Skip to main content
Karmayogi

Main navigation

  • Home
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home
  2. அன்னையின் அருள்
  3. IV. வேலை

4. இலட்சிய சேவை - 2

ஒரு மிஷன் பள்ளிக் கூடம். உலக மகாயுத்தம் வந்தவுடன் அதுவரை அந்தப் பள்ளிக்கு உதவியாகக் கிடைத்து வந்த வெளிநாட்டுப் பணம் நின்று விட்டது. பள்ளிக்கூடத்தை மூடவேண்டிய நிர்ப்பந்தம். தலைமை ஆசிரியர் ஏராளமாகப் படித்தவர். அவருடைய படிப்பின் சிறப்பை உணரக் கூடிய அளவுக்குக் கூட மற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்குப் படிப்பில்லை. அங்குள்ள நூலகத்திலுள்ள புத்தகத் தேர்வைப் பார்த்தவர்கள் ஆச்சரியப்படுவார்கள். ‘நான் படித்த ஒவ்வொரு புத்தகத்தையும் நூலகத்தில் வைத்தேன்’ என்றார் தலைமையாசிரியர். நிர்வாகத்திறமை சற்றும் இல்லாதவர். மிகவும் இனியவர். மாணவர்களுக்கு அவரிடம் அலாதிப் பிரியம்; பெரிய மரியாதை. அவர் சொல்லிக் கொடுக்கும் நிலைக்கும், மாணவர்கள் உள்ள நிலைக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. S.S.L.C. பரீட்சையில் மூன்று செக்ஷன்களிலும் சேர்ந்து 3, 4, 5 மாணவர்களே பாஸ் செய்வது வழக்கம். பள்ளிக்கூடத்தில் எந்தக் கட்டுப்பாடும் இருக்காது. பள்ளியை மூட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்ட போது தலைமையாசிரியர் எல்லா ஆசிரியர்களையும் அழைத்து, ‘மாணவர்களிடமிருந்து கிடைக்கும் சம்பளப் பணத்தைக் கொண்டு பள்ளி நடத்துவோம், மூடவேண்டாம்’ என்றார். மற்ற ஆசிரியர்களும் அதற்கு இசைந்தார்கள். எல்லாரும் குறைந்த சம்பளத்தில் 5 ஆண்டுகள் வேலை செய்தார்கள்.

யுத்தம் முடிந்து பிரச்சனை தீர்ந்தது. அவருக்கு ஒரே பிள்ளை. தறுதலை. S.S.L.C.-யில் 3-ஆம் முறையாக எப்படியோ பாஸ் செய்தான். இன்டர்மீடியட் 8 முறை எழுதினான். B.A. 19 முறை எழுதியும் தன் முயற்சியால் பாஸ் செய்ய முடியவில்லை. தகப்பனார் சிபாரிசு பாஸ் பெற்றுக் கொடுத்தது. எதற்கும் லாயக்கில்லாதவன். உடற்பயிற்சி ஆசிரியராகி எங்கோ வெகுதூரத்தில் வேலை செய்து கொண்டிருந்தான். அவன் தகப்பனார் காலமானார். அடுத்த தலைமையாசிரியரை நிர்ணயிக்க வேண்டிய கட்டம் வந்தது. அந்தப் பதவிக்குப் போட்டியிட்டவர்களுக்கெல்லாம் ஒரே பிரச்சனை, ‘எனக்கில்லாவிட்டாலும் பரவாயில்லை. எதிரிக்குக் கிடைக்காவிட்டால் போதும்’ என்பது. அதன் பலனாக அந்தத் தறுதலையைத் தேடி வந்தது தலைமையாசிரியர் பதவி! தகப்பனார் அந்த ஸ்தாபனத்திற்குச் செய்த தியாகம், சேவைகளை எல்லாம் யார் மறந்தாலும், அந்த நிறுவனம் மறக்காமல் அவர் பிள்ளையைத் தேடி அழைத்து அவன் தகுதியையும் கருதாமல் அவனுக்கு அளித்தது. அதுவே நிறுவனத்தின் ஜீவன்.

