Skip to main content
Karmayogi

Main navigation

  • Home
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home
  2. அன்னையின் அருள்
  3. IV. வேலை

1. தகுந்த வேலை

‘வேலையே கிடைக்கவில்லை’ என்ற நிலையைவிட ‘திறமைக்குத் தகுந்த வேலை கிடைக்காமல் ஏழு, எட்டு ஆண்டுகளாகச் சிறிய வேலையில் இருக்கிறேன். இதை மாற்ற முடியாதுபோல் தோன்றுகிறது’ என்பது கவலைக்கிடமான செய்தி. 1932 முதல் 1939 வரை உலகெங்கும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வேலையில்லாத் திண்டாட்டம் பெருகி இருந்த நேரத்தில், உயர்ந்த தகுதி படைத்தவர்களும், குறைந்த தகுதி தேவைப்பட்ட வேலைகளைச் செய்து வந்தனர். இது நாட்டின் பொருளாதார நிலையால் ஏற்பட்ட சங்கடம். இன்றுகூட சில பட்டதாரிகளுக்கு அதுபோன்ற ஒரு நிலை இருக்கத்தான் செய்கிறது.

நிலை எத்தனைதான் படுமோசமாக இருந்தாலும், நம்முடைய திறமை, தகுதி, பொறுப்பு ஆகியவை குறைவற இருந்தால், அப்படிப்பட்டவர் அன்னைக்குப் பிரார்த்தனை செய்தால் நிலைமையை மீறி அவருக்குத் தகுந்த வேலை கிடைக்கிறது. அத்துடன் ஒரு பெரிய வாய்ப்பும் சேர்ந்து வருகிறது. இதுவே அன்பர்களுடைய அனுபவம்.

‘எனக்குப் போதிய சம்பளம் இல்லை’, ‘நிரந்தரமான வேலை இல்லை’, ‘திருப்தியான வேலை அமையவில்லை’, ‘என் சொந்த ஊரில் வேலை அமையவில்லை’, ‘நான் அன்னைக்குச் செய்த பிரார்த்தனையால் இந்தக் குறை நீங்கவில்லை’ என்றெல்லாம் சொல்பவர்கள் உண்டு.

‘போதிய சம்பளம் இல்லை’ என்பவரை ஆராய்ச்சி செய்தால், அவருக்குத் திறமை ஏதும் இருக்காது. ‘நிரந்தர வேலை இல்லை’ என்பவருக்கு வேலை செய்யவே பிடிக்காது. மேலும் வேலையை ஏமாற்றுவதில் திறமைசாலியாக இருப்பார். ‘திருப்தியான வேலை இல்லை’ என்பவர், வேலை செய்வதில் ஆர்வம் இல்லாதவராக இருப்பார். ‘சொந்த ஊரில் வேலை அமையவில்லை’ என்பவருக்கு வேலைக்குரிய மனப்பான்மை இருக்காது. (வேலைக்குரிய உயரிய மனப்பான்மை இருந்து வேறு காரணங்களுக்காகச் சொந்த ஊரிலேயே இருக்க வேண்டிய நிர்பந்தம் உள்ளவரை இது குறிக்காது.) திறமை முதலிய தகுதிகள் குறைவற இருந்து ‘தகுந்த வேலை இல்லை’ என்று வருந்துபவர்களுக்கும், மேற்கூறிய குறைகளிருந்தும்கூட ‘நமக்கு ஏற்ற வேலை இல்லை’ என்று குமுறுகிறவர்களுக்கும், உடனடியாகத் தற்காலிக நிவாரணம் அளிக்கும் முறை இடைவிடாத பிரார்த்தனை. மூன்று நாட்கள் இடைவிடாமல், ‘நல்ல வேலை வேண்டும்’ என்று பிரார்த்தனை செய்தால் நிலைமை மாறி, தற்காலிகமாக நல்ல வேலை கிடைத்துவிடும்.

1954,55-இல் ஒருவர் 124 ரூபாய் மாத வருமானம் உள்ள வேலையை இராஜினாமாச் செய்துவிட்டு மேற்படிப்புக்குப் போனார். ஆனால் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காமல், ஏற்கனவே பார்த்த அதே வேலைக்குப்போக வேண்டிய நிலையே அவரை எதிர்கொண்டது. அதை ஏற்றுக்கொள்ள அவர் மனம் இடம் கொடுக்கவில்லை. அலையாய் அலைந்து, படாதபாடுபட்டுத் தேடிய நிலையில் அவருக்கு 425 ரூபாய் சம்பளத்தில் ஒரு வேலை கிடைத்தது. ஆனால் அது தற்காலிகமானது. வேலை மட்டும் தற்காலிகமானதன்று; அவர் வேலை செய்த துறையும் தற்காலிகமானதே. ஐந்தாவது வருடம் அந்தத் துறை கலைக்கப்பட்டது.

