Skip to main content
Karmayogi

Main navigation

  • Home
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home
  2. அன்னையின் தரிசனம்
  3. பாகம் 2

18. ஓர் அமெரிக்க அன்பரின் அனுபவம்

அன்னையைப் பற்றி ஓர் அமெரிக்க அன்பர் எனக்கு ஒரு குறிப்பை எழுதி இருந்தார். அது அவருடைய சொந்த அநுபவத்தை அடிப்படையாகக் கொண்டது. அன்னையின் அன்பர்கள் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற விருப்பத்தால், அந்த அன்பரின் குறிப்பை அப்படியே தருகின்றேன்.

‘நான் கல்லூரிப் படிப்பை 1976இல் முடித்துக்கொண்டேன். அமெரிக்காவில் வாழும் அன்னையின் பக்தர்கள் சிலர் இணைந்து, அன்னை, ஸ்ரீ அரவிந்தர் கருத்துகளின் அடிப்படையில் தம் சொந்த வாழ்க்கையையும், தொழிலையும் நடத்தி வந்தார்கள். நான் அவர்களோடு மூன்று ஆண்டுகளைக் கழித்த பிறகு, அவர்களை விட்டு விலகிச் சென்று சொந்தத்தில் தொழில் ஒன்றைத் தொடங்கினேன்.

என் வாழ்க்கையிலும், தொழிலும் அன்னை-ஸ்ரீ அரவிந்தர் கருத்துகளைப் பக்திசிரத்தையோடு கடைப்பிடித்து வந்தேன். அன்னையை நினைத்துக்கொண்டு வியாபாரம் செய்வதற்கும் பெரும் வேறுபாடு இருப்பதை அநுபவத்தின் மூலம் உணர்ந்தேன். ஆகவே அன்னையை அனைவரது நெஞ்சிலும் இருத்தி, வியாபாரத்தைச் செய்து வந்தேன். இரண்டு ஆண்டுகளில் என்னுடைய வியாபாரம் 50 சதவிகிதம் உயர்ந்தது. மூன்றாம் வருடத்தில் அது 100 சதவிகிதமாகவும், நான்காம் வருடத்தில் 175 சதவிகிதமாகவும் பெருகிவிட்டது. சொந்த வியாபாரத்தைத் தொடங்கிய இரண்டாம் ஆண்டில், என் இடுப்பை ஒட்டிய முதுகுப்புறத்தில் திடீரென்று ஒரு வலி ஏற்பட்டு என்னை வாட்ட ஆரம்பித்துவிட்டது. அப்பொழுது என் ஆரோக்கியம் மிக நன்றாகவே இருந்தது. பிறகு எப்படி வந்தது இந்த வலி? புரியவில்லை. தொழில் காரணமாக மிக அதிக நேரம் வாகனத்தை ஓட்டியாக வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் எனக்கு. அதனால் வலி அதிகமாகி, நான் பெருந்துன்பத்தை அநுபவித்தேன். ஆயிரக்கணக்கில் பணத்தைச் செலவிட்டு மருத்துவம் செய்து பார்த்தேன். ஆயினும் வலி கூடியதே தவிரக் குறையவில்லை. அதுவரை முதுகுப்புறத்தில் மட்டுமே இருந்த வலி, வலப்புற இடுப்பிலும், வலக்காலிலும் பரவி என்னைச் சித்திரவதைப்படுத்தியது.

பகலில் இயல்பாக என்னால் செயலாற்ற முடியவில்லை. இரவிலும் என்னால் உறங்க முடியவில்லை. அதன் பிரதிபலிப்பு என் தொழிலில் தெரிந்தது. விளைச்சலாய்ப் பெருகி வந்த என் வியாபாரம், விபரீதமான இழப்பை நோக்கி நலிந்துகொண்டிருந்தது. எனக்கு வாழ்க்கையில் சோர்வும், வெறுப்பும் ஏற்பட்டு விட்டன.

