் ஓரளவு பாதகமான பலன்களையே தந்துகொண்டிருக்கும். கர்மப்பலனை விலக்க வேண்டுமானால், முதலில் அவர் கோபத்தை விலக்க வேண்டும்.

யார்தான் சூதாடவில்லை? மன்னர்கள் சூதாட்டத்தை ஒரு பொழுது போக்காகவே வைத்துக்கொண்டிருந்தார்கள். அவர்களில் யாருக்கும் ராஜ்யங்கள் போகவில்லை. ஆனால் தர்மனுக்கு மட்டும் ராஜ்யம் போயிற்று, ஏன்? அவனுக்கு ‘சூது’ என்றால் மிகவும் விருப்பம். விருப்பம் இழப்பாயிற்று. அவனுடைய கர்மா, சூது மூலம் பலித்து, அவனை அலைக்கழித்தது.

வீறாப்பாகப் பேசுபவர் பலர். அதனால் வெற்றி அடைந்தவர்களும் உண்டு; அவமானப்பட்டவர்களும் உண்டு. ஒருவருடைய கர்மம் வீறாப்பின் மூலம் வெளிப்படுமானால், கிடைப்பது அதன் (கர்ம) பலனாக இருக்கும். கர்மத்திலிருந்து விடுபட ஆணவத்தை விலக்குவது போல், எந்தச் சுபாவத்தின் மூலம் தனது கர்மம் வெளிப்படுகின்றதோ, அந்த சுபாவத்தை விலக்க முன்வர வேண்டும். கர்மம் கெட்ட சுபாவத்தின் மூலம்தான் வரும் என்பதில்லை; நல்ல சுபாவத்தின் மூலமும் வெளிப்படும். கொடை பெரிய குணம். கர்ணனுக்கு மிஞ்சிய கொடையாளி இல்லை. ‘குரு க்ஷேத்திரப் போரில் பாண்டவர் வெல்ல வேண்டுமானால், கர்ணன் மடிய வேண்டும். அது ஒருக்காலும் நடக்கப்போவது இல்லை. ஏனென்றால், கர்ணனின் மார்பிலிருந்த கவசமும், காதுகளிலிருந்த குண்டலங்களும் உள்ள வரையில் அவன் உயிரைப் பறிக்க முடியாது. ஆகவே, அவனிடமிருந்து அவற்றைப் பறிக்க வேண்டும்’ என்று முடிவு செய்த கிருஷ்ணன், இந்திரனை அந்தணன் வேடம் தாங்கச்செய்து, கர்ணனிடமிருந்து குண்டலங்களை தானமாகக் கேட்கிறான். ‘அவற்றைக் கொடுத்தால் தன் உயிர் போய்விடும்’ என்று தெரிந்துகொண்டே, ‘இல்லை’ என்று சொல்லி அறியாத கர்ணன், அந்தணனுக்குக் கவச, குண்டலங்களை அறுத்துத் தருகிறான். பின்னர் போர்களத்தில் அர்ச்சுனன் அம்பால் கர்ணன் வீழ்ந்தபோது, அவன் உயிரை ‘தர்மம்’ கவசமாக இருந்து காக்க, கிருஷ்ணர் அந்தணர் வடிவிலேயே சென்று அதைக் கேட்க, தர்மப்பலனைத் தாரைவார்த்துக் கொடுக்கிறான். அடுத்த கணம் அவன் உயிர் பிரிகின்றது.

கொடுப்பது கர்ணனின் சுபாவம். அது சுபாவங்களில் சிறந்த சுபாவம். ஆனால், அதுவே கர்ணனின் மரணத்திற்குக் காரணமாக அமைந்துவிட்டது. ஆக, சுபாவத்தின் மூலம் கர்ணனுடைய கர்மம் தன்னைப் பூர்த்தி செய்து கொண்டுவிட்டது.

தன்னால் கட்டுப்படுத்த முடியாத எந்தச் சுபாவத்தின் மூலமும் கர்மம் வெளிப்படும். பூரண யோகத்தில் ஆணவம் கரைக்கப்படுவது போல, சுபாவத்தை ஒதுக்கி, இறைவனின் கடமையை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனால்தான் தன் சுபாவத்தை விட்டு மீள்வதற்கு பக்தன் எடுத்துக்கொள்ளும் எந்த ஒரு முயற்சிக்கும் அன்னை பெரும்பலன் அளிக்கின்றார்.

