Skip to main content
Karmayogi

Main navigation

  • Home
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home
  2. அன்னையின் அருள்
  3. IV. வேலை

2. அன்னை வழங்கும் அளவுகடந்த வருமானம்

அன்னையைப் பற்றி அதிகமாகக் கேள்விப்பட்டு ஆர்வத்துடன் அன்னையை ஏற்றுக்கொண்டு, பல்வேறு வகைகளில் அன்னையின் சிறப்பை அனுபவ பூர்வமாக உணர்ந்த பின்னர், ஒரு சிலர், ‘எனக்கு மிகவும் குறைந்த வருமானம். அது அதிகமாக, கண்ணுக்குத் தெரிந்த வழியொன்றும் இல்லை. என் போன்றவர்களுக்கு அன்னையின் அருள் கூட வருமானத்தை உயர்த்தப் பயன்படாது போலிருக்கிறது’ என்று குறைபட்டுக் கொள்ளும் நிலையில் உள்ளனர்.

உள்ளூர் அச்சகத்தில் கணக்கு எழுதும் கணக்குப் பிள்ளை, சிறு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், ‘தாம் பெறும் குறைந்த வருமானம் உயர்வதற்கு வழியே இல்லை’ என்ற முடிவுக்கு வந்து இதுபோல் பேசுவதுண்டு. அதே நிலையில் உள்ளவர்கள் பல திறத்தார். சர்க்கார் அலுவலக குமாஸ்தாவாக இருந்தாலும், சம்பளம் ஏதோ கொஞ்சம் மாறுமே தவிர, நிலைமை இது போன்றதே. சிற்றூர்களில் வாழும் குமாஸ்தா, பத்திரம் எழுதுபவர், சிறு கடைக்காரர்கள் போன்றவர்கள்கூட இதைப் போல் நினைப்பதற்கு வழியுண்டு. சிறு அரிசிக் கடையானாலும் வியாபாரம் பெருக வாய்ப்பு உண்டு. ஆனால் மாதச் சம்பளக்காரர்களுக்கு நிலைமை மாற வழியே கிடையாது. இவர்கள் பற்றாக்குறை வருமானத்தில் ஒரு பெரிய குடும்பத்தைக் கட்டிக்காக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருப்பவர்கள்.

‘வருமானக் கட்டை’ என்பதுடன், வருமானத்தைப் பெருக்கிக்கொள்ள வகை தொகை இல்லாத நிலையில் மனம் நம்பிக்கையுடன் இருப்பது கடினம். அன்னையைத் தெளிவாக அறிந்து பேரார்வத்துடன் அன்னையை ஏற்றுக்கொண்டால், விலகாத இருட்டு இல்லை; விடியாத பொழுதும் இல்லை. அடைபட்ட வழிகள் எல்லாம் பார்வைக்குப் புலப்படும். இவர்கள் எதிர்பார்க்கும் வருமான இலக்கு இவர்களை எதிர்கொண்டு முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சொல்லும். ஆனால் அதற்கு ஒரு சிறிய நிபந்தனை உண்டு. ‘எவ்வளவு தூரம் வருமானம் உயர வேண்டும்?’ என்பது, ‘எந்த அளவுக்கு வாய்ப்பை ஏற்றுக் கொள்ளும் மனநிலை இருக்கிறது? வாய்ப்பின் பலனைப் பெற அதற்குரிய கட்டுத் திட்டங்களை எந்த அளவுக்குப் பூர்த்தி செய்ய விருப்பம் இருக்கிறது?’ என்பனவற்றைப் பொறுத்து இருக்கிறது.

முதற்கட்டமாக வருமானம் இரு மடங்கு ஆவது, நம்பிக்கையும், ஈடுபாடும் சிறப்பாக இருந்தால், நம் நிலை எதுவாக இருந்தாலும், முதல் ஆண்டிலேயே வருமானம் இரு மடங்கு ஆகும். 150 ரூபாய் சம்பளத்திற்கு தினமும் இரண்டு மணி நேர அரசாங்க வேலையை ஏற்றுக்கொண்ட ஓர் அன்பர், அரசுச் சட்டங்களும், சம்பள நிலையும் அடிக்கடி மாறியதால், மூன்றாவது வருடத்தில் 400 ரூபாய் சம்பள உயர்வைக் கண்டார். அன்னையிடம் வந்த முதல் மாதமே பத்து மடங்கு வருமான உயர்வைப் பெற்ற அன்பர்களும் உண்டு. மூவாயிரம் ரூபாய்க்குக் கொஞ்சம் குறைவாகச் சம்பளம் பெற்றுவந்த அன்பர் ஒருவர், மூன்றாம் ஆண்டு முடிவில் 6000 ரூபாய்க்குச் சற்று அதிகமாகச் சம்பளம் பெற்ற நிலையில், ‘இது எப்படி நேர்ந்தது? என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை!’ என்று வியந்து கூறினார்.

