Skip to main content
Karmayogi

Main navigation

  • Home
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home
  2. அன்னையின் தரிசனம்
  3. பாகம் 2

07. மானஸீக உருவம்

அன்னையை வழிபடச் சிறந்த முறையை, ‘நினைவே வழிபாடு’ என நான் சொல்வதுண்டு. ‘மனத் தூய்மையும், பக்குவமுமே அடிப்படை நிபந்தனைகள்’ என்பதால், நினைவு, தூய்மையைச் சிறப்பாக்குகிறது. நெஞ்சம் தியானத்தில் நிறைவது போல் நிறைகின்றது. வழிபாட்டின் குறிக்கோள் அளவு கடந்து பூர்த்தியாகிறது.

இது பொதுவான உண்மை. சில பக்தர்களுக்கு மனம் எப்பொழுதுமே அன்னையிடம் நிலைத்திருப்பதுண்டு. அன்னையைக் கண்ட காட்சி கண் முன்னே நிற்கும். அன்னையின் அறை, அன்னையின் சமாதி, அன்னையின் பல படங்கள், அன்னை நடந்த இடங்கள் போன்ற எதுவுமே கண்ணையும், கருத்தையும் விட்டகலா. அவர்களில் சிலருக்கு அன்னையை நேரில் பார்ப்பதைவிட, மனத்தில் காண்பதே சிறப்பாகவும் இருப்பதுண்டு. மனம், மனக்காட்சி, மன நினைவு தீவிரம் பெற்று உண்மைக்குச் சமமாகவும், மேலாகவும் இருக்கும் தன்மையைப் பெற்றவர்களுக்கு மானஸீக வழிபாடு சிறந்தது. அவர்கள் அதில் லயித்துப்போவது உண்டு. வழிபாட்டு முறைகள் பல. அவற்றில் இதுவும் ஒன்று. இத்தன்மையான மானஸீக உருவகம் அமைந்துள்ளவர்களுக்கு இம்முறை சிறந்தது.

அன்னையின் பெயரை நினைப்பதற்குப் பதிலாக அன்னையின் உருவத்தை நினைப்பதே இம்முறையாகும். நினைவு நிறைந்து நெகிழும்போது நினைவில் வரும் அன்னையின் உருவம் படம் போலல்லாது, நிஜ உருவமாகவே மாறிவிடும். சிறப்பான நேரங்களில் அவ்வுருவம் ஒளிமயமானதாகவே மாறிவிடும்.

அக்காட்சி, சிந்தனையைச் சிறப்பாக்கி, சிந்தனையிலேயே நம்மை லயிக்க வைக்கும் க்ஷண நேரம் தோன்றி மறைவதுண்டு. சில கணங்களுக்குத் தொடர்ந்து காட்சி அளிப்பதும் உண்டு. அக்காட்சி நிலையானதாகவே மாறி, கண்களை மூடினால் தெரியும் காட்சியாகவும் ஆவதுண்டு. கடைசிக் கட்டத்தில் கண்களைத் திறக்கும்பொழுது அன்னையின் ஜோதிமயமான உருவம் நிலையாகக் கண் எதிரே எப்பொழுதும் இருப்பதுண்டு.

பக்தனுக்கு அதைவிடப் பெரியது ஒன்றில்லை. அதை ஒரு சித்தியாகக் கொண்டு தம்மை மறந்து, அந்நிலையில் தம்மை இழந்திருப்பவரும் உண்டு. சிலருக்கு அன்னையின் பாதம், விரல்கள், தலை உச்சி, இதேபோல் தோன்றுவது உண்டு.

இத்தகைய திறமையுள்ள சிலர், தமது தியானத்தையே மானஸீக வழிபாடாக மாற்றிக்கொள்வார்கள். இவர்கள் அன்னையுடன் இரண்டறக் கலக்க மானஸீகமாக சூட்சுமத்திலும், மனத்திலும், நெஞ்சிலும், உடலிலும், ஆன்மாவிலும் முயன்றால் பலிக்கும்; பலன் அபரிமிதமாக இருக்கும்.