‘நிறுவனத்திற்கு ஜீவனுண்டு’ என்று பல முறை சொன்னேன். அதே போல் எல்லா விஷயங்களுக்கும் ஜீவனுண்டு. நட்புக்கும் ஜீவனுண்டு. நினைவுக்கும் ஜீவனுண்டு. ஜீவ ராசிகளுக்கு மட்டுமல்லாமல், ஜீவனில்லாத ஜடப் பொருளென நாம் அறிவதற்கெல்லாம்கூட ஜீவனுண்டு. ஒரு கத்தரிக்கோலைக் கோபத்தில் ஒருவர் மீது மற்றவர் எறிந்தார். அவர் எறிந்த வேகத்தில் மற்றவருக்கு ஆபத்து நேரவேண்டும். மற்றவர் மீது அது படவில்லை. ‘நல்ல வேளை, அவன் அக்கத்தரிக்கோலை எறிந்தான். நான் இந்தக் கத்தரிக்கோலை பாசத்துடன் உபயோகித்து இருக்கிறேன். அதனால் எனக்கு அந்தக் கத்தரிக்கோலால் காயம் ஏற்படாது’ என்றார் அவர். கத்தரிக்கோலுக்கும் உணர்வுண்டு.

அன்னை ஜீவராசிகள் அனைத்திற்கும் ஜீவனாக இருப்பவர். ஜீவனுள்ள வாழ்வில் சிறப்பாக வெளிப்படுபவர் அன்னை. அன்னைக்குப் பக்தராவது பாக்கியம். தான் வேலை செய்யும் நிறுவனத்தில் அன்னையின் முறைகளை மனமார ஏற்றுக் கொண்டு செயல்படுதல், ஒரு வகையில் சொல்லப் போனால் ‘யோகம்’ எனக் கருதப்படும்.

ஒருவர் அறிவற்ற முறையில் தம் கையிலிருந்த எல்லாப் பணத்தையும் முதலிட்டு ஒரு பொக்கைச் சொத்தை வாங்கி தாம் பாழ் கிணற்றில் விழுந்துவிட்டதை உணர்ந்தார். 97 ஆயிரம் போட்டு வாங்கிய சொத்து. அதிலிருந்து 97 ரூபாய் கூட எடுக்கமுடியாத நிலை. அவர் அறிவாளி; உழைப்பாளி; நேர்மை மிகுந்தவர். அவரது உழைப்பின் பெருமை மாநிலத்தின் எல்லாப் பகுதிகளையும் எட்டியது. நிலைமை மாறி, போட்ட முழுப் பணத்தையும் எடுத்துவிடலாம் என்ற அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டவுடன், அனுபவம் நிறைந்த பெரியவர்கள், ‘அதை விட்டுவிடக்கூடாது’ என அதன் சொந்தகாரருக்குச் சொன்னார்கள். போட்ட முதல் கிடைத்தால் போதும் என அவர் விற்றுவிட்டார். விற்ற நாள் முதல் நாளொரு ஆயிரமும், பொழுதொரு பத்தாயிரமாகவும் அதன் மதிப்பு ஏறி, சரியாக 10-ஆம் ஆண்டு 76 லட்ச மதிப்பை எட்டியது. அதன் சொந்தக்காரர் செய்த உழைப்பின் பலன் அவருக்குக் கிடைக்கவில்லை. அவருடைய திறமையும், நேர்மையும் அந்தச் சொத்தின் மதிப்பாக உயர்ந்துவிட்டன.

மற்றொரு நிறுவனத்தில் 25 லட்சம் டர்ன் ஓவரும், 50,000 ரூபாய் லாபமும், மறு ஆண்டு 50,000 நஷ்டமுமாக இருந்த இடத்திலிருந்து அவரை 1,250 ரூபாய் சம்பளத்திற்கு 20 ஆண்டுகட்கு முன் அழைத்தனர். 1,400 பேர் வேலை செய்யும் அந்த இடத்தில் கலகம் ஏற்பட்டு 8 கொலைகள் நடந்து அமளியாக இருந்த நேரம். நேராக ஆசிரமம் வந்தார்.

