‘அன்னையின் பக்தர்கள் அன்னையின் கோட்பாடுகளைத் தங்கள் தொழிலில் ஏற்றுக்கொண்டு, தங்கள் நிறுவனத்திற்குச் செய்யும் வேலையை உணர்வு பூர்வமான இலட்சிய சேவையாகச் செய்தால், அந்த நிறுவனம் அவரைத் தன் தலைமைப் பீடத்திற்கு உயர்த்தும்’ என்றொரு கருத்தை நான் அடிக்கடி வலியுறுத்திப் பேசுவதுண்டு.
நிறுவனம் என்பது ஓர் அமைப்பு மட்டும் அன்று; ஜீவனுள்ள நிலையமுமாகும். ‘கோயிலில் சுவாமி’ என நாம் வணங்குவது கல்லால் செதுக்கப்பட்ட விக்கிரகம். நாம் கல்லை வணங்குவதில்லை, கல்லால் செய்யப்பட்ட விக்கிரகங்கள் வீதியிலிருந்தால் அவற்றையும் வணங்குவதில்லை. முறையாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டு, மந்திர ஜபங்களால் ஜீவனளிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் செய்யப்பட்ட கோயிலுள்ள விக்கிரகத்தையே ‘தெய்வம்’ என நாம் வணங்குகிறோம்.
கல்லுக்கு உருவம் அளித்தவர் சிற்பி. உயிர்ப்பு அளிப்பது மந்திரம். ஆயிரக்கணக்கான அன்பர்களுடைய பக்தி அந்த உயிர்ப்புக்குச் சிறப்பளிக்கிறது. அதன் பின்னரே கோயில் பிரபலமடைகிறது. கும்பாபிஷேகம் செய்து, பிரதிஷ்டை செய்யப்பட்ட பின்னும், தினசரி பூஜை அவசியம். தினமும் நடக்கும் பூஜை தவறினால், விளக்கேற்ற விட்டுப்போனால், விக்கிரகத்தின் சக்திக்குக் குறையேற்படும். அதுபோல் ‘நிறுவனம்’ என்பது ஓர் அமைப்பு. அதை நடத்தச் சட்ட திட்டங்களுண்டு. நிறுவனம் மக்களுக்குச் சேவை செய்கிறது. நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் நிறுவனத்திற்குச் சேவை செய்கிறார்கள். சேவையின் சிறப்பைக் பொறுத்து நிறுவனத்திற்கு ஜீவன் ஏற்படுகிறது. பூஜையின் தன்மையைப் பொறுத்து ஜீவனுக்குத் தீவிரம் ஏற்படுகிறது. ‘சேவை’ என்பது இரு வகை. நிறுவனம் மக்களுக்குச் செய்யும் சேவை; நிறுவனத்தில் பணிபுரிபவர் நிறுவனத்திற்குச் செய்யும் சேவை.
சேவைக்குள்ள அம்சங்கள் பல. நிறுவனம் சேவைக்குப் பலனாக அளிப்பது பல அம்சங்கள் உடையனவாகும். திறமை, உழைப்பு, சுறுசுறுப்பு ஒரு வகையானவை. விஸ்வாசம், தைரியம், ஈடுபாடு மற்றொரு வகை. அறிவு, தெளிவு, கூர்மை, சமயோசிதப் புத்தி போன்றவை அடுத்த வகை. இலட்சியம், ஜீவன் ஆகியவை சிகரமானவை. இத்தனை அம்சங்களும் சேவை செய்பவர்களிடம் பல வகைகளில் கலந்து காணப்படும். இறுதியில் நிறுவனத்தால் அவர்கள் பெறும் பலனிலும் அவை அதேபோல் கலந்து காணப்படும்.