தலைக்கு மேலுள்ள சகஸ்ரதளத்திலிருந்து மூலாதாரம் வரை ஆக்ஞா சக்கரம், மணிபூரகம், அநாகதம் போன்ற ஏழு சக்கரங்கள் நம் சூட்சும உடலில் இருப்பதாகக் கூறுவதை நாம் அறிவோம். ஆனால் அன்னை, ‘12 சக்கரங்கள் உள்ளன. காலிலும், காலுக்க் கீழும் சக்கரங்கள் இருக்கின்றன’ என்கிறார்.

அவற்றுள் ஏதாவது ஒரு சக்கரத்தில் அன்னையை உருவகப்படுத்தி நினைத்தால், அவ்வுருவம் உயிர் பெற்று, ஒளி பெற்று, காட்சி தந்து, நிலைத்து விட்டால், அது பெரிய முதற் கட்டமாகும். அன்னையின் அற்புதக் காட்சியில் நாம் திளைத்திருக்கும்பொழுது, சில சமயங்களில் அன்னையின் உருவம் பகவான் ஸ்ரீ அரவிந்தர் உருவமாகவும் மாறுவதுண்டு. அன்னையின் சூட்சும உடல் ஸ்ரீ அரவிந்தராகவே மாறிவிடுவதால், நம்முடைய சூட்சுமப் பார்வையில் தெரியும் அன்னையின் உருவம் அதனுள் உள்ள சூட்சுமத்தையும் வெளிப்படுத்துவதுண்டு. ஒவ்வொரு சக்கரத்திலும் இது போன்ற காட்சியைப் பார்க்க முயன்று, பூர்த்தி செய்தால், நம் சூட்சுமச் சக்கரங்கள் அனைத்தும் அன்னையால் நிரம்பப்பெற்றது ஆகும். அதன் வழியே நம் சூட்சும தேகம் முழுவதும் அன்னையால் (Mother's Consciousness) நிரம்ப வாய்ப்புண்டு. சூட்சும தேகத்தில் ஒரு செயல் பூர்த்தியானால், பின்னர் அது ஸ்தூல தேகத்தில் நடைபெறும்.

அன்னையின் ஒளியை, சக்தியை (Consciousness), உருவத்தை மனத்தில், புத்தியில் நிலையாகக் காண்பது சிறப்பு. ஆனால் அது எளிதன்று. அது நிலைத்துவிட்டாலோ நாம் பேசுவதற்குப் பதிலாக நம் மனத்தில் உள்ள அன்னையின் ஒளியைப் பேசச் சொல்லலாம். சுலபமாகக் கற்றுக்கொள்ளக்கூடிய முறை இல்லை அது; பலிப்பது கஷ்டம்; பலித்தாலும் ஓரளவே பலிக்கும். மனத்தின் வெளிப்பாடான பேச்சு முழுதும் அன்னையின் வெளிப்பாடானால், புத்தி ஜோதி மயமாகும். அதுவும் அன்னையின் ஜோதி மயமாகும். இது உயர்ந்த நிலை. நாம் பேச ஆரம்பிக்கும்பொழுது நம் எண்ணத்தைப் பேசுகிறோம். சமர்ப்பணம் செய்துவிட்டால், அன்னையை நினைத்து நம் எண்ணத்தைப் பேசுகிறோம். சமர்ப்பணம் செய்துவிட்டு நாம் பேசுவதற்குப் பதிலாக, நம் மனத்தில் உள்ள அன்னையின் ஒளி பேச நாம் காத்திருந்தால், பொதுவாக பேச்சு எழாது. நாம் பேசலாம், அல்லது பேசாமல் இருக்கலாம். மாறாக, ‘அன்னையின் ஒளி பேசட்டும்’ என முனைந்திருந்தால், ஓரிரு சொற்கள் வெளிவரும். அவை தெளிவாக இருக்கும். அதைப் பயின்று மேலும் மேலும் முயன்றால், அநுபவிக்கலாம்.