இந்த நிலையில் எனக்கு அறிமுகமான அன்னையின் பக்தர் ஒருவர், இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு வந்திருந்தார். அவர் வந்தது 1983 ஆகஸ்ட் மாதம். அச்சமயம் என்னைச் சந்தித்த அவர், ‘ஓர் இந்திய நிறுவனம், ஓர் அமெரிக்க நிறுவனத்தோடு வணிக ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ள இருக்கிறது. இந்திய நிறுவனத்தின் சார்பில் யாரேனும் ஓர் அமெரிக்கர் அந்த அமெரிக்க நிறுவனத்தில் சிறிது பயிற்சி பெற வேண்டும். பயிற்சி முடிந்தவுடன் அந்த அமெரிக்கர் இந்தியாவுக்கு வந்து அங்குள்ள நிறுவனத்தில் பணியாற்ற வேண்டும். நீங்கள் ஏன் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளக் கூடாது’ என்று கேட்டார்.

‘மந்தமாகிக்கொண்டு வரும் சொந்தத் தொழிலை விட்டால் தவிர, புதிய பொறுப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. அது என் எதிர்காலத்தைச் சிறப்பாக அமைக்குமா? வருவாயைப் பெருக்குமா?’ என்ற கேள்விகள் அலைகள் போல் என்னுள் எழுந்தன. சற்று நேரச் சிந்தனைக்குப் பின்பு அந்த அலைகள் ஓய்ந்தன. ‘தேடி வரும் புதிய வாய்ப்பு லாபகரமாக அமையும். அது மட்டுமன்று, புதுவைக்குச் சென்று அன்னை-ஸ்ரீ அரவிந்தர் சமாதியையும், ஆசிரமத்தையும் தரிசிப்பதற்கு இதன் மூலம் வழி பிறக்கும்'.

இந்தியாவில் உள்ள அன்னையின் அன்பர்களைப் பற்றிக் கடந்த ஏழெட்டு வருடங்களாக நிறையக் கேள்விப்பட்டு வருகிறேன். இந்த வாய்ப்பை ஏற்றுக் கொள்வதன் மூலம் அந்த அன்பர்களை எல்லாம் நேரில் கண்டு அளவளாவி மகிழலாம். அதோடு, மறைமுகமான ஓர் எதிரியைப் போல எக்காலமும் என்னை வாட்டி, வதைக்கும் முதுகு வலிக்கு (கடவுளே! வலி முதுகில் மட்டுந்தானா! வலப்புற இடுப்பில்; வலக்காலில்) இந்திய மருத்துவர்களிடம் சிகிச்சை செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். என் நண்பரிடம் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக வாக்களித்தேன்.

நான் ஏற்றுக்கொண்ட அந்தப் பொறுப்பின் காரணமாக 1984, பிப்ரவரி 22ஆம் தேதி அன்று சென்னைக்கு வந்து சேர்ந்தேன். சென்னையில் என் நண்பர் வீட்டில் நான் ஐந்து நாள்கள் தங்கினேன். பிப்ரவரி 28ஆம் தேதி நானும், நண்பரும் புதுவைக்குப் புறப்பட்டுச் சென்றோம். மறுநாள் (பிப்ரவரி 29ஆம் தேதி) ‘ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்தில் தரிசன நிகழ்ச்சி இருக்கின்றது’ என்பதை அங்கே கேட்டவுடன் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

29ஆம் தேதியன்று விடியற்காலையில் அன்னையார் தங்கி இருந்த அறைக்குச் சென்று வழிபட்டேன். மறுநாள் சென்னைக்குத் திரும்பினேன். அதற்குப் பிறகு சென்னையில் நான்கு மாதங்கள் கழிந்துவிட்டன. இதற்கு நடுவில் ‘சென்னையில் யாரேனும் மருத்துவ நிபுணர்கள் இருக்கிறார்களா?’ என்று பலரிடமும் நான் விசாரித்தேன். ‘அத்தகைய மருத்துவ நிபுணர்கள் யாரும் சென்னையில் இல்லை’ என்ற பதில்தான் எல்லாரிடமிருந்தும் கிடைத்தது.