முடிவைத் தெளிவுபடுத்த முடியவில்லை. முடிவெடுக்க முடியாத நிலையில் இங்கு வந்து தெளிந்து, வேலையை ஏற்றுக்கொண்டார். முதல் மாத சம்பளத்தைக் காணிக்கையாக அனுப்பினார். நிலைமை தெளிய ஆரம்பித்தது. நான்கு ஆண்டுகளில் படிப்படியாக அந்த ஸ்தாபனம் 32 லட்ச ரூபாய் நிகர லாபம் பெறும் நிலைக்குயர்ந்தது. 4-ஆம் ஆண்டில் அவருக்கு நிறுவனம் 60,000 ரூபாய் போனஸ் கொடுத்தது. நிறுவனம் 18 லட்சம் வரி கட்டியது. அவருடையது உழைப்பு. அன்னை மீது அவருக்குப் பொதுவாக நம்பிக்கையுண்டு. உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைத்தது. 50 மடங்கு போனஸ் கிடைத்தது. ஸ்தாபனத்திற்கு 60 மடங்கு இலாபம் கிடைத்தது. முதல் சொத்தில் ஏற்பட்ட பலன் இவருக்குக் கிடைக்கவில்லை. அடுத்த இடத்தில் கிடைத்தது அதிகம் என நினைக்கின்றார். மனம் திருப்தி அடைகிறார். அது நல்ல குணம்.

அவரும் அன்னையை வணங்குபவர். ஆனால் தீவிரமான ஈடுபாடோ, முழுமையான பக்தியோ இல்லாதவர். சமாதி தரிசனம் செய்ய பாண்டிச்சேரிக்கு வருபவர் சிலர். பாண்டிச்சேரிக்கு வரும்பொழுது சமாதி தரிசனம் செய்பவர்கள் மற்றொரு வகை. அந்த அன்பர், நண்பர்கள் புறப்பட்டு வந்தால் சமாதிக்கு அவர்களுடன் தவறாமல் வருவார். எப்படியும் வாரத்திற்கு இரு தடவைக்குக் குறையாமல் சமாதிக்கு வருவார்.

பாண்டிக்கு இருபது மைல் தூரத்தில் இருக்கும் பொழுது 1½ வருஷ காலம் சமாதி நினைவு வராதவர். அவர் நல்லவர்; நேர்மையானவர். உழைப்பாளி, திறமைசாலி. அன்னையைப் பற்றிப் பேச நேர்ந்தால் அவருக்கு நினைவு வரும். தானாக அன்னை நினைவு அவருக்கு வருவதில்லை.

முதல் சொத்தில் அவரது உழைப்புக்குப் பலன் போட்ட முதல் திரும்பக் கிடைத்ததேயாகும். அன்னையிடம் உள்ள பக்தியும், நம்பிக்கையும் முழுமையாக இருந்திருந்தால் அதில் ஏற்பட்ட முழுப் பலனும் அவரை வந்து அடைந்திருக்கும். அன்னை மீதுள்ள பக்தியால் அவருக்கு ஏற்பட்ட பிரச்சனை தீர்ந்ததே தவிர அவருடைய உழைப்பின் பலன் வேறு ஒருவருக்குப் போய்விட்டது. இரண்டாம் சொத்தில் அவருக்கு நல்ல பலன் ஊதியமாகக் கிடைத்தது. இங்கும் அன்னை மீது அவருக்கு முழுமையாக பக்தியும், நம்பிக்கையும், பூரணமான ஈடுபாடும் இருந்திருந்தால், பெரிய பலன் கிடைத்திருக்கும். இரண்டாம் சொத்தில் இவருடைய உழைப்பைப் பாராட்டி முதலாளி இவருக்கென தனியே வேறு ஒரு சொத்து வாங்க எல்லா உதவியும் செய்ததன் பேரில் இரண்டு இலட்சத்திற்கு ஒரு சொத்தை வாங்கினார். அதை முழுவதுமாக அபிவிருத்தி செய்ததன் விளைவாக இன்று அது ஆண்டுக்கு மூன்று இலட்சம் நிகர வருமானம் அளிக்கிறது.

