ஸ்ரீ அரவிந்தரும், அன்னையும் தமிழ்நாட்டைத் தம் இருப்பிடமாகத் தேர்ந்தெடுத்தது தமிழ் மக்கள் செய்த தவப்பயனாகும்.
ஸ்ரீ அரவிந்தர் யோக சாதனையின் மூலம் இவ்வுலகை உய்விக்கத் தம் வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்டார். ஆனால் அம்மகான் தம்முடைய பணியை ‘யோகம்’ என்று குறிப்பிடுவதில்லை. அதனை ஒரு ‘சக்தி’(force) எனக் குறிப்பிடுவார். ஸ்ரீ அரவிந்தரை ஏற்றுக்கொள்பவரிடம் இந்தச் சக்தி (force) செயல்படுகின்றது. அதன் மூலம் அளப்பரிய ஆற்றலும், அளவற்ற நன்மைகளும் கிடைக்கின்றன.
அன்னை, ஸ்ரீ அரவிந்தரின் யோக சக்தியை அருள் வடிவாக்கி, அதனை மண்ணுலக மாந்தரின் சோதனைகள் நிறைந்த வாழ்வில் சென்று பரவவும், அவர்களின் சோதனைகள் எல்லாம் சாதனைகளாக மலரவும் திருவுள்ளம் கொண்டவர்.
அன்னையைத் தெய்வமாக உணர்ந்து தம் ஆன்மாவில் ஏற்றுக் கொள்பவர்கள், ஆன்ம விளக்கம் பெறுவதுடன் வாழ்வில் சிறப்புகள் அனைத்தையும் பெறுவார்கள்.
அன்னையின் அருளைத் தமிழகம் பெறுவதற்கு ‘அமுதசுரபி'யில் வெளியாகிக்கொண்டிருக்கும் அன்னையைப் பற்றிய கட்டுரைகளைப் படித்த ஆயிரக்கணக்கான வாசக அன்பர்கள் அன்னையின் அருளால் தம் இடர்களில் இருந்து விடுபட்டுச் சிறப்பான நன்மைகளை அடைந்திருக்கின்றார்கள்; அடைந்துவருகின்றார்கள்.
அன்னையின் அருளால் ‘அமுதசுரபி’ வாசகர்கள் பெற்ற பெரு வாழ்வினையும், பெறற்கரிய சிறப்புகளையும் மற்ற எல்லா அன்பர்களும் பெறவேண்டும் என்ற நோக்கோடு, ‘அமுதசுரபி’யில் வெளியான சில கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூலாகக் கொண்டுவரப்படுகின்றது.
இந்த நூல் தோன்றுவதற்கு ஆல் போல் தழைத்துதவிய ‘அமுதசுரபி’ வெளியீட்டாளர்களான ஸ்ரீராம் டிரஸ்ட்டையும், பதிப்பாளர் திரு. ஏ.வி.எஸ். ராஜா அவர்களையும், ஆசிரியர் டாக்டர் விக்கிரமன் அவர்களையும் நன்றியோடு நினைவுகூர்கின்றேன்.
இல்லம்தோறும் ‘அன்னை தரிசனம்’ பரவி, எல்லாரும் எல்லாச் சிறப்புகளையும் பெற்றுய்ய அன்னையைப் பிரார்த்திக்கின்றேன்.
-கர்மயோகி