Skip to main content
Karmayogi

Main navigation

  • Home
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home
  2. அன்னையின் அருள்
  3. II. குடும்பம்

06. தீய சக்திகள்

ஸ்ரீ அரவிந்தரும் அன்னையும் தங்கியிருந்த வீட்டில் ஒருநாள் கல் மாரி பொழிய ஆரம்பித்தது. ஸ்ரீ அரவிந்தர் இருந்த அறை தவிர மற்ற எல்லா அறைகளிலும் கல் ஏராளமாக விழுந்தது. யார் மீதும் படவில்லை என்றாலும், தொடர்ந்து விழுந்தது. புதியதாகச் சேர்ந்த ஒரு வேலைக்காரப் பையனை அன்னை வெளியே போகச் சொன்னதும், கல் விழுவது நின்றுவிட்டது. சில நாள் கழித்து அப்பையனுடைய குரு மரணப் படுக்கையிலிருப்பதாகவும், அவர் ஒரு மந்திரக்காரர் எனவும் தெரியவந்தது. செய்தியைக் கேட்ட ஸ்ரீ அரவிந்தர் ‘இது என்ன பெரிய குற்றம்? இதற்காகவா அவன் இறக்க வேண்டும்?’ என்றார். மந்திரவாதி பிழைத்துக் கொண்டார். மந்திரம் கற்றுக்கொள்பவர்கள் தங்கள் சக்தியைச் சோதனை செய்து பார்க்க சித்தி பெற்றவர்கள் மீது மந்திரப் பிரயோகம் செய்து பார்ப்பதுண்டு. ஸ்ரீ அரவிந்தர் தம்மைத் தொந்தரவு செய்தவனைக் காப்பாற்றிய நிகழ்ச்சி ‘பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே’ என்பதாகிறது.

‘எங்கள் வீட்டில் செய்வினை செய்துவிட்டார்கள்’ என்று அநேக கடிதங்கள் வருவதுண்டு. அவற்றுள் பெரும்பாலும் கற்பனையானவையேயாகும். உண்மையான தொந்தரவிருந்தால் அன்னை, ஸ்ரீ அரவிந்தர் படங்களை அவ்விடத்தில் கொண்டு வைத்து சாம்பிராணி தூபம் போட்டால் முதல் நாளே போய்விடும்.

அரக்கோணத்திலிருந்து ஒருவர் இது போல் பல வருஷம் கஷ்டப்படுவதாக எழுதினார். படங்களை வீட்டைச் சுற்றி எடுத்து வந்தவுடன் தீய சக்திகள் விலகி வீடு கலகலப்பாகி விட்டது. பிறகு வீடு ரிப்பேர் செய்யும்பொழுது அதில் செப்புத் தகடுகளைக் கண்டு எடுத்து எறிந்து விட்டனர்.

தம்முடைய இருபது ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டவர் குத்தகை கொடுப்பதில்லை. நிலத்திற்கு உரியவர் பல வருஷமாக நிலத்திற்குப் போக முடியவில்லை. நிலத்தைச் சுற்றி அன்னை படத்தை வலமாக எடுத்து வந்தபின், தடையும் விலகியது, குத்தகைக்காரரும் விலகி நிலம் கைக்கு வந்தது.