அவர் மறுபடியும் வேலை தேடி அலைய நேரிட்டது.

நாட்டின் நிலையைப் புறக்கணித்து இருப்பதைவிட, ஓரளவு நல்ல வேலை ஒன்றைத் தற்காலிகமாக அன்னையிடமிருந்து பிரார்த்தனையின் மூலம் பெற, அன்பர் செய்ய வேண்டியவை இரண்டு. ஒன்று; தன்னிடம் உள்ள குறையை இன்றேயில்லாவிட்டாலும், கொஞ்சம் கொஞ்சமாக முயன்று முழுவதும் விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற தீவிர முடிவை சங்கற்பமாகக் கொள்ள வேண்டும். இரண்டு, மூன்று நாள் இடைவிடாமல் பிரார்த்தனை செய்ய வேண்டும். முதலாவதாக மேற்கொண்ட முடிவும், இரண்டாவதாக ஏற்றுக் கொண்ட பிரார்த்தனையும் சேர்ந்து நிலைமையை மாற்றுவது கண்ணுக்குத் தெரியும். அதிலிருந்து வேலையைப் பற்றி நினைவு வரும்பொழுதெல்லாம் அதைத் தவிர்த்து, அன்னையை மட்டும் நினைத்துக் கொண்டால், விரைவில் ஓரளவு திருப்தி அளிக்கும் வகையில் ஒரு வேலை கிடைத்துவிடும்.

நிரந்தரமாகவும், திருப்தியாகவும் வேலை கிடைக்க வேண்டுமானால் அன்பர் செய்ய வேண்டியது ஒன்றுண்டு. செய்யும் வேலைக்குரிய எந்தத் தகுதி தன்னிடம் இல்லையோ, அந்தத் தகுதியை முயன்று, முனைந்து பெற வேண்டும். வேலையில் ஆர்வம் இல்லாதவர் மனத்தை மாற்றிக்கொண்டு ஆர்வத்துடன் வேலையைச் செய்ய முன் வரவேண்டும். வேலை செய்யப் பிடிக்காமல், ‘வாலைக் காட்டுவது’, ‘தலையைக் காட்டுவது’, ‘சாக்குச் சொல்வது’ போன்ற பழக்கங்களை அறவே ஒழித்துப் பொறுப்புடன் வேலையைச் செய்ய முன்வர வேண்டும். ‘ஒரு பெரிய வேலை வேண்டும்’ என்றால், படிப்பாலோ, பயிற்சியாலோ அதற்குரிய தகுதி குறைவாக இருந்தால் குறையைப் போக்கி நிறைவு செய்ய முன்வர வேண்டும்.

உள்ளூரிலேயே வேலை செய்ய விருப்பம் உள்ளவர் உள்ளூரில் கிடைக்கும் வேலையை மட்டுமே செய்ய முன்வர வேண்டும். ‘அரசு’ என்பது மாநிலம் முழுவதும் பரவியது. அரசு வேலைக்கு அதிகாரம் உண்டு; நிரந்தரம் உண்டு; மரியாதை உண்டு. அதிகமான பொறுப்புகள் உண்டு. வேலையை ஏற்றுக்கொள்வதற்கு முன் வேலைக்குரிய மனப்பான்மை (right attitude to work) நமக்கு இருக்க வேண்டும். பெரிய பொறுப்பான வேலையைச் சிறிய மனப்பான்மையுடன் ஏற்றுக்கொண்டு நிறைவேற்ற முடியாது.

வேலை முக்கியம். அரசு வேலையை ஏற்றுக்கொள்ளும் முன், நம் சுயநலச் சிறு தேவைகளைத் தவிர்த்து, வேலைக்குரிய நிபந்தனைகளையும் (நியதிகளையும்) மனப்பான்மையையும் விருப்பத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். நம்மை வேலையின் தேவைகளுக்கும், நிபந்தனைகளுக்கும் உட்படுத்திக்கொள்வது சரியான மனப்பான்மை. நம் தேவைகளுக்கு வேலையை உட்படுத்திக்கொள்ள விழைவது சரியான மனப்பான்மையாகாது. மனைவி வேலை செய்வதால் குடும்பத்துடன் இணைந்திருக்கப் பிரியப்படுவார்கள். அது போன்ற விதிவிலக்கான நிலைமைகளால் செயல்படுபவர்களை இது குறிக்காது. நான் குறிப்பிடுவது மனப்பான்மையையேயாகும். மனப்பான்மை வேலைக்குரிய இலட்சணத்துடன் இருந்தால், ‘நம் பங்கில் குறை இல்லை’ என்று பொருள்.