யோக சித்தி பெறுவது பெரிய விஷயம். அந்த உச்சியிலிருந்து இறங்கி வந்து கர்மத்திலிருந்து விடுபடக்கூடிய சிறிய இலட்சியத்தை ஒரு சாதாரண மனிதன் மேற்கொள்வதாக இருந்தால், அவன் என்ன செய்ய வேண்டும்?

  1. அன்னையை அறிவால் புரிந்து மனத்திலும், உணர்வால் பெருக்கி நெஞ்சிலும், இலட்சியமாக விரித்து வாழ்விலும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    68 வயதான அன்னையின் அன்பரும், ‘அமுதசுரபி’ வாசகருமான ஒரு பெரியவர், தம் வீட்டுத் தோட்டத்தில் நின்றுகொண்டு வானை நோக்கி, அன்னையை நினைந்து, பிறகு தம்மை மறந்து, உணர்ந்து, நெகிழ்ந்து, பல விதமான உந்துதல்களுக்கு ஆளாகி இருந்தபொழுது, வானில் வைரத்தோடு அளவில் ஓர் ஒளி தோன்றி அவரை நோக்கி வந்து அவரது புருவங்களின் மத்தியில் (ஆக்ஞா சக்கரம்) புகுந்து, அவரோடு ஐக்கியமாயிற்று. அவரைப் போன்ற நெகிழ்ந்த உணர்வு மிகுந்த அன்னையின் அன்பர்களுக்கு, அது போன்ற அரிய அனுபவம் கிடைக்கின்றது. அன்னை அந்த நேரத்தில் அந்தப் பெரியவருக்கு சூட்சுமப் பார்வையைக் கொடுத்ததால், அந்த ஒளி அவர் கண்களுக்குத் தெரிந்தது. மற்ற அன்பர்களுக்கும் இதே பலன் உண்டு. என்றாலும், அந்த ஒளி அவர்கள் கண்களுக்குத் தெரிவதில்லை.

  2. அன்னையை ஏற்றுக்கொண்ட பிறகு எண்ணங்கள் சிறப்பு அடையும்; உணர்ச்சிகள் கட்டுப்படும்; சுபாவம் பக்குவத்திற்கு ஆளாகும். நாம் அந்த மாறுதல்களுக்குத் துணை செய்யும் விதத்தில் செயல்பட வேண்டும்.
     
  3. அவ்வாறல்லாமல் எண்ணங்களும், உணர்ச்சிகளும், சுபாவமும் முனைப்பாக இருந்தால், நாம் நெறிபிறழாது நின்று, அவற்றின் பிடியில் இருந்து விலக முனைய வேண்டும்.

தவறு செய்து அதனால் கஷ்டப்படுகிறவர்கள், ‘என்ன செய்வது? என் நேரம். நேரத்திற்கேற்ப புத்தி. அதனால் நான் இந்தத் தவற்றைச் செய்துவிட்டேன். இப்பொழுது அதன் பலனை அனுபவிக்கிறேன்’ என்பார்கள்.

லோக சஞ்சாரம் செய்துகொண்டிருந்த மகாவிஷ்ணுவும், மகாலட்சுமியும் தம் பக்தனான ஓர் ஏழைக்கு உதவ முன்வந்து, அவன் நடந்து வந்துகொண்டு இருந்த பாதையில் ஒரு தங்கக்கட்டியைப் போட்டார்கள். அந்தச் சமயத்தில் அந்த ஏழைக்கு ஒரு விசித்திர எண்ணம் தோன்றியது. ‘குருடன் எப்படி நடப்பான் என்று பார்க்கலாமா?’ என்று எண்ணி, கண்களை மூடிக்கொண்டு நடக்க ஆரம்பித்தான். அதனால் பாதையில் கிடந்த தங்கக்கட்டியை அவனால் பார்க்க முடியாது போயிற்று. கடவுள் கொடுக்கத் தயாராக இருந்தாலும், விதி அவனை அனுபவிக்க விடவில்லை.

விதி வலிது. அவதாரப் புருஷனான இராமனின் முன் மாயமான் தோன்ற, சீதை அதைப் பார்த்து ஆசைப்பட, விதி அவர்களைக் கொண்டே தன் வேலையைச் செய்து முடித்துவிட்டது.

விதியானாலும், கர்மமானாலும் மனிதனுடைய ஒத்துழைப்பின்றிச் செயல்பட முடியாது. அன்னை அப்படிப்பட்ட நேரங்களில் தம் பக்தனுக்குத் துணை செய்கின்றார். ஆனால், அவனுடைய ஒத்துழைப்பு இல்லாமல் அன்னையால் செயல்பட முடியாது. பக்தன் பண்பட்ட பாத்திரமாக இருந்து, அன்னையின் அருள் செயல்படுவதற்கு முழுமையாக உதவ வேண்டும்.