இதே பயிற்சியை நெஞ்சில் அன்னையை நினைத்து, நம் உணர்வு வெளிப்படுவதற்குப் பதிலாக, ‘அன்னையின் ஜோதி வெளிப்படுத்தும் உணர்வே வெளிப்படட்டும்’ என முயன்றால், முயற்சி வெற்றி பெற்றால், சிறிதளவு வெற்றி பெற்றாலும், அது பெரிய பாக்கியம். உடல் எல்லாம் பூரித்து, உள்ளுணர்வு எல்லாம் வெள்ளப்பெருக்கெடுக்கும் ஒளியாகி, மனத்தின் சிறுமை எல்லாம் கரைந்து, இன்பப் பெருக்கில் நாம் திளைப்போம்.

அடுத்த கட்டத்தில் அதே விதமான முயற்சியை உடலிலும் எடுக்கலாம். உடலின் திறன் ஆயிரம் மடங்காக மாறும். க்ஷண நேரம் அனுபவித்தாலும், ஆயிரம் மடங்கு பலம் வந்தது போலத் தோன்றும். பலன் எதுவானாலும், அன்னையை மனத்திலும், மனத்தின் வெளிப்பாட்டிலும், உணர்ச்சியிலும், உணர்வை வெளிப்படுத்துவதிலும், உடலிலும், உடலின் செயலிலும் சூட்சுமமாக உணர்வது ஒரு பெரிய ஆன்மீகச் சிறப்பாகும்.

அன்னையின் திருவுருவத்தைச் சக்கரங்களில் கற்பனை செய்ததுபோல் (கரணங்களில், மனம், உடல்களில் செய்தது போல்) ஆன்மாவின் உறைவிடத்திலும் காண முயலலாம். மனத்தில் ஒளியுடன் காணப்படும் உருவம் ஆன்மாவில் சித்தித்தால், அது ஆன்மீக ஒளியுடன் தெரியும். அன்னைக்கு இயற்கையானது வெண்ணிற ஒளி. வைர ஒளி அன்னைக்குச் சிறப்பான அம்சம். சைத்திய புருஷனிலும், ஆன்மாவிலும் அன்னையை மானஸீகமாகக் காணலாம். அந்த அந்த இடங்களில் இக்காட்சி பலிப்பது அரிது. உடலின் பகுதிகளில் - தலை, கழுத்து, உடல், கை, கால்களில் - அன்னையின் உருவத்தை மானஸீகமாகக் காண முடியலாம். உடலை 100, 200 சிறு பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொரு பகுதியிலும் அன்னையை, அன்னையின் ஒளியைக் கற்பனை செய்யலாம். சில சமயங்களில் ஒரு பகுதியில் அன்னையைக் காண முயலும் பொழுது, அப்பகுதி அன்னையின் உடலின் பகுதியாகவே தெரிவதும் உண்டு.

மேலும் நாம் சந்திக்கும் நபர்களை எல்லாம் அன்னை பிரதிநிதிகளாகவோ, அன்னையாகவோ நினைத்துப் பழகலாம். நம் கற்பனையில் திறம் இருந்தால், அவர்களுடன் பழகும்பொழுது அன்னை அந்தச் சந்திப்பில் வெளிப்படுவதைக் காணலாம்.

நாம் இருக்கும் இடங்கள், பயன்படுத்தும் பொருள்கள், சந்திக்கும் நபர்கள், நிகழும் நிகழ்ச்சிகள், கேட்கும் ஒலி, பார்க்கும் காட்சிகள், நினைக்கும் நினைவுகள், உணர்வுகள், செயல்கள், அசைவுகள், அனைத்தையும் அன்னையின் அசைவுகளாகவோ, ஒளியாகவோ, அன்னையாகவோ காண முயன்று வெற்றி பெறலாம்.