அன்னையை ஏற்றுக் கொண்ட பின்பு ஏற்படும் நல்ல மாற்றங்கள் இவை. இவற்றுக்கும் ஒரு விதிவிலக்கு உண்டு. அதைச் சுருங்கக் கூறிய பிறகு மேலே செல்ல விழைகிறேன்.

வாழ்வில் மனப்பாங்காலோ, மற்ற காரணங்களாலோ வருமானத்தைவிடத் தொல்லை கொடுக்கும் குடும்பப் பிரச்சனைகள், மன வேதனைகள், சமூக உறவுகள், வேலை நிர்ப்பந்தங்கள் போன்றவற்றால், சிலர் அல்லற்பட்டு அணையாத நெருப்பாய் எரிந்துகொண்டு இருப்பது உண்டு. அவர்களுக்கு மேற்கூறிய மாற்றங்கள் ஏற்படுவதில்லை. ஆனால் மனப்பாரம் குறையும் வகையில் மற்ற பிரச்சனைகள் தீர்ந்துவிடும். அவை மனத்தைவிட்டு முழுதும் அகலும்வரை, வருமானத்தில் உயர்வைக் காண முடியாது.

அன்னையிடம் வந்தபின், நம்பிக்கை இருந்தும் ஈடுபாடு இருந்தும்கூட, ஏதோ நாம் அறியாத, கண்ணுக்குத் தெரியாத காரணங்களால் வருமான உயர்வு தடைப்படலாம். அந்நிலைக்கு ஆளான அன்பர்கள் மூன்று நாள் இடையறாத பிரார்த்தனையை மேற்கொண்டால், அதை முழுமையாக நிறைவேற்றினால் இறுக்கமான நிலைமாறி, புதிய சந்தர்ப்பங்கள் தோன்றும்; நம் மனநிலையை மாற்றி, இதுவரை செய்யத் தைரியம் இல்லாத காரியங்களைச் செய்யத் தூண்டும்; வேலையை மாற்றும். இவை போன்ற மாற்றங்களால் வருமானம் பெருக வழி ஏற்படும். இதுவரை கூறியதை முதற்கட்டமாகக் கொண்டால், அடுத்த கட்டத்திற்குப் போகும்முன், ‘வருமானம் என்றால் என்ன?

எப்பொழுது அது அதிகமாகிறது? எந்த அளவுக்கு அது அதிகமாகும்? கிடைக்கும் பலன்களை ஒவ்வொரு கட்டத்திலும் நாம் பெற என்ன செய்ய வேண்டும்?’ என்பனவற்றைப் பற்றிச் சிந்திப்போம்.

