வேலை கிடைப்பது, திருமணம் நடப்பது போன்றவை வாழ்க்கையில் முக்கிய கட்டங்களானாலும், வேலையில் இருக்கும்பொழுது உரிய காலத்தில் பதவி உயர்வு கிடைப்பதும் வேலை கிடைப்பதைப்போல் முக்கியம் பெற்று விடுகிறது. இதிலிருந்து மேலே பதவியில் உயரும் பொழுது ‘சீனியாரிட்டி’படி தானே உரிய காலத்தில் பதவி உயர்வு வரும் என்று நிலையாகச் சொல்லமுடியாது. மேலே போகப்போக இருக்கும் பதவியின் எண்ணிக்கை குறைகிறது. எனவே, தகுதியுள்ளவர் பலர் ஒரு பதவிக்குக் காத்திருப்பதால், ‘சீனியாரிட்டி’ மட்டுமே உயர்வு பெற பல சமயம் போதாது. உயர்வு பெறப் பாஸ் செய்ய வேண்டிய பரீட்சைகள் உள்ளன. சர்வீஸ் ரிஜிஸ்டர் சுத்தமாக இருக்க வேண்டும். போதிய அனுபவம் தேவை. இவையெல்லாம் சட்டப்படி தேவைப்படுபவை. நடைமுறை, சட்டத்திற்கு மட்டும் உட்பட்டிருப்பதில்லை. இந்த நிலையிலுள்ள பக்தருடைய பிரச்சனையே நமக்குரிய பிரச்சனை.
எல்லாத் தகுதிகளையும் சட்டப்படி பெற்று, ஒன்பது பேரில் ஒருவராகக் காத்திருக்கும் பக்தருக்கு நடைமுறையைப் பற்றிக் கவலையில்லை. அநேகமாகப் பிரார்த்தனையும் தேவைப்படாது. பிரார்த்தனை செய்தால் உடனே பலிக்கும். பிரார்த்தனை இல்லாமலேயும் பலிக்கும்.
இதுபோன்றதொரு நிலையிலிருந்த ஆபீஸர் ஒருவருக்குப் பதவி உயர்வு வரும் நேரத்தில் ஆசிரமம் வந்து பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று தோன்றியது. மூன்று வருஷத்திற்குப் பின்னால் கிடைக்க வேண்டிய உயர்வு, முதல் வருஷத்திலேயே அவருக்குக் கிடைத்தது. அத்துடன் அடுத்த இரு ஆண்டுகளில் மேலும் இரு பதவி உயர்வுகள் கிடைத்தன.
இருக்க வேண்டிய தகுதிகளில் சில இல்லாததாலும் சர்வீஸ் ரிஜிஸ்டரில் குறையிருப்பதாலும், பாஸ் பண்ண வேண்டிய பரீட்சை பாக்கியிருப்பதாலும், பதவி உயர்வு வந்தால் மாற்றல் வரும். ‘அது வேண்டாம்’ என்பதாலும், தன் மேல் பொய்யான புகார் இருப்பதாலும், அவசரப்பட்டு மேல் அதிகாரியிடம் அளவு கடந்து பேசியதாலும், ஆபீஸ் அரசியல் சிக்கலில் மாட்டிய முதலைகளே திணறுவதால் சிறு மீன் போன்றவர்கள் செய்வதறியாததாலும், தடம் பிறழ்ந்து போய் நிற்கும் நடைமுறைகளைக் கடைப்பிடிக்க முடியாததாலும், நெடுநாளாகத் தாமதமாகும் பதவி உயர்வை எதிர்பார்த்து நிற்பவர்கள் அன்னை பக்தர்களானால் அவர்கள் சிக்கலிலிருந்து மீள வழியுண்டா? உண்டு.
தடைக்கும், தாமதத்திற்கும் ஏற்பட்ட காரணங்கள் அனைத்தும் தன்னுள் ஏற்பட்டதில்லை என்றால், பிரார்த்தனை உடனே பலிக்கும். தானே ஏற்படுத்திய குறைகளைத் தானே முன்வந்து விலக்கிவிட்டுப் பின்னர் பிரார்த்தனை செய்தாலும் உடனே பலிக்கும். சில குறைகளை இப்பொழுது ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலையிருக்கும். அவற்றை ஆத்ம சமர்ப்பணத்தால் மனதில் சரி செய்து, பிறகு பிரார்த்தனையை மேற்கொண்டால் அது பலிக்கும்.
இது சம்பந்தமான சில நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகக் குறிப்பிடுகிறேன்.