இளைஞர் ஒருவர் அன்னையிடம் தீவிர ஈடுபாடு கொண்டவர். தம் வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக அன்னையின் பிடிக்குள் சென்றுகொண்டு இருப்பதை அவர் ஒவ்வொரு கணமும் உணர்ந்தார். அன்னையின் நாமாவே அவரின் ஸ்மரணையாயிற்று.

ஒரு நாள் அவருடைய மைத்துனன் கிராமத்திலிருந்து வந்திருந்தான். அவன், அவருடைய மனைவியையும் குழந்தையையும் தன்னுடன் அழைத்துப் போக விரும்பினான். அதற்கு அவரும் ஒப்புதல் கொடுத்தார்.

அவர் ஒரு வியாபாரி. ஒவ்வொரு நாளும் கடைக்குப் புறப்பட்டுப் போகும் பொழுது சமாதிக்குச் சென்று சற்று நேரம் தியானம் செய்வது அவர் வழக்கம். அன்றும் அவர் வழக்கம் போல சமாதிக்குச் சென்று தியானம் செய்தார். தியானத்தில் ‘குழந்தையை ஊருக்கு அனுப்பாதே!’ என்று ஒரு குரல் கூறியது. அதை அவர் அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை. வீட்டுக்கு வந்தார். பிரயாணத்தைப் பற்றிப் பேச்சு எழுந்தது. தியானத்தில் கேட்ட அதே குரல், ‘குழந்தையை ஊருக்கு அனுப்பாதே!’ என்று எச்சரித்தது. அப்படி ஒரு முறை, இரு முறை அல்ல, பிரயாணம் பற்றிப் பேசும்போதெல்லாம் பல முறை எச்சரித்தது. ஆனாலும், அந்த அன்பர், ‘ஒப்புக்கொண்ட பிறகு குழந்தையை அனுப்பமாட்டேன் என்று கூறுவது நல்லதன்று’ என்று நினைத்தார். உள்ளிருந்த குரல் அதை வேகமாக மறுத்தது என்றாலும், அவர் குரலை மறுத்து, குழந்தையை ஊருக்கு அனுப்பினார். மறுநாள் குழந்தை இறந்துவிட்டதாகச் செய்தி வந்தது.

கர்மத்திலிருந்து காப்பாற்ற இவ்வாறெல்லாம் வழிகாட்டுவார் அன்னை. ஆனால் நம் சுபாவத்திலிருந்தும், மூட இயல்புகளிலிருந்தும் விடுபட்டால்தான் அன்னை தரும் பலன்களை நாம் முழுமையாக அடைய முடியும்.

*****

Book traversal links for 08. ஆன்மீக ஒளியும் கர்மப் பலனும்

  • 07. மானஸீக உருவம்
  • Up
  • 09. சேவையின் பெருமை

Book navigation

  • அன்னையின் திருவடிகள்
  • பாகம் 1
  • பாகம் 2
    • 01. கேளாமலேயே கொடுக்கும் தெய்வத்தாய்
    • 02. சத்திய ஜீவியம்
    • 03. அன்னையின் வழியில் அன்றாட வாழ்க்கை
    • 04. உன்னைத் தேடி வரும் அன்னை
    • 05. அன்னையின் அருளும் பொருளும்
    • 06. சூட்சுமப் பார்வை
    • 07. மானஸீக உருவம்
    • 08. ஆன்மீக ஒளியும் கர்மப் பலனும்
    • 09. சேவையின் பெருமை
    • 10. ஸ்ரீ அரவிந்தரின் பரிபூரண யோகம்
    • 11. பூர்ண யோகி ஸ்ரீ அரவிந்தர்
    • 12. ஆதாரச் சுருதி
    • 13. கண்ணொளி
    • 14. ஒரு விவசாயியின் அனுபவம்
    • 15. அன்னையும் அன்பர்களும்
    • 16. வாய்ப்பும் வேதனையும்
    • 17. வீடும் விடிவும்
    • 18. ஓர் அமெரிக்க அன்பரின் அனுபவம்
    • 19. தரிசனமும் தகவல்களும்
    • 20. ஆங்கிலப் பரீட்சை
    • 21. அன்னையும், அமுதசுரபி வாசகர்களும்
RSS feed
Powered by Drupal