உத்தியோகத்தில் மூன்று வருஷத்திற்கு ஒரு முறை மாற்றல் உண்டு என்ற சட்டம் இருந்தாலும், மாற்றல் பலர் வாழ்வில் ஒரு முக்கியமானதாக மாறி விடுகிறது. பிரமோஷன் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் மாற்றலும் பெறுவதுண்டு. ஒரு சிலருக்குத் தேவைப்பட்ட மாற்றல் கிடைப்பது முதலில் வேலை கிடைப்பதற்குச் சமமான முக்கியத்துவம் பெறுவதுண்டு.
பல வருஷங்களாக முயன்று கைவிட்டு விட்ட மாற்றல் வேண்டி அன்னைக்குப் பிரார்த்தனை செய்து கடிதம் எழுதியவுடன் பலித்துவிட்டது. கடிதத்திற்குப் பதில் வருவதற்கு முன் மாற்றல் உத்தரவு வந்து விட்டது. கடிதத்திற்குப் பதிலாகப் பிரசாதம் வருவதும் ஆர்டர் கையில் கிடைப்பதும் சரியாக இருந்தது என்பன போன்ற அன்பர் கடிதங்கள் அநேகம். ‘அன்னையிடம் செய்யும் எந்தப் பிரார்த்தனையும் எனக்குத் தவறுவதில்லை. ஆனால் டிரான்ஸ்பருக்காகச் செய்த பிரார்த்தனை மட்டும் கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது’ என்று சொல்லும் சில அன்பர்களும் உண்டு.
மாற்றல் பிரச்சனையில் மாற்றல் வேண்டும் என்பது மட்டுமே நம் பிரச்சனை; மற்ற சிக்கல் அனைத்தும் புறச் சூழ்நிலைகளால் ஏற்பட்டவை; ஆபீஸ் சந்தர்ப்பத்தாலோ, இலாகா சட்டத்தினாலோ, அரசியல் சூழ்நிலையாலோ ஏற்பட்ட சிக்கல்கள் அவை; அவற்றுக்கு நான் பலியானேன்;
என் முயற்சிகள் அனைத்தும் சில வருஷங்களாகப் பலிக்கவில்லை என்பது மட்டுமே நம் பிரச்சனையானால், அன்னைக்குச் செய்யும் பிரார்த்தனையால் எந்தத் தடையுமின்றிக் குறுகிய காலத்தில் மாற்றல் கிடைத்துவிடும்.
பெங்களூரில் குடும்பமும், கல்யாணத்திற்கு நிற்கும் பெண்ணும் இருக்க, அஸ்ஸாமில் வேலை செய்தவர் கேட்ட மாற்றல், சென்னையில் குடும்பத்தை விட்டுவிட்டு ஹைதராபாத்தில் பாங்க் ஆபீசராக வேலை செய்தவர் வேண்டிய மாற்றல், சொந்த ஊரான மதுரையை விட்டுவிட்டு வெளி மாவட்டத்தில் தனியே வேலை செய்த பெண்ணுக்கு இடையூறு வந்த நேரம் வேண்டிய மாற்றல் உத்தரவு, தினமும் பத்து கி.மீ. சைக்கிளில் பத்து வருஷமாகப் போகும் நூலக அலுவலகர் கால் நொந்து வேண்டிக் கொண்டது, சென்னையிலிருக்கும் புது மாப்பிள்ளை பம்பாயில் வேலை செய்யும் மனைவிக்கு மாற்றல் கேட்டுச் செய்த பிரார்த்தனை போன்றவற்றுள் உடனே பலித்தவை பல. தாமதமில்லாமல் பலித்தவை சில. மேலும் அதிகபட்ச செளகரியத்துடன் கிடைத்த மாற்றல்கள் மற்றொரு வகை. சென்னைக்கு மாற்றல் கேட்டதற்குப் பதிலாகத் தானுள்ள பகுதிக்கே மாற்றல் கிடைத்தது ஒரு விசேஷம்.
ஒரு பெரிய ஆபீசர். நேரடியாக ஓர் ஐ.ஏ.எஸ். ஆபீசரின் கீழ் பொறுப்புள்ள பகுதியில் வேலை செய்பவர். இலாகா மிகப் பெரியது என்பதால் இவருக்கு மேலேயுள்ள ஐ.ஏ.எஸ். ஆபீசர் வகிக்கும் பதவியே அவ்விலாகாவில் தலைமைப் பதவியில்லை. அவருக்கும் மேலே இலாகா தலைவர் உண்டு.