வருமானம் உழைப்பால் ஏற்படுவது. உழைப்பு இருந்தால், வருமானம் தடையின்றி வரும். உழைப்பு இல்லையேல் வருமானத்தைப் பற்றிய ஆராய்ச்சியைக் கைவிடுவது நல்லது! ‘உழைக்காமல் எப்படி அதிக வருமானம் பெறலாம்?’ என்பது வேறு தலைப்பில் வரக்கூடியது. அதை நாம் விளக்க வேண்டிய அவசியம் இல்லை. வருமானத்தை உற்பத்தி செய்யும் உழைப்பு, வெறும் உடல் உழைப்பாக மட்டும் இல்லாமல் திறமையோடு கூடிய உழைப்பாக இருந்தால், அதன் மூலம் அதிக வருமானம் வரும். அதுவும் அறிவோடு கூடிய திறமையானால் உழைப்பு மிக அதிகமான வருமானத்தை உற்பத்தி செய்யும். அதிக வருமானம் பெற விழையும் ஒருவர் உழைப்பு, திறமை, அறிவு ஆகிய மூன்றையும் பெற்றிருந்தால், அவர் சிறப்பான வருமானத்தைப் பெறலாம். இவை எல்லாம் இருந்தும் தொழில் மந்தத்தாலோ, வேலையில்லாத் திண்டாட்டத்தாலோ, உள்ளூர் நிலவரத்தாலோ ஒருவருக்கு வேலையே கிடைக்கவில்லை என்றாலும், குறைந்த ஊதியமே கிடைக்கிறது என்றாலும், அவர் அன்னைக்குச் செய்யும் பிரார்த்தனையால் நிலைமை விரைவில் மாறி, நிறைவான பலன் கிடைக்கும்; நிறையவும் கிடைக்கும். ஏனெனில் வருமானத்தை உற்பத்தி செய்யும் அம்சங்களான உழைப்பு, திறமை, அறிவு ஆகியன அவரிடம் காணப்படுவதால், பிரார்த்தனையை அன்னை சீக்கிரம் பூர்த்தி செய்ய முடிகிறது. 1967-இல் இன்ஜினீயர் பட்டம் பெற்று 250 ரூபாய் சம்பளத்தில் இருந்த ஓர் அன்பர் செய்த பிரார்த்தனையால், இன்ஜினீயர்களுக்குச் சுலபமாக வேலை கிடைக்காத அந்த நாளில், பெரிய வேலை அவரைத் தேடி வந்தது. அத்துடன் வெளிநாட்டுப் பயிற்சியும் சேர்ந்து வந்தது. நாட்டின் நிலை எப்படி இருந்தாலும், நம் நிலையில் உழைப்பும், திறமையும் குறைவற இருந்தால், பிரார்த்தனை சிறப்பாகப் பலிக்கும்.

குறைந்த வருமானம் உள்ள சிலருக்கு, உறவினர் உதவி கிடைப்பதுண்டு. அவசியத்தைக் கருதி ஏதோ ஒரு சமயம் உதவி பெறுவது தவறில்லை. அதையே வழக்கமாகக் கொண்டால், உறவினர் நல்ல உள்ளம் கொண்டவராக இருந்தால், உதவியும் நீடிக்கும். நல்ல எண்ணத்தில் ஆரம்பிக்கப்பட்ட நல்ல காரியம் உதவி பெறுபவரின் எதிர்காலத்தையே பாதிப்பதாக அமைந்து விடவும் கூடும்.

ஒரே தெருவில் இருவர்; சம வயதினர். இருவரும் எட்டாவது வகுப்புப் படித்தவர்கள். ஒருவர் சிறு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். மற்றவர் ஒரு வண்டிக்காரரின் மகன். அவர் ஒரு கம்பெனியில் கூலி வேலைக்குப் போனார். நல்ல கூலி, குடும்பம் செளகரியமாக வாழ்வதற்குப் போதுமான வருமானம். விவசாயியின் மகன் அதுபோன்ற கூலி வேலைகளுக்குப் போவதை அவமானமாகக் கருதினார். திறமையும், உழைப்புத் திறனும் இல்லாத அவருக்கு, உறவினர்கள் போட்டி போட்டுக்கொண்டு உதவி செய்தனர். பாசம் காரணமாகத் தொடர்ந்தும் உதவினார்கள். அதனால் உழைத்துப் பிழைக்க அவர் முயற்சியே செய்யவில்லை. கடைசி வரை அவர் பிறர் உதவியைக் கொண்டே கஷ்ட ஜீவனம் செய்து காலத்தைக் கழித்தார்.

கூலி வேலை செய்து சுகமாகக் குடும்பத்தை நடத்திக் கொண்டு இருந்த வண்டிக்காரர் மகனுக்கு ஏதோ காரணத்தால் திடீரென்று வேலை போய்விட்டது. உதவி செய்வார் யாரும் இல்லை. ‘எப்படியாவது சம்பாதிக்க வேண்டும்’ என்ற நிர்ப்பந்தம். அதனால் எவரும் செய்யத் தயங்கும் கீழான வேலைகளையும் தொழிலாகக் கருதிச் செய்தார். பணம் குவிந்தது. இரண்டு வீடுகள் கட்டினார். ஏராளமான நிலங்களை வாங்கினார். இது சுய முயற்சியின் விளைச்சல், அதனால் வளர வழியுண்டு. பிறர் உதவி சுய முயற்சியை அழிக்கும். உதவி பெறும் பழக்கம் ஊறிப் போன பிறகு, ‘யார் உதவி செய்வார்கள்?’ என்று மனம் நினைக்குமே தவிர, ‘எதைச் செய்யலாம்?’ என்பதையே மறந்துவிடும்.