முதலில் குறிப்பிட்ட கருத்தை மீண்டும் கருதுவோம். பொதுவாக வாழ்க்கையில் உழைப்புக்கு ஊதியமும், ஆர்வத்திற்கு வெற்றியும், அறிவுக்குப் புகழும் கிடைக்கும். ஒரு நிறுவனத்தில் வேலை செய்தால், நமக்குரியது சம்பளமே. மேலும் கிடைப்பது அனுபவம். ஒருவர் ஒரு நிறுவனத்தில் முதல் போட்டிருந்தால் அவருக்கு இலாபம் கிடைக்கும். வேலை செய்தவர்களுக்குச் சம்பளமும், முதல் போட்டவர்களுக்கு இலாபமும் கிடைப்பது முறை. அன்னையை ஏற்றுக் கொண்டவர்களுக்குச் சம்பளம் அதிகமாகவும், இலாபம் அதிகமாகவும் கிடைப்பது வழக்கம். அன்னையின் கோட்பாடுகளை முழுமையாக ஏற்றுக் கொண்டவர்களுக்குக் கிடைப்பது முழுமையான பலன். சம்பளத்திற்குரிய வேலையை மட்டும் செய்பவனுக்கும், இலாபத்தை மட்டும் எதிர்பார்க்கும் முதலாளிக்கும் அந்த நிறுவனத்தின் முழுப் பலனும் கிடைக்கும்.

ஒரு செயலில் பல பகுதிகள் உண்டு. ஒரு நிறுவனத்தில் முதல், தொழில், வேலை, வியாபாரம் எனப் பல பகுதிகள் உள்ளன. ஒவ்வொருவரும் ஒரு பகுதியை ஏற்றுச் செயல்படுகிறார்கள். வாழ்க்கையில் அதற்கேற்ற பலன் மட்டும் வரும். அன்னையை முழுமையாக மனதிலும், செயலிலும் ஏற்றுக்கொண்டு, நிறுவனத்தில் ஒரு பகுதியில் செயல்பட்டாலும், நிறுவனத்தில் உண்டான முழுப் பலனும் ஏதாவது ஒரு வகையில் அவனைத் தேடி வரும். நிறுவனத்தின் தலைமையில் அவனைக் கொண்டு சேர்க்கும், என்பது இந்த முழுப் பலனைக் குறிக்கிறது.

பசுமைப் புரட்சியில் பல பகுதிகள் உண்டு. புதிய விதைகள், உரம், பூச்சி மருந்து, உணவுத்துறையின் கிடங்கு, நீர்ப்பாசனம் ஆகியவை சேர்ந்து பசுமைப் புரட்சியை வெற்றி பெறச் செய்தன. அதற்குரிய பரிசு புதிய விதைகளை உற்பத்தி செய்த விஞ்ஞானிக்குக் கொடுக்கப்பட்டது. இது வாழ்க்கை நியதிக்கு மாறானது. வாழ்க்கையில் எந்த வேலையைச் செய்கிறோமோ அதற்குரிய பலன் கிடைக்கும். அன்னையை மனத்திலும், செயலிலும் ஏற்றுக்கொண்டு ஒரு வேலையில் ஒரு பகுதியைச் செய்தாலும், அன்னையை முழுமையாக ஏற்றுக் கொள்வதால், வேலையின் முழுப் பலனும் அன்பரை வந்தடையும். இதுவே அன்னையின் சிறப்பு. ஒரு நிறுவனத்தில் எந்த நிலையில் வேலை செய்தாலும், எந்தப் பகுதியில் வேலை செய்தாலும் அன்னையை முழுமையாக மனத்திலும், செயலிலும் ஏற்றுக் கொண்ட காரணத்தால், அந்த நிறுவனத்தில் எந்த அளவுக்கு ஈடுபாடு இருக்கிறதோ, அந்த நிலைக்கு அவர் தலைவராவார். நிறுவனத்தில் அகில இந்திய நிலை, மாநில நிலை, மாவட்ட நிலை எனப் பல உள்ளன. பக்தனுடைய ஈடுபாடு மாவட்டத்துடனும் நின்றுவிடலாம். அகில இந்திய அளவுக்கும் எட்டலாம். ஈடுபாட்டின் அளவுக்கு ஏற்றபடி அவனுடைய நிலை உயரும்.

***********

Book traversal links for 4. இலட்சிய சேவை - 2

  • 3. இலட்சிய சேவை - 1
  • Up
  • 5. பதவி உயர்வு

Book navigation

  • முன்னுரை
  • I. அன்னை
  • II. குடும்பம்
  • III. யோகம்
  • IV. வேலை
    • 1. தகுந்த வேலை
    • 2. அன்னை வழங்கும் அளவுகடந்த வருமானம்
    • 3. இலட்சிய சேவை - 1
    • 4. இலட்சிய சேவை - 2
    • 5. பதவி உயர்வு
    • 6. டிரான்ஸ்பர்
  • V. நோய்
RSS feed
Powered by Drupal