ஒருவர் திறமையானவர். தன் திறமையை நம்பி வாழ்பவர். தன் நிறுவனத்தில் சேவையை ஒழுங்காகச் செய்பவர்தான். நிறுவனத்தை நம்பி வாழவில்லை எனவும் தன் திறமையையே நம்பி இருப்பதாகவும் நினைப்பவர். அந்த நிறுவனத்திற்கும் நன்கொடைக்கும் சம்பந்தமில்லை. அவருடைய உறவினர் ஒருவர் திடீரென்று பெரும் செல்வம் பெற்றார். அவரிடம் சென்று தன் நிறுவனத்திற்கு நன்கொடை பெற்றுத் தந்தார். 34 ஆண்டுகளுக்குப் பின் ஓய்வு பெற்றார். வழக்கமாக ஓய்வு பெறும்போது பிரிவுபசாரம் கொடுக்க வேண்டும் என்றும் பேச்சு எழுந்தது. ‘அடுத்த ஆண்டு மேலும் இருவர் ஓய்வு பெறுகின்றார்கள். அப்பொழுது இருவருக்கும் சேர்த்துச் செய்யலாம்’ என நிறுவனத்தின் தலைவர் சொன்னார். ‘அவர் எப்படி இருந்தாரோ அப்படியேயிருக்கிறது பிரிவுபசாரமும்!’ என எல்லாரும் பேசினார்கள்.
திறமையான ஓர் அதிகாரியின் நேர்மையைக் கேள்விப்பட்டு அவருடைய நிறுவனத்தைப் போன்ற மற்றொரு நிறுவனம் அவரை அணுகி இரு மடங்கு சம்பளம் கொடுப்பதாகக் கூறினர்.
‘நான் இந்த நிறுவனத்தை உயிர் போல நேசிக்கின்றேன். இதிலிருந்து வெளியே வருவதற்கில்லை’ என்று அவர் கூற, அவர்கள் மூன்று மடங்கு சம்பளமும், உயர்ந்த பதவியும் கொடுப்பதாகக் கூறினார்கள். அவர் மறுத்துவிட்டார். அவர் நிறுவனத்தில் ஓர் உயர்ந்த பதவியிலிருந்தாலும், அது ஜூனியர் அதிகாரிக்குள்ள அந்தஸ்துதான். சில ஆண்டுகட்குப்பின் அவரை அவருடைய நிறுவனத்தில் தலைவராக்கினர். அவரோ மற்றவர்களோ எதிர்பார்க்காத ஒன்று அது. அவருக்கு நிறுவனம் கொடுத்த பரிசு அவருடைய விஸ்வாசத்திற்கே கிடைத்த பரிசாகும்.
ஒருவருக்கு மெடிகல் காலேஜில் படிக்க ஆசை. நிறைவேறவில்லை. மற்றொரு பட்டம் பெற்றார். அரசாங்கத்திலிருந்து அவர் பாஸ் செய்வதற்கு முன்பே வேலைக்கு ஆர்டர் வீடு தேடி வந்தது. அவருக்கு விருப்பமில்லை. வேண்டா வெறுப்பாகச் சேர்ந்தார். MPSC மூலம் வேலை நிரந்தமாயிற்று. அவருடன் நெருங்கிய நண்பர்கள் பலர் குமாஸ்தாவாக இருக்கும்பொழுது இவர் ஆபீசராக இருந்தார். 3 ஆண்டுகளுக்குப் பின் ராஜினாமாச் செய்தார். மேலும் 3 ஆண்டுகள் வேறு வேலை செய்தார், மேற்படிப்புக்குப் போனார். படிப்பை முடித்தபின் வேலை கிடைக்கவில்லை. தற்காலிகமான துறையில் அதிக சம்பளத்தில் வேலை கிடைத்தது. 3 ஆண்டுகளுக்குப்பின் அந்த துறையைக் கலைத்தனர். வேலைக்கு ஆபத்து! பெரிய சிபாரிசைத் தேடியலைந்தார். முதலில் வேலை செய்த அரசுத் துறையில் கெஜட் பதவிக்கு மனுப்போட்டார். செலக்ஷன் சிபாரிசால் கிடைத்தது. 