இடைவிடாத நினைவு (constant remembrance), இடையறாத காட்சி (constant presence) ஆகியன யோகப் பயிற்சிகளில் முக்கியமானவை. அவை பலித்தால் பின்னர் நம் உள்ளுணர்வு அன்னையுணர்வாகவும், புறச் செயல் அன்னையின் செயலாகவும், கரணங்கள் (இந்திரியங்கள்) அன்னைக்கே உரித்தவையாகவும், ஜீவன் அன்னையாக மாறுவதுமான அற்புதங்களை காணலாம்.

இறுதியாகக் கூறுயவை எல்லாம் பெரிய யோக சித்திக்கே ஒப்பானவை. சிரத்தையோடும், தவ முயற்சியோடும் பின்பற்றுபவர்களுக்குப் பலன் உண்டு. அதே பலன் இல்லாவிட்டாலும், அதே போன்ற பலனை எளிமையான பக்தனும் ஓரளவு பெற வழியுண்டு. அன்னையின் ஒளி உடல் முழுவதும் தழுவினாற்போல் மானஸீகமாகப் பலித்தால், பின்னர் ஒவ்வோர் அங்கத்திலும் புகுந்து நிரம்பி வழியும்படி நினைத்து, அதுவும் பலித்தால், ஒவ்வோர் அணுவிலும் (cell) உள்ள கருவில் அன்னையின் வெள்ளொளி சென்று தங்குவதைக் காணலாம். பின்னர் அணு ஒளியால் நிரம்புவதைக் காணலாம். அதே ஒளியைப் பொன்னொளியாகப் பாவித்தால், அவ்வொளியில் அணு நிரம்பி, செறிந்து வழிவதாகக் கண்டால், அன்னைக்கு நம் உடலால் செய்யும் சரணாகதி பூர்த்தியானதாக அர்த்தம். சில சமயங்களில் அவ்வொளிப் பொறி அன்னை உருவத்துடனும் காணப்படும். அது சிறப்பு. பகவான் ஸ்ரீ அரவிந்தரின் பொன்னிற உருவத்துடனும் காணப்படும். அதுவே கடைசிக் கட்டமான பலன். அது முழுமையான யோகப் பலன். உடலிலுள்ள ஆன்மீகக் கரு, அன்னை, ஸ்ரீ அரவிந்தரின் பொன்னொளியை ஏற்றுக்கொள்ளும் உயர்ந்த நிலை.

*****

Book traversal links for 07. மானஸீக உருவம்

  • 06. சூட்சுமப் பார்வை
  • Up
  • 08. ஆன்மீக ஒளியும் கர்மப் பலனும்

Book navigation

  • அன்னையின் திருவடிகள்
  • பாகம் 1
  • பாகம் 2
    • 01. கேளாமலேயே கொடுக்கும் தெய்வத்தாய்
    • 02. சத்திய ஜீவியம்
    • 03. அன்னையின் வழியில் அன்றாட வாழ்க்கை
    • 04. உன்னைத் தேடி வரும் அன்னை
    • 05. அன்னையின் அருளும் பொருளும்
    • 06. சூட்சுமப் பார்வை
    • 07. மானஸீக உருவம்
    • 08. ஆன்மீக ஒளியும் கர்மப் பலனும்
    • 09. சேவையின் பெருமை
    • 10. ஸ்ரீ அரவிந்தரின் பரிபூரண யோகம்
    • 11. பூர்ண யோகி ஸ்ரீ அரவிந்தர்
    • 12. ஆதாரச் சுருதி
    • 13. கண்ணொளி
    • 14. ஒரு விவசாயியின் அனுபவம்
    • 15. அன்னையும் அன்பர்களும்
    • 16. வாய்ப்பும் வேதனையும்
    • 17. வீடும் விடிவும்
    • 18. ஓர் அமெரிக்க அன்பரின் அனுபவம்
    • 19. தரிசனமும் தகவல்களும்
    • 20. ஆங்கிலப் பரீட்சை
    • 21. அன்னையும், அமுதசுரபி வாசகர்களும்
RSS feed
Powered by Drupal