தன்னுடைய சர்வீஸ் ரிஜிஸ்டரில் ஒரு குறை ஏற்பட்டு பிறகு அதைச் சரிசெய்த பின் பதவி உயர்வுக்கான பெயர்ப் பட்டியலில் தன் பெயர் சேர்க்கப்படவில்லை என்று சமாதிக்கு வந்து பிரார்த்தனை செய்தவருக்கு, பதவி உயர்வு நாற்பது நாளில் நேரடியாகக் கிடைத்தது. அஸிஸ்டெண்ட் இன்ஜினீயர் ஒருவர் தனக்கு முறைப்படி பதவி உயர்வு ஐந்து ஆண்டுகளுக்கு ப் பிறகு கிடைக்கும் என்றிருந்த சமயம், அன்னை பக்தராகி அடுத்த மாதம் உயர் பதவி தற்காலிகமாக வந்து, பின்னர் ஒரே வருஷத்தில் நிரந்தரமாகக் கிடைத்தது. டிபார்ட்மெண்டில் கடைசி நபராகவும், ஆனால் உயர் தகுதியுடையவராகவும் இருந்தவர் டிபார்ட்மெண்ட் தலைமைப் பதவிக்கு விண்ணப்பித்தார். கடைசி நபராக இருந்ததால் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தார். உடனே அதே பதவி விண்ணப்பமே இல்லாமல் வந்து சேர்ந்தது. பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவி பெற்ற மூவருடைய அனுபவம் வேறு.
பதவியைப் பெற்ற பின் பிறரும் தானும் வியக்கும் நிலையில் இருந்தவர்கள் அவர்கள். சந்தர்ப்ப விசேஷமாக ஏற்பட்ட சேவையில் பங்கு கொண்டதால், அந்த உயர் பதவி அவர்களுக்குக் கிட்டியது. கல்லூரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு உரிய முறையும் காலமும் வரையறுக்கப்பட்ட நேரத்தில் நான்கு பதவி உயர்வுகள் ஒருவரைத் தேடி வந்தன. அவற்றை அவர் மகிழ்வோடு ஏற்றுக்கொண்டு, நாட்டில் ஏற்படும் புதிய நிலையில் கல்லூரியின் அமைப்பு மாறி வருவதால் ஏற்பட்ட செளகரியம் என்று உணர்ந்தார். அன்னை சம்பந்தப்பட்ட திட்டமொன்றில் ஒரு தொகையைக் கடனாகக் கொடுத்ததால் ஏற்பட்ட அருள்தான் இது என்பதை அவர் அறியவில்லை.
அக்கௌண்டண்ட் ஜெனரல் ஆபீஸில் வேலை செய்த ஒருவர் வேலை சம்பந்தமாகப் புதுவை வருவதும், வரும் பொழுது ஆசிரமத்தில் தொடர்பு கொள்வதுமாக இருந்தார். இவர் எவரும் அடைய முடியாதபடி, தன் வாழ்நாளில் நான்கு பதவி உயர்வுகளைப் பெற்றார். ஹைதராபாத்திலிருந்து ஒருவர் தன் மீது மேலதிகாரி பொய்க் குற்றம் சாட்டியிருப்பதாக எழுதினார். என் பதில் கிடைப்பதற்குள் மீண்டும் ஒரு கடிதம் எழுதினார். தன் ஆபீஸில் இன்ஸ்பெக்ஷன் வந்தபொழுது மேலதிகாரியின் செய்கை வெளிப்பட்டு, அவர் எழுதிய பொய்க் குற்றத்தை அவரையே மாற்றி நல்ல சிபாரிசாக எழுதச் சொல்லித் தனக்குப் பதவி உயர்வு கொடுத்ததாக அதில் விளக்கியிருந்தார்.
பத்திரிக்கையில் பொறுப்புடன் வேலை செய்யும் ஒருவர் அன்னை சம்பந்தமான சேவை ஒன்றில் ஈடுபட்டபொழுது தமக்கில்லை என்றிருந்த நிர்வாக ஆசிரியர் பதவி தம்மைத் தேடி வந்ததாகச் சொன்னார்.
மதர் சர்வீஸ் சொஸைட்டியின் சார்பாக அரசாங்க அதிகாரிகளைப் பார்க்க திரு.ஜேக்கப் செல்வது வழக்கம். ‘கொஞ்சநாள் கழித்து அவரை மீண்டும் சந்திக்கப் போனால் பதவி உயர்வால் அவர் இன்னும் பெரிய உத்தியோகத்திலிருப்பார். இப்படிப் பலமுறை நான் கண்டுள்ளேன்’ என்று திரு. ஜேக்கப் சொல்வது வழக்கம்.