1½ வருடம் போஸ்டிங் கிடைக்கவில்லை. போஸ்டிங் கிடைத்தபொழுது MPSC மூலம் நிரந்தரமான கெஜட் பதவியில் அமர்ந்தார். ஓராண்டு முடிந்தது. அந்தத் துறையின் இயக்குநர் அவரை வேலை நீக்கம் செய்துவிட்டார். சர்க்கார் சரித்திரத்திலேயே நிரந்தரமான கெஜட் பதவியில் உள்ள ஒருவரை வேலை நீக்கம் செய்வது அதுவே முதல் முறை. சர்க்காருக்கு விண்ணப்பித்தார். உடனே அவருக்கு மீண்டும் போஸ்டிங் கொடுத்தார்கள். டைரக்டர் செய்தது தவறு என டைரக்டர் மேல் நடவடிக்கை எடுத்தார்கள். ‘இதுபோல் இனி நடக்கக் கூடாது’ என ஓர் அரசாணை பிறப்பித்தார்கள். அவர் மீண்டும் வேலையில் சேர மூன்று மாதங்கள் ஆயின. போஸ்டிங் மூன்று நாட்களில் கொடுத்தும்கூட ஆர்டர் கைக்கு வர 90 நாட்களாயின. மேலும் ஒரு வருடம் முடிந்தது. மறுபடியும் அவரை வேலை நீக்கம் செய்தார்கள். மறுபடியும் அப்பீல் செய்தார். வேலை மீண்டும் கிடைத்தது. திரும்பிச் சேர 90 நாளாயிற்று. நிரந்தரமான வேலையைத் தேடி, வலிய வந்த ஆபீசர் உத்தியோகத்தை உதாசீனப்படுத்தினார். சிபாரிசு, உயர்வு, படிப்பு, G.O. எல்லாவற்றையும் மீறி மீண்டும் மீண்டும் உத்தியோகம் பறி போயிற்று. நிறுவனத்திடம் ஒருவருக்கு என்ன பற்று இருக்கிறதோ, வெறுப்பு இருக்கிறதோ அதன்படி பலனை நிறுவனம் அவருக்கு அளிக்கின்றது. விஸ்வாசத்தை மெச்சி தலைமைப் பதவி கொடுக்கும் நிறுவனம், விருப்பமில்லாதவர்களைச் சட்டங்களையும் புறக்கணித்து விலக்குகிறது. நிறுவனத்திற்கும் ஜீவன் உண்டு.
ஒரு மாதப் பத்திரிக்கையை அரசியல்வாதி ஒருவர் நடத்தி வந்தார். அங்கு வேலை செய்தவர்களில் பத்திரிகை விநியோகம் செய்யும் பையன் ஒருவன், தன் முதலாளியிடமும், பத்திரிக்கை மீதும் அளவுகடந்த விஸ்வாசம் கொண்டவன். பத்திரிக்கை நஷ்டமாயிற்று. முதலாளி பத்திரிக்கையை மூட முடிவு செய்தார். பையனுக்கு முதலாளியை விட்டுப் பிரிய மனமில்லை. பத்திரிகையை மூடப் போகிறார் என்பதை நினைக்கக்கூட முடியவில்லை. அவரிடம் சென்று, ‘பத்திரிக்கையை மூட வேண்டாம். என்னிடம் கொடுங்கள். நடத்துகிறேன்’ என்றான். அவரும் ஒப்புக்கொண்டார். அவன் பிரம்மப் பிரயத்தனம் செய்தான். வெற்றி கிடைத்தது. தமிழ் நாட்டிலேயே பெரிய பத்திரிக்கையாயிற்று. கோடிக்கணக்காகச் சம்பாதித்தான் பையன். மாதம் தோறும் முதலாளியின் ஊருக்குப் போய் அவருக்கு சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்துவிட்டு வருவான். அவனுடைய விஸ்வாசத்தை ஆடிப்போன பத்திரிக்கை ஏற்றுக்கொண்டு அசுர வேலை செய்த அவனுக்கு ஆயிரம் வெற்றிகளை அந்தச் சிறு நிறுவனம் பெற்றுக் கொடுத்தது. நிறுவனத்திற்கு ஜீவன் உண்டு. நம்முடைய விஸ்வாசமும் ஈடுபாடும் அந்த ஜீவனை வானளாவ உயர்த்த முடியும். நம் விஸ்வாசத்திற்கும் ஜீவனுண்டு.