குறிப்பாக, தாய்வீட்டு உதவி மகளையும், மருமகனையும் வறுமைக்கு அடகு வைத்துவிடும். பெற்றோரால், வறுமையால் வாடும் மகளைப் பார்த்துச் சகித்துக் கொண்டிருக்க முடியாது. அதனால் தம் வீட்டுக்குப் பக்கத்திலேயே வைத்துக் கொள்வார்கள். இன்னும் அதிகமாக உருகிப் போகிற பெற்றோர், தம் வீட்டிலேயே வைத்துக் கொள்வார்கள். ஆரம்பத்தில் தெரிவது பாசம். முடிவு, மருமகனின் முன்னேறும் முயற்சியை ஆணிவேரிலேயே அழித்து விடும். அந்த நிலை வாழ்க்கையில் விஷம் போன்றது. ஆபத்தை விலக்குவது போல அது விலக்கப்பட வேண்டியது. அந்த நிலையில் இருந்து ஒருவர் தாமாகவே மீண்டு வராதவரை, அன்னையும் அவர்களுக்கு உதவி செய்ய முடியாது. ஏனென்றால், முயற்சியின் முனை மழுங்கிப் போய் இருக்கிறது. அதைக் கூர் செய்த பிறகே அன்னையின் அருள் வேலை செய்யும்.

‘ஒரு தொழிலைச் செய்து, ஒரு வேலைக்குப் போய்ச் சம்பாதிக்க வேண்டும்’ என்ற எண்ணம் இல்லாமல் ‘அந்தரத்தில் இருந்து பணம் கொட்டுவது போல வருமானம் வரவேண்டும்’ என்று நினைப்பவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். அப்படி எல்லாம் வருமானம் வராது;

வந்தாலும் நிலைக்காது. குறுக்காக வளர நினைக்கும் இவர்கள், நம் கட்டுரையின் கருத்துக்கு விதிவிலக்கு. ‘எனக்கு உழைப்பு, திறமை, அறிவு, ஆர்வம் எல்லாமே இருக்கின்றன. ஆனால் பத்துக் காசுகூடச் சம்பாதிக்க முடியாதவனாக இருக்கிறேன்’ என்று சிலர் உண்மையைக் கூறுவது உண்டு. பொதுவாக, இவர்கள் பிடிவாதமான கொள்கையுடையவர்களாக இருப்பார்கள். உதாரணமாக, அவர்களுக்குப் பிடித்த தொழில் தவிர மற்ற ஒரு தொழிலில் அபரிமிதமான இலாபம் இருப்பது தெரிந்தாலும், ‘பழக்கத்தை என்னால் மாற்றிக் கொள்ள முடியாது’ என்பார்கள். அல்லது, ‘வீறாப்பாகப் பேசுவதே கௌரவம்’ எனக் கொண்டு வரும் வாய்ப்புகளை எல்லாம் எட்டி உதைப்பவர்களாக இருப்பார்கள். அல்லது பெரும் வாய்ப்புக் கிடைத்து, பெரும் செல்வத்தையும் பெற்று, வீறாப்புப் போன்ற முரண்பாடுகளால் இவற்றை எல்லாம் இழந்தவர்களாக இருப்பார்கள்.

பழக்கத்தை மாற்றாதவரை, வீறாப்பைக் கைவிடாதவரை, தான் இதுவரை செய்து வந்த பெருங்குற்றமான பாவத்தை உணர்ந்து, நெகிழ்ந்து, கசிந்து கண்ணீர் மல்காதவரை, இவர்களுக்கு யாரும் உதவி செய்ய முடியாது. எனவே இம்முறையின் மூலமாக இவர்கள்தாம் இவர்களுக்கு உதவிக் கொள்ள வேண்டும்.