இந்த ஆபீசர் ஒரு மாதம் லீவு எடுத்துக் கொண்டு தன் குடும்ப விவகாரங்களைச் சீர் செய்யப் போனார். குடும்ப விவகாரத்தில் சிக்கல் பல வகையானது. அதைவிட அவர் மனதில் பல்வேறு பிரச்சனைகள் நெடுநாளாக உற்பத்தியாகிப் பல குழப்ப முடிச்சுகளை ஏற்படுத்தியிருந்ததால் தன் நாற்பதாவது வயதிற்கு மேல் அவற்றின் கொடுமை தாளாமல் ஒரு விடிவு தேடிக் கொண்டிருந்த சமயம், அன்னையையும் ஆசிரமத்தையும் பற்றிக் கேள்வியுற்றுத் தன்னால் வெளியில் சொல்ல முடியாத மனப்பாரத்திற்கு வழி கிடைக்கலாம் எனக் கருதி ஆசிரமம் வந்தார். உலகத்திலில்லாத வழிகளை உற்பத்தி செய்பவர் அன்னை என்று அவர் அறியும் வகையில் வந்தவருக்கு ஒன்றன்பின் ஒன்றாக உதவிகளும், ஆலோசனைகளும் கண்ணில் தென்பட்டன. பார்வையில் பட்டவற்றைச் சிக்கெனப் பிடித்துக் கொண்டு, தெரிந்த வழிகளில் தன் முடிச்சுகளை அவிழ்த்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன் ஒரு நாள் மாலை சமாதி அருகே அமர்ந்தார். தன் மன முடிச்சுகள் பதினைந்தில் ஒன்றையாவது இன்று அவிழ்த்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டார். அவர் விரும்பியது போல் ஒன்று அவிழ்ந்ததைக் கண்டு மனம் பூரித்தார்.
ஆனால் அவிழ்ந்த முடிச்சு ஒன்றில்லை. அத்தனையும் ஒரே சமயத்தில் அவிழ்க்கப்பட்டு விட்டன. சிறு வயது முதல் நாற்பது வயது வரை அவரை ஆட்டி வைத்த அத்தனைப் பேய்களும் ஒரே சமயத்தில் ஓட்டம் பிடித்தன. இந்த விடுதலையை அளிக்கும் முன் அவருள் ஒரு பூகம்பமே ஏற்பட்டது. அத்தனையும் ஒரே சமயத்தில் வெடித்து எழுந்த பொழுது கலங்கி விட்டார். பூகம்பம் தணிந்த பொழுது அழிந்தவை அனைத்தும் அழிக்கப்பட வேண்டியவையே என்று கண்டார். தான் புனர்ஜென்மம் எடுத்ததாக உணர்ந்தார். இதுவரை இல்லாத சந்தோஷம் மனதில் ஏற்பட்டது. தெரிந்தவர்களை எல்லாம் இனிமையாகச் சந்தித்துப் பேசினார். அன்றிருந்த கொந்தளிப்பை வெளியில் சொல்ல முடியாதது போல், இன்றுள்ள சந்தோஷத்தையும் எவருடனும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை.