முதல் மகாயுத்தத்தில் உலகம் பீடிக்கப்பட்டு உலகப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட காலத்தில் (1933) ஒருவர் M.A. பட்டம் பெற்றார். பத்தாண்டு காலம் வேலை கிடைக்கவில்லை. தற்காலிகமாக 10 நாட்கள் 2 மாதம் என செய்த வேலையெல்லாம் சேர்ந்து 3 ஆண்டு ஊதியம் கொடுத்தது. 1943-இல் அவருக்குப் பல்கலைக் கழக ஆசிரியர் வேலை கிடைத்தது. அங்குள்ள ஆசிரியர் குழாமில் அவரே கடைசி ஜூனியர். அதுவே அவர் படித்த கல்விக் கோயில். அணில் பாலம் கட்ட முற்பட்டதைப் போல் அந்தப் பல்கலைக் கழகத்தை எப்படி உயர் நிலைக்குக் கொண்டு வரலாம் என இரவு பகலாய் யோசனை செய்தார். ஏராளமான தஸ்தாவேஜுகளை ஆராய்ந்து ஒரு புத்தகம் எழுதினார். வெளியிட முடியவில்லை. கல்வித்தரம், ஆசிரியர் நிலை, ஆராய்ச்சித் திறன், மாணவர் வாழ்க்கை, இலட்சியம் என்ற தலைப்புகளில் நூற்றுக்கணக்கான சொற்பொழிவுகளை ஆற்றினார். அவருடைய முயற்சிகள் வெற்றி பெற்றன. செனட்டில் மெம்பரானார். சிண்டிகேட்டிலும் மெம்பரானார். தன் திட்டங்களை எல்லாம் துணை வேந்தரிடமும் ஆளுநரிடமும் கூறினார். நிர்வாகம் அவருடைய கருத்துகளைப் பெரும்பாலும் ஏற்றுக்கொண்டது. மேலும் அவர் அங்கு வேலையிலிருப்பது சரியில்லை என முடிவு செய்தது. 10 ஆண்டுகள் வேலையில்லாமலிருந்து பெற்ற வேலையை ஆபத்துக்குள்ளாக்கி இலட்சியத்தை நிலை நிறுத்தினார். அதைவிட்டு வேறு இடம் சென்று புரொபசராக வேலை செய்து அப்பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து சேவை செய்தார். தமிழ் நாட்டிலேயே சிறந்த கல்வி நிபுணர் என்று பெயர் பெற்றார். அவரது மாணவர்களில் ஒருவர் சென்னையிலும் மற்றொருவர் டெல்லியிலும் அமைச்சர்களானார்கள். அவர்கள் இவருடைய ஊருக்கு வந்தால் இவரை வீட்டில் வந்து பார்த்துப் போவார்கள். வேலைக்கே திண்டாடியவர் கல்லூரி முதல்வராகி, ஓய்வு பெற்றார். இவருடன் ஆரம்ப காலத்தில் வேலை செய்த ஒருவர் I.A.S. பாஸ் செய்து நாட்டை விட்டு வெளியில் சென்று பல இடங்களில் வேலை செய்து ஓய்வு பெற்ற பின், இதே மாநிலத்திற்கு ஆளுநராக வந்தார். ஆளுநர் புதியதாக வந்தவுடன் அப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆளுநரைப் பார்க்கப் போனார். ஒரு காலத்தில் துணைவேந்தரும், ஆளுநரும், ஒரே ஹாஸ்டலில் பக்கத்து அறைகளில் தங்கியிருந்தவர்கள். ஆளுநர் அவரை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. துணைவேந்தர் கவலை கொண்டார். அந்த நாளில் அவருடன் இருந்த பல பெரிய ஆசிரியர்களைத் துணைவேந்தர் நினைவு கூர்ந்தார். ஆளுநர் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவராதலால் அவருக்கு 45 ஆண்டுகள் கழித்து யாரையும் நினைவு வரவில்லை. துணை வேந்தர் புறப்படு முன் ஆளுநர் அவரை நிறுத்தி, ‘அப்பொழுது ஒரு கணித ஆசிரியர் இருந்தாரே அவர் எங்கிருக்கிறார்?’ என்று கேட்டு அவருடைய பெயரையும் ஆளுநர் சொல்லிக் கேட்டபொழுது துணைவேந்தருக்கு ஆச்சரியமும், எரிச்சலும் ஏற்பட்டன. ஒருவரையும் நினைவில்லாத பொழுது அவரை மட்டும் எப்படி நினைவு வைத்திருக்கிறார்? எனத் துணைவேந்தர் நினைத்தார்.