மனத்திலும், மனப்பான்மையிலும், திறமையிலும், தகுதியிலும் குறை இல்லாமல், வேலை இல்லாமல் இருந்தாலும், சிறிய வேலையில் இருந்தாலும், அப்படிப்பட்டவர்கள் செய்கின்ற பிரார்த்தனைக்கு முழுப்பலனும் உண்டு. அன்னையின் செயல்களில் சில கீழ் வருமாறு:

யாருக்குமே உதவி செய்து பழக்கம் இல்லாத ஒரு பெரிய புள்ளி வலிய வந்து பெரிய உத்தியோகத்தை உள்ளூரிலேயே வாங்கித் தருகிறார். முனிசிபல் சேர்மன் ஓர் அநாதைப் பையனுக்குச் சிறந்த வேலையை வாங்கிக் கொடுப்பதெனக் கங்கணம் கட்டிக்கொண்டு, ஒரு சிறு போராட்டத்தையே நடத்தி வெற்றி காண்கிறார். பெரிய உத்தியோகத்திற்கு உரிய படிப்பு இருந்தாலும், ‘வயதில்லை’ என்று நிராகரிக்கப்பட்ட இளைஞரைக் கூப்பிட்டனுப்பி அதே உத்தியோகத்தைத் தலைவரே வலியக் கொடுக்கிறார். பத்து ஆண்டு காலமாக இருந்த தற்காலிகமான வேலையை (‘இனி நமக்கு வேலை நிரந்தரமாகப் போவதில்லை’ என்று நம்பிக்கை இழந்த ஒருவருக்கு) ஒரு புதிய சட்டம் புறப்பட்டு வந்து நிரந்தரமாக்கிக் கொடுக்கிறது. ‘வெளிநாடு சென்று எங்கள் செலவில் பயிற்சி பெற்று எங்கள் நிறுவனத்தில் உயர் பதவி வகிக்கச் சம்மதமா?’ என்று ஒருவரைத் தேடி வந்து கேட்கிறார் ஒரு கம்பெனி டைரக்டர். கேட்ட சம்பளத்தைப் போல் இரண்டரை மடங்கு சம்பளம் கொடுத்ததுடன், வாடகை இல்லாமல் வீடும் கொடுத்து அன்பரை வியப்பில் ஆழ்த்துகிறார் ஒரு தொழிலதிபர். ‘எந்த வேலை கிடைத்தாலும் ஏற்றுக் கொள்கிறேன்’ என்ற ஒருவருக்கு, உயர்ந்த வேலையைக் கொடுக்கிறார் ஒரு முதலாளி.

இவை எல்லாம் அன்பர்களுக்கு அன்னை வழங்கும் அருட்கொடைகள்.

‘வேலை நிரந்தரமாக, நல்லதாக வேண்டும்’ என்ற பிரச்சனை வேறு; ‘அதிக வருமானம் வேண்டும்’ என்பது வேறு. வருமானம் திறமைக்காகப் பெறுவது; நிரந்தர வேலை பொறுப்புணர்ச்சிக்காகப் பெறுவது. அதிகத் திறமையுள்ளவர் அதிக வருமானத்தைக் கடைசி வரை நிரந்தரமாக வேலையின்றிப் பெறுவது உண்டு. நிரந்தரமாக உயர்ந்த வேலை வேண்டும் என்பவர்க்கு, பொறுப்புணர்ச்சியும், வேலைக்குத் தகுந்த தகுதியும் தேவை.