இன்னும் நான்கு நாளில் லீவு முடியப் போகிறது. ஊர் திரும்ப வேண்டும். கிடைத்தற்கரியது கிடைத்துள்ளது. இனி என்ன வேண்டும்? புத்துணர்வோடும், புதிய பலத்துடனும் வீடு திரும்பும் நேரம் தன் உத்தியோகம் நினைவுக்கு வந்தது. இவர், இலாகா தலைவர் செல்லுமிடம் எல்லாம் நல்ல பெயர் வாங்கியவர். ஐந்து வருஷத்தில் முடிப்பதை ஒரு வருஷத்தில் வெற்றிகரமாக முடிப்பவர். ஆனால் ஐந்து மடங்கு பெரிய ஆபீஸ் விரிவுபடுத்தி அதன் மூலம் செயல்படுவதில்லை. இருக்கும் பழைய ஆபீஸிலேயே அவ்வளவு காரியங்களையும் நடத்த வேண்டும். அன்பர் அளவுகடந்த திறமைசாலி என்பதால் இலாகா தலைவர் இவரைத் தன் ஆபீஸில் பொறுப்புள்ள வேலையில் அமர்த்தியுள்ளார். ‘இன்று காலை ஏழு மணிக்கு ஆபீஸுக்கு வந்தேன். பத்து நாள் வேலை கொடுத்து விட்டார். அத்தனையும் எட்டரை மணிக்குள் அசுர வேகத்தில் முடித்துவிட்டேன்’ என்று அலுப்புடன் சந்தோஷப்பட்டுக் கொண்டு புறப்படும் நேரத்தில் புதியதாக ஓர் ஒன்றரை மணிநேர வேலை வரும். ‘சரி, நாளைக்கும் காலை ஏழு மணிக்கே அலுவலகம் வரவேண்டுமா?’ என்று மனம் கேட்கும் பொழுது, ‘இன்றிரவே இவை முடிய வேண்டும்’ என்று உத்தரவு வரும். அதுபோல், தன் துறையை விட்டு இரண்டு வருட காலமாக இலாகா தலைவரிடம் வந்து வேலை செய்து அலுத்துப் போனவர். அத்துடன் இந்தச் சர்வீஸெல்லாம் அவர் துறையில் பிரமோஷன் வரும்பொழுது கணக்கில் சேராது. நிலைமை இக்கட்டானது. முறையிட வேண்டுமானால் இலாகா தலைவரிடம்தான் முறையிட வேண்டும். இவையெல்லாம் மனதில் கொண்டு வந்து விமர்சனம் செய்தவருக்கு ‘இப்போதுள்ள என் பெரிய பிரச்சனை தீர்ந்ததே போதும்’ என்று தோன்றியது. இருந்தாலும் இன்றில்லாவிட்டாலும் என்றாவது தன் துறைக்கு மாற்றல் கிடைக்காதா என்று மனம் கேட்டது.
தங்கியிருந்த விடுதியிலுள்ள மற்றொருவருடன் பேச நேரிட்ட பொழுது, அவர் தன் மாற்றல் விஷயத்தைப் பிரஸ்தாபித்தார். உடனே அன்பர் தன் மனக்குறையை வெளிப்படுத்தினார். ‘மாற்றல் தானே? அன்னையிடம் கேட்டால் கிடைக்கும். உங்களுக்கு இது தெரியாதா? நீங்கள் ஊருக்குத் திரும்பிப் போனால் நல்ல செய்தி காத்திருக்குமே? எவ்வளவு நாளாக ஆசிரமம் வருகிறீர்கள்’ என்று அவர் சொன்னது தைரியமாக இருந்தாலும், விவரம் தெரியாமல் புது உற்சாகத்தில் பேசுகிறார் என்று அன்பருக்குத் தோன்றியது. அடுத்த முறை ஆசிரமம் வரும்பொழுது நம் துறைக்கு மாற்றல் வேண்டும் என்று தீவிரமாகப் பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து மனதை சமாதானப்படுத்திக் கொண்டார்.
இரண்டு நாள் கழித்து அவரது ஆபீசிலிருந்து ஓர் ஆர்டரும், நண்பருடைய கடிதம் ஒன்றும் சேர்ந்து வந்திருந்தன. தன் துறைக்கே அவர் மாற்றப்பட்டிருந்தார். சந்தோஷம் தாங்க முடியவில்லை. என்றாலும் நம்ப முடியவில்லை. நண்பர் தன் கடிதத்தில் விவரம் எழுதியிருந்தார், இலாகா தலைவர் அவரை அழைத்து அன்பர் இருந்த இடத்தில் போட்டு விட்டு, விளக்கம் தரும் வாயிலாக, ‘இங்கிருப்பவர் தன் துறைக்கு உடனே போக வேண்டியது அவசியம். ஆறு மாதத்தில் அவர் துறையில் பிரமோஷன் வருகிறது. அவர் இங்கிருந்தால் பிரமோஷன் கிடைக்காது’ என்றாராம். நம்ப முடியாத வகையில் மாற்றல் கிடைத்ததுடன், கூடவே வந்த செய்தி பிரமோஷனும் உண்டு என்ற அளவில் இருந்தது.