குறைந்த வருமானம் உள்ள ஒருவர், தம் நிலையை விவரமாக விளக்கி, ‘நான் இந்த நிலையிலிருந்து எப்படி உயர்வது? அன்னையின் அருளை எவ்வாறு பெறுவது?’ என்று கேட்டால், அதற்குரிய பதில்:

  1. முதல் காரியமாக அவர் அன்னையிடம் கொண்டிருக்கும் நம்பிக்கையையும், ஈடுபாட்டையும் சோதனை செய்து, ‘அவை குறைவற அமைந்து இருக்கின்றன’ என்பது உறுதியானால், மூன்று நாள் இடைவிடாத பிரார்த்தனையை மேற்கொண்டு, முதற்கட்டமான பலனைப் பெற்று, இருக்கும் நிலையை இரு மடங்காக உயர்த்திக் கொள்ள வேண்டும்.
  2. அவர் இதுவரை பிறர் உதவியைப் பெற்று வருபவராக இருந்தால், ‘அந்த உதவியை இனிப் பெறுவதில்லை’ என்று தீர்மானித்து, அதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
  3. அவர் தற்சமயம் வேலை இல்லாதவராக இருந்தால், குருட்டுக் கொள்கையை விலக்கி வைத்து, ஒரு சார்பு மனநிலையை ஒதுக்கி, எந்த வேலை கிடைத்தாலும் ஏற்றுக்கொள்ள முன் வரவேண்டும். இந்த இடத்தில் இன்னொன்றை நான் கூறியாக வேண்டும். பிடிவாதம் பிடிப்பவருக்குப் பிறரோ அன்னையோ உதவி செய்ய முடியாது. பொருள் நிலைக்கு ஏற்ற மனநிலை, அன்னையின் அருளைப் பெற்றுத் தரும். மேலும் முன்னேற்ற நலங்களை வாரித் தரும். பிடிவாதம் கொண்ட ஒருவர் பிடி தளர்ந்து எந்த வேலையையும் செய்ய முன் வந்த பொழுது, அவர் ஏற்கனவே விரும்பிய வேலையே கிடைத்தது. இது என் அனுபவத்தில் கண்ட உண்மை.
  4. வேலைக்குத் தேவையான திறமை குறைந்த நிலையில் இருக்கும் ஒருவர், கடுமையாக முயன்று, பயின்று திறமையின் எல்லையை எட்டவேண்டும்.
  5. கடுமையாகவும், உண்மையாகவும் செய்யும் தொழிலை சிறப்புறச் செய்ய வேண்டும்.  
  6. பிரார்த்தனைக்குரிய கட்டம் இதற்கு அடுத்தது இத்தனையும் மேற்கொண்ட பிறகு செய்யும் பிரார்த்தனையின் பலன் அபரிமிதமானது. அது எதிர்பாராத ஏற்றங்களை எல்லாம் எதிரே கொண்டுவந்து நிறுத்தும். உதாரணமாக எனக்குத் தெரிந்த ஒன்றைச் சொல்கிறேன். ‘ஏதேனும் ஒரு வேலை எங்கேனும் கிடைத்தால் போதும்’ என்றிருந்த ஒருவருக்கு, 250 ரூபாய் சம்பளத்தில் ஒரு வேலை கிடைத்து, படிப்படியாக உயர்ந்து, சில ஆண்டுகளுக்குள் மாதம் 8,000 முதல் 10,000 ரூபாய் வரை வருமானம் வெள்ளமாகப் புரண்டு வந்தது.

சிறு வேலைகளில் சிறிய வருமானத்தில் உள்ள பெரும்பாலோர்க்கு, தங்களின் நிலை மாற முடியும் என்று நினைப்பதே சிரமம். அன்னையிடம் வந்தபின் அந்த நினைவை விட்டுவிட்டால், அன்னையின் அருள் செயல்படும். அதோடு உழைப்பும் இருந்தால் அதிகமாகச் செயல்படும்; உழைப்போடு திறமையும், அறிவும் சேர்ந்துவிட்டால் அளவுகடந்து செயல்படும்.

*********

Book traversal links for 2. அன்னை வழங்கும் அளவுகடந்த வருமானம்

  • 1. தகுந்த வேலை
  • Up
  • 3. இலட்சிய சேவை - 1

Book navigation

  • முன்னுரை
  • I. அன்னை
  • II. குடும்பம்
  • III. யோகம்
  • IV. வேலை
    • 1. தகுந்த வேலை
    • 2. அன்னை வழங்கும் அளவுகடந்த வருமானம்
    • 3. இலட்சிய சேவை - 1
    • 4. இலட்சிய சேவை - 2
    • 5. பதவி உயர்வு
    • 6. டிரான்ஸ்பர்
  • V. நோய்
RSS feed
Powered by Drupal