வேலை தேடுபவர்களில் ஒரு சாரார் உயர்ந்த வேலையை நாடுபவர்கள். அவர்களுக்கு உயர்ந்த திறமையும், தகுதியும் இருக்கலாம். அல்லது உயர்ந்த வேலையைச் செய்து, பின்னர் அதை இழந்தவராக இருக்கலாம். பொருளாதார நிலை குன்றிய காலத்தும், ‘போனால் பழைய உயர்ந்த வேலைக்-குத்தான் போவேன். இல்லாவிட்டால் பட்டினி கிடப்பேன்’ என்று சொல்பவர்கள் உண்டு. ஒரு வகையில் இது உயர்ந்த மனப்பான்மை. மற்றொரு வகையில் வறட்டுப் பிடிவாதம்; பொருத்தமற்ற வீறாப்பு. உண்மையிலேயே உயர்ந்த மனப்பான்மையால் வறுமையை ஏற்றுக்கொண்டவர் அன்னைக்குப் பிரார்த்தனை செய்தால், அவருக்கு உயர்ந்த வேலை கிடைக்கும். மனப்பான்மை சிறியதானால், அதே பலன் இருக்காது. ஒரு பெரிய எஸ்டேட்டை இழந்தவர், வாழ்க்கையை ஓட்டுவதற்காக ஒரு சிறு கம்பெனியில் சிறு வேலையை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார். சில மாதங்களில் அவருக்கு ஒரு பெரிய எஸ்டேட்டிலிருந்து ஒரு மிகப் பெரிய உத்தியோகத்திற்கு அழைப்பு வந்தது. அவரும் அந்த உத்தியோகத்தை ஏற்றுப் பொறுப்புடன் வேலை செய்தார். அவருடைய உழைப்பால் பெரிய லாபத்தை ஈட்டிய முதலாளி அவருக்கு ஒரு சிறிய எஸ்டேட்டையே வாங்கிக் கொடுத்தார். உயர்ந்த மனப்பான்மைக்குக் கிடைத்த மிகப் பெரிய பரிசு இது.

ஏதோ காரணத்தால் நிலை குலைந்து கீழிறங்கிய பின், மனப்பான்மை உயர்வாக இருந்தாலும் அல்லது எந்த வேலையையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மனப்பக்குவம் இருந்தாலும், அவர்கள் அன்னைக்குச் செய்யும் பிரார்த்தனைக்கு முழுப்பலன் உண்டு. பிடிவாதம் போன்ற குணங்களை நிலை நிறுத்த விரும்புகிறவர்களுக்குப் பிரார்த்தனையால் மற்ற எல்லாப் பிரச்சனைகளும் தீருமே தவிர, வேலைப் பிரச்சனை தீராது. இவர்களுடைய வாழ்க்கையைக் கவனித்தால், வேலை விஷயத்தில் இவர்கள் கொண்டாடும் ‘மரியாதையை’ வேறு பல விஷயங்களிலும் அளவுக்கு மீறி விட்டுக் கொடுத்து வாழ்க்கையை நடத்துபவர்களாக இருப்பார்கள். மனம் உண்மையைப் போற்றினால், பிரார்த்தனை பூரணமாகப் பலிக்கும்.

நூறு ரூபாய் சம்பளம் பெற்று வந்த தன் நண்பருக்கு 150 ரூபாய் சம்பளம் பெறும் ஒருவர் உயிரைவிட்டாவது உதவி செய்யத் துடித்து, தன் அரசு வேலையை விட்டு விலகி, அவர் கொடுத்த 2000 ரூபாய் முதலைக் கொண்டு வியாபாரம் செய்து 15 மாதங்களுக்குள் ரூபாய் 17,000 லாபம் சம்பாதித்துக் கொடுத்து மகிழ்ந்தார். 1962-இல் இது பெரிய தொகை. போட்ட முதலைக் கருதினால் கிடைத்த லாபம் அபரிமிதமானது. பணம் வரவே முதலாளி நண்பரின் குணம் மாறியது. லாபத்தை ஈட்டிக்கொடுத்த நண்பருக்குப் பல கடுமையான கட்டளைகள் ‘வரும் தபால்களைப் பார்க்கக் கூடாது. ஆபீஸில் இருந்த ஒரேயொரு நாற்காலியில் உட்காரக் கூடாது. ஸ்டூலில்தான் உட்கார வேண்டும்’ என்பன போன்ற நிர்ப்பந்தங்களை வெறுத்த நண்பர் விலக, கூடவே அதிர்ஷ்டமும் விலக, கம்பெனி சரிந்து விழுந்து தரைமட்டமாகி விட்டது. இது பலரிடம் காணப்படும் மனப்பான்மை.