அன்னைக்குச் செய்யும் பிரார்த்தனைகள் இதுபோல் பலிக்கும்பொழுது, ஏன் சிலருக்கு மாற்றல் பிரார்த்தனை பலிப்பதில்லை என்பதே கேள்வி. அவர்கள் மாற்றலிலும் உடன் கிடைக்கும் வழியுண்டு.
‘ஐந்து வருஷமாகக் குடும்பத்தைவிட்டு வெளியூரிலிருக்கிறேன். தினமும் அதிக தூரம் ரயில் பிரயாணம் செய்ய வேண்டியிருக்கிறது. பிரயாணம் ஒத்துக் கொள்ளவில்லை’ என்றெல்லாம் மனம் புலம்புபவர்களும், தொடர்ந்து அன்னைக்குப் பிரார்த்தனை செய்தாலும் சில சமயம் பலன் கிடைப்பதில்லை. ஏதாவது ஒரு வகையில் இவர்கள் மனத்தில் மாற்றலுக்குத் தடையான செய்தி ஒன்று இருக்கும். ‘சொந்த ஊரில் செளக்கியமாக வேலை செய்து கொண்டிருந்தேன். இங்கு மாற்றிவிட்டார்கள். ஆனால் அங்கு என் நாணயத்தை எவருமே பாராட்டியதில்லை. இங்கு நேர்மாறாக எனக்கு மரியாதையும் மதிப்பும் ஏற்பட்டுள்ளது. நாணயத்தில் சிறந்தவர் என்று இங்கு ஆபீசில் அனைவரும் பாராட்டுகின்றனர்’ என்பது உண்மையானால், மனத்தின் உணர்வு இங்கேயே இருக்கப் பிரியப்படும். ‘நான் சொந்த ஊரில் தலைமை ஆபீசில் வேலை செய்தேன். உடம்பு அலுங்காத வேலை. இப்பொழுது மாற்றல் கிடைத்தாலும் சொந்த ஊருக்குப் போனால் அந்த இடம் கிடைக்காது. வெளி வேலைதான் அமையும். அது நாய்பட்ட பாடு’ என்பது உண்மையானால் மனம் மாற்றலை விரும்பாது.
நமக்கே தெரியும் வகையில் மாற்றலுக்கெதிரான செய்திகள், உணர்வுகள் நம்மிடம் இருந்தால், வாய் பிரார்த்தனை செய்யும்பொழுது, மனம் எதிரான பிரார்த்தனைøய நம்மையறியாமல் செய்து கொண்டிருக்கும். திரும்ப ஊருக்கே மாற்றல் கிடைத்தால், மீண்டும் மாற்றாந்தாய் அதிகாரத்திற்குள் இருக்க வேண்டும். அண்ணன் குடும்பத்தையும் சேர்த்துக் கவனித்துக் கொள்ள வேண்டும், வீட்டு நிலங்களைப் பராமரிப்பதை மீண்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பன போன்றவை மனத்தில் இருந்தால் நம் பிரார்த்தனையை அவை மௌனமாக ரத்து செய்யும்.
நாம் அறியாத காரணங்களும் நம்மைச் சொந்த ஊருக்கு வராமல் தடுக்கும். இருக்கும் ஊரைவிட்டுப் போகாமலிருக்கச் செய்யும். நாமறிந்த காரணங்கள் மாற்றலுக்குத் துணையாயிருந்தால், நாமே முன்வந்து அவற்றை விலக்க வேண்டும். பலன் மறுநாளே தெரியும். நமக்கு எதுவும் புலப்படவில்லை என்றால், ‘என்னிடம் உள்ள தடை எதுவானா லும் நீங்களே அவற்றை முழுமையாக விலக்கியருள வேண்டும்’ என்று பிரார்த்தனை செய்தால் நம்மை அறியாத தடைகளும் விலகிவிடும்.
பதினைந்து நாள் ஆத்ம சமர்ப்பணத்தை மேற்கொண்டு மாற்றல் வரலாற்றை அன்னையிடம் தினமும் ஒரு முறை சொல்லி, அதன் பின் மூன்று நாள் இடைவிடாத பிரார்த்தனையைப் பகல் முழுவதும் மேற்கொண்டால் பிரார்த்தனை முடிவதற்குள் மாற்றல் உத்தரவு கிடைத்துவிடும்.
********