நான் சென்னையில் உள்ள அன்பர் மூலமாகப் புதுவையில் உள்ள வேறோர் அன்பரிடம், ‘என்னுடைய வலி குணமாக ஏதேனும் வழி உண்டா?’ என்று கேட்டு அனுப்பி இருந்தேன். அதற்கு அந்தப் புதுவை அன்பர், ‘சிறிது காலம் அவர் புதுவைக்கு வந்து தங்கியிருப்பது நல்லது’ என்று யோசனை கூறியிருந்தார்.

அவர் யோசனையை ஏற்று நான் புதுச்சேரியில் போய்த் தங்கினேன். ஒவ்வொரு நாளும் ஆசிரமத்துக்குச் சென்று அன்னை-ஸ்ரீ அரவிந்தர் சமாதியின் அருகில் நீண்ட நேரம் அமைதியாக அமர்ந்திருந்தேன். அப்பொழுது என் உடலில் எந்த இடத்தில் வலி மையப்பட்டு இருந்ததோ, அந்த இடத்தில் அன்னையின் திருவுருவைக் கற்பனையால் தோன்றுமாறு செய்வேன்.

அன்னையின் அருள் ஒளி அங்கெல்லாம் பாய்ந்து பரவுவது போலவும், வலியிலிருந்து நான் முழுமையாக விடுதலை பெற்றுவிட்டது போலவும் உணர்வதாக எண்ணிக்கொள்வேன். அதோடு கூட, என்னை வதைக்கும் வலி எந்தச் சூழ்நிலையில் ஏற்பட்டது என்பதையும், அது வருவதற்குக் காரணமாக இருந்த என்னுடைய செயல்களையும், அது சம்பந்தப்பட்ட மற்றவர்களின் தொடர்புகளையும் நினைவுகூர்ந்து, அவற்றை அன்னையிடம் சமர்ப்பிப்பேன்.

அதன் காரணமாக அந்த வலி என்னிடத்தில் தோன்றிய சமயத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி எனக்கு ஞாபகம் வந்தது. அப்போது நான் ஒரு நபரை அடிக்கடிச் சந்திக்க நேர்ந்தது. என் மீது அவருக்கு அளவில்லாத கோபமும், பொறாமையும் இருந்தன. அவர் என்னைச் சந்திக்கும்போதெல்லாம் என் மீது இந்த இரண்டையும் அளவில்லாமல் வாரிக் கொட்டுவார். அப்போது எனக்குக்கூட, ‘அவர் காட்டுகிற கோபமும், பொறாமையும் நியாயமானவையே!’ என்று தோன்றும். உண்மையில் அவர் என் மீது கோபமும், பொறாமையும் கொள்ள எந்த ஒரு நியாயமும் இல்லை. என்றாலும், எங்கள் சந்திப்பின்போது ‘அவர் காட்டுகிற கோபமும், பொறாமையும் நியாயமானவையே!’ என்று எனக்குத் தோன்றுகின்ற எண்ணத்தை என்னால் தவிர்க்க முடியவில்லை.

நினைவுகூர்ந்தபோது இந்த எண்ணம்தான் என்னிடத்தில் வலி ஏற்படத் தூண்டுகோலாக அமைந்தது என்பது புரிந்தது. மேலும் ஒரு நிகழ்ச்சி என் நினைவில் வந்து நின்றது. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னால் என் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியது. அதனால் என் முதுகெலும்பு சிறிது இடம் பிறழ்ந்துவிட்டது. மருத்துவச் சிகிச்சைக்குப் பிறகு அது சரியாகிவிட்டதைப் போல் தோன்றியது. ஆனால் அது சரியாகவில்லை; சதியாகி இருக்கிறது. ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, அது என் மீது கடுமையான தாக்குதலைத் தொடங்கி இருக்கிறது. ஆக ஒரு கோபக்கார, பொறாமை பிடித்த மனிதரின் பொல்லாத உணர்வுகளை நியாயம் என எண்ணிய என் நினைவு, ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்ட என் மோட்டார் சைக்கிள் விபத்து ஆகிய இரண்டுமே என்னுடைய வலிக்குக் காரணங்கள் எனப் புரிந்தது.