சொந்தமாக துர்க்கைக்குக் கோயில் கட்டித் தினமும் பஜனை பாடும் கோடீஸ்வரருக்குத் திடீர் திடீரென மூச்சடைப்பு வந்து உயிருக்கு ஆபத்து வருவதுண்டு. சொந்த ஆஸ்பத்திரிக்கு ஓடித் தன்னைக் காப்பாற்றிக் கொள்வார். டாக்டர்கள் உடலில் கோளாறில்லை என்றனர். செய்வினை என்றால் அவர் கோபப்படுவார். இங்கிலாந்தில் படித்து, இராணுவ அதிகாரியாக இருந்ததால் அவர் அதை நம்பவில்லை. ஏழு ஆண்டுகள் சிரமப்பட்டார். ஒருநாள் ஒரு கடிதம் வந்தது, “எனக்கு மூன்று லட்சம் பணம் கொடுத்து உங்களுக்குத் தீங்கு செய்யச் சொன்னார்கள். நானும் செய்து விட்டேன். அது என்னையே பாதித்துவிட்டது. நீங்கள் பெரிய மனசு செய்து மன்னித்தாலன்றி நான் உயிரிழப்பேன்சு என்று மந்திரவாதியே கடிதம் எழுதியிருந்தான். பிறகு மந்திரத்தால் அதை மாற்ற முயன்றார்கள், முடியவில்லை. நிலைமை மோசமான பின் சமாதிக்கு வந்தார். அரை மணி பிரார்த்தனை செய்தார். இருபதாவது நிமிஷம் தன்னை விட்டுப் புகை மண்டலம் விலகுவதைக் கண்டார். அத்துடன் அது போய் விட்டது. ஆனால் குரல் பாதிக்கப்பட்டு பஜனை பாட முடியவில்லை. Spiritual speech ஆன்மீகப் பேச்சு என்ற மலரை அன்னைக்குச் சார்த்தி வணங்கினார். குரல் வந்துவிட்டது.

இப்போது மீண்டும் முன்புபோல் பஜனை பாடுகிறார். திடீரென ஓர் இளைஞனுக்குக் கனவு வந்து, தான் பிரேதமாக இருப்பதுபோல் தெரிந்து பயம் பிடித்து ஆட்டியது. சிலநாள் இதுபோல் சிம்ம சொப்பனமாக இருந்தது. அவன் படுக்கும் இடத்தைக் கழுவிச் சுத்தம் செய்து சாம்பிராணி தூபமிட்டு Blessing packet பிரசாதத்துடன் தூங்க ஆரம்பித்தான். கனவு வருவது நிற்கவில்லை. ஆனால் பயங்கரம் 90% குறைந்திருந்தது. அடுத்த நாள் படுக்கப் போகுமுன் தன் பக்கத்தில் அன்னையும், அடுத்த பக்கம் ஸ்ரீ அரவிந்தரும் அமர்ந்து தன் தலையில் கை வைத்து ஆசீர்வாதம் செய்வதாக நினைத்துப் பிறகு தூங்கினான். அத்துடன் அத்தொந்தரவு விலகிவிட்டது.

பி.எச்.டி. படிக்கும் மாணவர் ஒருவர் இரவில் எழுந்து உட்கார்ந்து நாய்போல் குரைத்தார். Blessing packet-யைத் தலையணை அடியில் வைத்தாலும் நிற்பதில்லை என்று கடிதம் வந்தது. மாலை குளித்துவிட்டுச் சுத்தமான துணி அணிந்து, படுக்கும் அறையைக் கழுவிவிட்டு, ஊதுவத்தி கொளுத்தி வைத்துப் பிறகு தூங்கச் சொன்னேன். முதல் நாளே சிரமம் விலகியது. அன்னை, ஸ்ரீ அரவிந்தர் படங்கள் உள்ள இடங்களில் இச்சக்திகள் வரா. சுத்தம் இருந்தால் தீயவை எதுவும் வரவே வரா.

வெளிநாட்டுப் பெண் ஒருவர் தனக்குப் பதினேழு பிசாசுகள் பிடித்திருப்பதையும், 17 ஆண்டுகளாகத் தான் தினமும் சித்ரவதைப்படுவதையும் விளக்கி டாக்டர்கள் மற்றும் பலவகையான மருத்துவங்களை நாடினார். அவை எதுவுமே பலன் அளிக்காத நிலையில் அன்னையைப் பற்றிக் கேள்விப்பட்டார். திடீரெனத் தூக்கம் வரும். வந்தால், பிசாசு கனவில் வந்து பயமுறுத்தும். அலறி எழுந்திருப்பார். தினமும் பத்துப் பன்னிரண்டு முறை இதுபோலிருக்கும். ஆசிரமம் வந்தார். மனம் நிம்மதியாயிற்று. தினம் பத்து முறை வந்த தொந்தரவு, ஒரு முறையாயிற்று. இங்கேயே தங்கிவிட்டார்.