சர்க்கார் உத்தியோகத்தில், ஓர் உயர்வு பெற்ற ஒருவர் தான் பாஸ் பெற வேண்டிய எந்தப் பரீட்சையும் பாஸ் செய்யாததால், இனி எந்த உயர்வும் இல்லை என்று கைவிட்ட நேரம், ஆசிரமம் வர ஆரம்பித்தார். அவரை வேறு டிபார்ட்மெண்டிற்கு அழைத்தனர். திறமை கருதி உயர்வு கொடுக்க விழைந்தனர்.
பரீட்சை பாஸ் செய்யாத குறை இந்த டிபார்ட்மெண்டைப் பாதிக்காது. இங்கிருக்கும் வரை உயர் சம்பளம் தரலாம் என்று கொடுத்தனர்.
பதவி உயர்வு என்பது அனுபவத்திற்கும், திறமைக்கும் பரிசாக வருவது. அன்னையை வாழ்வில் ஏற்றுக் கொள்வதே தன் நிலையை உயர்த்துவது என்பதால், அனுபவம் வருவதற்கு முன் உயர்வு வருவதுண்டு.
வேலை செய்யுமிடத்தில் உயர்வுக்கு வழியில்லை என்ற நிலையில், அன்பரை வேறு இடம் கொண்டுபோய் அருள் உயர்வு கொடுப்பதுண்டு. அல்லது வாழ்வின் வேறு அம்சங்களில் பலன் கொடுப்பதுண்டு.
‘நான் நீண்ட நாட்களாய் அன்னையை ஏற்றுக் கொண்டிருக்கிறேன். ஆனால் பதவி உயர்வு தொடர்ந்து தடைப்படுகிறது’ என்பவர் மிகக் குறைவு. அவர்களுடைய வாழ்வில் வேறு அம்சங்கள் குறைவாக இருந்து, அன்னை கொடுக்கும் அருள் முழுவதும் அக்குறைகளை ஈடுகட்டச் செலவாவதுண்டு. வீட்டில் ஒருவருக்குத் தீராத வியாதி, ஜாதகப்படி ஒருவருக்குக் கண்டம் இருக்கிறது, மகனுக்கு எதிர்பாராத பெரிய உத்தியோகம் வியக்கும் வகையில் அமைந்துள்ளது என்பன போன்ற பல நல்ல நிகழ்ச்சிகளும், குறையானவையும் அவர் ஆபீஸில் பெற வேண்டிய பதவி உயர்வுக்குரிய அருளைப் பெற்றுக் கொள்வதுண்டு.
பதவி உயர்வு தடைபடும்போது மேற்சொன்னது போன்ற காரணங்கள் இல்லாமலிருந்தால், இடைவிடாத பிரார்த்தனை பதவி உயர்வைப் பெற்றுத் தரும். மேற்சொன்ன காரணங்களில் ஒன்றிருந்தால், தற்காலிகமாக அது ஒத்திப் போடக் கூடியது என்றால், ஒத்திப்போட்டு, அன்னைக்குப்
பிரார்த்தனை செய்தால் பலிக்கும். ஒத்திப்போட முடியாத காரணங்கள் இருந்து, பதவி உயர்வும் தேவை என்று நினைத்தால் குடும்பத்தார் அனைவரும் பிரார்த்தனை செய்தால், அருளின் அளவு பெருகி பலிக்கும்.
பதவி உயர்வு பெறுவதில் சிக்கல் எப்படிப்பட்டதானாலும், பழைய ஆபீஸ் வாழ்க்கையை ஆத்ம சமர்ப்பணத்திற்குப் பதினைந்து நாள் உட்படுத்தி, பின்னர் மூன்று நாள் இடைவிடாத பிரார்த்தனையை மேற்கொண்டால் அது பலிக்கும். பக்தியின் உயர்வு பதவி உயர்வு என்பதால், மனதில் அன்னையிடம் நெருங்கி வந்தால், பதவியில் உள்ள பிரச்சனைகள் எதிர்பாராதவிதமாக விலகி பதவி உயர்வு கிடைக்கும்.
அனுபவமும் திறமையும் அதிகமாவதை ஏற்று பதவி உயர்வு அளிப்பதால், அவற்றைப் பெற்று உயர்வு பெறுவது ஒரு முறை. பக்தியின் சிறப்பால் அவற்றிலுள்ள குறையை ஈடுகட்டுவது மற்றொரு முறை. முடியாத சிக்கல்களை ஆத்ம சமர்ப்பணத்தால் அவிழ்ப்பது ஒரு வகை. தள்ளிப் போகும் உயர்வைத் தன்னை நோக்கி வரச் செய்ய இடைவிடாத பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வது பொதுவான முறை.
**********