ஆயுளுக்கும் கவலை இல்லாத அரசாங்க வேலையை விட்டு விட்டு, நண்பனுக்குச் சேவை செய்ய விழையும் மனம் உள்ளவரைக் காண்பது அரிது. அவரால் பொருளீட்டிக் கொடுக்கும் சந்தர்ப்பம் பெறுவது அரிது. அத்தகைய நல்லோரை அவமானப்படுத்தும் மனப்பான்மை உடையவரும் உண்டு.

வழியில் போய்க்கொண்டு இருந்த தன் மாணவனை நிறுத்தி, ‘கல்லூரியில் சேர்ந்துவிட்டாயா?’ என்று கேட்ட ஆசிரியருக்கு, கணிதத்தில் 92 சதவிகித மதிப்பெண் பெற்ற அந்த மாணவன் தனக்குக் கணக்கு குரூப் கிடைக்கவில்லை என்றான். அவனுடைய மதிப்பெண்களை வெளியூர் செனட் மெம்பருக்கு எழுதி, பல்கலைக் கழகம் அந்த மாணவனுக்கு கணிதத்தில் கட்டாயம் இடம் கொடுக்க ஏற்பாடு செய்யும்படி கேட்டுக் கொண்டார் ஆசிரியர். செனட் மெம்பரும் உதவி செய்ய முன் வந்து ரிஜிஸ்டிராருக்குச் சிபாரிசுக் கடிதம் கொடுத்தார். அந்த மாணவன் அந்தக் கடிதத்தை எடுத்துக் கொண்டு போய் ரிஜிஸ்டிராரைச் சந்தித்தான். அவர், ‘சரித்திர குரூப்பில் சேர்ந்துவிடு. பிறகு மாற்றிக் கொள்ளலாம்’ என்றார். மாணவன் அது பிடிக்காமல் திரும்பி வந்து விட்டான்; ஆசிரியர் விடுவதாக இல்லை. ‘இந்த மாணவனுக்கு நீங்கள் கட்டாயம் அட்மிஷன் தர வேண்டும்’ என்று ரிஜிஸ்டிராருக்கு அதே செனட் மெம்பரை மீண்டும் எழுதச் சொன்னார். மாணவன் யோசிக்க ஆரம்பித்தான். ஏற்கனவே பல்கலைக் கழகத்துக்குப் போய் வந்ததில் இரண்டு ரூபாய் செலவு. இன்னொரு தடவை போய் வந்தால் மேலும் இரண்டு ரூபாய் செலவு. அதனால், ‘கண்டிப்பாக இடம் கிடைக்கும் என்று உத்திரவாதம் தர முடியுமா?’ என்று கேட்டான். பையன் ஒரு ஜவுளிக்கடைக்காரனின் மகன்.

கறாராகக் கேட்பவனுக்கு எப்படி உத்திரவாதம் அளிக்க முடியும்? எனவே, அவன் நம்பிக்கை இழந்து மற்றொரு கல்லூரியைத் தேடிப் போனான். அதே நேரத்தில் ரிஜிஸ்டிரார் அவனுக்கு கணித குரூப்பில் சேருமாறு அட்மிஷன் கார்டு அனுப்பி இருந்தார். பையனுக்கு அது கிட்டவில்லை.

வேறொரு கல்லூரியில் சேர்ந்த பிறகு கார்டைப் பார்த்தான். அன்னை நமக்கு அளிக்கும் வரம் இன்றுவரை உலகத்தில் இல்லாதது. அதைப் பெற்றுக் கொள்ள, அதற்குத் தேவையான முயற்சியைக் குறையற, உளமாரச் செய்ய வேண்டும். ‘இரண்டு ரூபாயை எப்படிச் செலவு செய்வது?’ என்று கேள்வி கேட்கும் மனப்பான்மையை விட்டு நன்றியுடனும், முழு முயற்சியுடனும் அருளை ஏற்கும் மனத்தை நாம் பெற வேண்டும்.

***********

Book traversal links for 1. தகுந்த வேலை

  • IV. வேலை
  • Up
  • 2. அன்னை வழங்கும் அளவுகடந்த வருமானம்

Book navigation

  • முன்னுரை
  • I. அன்னை
  • II. குடும்பம்
  • III. யோகம்
  • IV. வேலை
    • 1. தகுந்த வேலை
    • 2. அன்னை வழங்கும் அளவுகடந்த வருமானம்
    • 3. இலட்சிய சேவை - 1
    • 4. இலட்சிய சேவை - 2
    • 5. பதவி உயர்வு
    • 6. டிரான்ஸ்பர்
  • V. நோய்
RSS feed
Powered by Drupal