அன்னை மீது நம்பிக்கை இல்லை. தியானம் செய்வதில்லை. சமாதிக்குப் போவதில்லை. இதெல்லாம் பகுத்தறிவுக்குப் பொருந்தாதவை எனக் கருதியவர் அவர். எனவே காணிக்கையைப் பற்றியும் அவர் நினைக்கவில்லை. ஒரு சமயம் அன்னைக்குத் தியான மையம் கட்டலாம் என்று சிலர் பேசியபொழுது, தாம் அந்தச் செலவை ஏற்றுக்கொள்ள முன்வந்தார். அத்துடன் அந்த ஒருமுறை வந்த தொந்தரவும் நின்றுவிட்டது. பிறகு மலர்களைப் பற்றிக் கேள்விப்பட்டு, Mental opening விழிப்புற்ற மனம் என்ற மலரைத் தியானத்தில் பயன்படுத்தினார். தூக்கம் போய்விட்டது. இரவு பன்னிரண்டரை வரை தூங்க முடிவதில்லை. இந்த நல்ல மாற்றமெல்லாம் அவர் மனதைக் கவர்ந்தன.

அன்னையைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள விரும்பினார். அன்னை எழுதியவற்றைப் படித்தார். தியானத்தை மேற்கொண்டார். தினமும் சமாதிக்குச் சென்றார். சமாதிக்கு மலர் வாங்கி வைத்தார். உணவு முறையிலும், படிப்பிலும், தியானத்திலும், காணிக்கையிலும், புஷ்பாஞ்சலியிலும் தன்னை ஈடுபடுத்திப் பல்வேறு முறையிலும் அன்னையை அதிகமாக ஏற்றுக்கொள்ள முயன்றார். பேயறைந்தது போலிருந்த முகம் மாற ஆரம்பித்துக் கனிவு நிறைந்ததாகி, புதிய மனிதராகிவிட்டார். அவரைப் பொறுத்தவரை அது புனர் ஜென்மம் என்று அவர் சொல்வதுண்டு. பஸ்ஸிலோ, காரிலோ, சைக்கிளிலோ ஐந்து நிமிஷம் போவதற்குள் தூக்கமும், அத்துடன் அதிர்ச்சியான கனவும் வருவது மாறி, இலண்டன் வழியாக நியூயார்க் போய் அங்கிருந்து ஜப்பான் வழியாகத் திரும்பவும் பாண்டிச்சேரி வந்தது அவருக்குப் பெரிய அதிசயமான நிகழ்ச்சி.

ஓர் இளம் பெண்ணுக்குப் பிரசவமானவுடன் சித்தப் பிரமை வந்து விட்டது. கீழ்ப்பாக்கம், வேலூர் ஆஸ்பத்திரிகளிலும், வீட்டிலுமாகப் பத்து வருஷம் ஓடி விட்டது. அவருடைய உறவினர் அன்னை பக்தரானார். ஆசிரமத்தில் விடுமுறைக்-காக ஒரு மாதம் வந்து தங்கினார். தினமும் சமாதிக்கு வரும்பொழுது இவருக்குக் குணமாக வேண்டும் என்று தவறாமல் பிரார்த்தனை செய்வார். லீவு முடிந்து வீட்டிற்குப் போனார். அவர் வீட்டிலிருந்து கடிதம் வந்திருந்தது. செய்த புதிய வைத்தியம் முழுவதுமாகப் பலித்து விட்டது. சித்தப்பிரமை போன இடம் தெரியவில்லை. வீட்டில் பண்டிகை கொண்டாடினர். பத்தாண்டு சித்தப்பிரமையாக இருந்தவர் என்று எவரும் சொல்ல முடியாத அளவு முகத்திலும், பேச்சிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ‘முதலிலிருந்து செய்வினை என்றே நான் நம்பியிருந்தேன். எதுவானாலும் மனைவி பூரண குணம் அடைந்து விட்டாள்’ என்று கடிதம் விவரித்தது. பக்தர் தம் பிரார்த்தனையைப் பற்றிப் பிரஸ்தாபிக்கவேயில்லை. அன்னையின் அருள் தான் என்பதை உணர்ந்து கொண்டால் போதும் என்று விட்டு விட்டார்.

ஒருநாள் மாலை, நிலத்தில் வேலை செய்து கொண்டு இருந்தவர்கள் அனைவரும் திகில் கண்டு ஓடி வந்தார்கள். கொள்ளிவாய்ப் பிசாசைப் பார்த்ததாகச் சொன்னார்கள்.