இலட்சிய சேவை, ஸ்தாபனத்தின் மீதுள்ள விஸ்வாசத்திற்குப் பிரதியாகப் பதவியாகவும் வரும்; பெருமையாகவும் வரும்; மேலும் புகழாகவும் வருவதுண்டு. சென்னையில் ஆங்கிலேயர் நடத்திய பெரிய நிறுவனம் ஒன்றில் திறமையாகவும், விஸ்வாசமாகவும் வேலை செய்த சாதாரண அதிகாரி ஒருவர், அந்த நிறுவனத்தில் தலைவரானதைப் பலரும் அறிவார்கள்.
ஒரு முதலாளி சென்னையிலிருந்து கொண்டு 200 ஏக்கர் நிலத்தைத் தங்களூரில் ஓர் ஆராய்ச்சியிடம் நிர்வாகத்திற்காக விட்டிருந்தார். அநேக ஆண்டுகள் ஆராய்ச்சி செய்த நேர்மையான விவசாயம், சரியான உழைப்பு, அப்பழுக்கில்லாத கணக்கு, அவருடைய விஸ்வாசம் முதலாளியை வியக்க வைத்தன. ஆராய்ச்சியின் உழைப்பால் நிலம் பல மடங்கு விலை அதிகமாயிற்று. முதலாளி நிலத்தை விற்க முடிவு செய்தார். அதையறிந்த பலர் விலை கேட்டார்கள். போட்டி அதிகமாயிற்று. சென்னைக்கே பலர் வந்துவிட்டனர். முதலாளிக்குத் தன் நிலத்தின் விலை இவ்வளவு அதிகமாக உயர்ந்துள்ளது என்று புரிந்தவுடன் விற்கவேண்டும் என்ற எண்ணம் மாறி விட்டது. ஆராய்ச்சியைக் கூப்பிட்டனுப்பினார். அவருக்கு எல்லாம் தெரியும். எனினும் எல்லா விவரங்களையும் விளக்கமாகச் சொல்லி, ‘நான் நிலத்தை விற்கப் போவதில்லை. உன்னுடைய உழைப்பால் மதிப்பு பல மடங்கு அதிகமாயிருக்கிறது. அது உன் உழைப்பின் பலன். அந்தப் பலன் உனக்கே சேர வேண்டும். நான் உன்னிடம் நிலத்தைக் கொடுத்த பொழுது என்ன மதிப்பு இருந்ததோ அதுவே எனக்குப் போதும். அந்த விலையைக் கொடுத்து நீயே 200 ஏக்கரையும் எடுத்துக் கொள். உன்னிடம் பணம் இல்லை. இன்றிலிருந்து நிலம் உன்னுடையதாகட்டும். பயிரிட்டு இலாபத்தை எடுத்துக்கொள்.
அதிலிருந்து எனக்குச் சேரவேண்டியதைக் கொடு’ என்றார். ஒரே ஆண்டில் 100 ஏக்கர் விலையையும் அடுத்த இரண்டாண்டில் மீதி 100 ஏக்கர் விலையையும் ஆராய்ச்சி சம்பாதித்துக் கொடுத்து விட்டார். முதலாளியின் மனம் பெரியது. ஆராய்ச்சியின் விஸ்வாசம் உயர்ந்தது. ஸ்தாபனத்தின் ஜீவன் விசேஷமானது. உன்னுடைய உழைப்பையும், விஸ்வாசத்தையும், ஈடுபாட்டையும், இலட்சியத்தையும் மெச்சி உன்னை அதன் தலைவனாக ஏற்றுக்கொள்ளும் பாங்கு ஸ்தாபனத்திற்குண்டு.
***********