இந்த விவரங்களை எல்லாம் ஒவ்வொன்றாக அன்னையிடம் சமர்ப்பித்து வந்தேன். இதன் மூலம் என்னுடைய வலி சிறிது சிறிதாகக் குறைவதை உணர்ந்தேன். இமைப்பொழுதும் நீங்காது என்னை இம்சிக்கும் அந்த வலி, ஒரு நாள் இரவு 8 மணியளவில் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போய்விட்டது. நீங்காத வலி நீங்கியபொழுது, எனக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. தடைகள் எல்லாம் நீங்கிய நிலையில் சுதந்திரமாக வானவீதியில் பறப்பது போன்ற ஒரு பரவச உந்தல். மூன்று மணி நேரம் நீங்கிய வலி முற்றும் நிரந்தரமாக நீங்குவதற்கு வாய்ப்பு இருக்கின்றது என்ற நம்பிக்கை என்னுள் பிறந்துவிட்டது'.

அந்த அமெரிக்க அன்பரின் குறிப்பு, அன்னையின் அனைத்து அன்பர்களுக்கும் பொதுவானது. அன்னையின் அருளைப் பெறுவதற்கு நம்பிக்கை முக்கியம். இப்பொழுது நாம் எந்த ஒரு துன்பத்தை அநுபவித்தாலும், அதற்கான விதைகளை ஏதோ ஒரு காலத்தில் நாம்தாம் விதைத்திருப்போம். அந்தத் துன்ப விதைகள் முளைக்கக் காரணமாக இருந்த நம் எண்ணங்களையும், செயல்களையும் நினைவுகூர்ந்து, அவற்றை முற்றிலும் களைந்தெறிய வேண்டும். அன்னையின் அருள் விரைந்து செயல்பட, மாசு படிந்த சிந்தனைகளையும் செயல்களையும் போக்கிக்கொள்ள வேண்டியது மிக மிக முக்கியம்.

*****

Book traversal links for 18. ஓர் அமெரிக்க அன்பரின் அனுபவம்

  • 17. வீடும் விடிவும்
  • Up
  • 19. தரிசனமும் தகவல்களும்

Book navigation

  • அன்னையின் திருவடிகள்
  • பாகம் 1
  • பாகம் 2
    • 01. கேளாமலேயே கொடுக்கும் தெய்வத்தாய்
    • 02. சத்திய ஜீவியம்
    • 03. அன்னையின் வழியில் அன்றாட வாழ்க்கை
    • 04. உன்னைத் தேடி வரும் அன்னை
    • 05. அன்னையின் அருளும் பொருளும்
    • 06. சூட்சுமப் பார்வை
    • 07. மானஸீக உருவம்
    • 08. ஆன்மீக ஒளியும் கர்மப் பலனும்
    • 09. சேவையின் பெருமை
    • 10. ஸ்ரீ அரவிந்தரின் பரிபூரண யோகம்
    • 11. பூர்ண யோகி ஸ்ரீ அரவிந்தர்
    • 12. ஆதாரச் சுருதி
    • 13. கண்ணொளி
    • 14. ஒரு விவசாயியின் அனுபவம்
    • 15. அன்னையும் அன்பர்களும்
    • 16. வாய்ப்பும் வேதனையும்
    • 17. வீடும் விடிவும்
    • 18. ஓர் அமெரிக்க அன்பரின் அனுபவம்
    • 19. தரிசனமும் தகவல்களும்
    • 20. ஆங்கிலப் பரீட்சை
    • 21. அன்னையும், அமுதசுரபி வாசகர்களும்
RSS feed
Powered by Drupal