கேட்டவர்கள் நம்பவில்லை; சிரித்தார்கள். மறுநாளிலிருந்து அந்தக் கொல்லைக்கு ஆள் வருவதில்லை. இது ஒரு பிரச்சனையாகி விட்டது. அன்னை, ஸ்ரீ அரவிந்தர் படத்தை எடுத்துக் கொண்டு நிலத்தைச் சுற்றி வந்து, நிலத்தில் மாலை ஆறு மணிக்குச் சாம்பிராணித் தூபம் போட்டார்கள். அதன்பின் கொள்ளிவாய்ப் பிசாசை முதலில் பார்த்தவர்கள் அது அங்கில்லை என்றார்கள். பிரச்சனை தீர்ந்து விட்டது.

அன்பர் ஒருவர் வெளியூரிலுள்ள தனது நண்பர் வீட்டிற்குப் போனார். நண்பர் வீடு பிசாசு ஓட்டும் இடம். நண்பர் காபி கொடுத்தார். சாப்பிட்டவுடன் அன்பருக்கு மயக்கம் வந்து விட்டது. என்ன செய்வதென்று தெரியவில்லை. எதிர் வீட்டிலிருப்பவர்கள் அன்னை பக்தர்கள் என நினைவு வந்தது. கொஞ்சம் தெளிந்தவுடன் சிரமத்துடன் எழுந்து வந்து எதிர் வீட்டிற்குப் போனார். உள்ளே நுழைந்தவுடன் முகத்தெளிவு ஏற்பட்டது.

கிராம தேவதைகளுக்குச் சீட்டுக் கட்டும் பழக்கம் உண்டு. பொருள்கள் தொலைந்தாலும், மற்ற காரணங்களுக்காகவும் இப்பழக்கம் கிராமங்களில் உண்டு. இதில் பலன் என்ன? எது சரி, எது தப்பு என்பதைவிட அன்பர்களுக்கு இது ஒத்து வராது. ஓர் அன்பர் தம் விலையுயர்ந்த பொருள் ஒன்று தொலைந்த பொழுது அருகிலுள்ளவர்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டு ஒரு கோயிலில் சீட்டுக் கட்டினார். அதிலிருந்து அவருக்கு எதுவுமே சரியில்லை; சாப்பாடு, தூக்கம், வேலை, நடைமுறை எல்லாம் பாதிக்கப்பட்டன. கட்டிய சீட்டை எடுத்து வந்த பின்னரே எல்லாம் நேராயிற்று. பொருள் தொலைந்தால், தொலைந்த காரணத்தைக் கண்டு சமர்ப்பணம் செய்தால் பொருள் கிடைத்து விடும். காரணம் தெரியவில்லை என்றாலும் பிரார்த்தனைக்குப் பலன் உண்டு. மற்ற செயல்களில், அதுவும் பிறரைப் பாதிக்கும் செயல்களில் அன்பர்கள் ஈடுபடக்கூடாது.

வீட்டில் சுத்தம் இருந்தால், நல்ல பழக்கங்கள் மட்டும் இருந்தால் தீய சக்திகள் வரா. வந்தால் வீட்டைச் சுத்தம் செய்து, சாம்பிராணி போட்டு, வீட்டைச் சுற்றி அன்னை படத்தை எடுத்து வந்தால், அதுவும் மாலை ஆறு மணிக்கு அதைச் செய்தால் தீய சக்திகள் விலகும்.

************

Book traversal links for 06. தீய சக்திகள்

  • 05. குடும்பக் கடன்
  • Up
  • 07. புஷ்பாஞ்சலி

Book navigation

  • முன்னுரை
  • I. அன்னை
  • II. குடும்பம்
    • 01. குடும்ப ஒற்றுமை
    • 02. அன்பும் அமைதியும் ஏற்பட
    • 03. புத்திர சந்தானம்
    • 04. மகனுக்குப் பொறுப்பு
    • 05. குடும்பக் கடன்
    • 06. தீய சக்திகள்
    • 07. புஷ்பாஞ்சலி
  • III. யோகம்
  • IV. வேலை
  • V. நோய்
RSS feed
Powered by Drupal