Skip to main content
Karmayogi

Main navigation

  • Home
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home
  2. அன்னையின் அருள்
  3. II. குடும்பம்

05. குடும்பக் கடன்

திருமணத்திற்கு வாங்கிய கடன், வீடு கட்டுவதற்காக வாங்கிய கடன் போன்ற பெரிய கடன்களாக இல்லாமல், நடுத்தரக் குடும்பங்களில் அவசரமான காரியங்களுக்காகவும், தவிர்க்க முடியாத மருத்துவச் செலவுக்காகவும் என வாங்கி, ‘இனி இந்தக் கடனை அடைக்கவே முடியாது’ என்ற நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்திய தலைக்கு மேல் போய்விட்ட கடனை, ‘குடும்பக் கடன்’ என்று பெயரிட்டு, ‘அது ஏற்படுவது எப்படி? எதனால்? அதற்கு ஒரு முடிவு உண்டா? இல்லையா? இல்லையெனில், அன்னையின் விளக்கம் ஏதேனும் இருக்கிறதா? அன்னையும் கைவிட்டு விடுவார்களா?’ என்ற கேள்விகளை எழுப்பி, அவற்றுக்குப் பதில் அளிக்கும் வாயிலாக இந்தக் கட்டுரை அமைகிறது.

ஒரு வருட வருமானத்திற்கும் அதிகமாகக் குடும்பக் கடன் வளர்ந்த பிறகு, அதைத் தீர்க்கும் உபாயம் வாழ்வில் இல்லை. அதுவே விதி. ஆனால் அதற்கு விலக்காக சிலர் இருக்கிறார்கள். அன்னை அதைத் தீர்க்க உதவுவார். ‘வாழ்வில் வழி இல்லை’ என்பதால், ‘அன்னையிடமும் வழி இல்லை’ என்பதில்லை. வாழ்வில் விலக்காக உள்ளவர்களுக்குக் கடன் தீருவதைப் போல், அன்னையிடம் அனைவருக்கும் இக்கடன் தீரும். வாழ்வில் விதி விலக்காக உள்ளவர்களுக்கே தீராத பிரச்சனைகளையும் அன்னை தீர்த்து வைக்கிறார். அதற்கு அவருடைய நிபந்தனை ஒன்றுதான். வழி ஒன்று இருக்குமேயானால், எப்படியும் அதைப் பெற முயலவேண்டும். ‘முயல்வது’ என்றால் ‘தம்மால் முடிந்த அனைத்தையும் செய்வது’ என்று பொருள். பெற்றுக்கொள்ள அன்னையிடம் நிபந்தனை விதிப்பவர்க்கு நாம் வழி சொல்ல முடியாது. கடன் ஏற்படுவதற்குக் காரணமாக இருந்த மன நிலையை அறிந்து, அதை இன்று மாற்றிக் கொள்ள முன்வருபவர் அனைவருக்கும் அன்னை வழி காட்டுகிறார்.

சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால், நடுத்தரக் குடும்பங்கள் முப்பது அல்லது நாற்பது ரூபாயில் செளகரியமாக வாழ்ந்தன. அன்று நூறு ரூபாய் சம்பளத்தைப் பெரிய சம்பளமாகக் கருதினர். அன்று நெல் மூட்டையின் விலை ரூ.3.60. இன்று அந்தத் தொகையைக் கொண்டு ஒரு கிலோ அரிசி வாங்க முடியாது. நாற்பது ரூபாய் சம்பளத்தில் 3 பவுன் வாங்கலாம். அன்று பவுன் 13¾ரூபாய். இன்று அதே உத்தியோகத்திற்கு ரூபாய் 2000 சம்பளம். ஆனால் முழுதாக ஒரு பவுன் வாங்க முடியாது. அன்று நிலவிய ஒரு வீட்டின் விலையை விட, இன்று அதே வீட்டிற்குக் கொடுக்கப்படும் மாத வாடகை அதிகம். வியாபாரியாக இருப்பவர்களை இந்த விலைவாசி ஏற்றம் அதிகமாகப் பாதிப்பதில்லை. பொருள்கள் விலை ஏறினால், இலாபமும் கூடவே பெறுவதால் சிரமம் தெரிவதில்லை. விவசாயிக்குப் பல சமயம் பாதிப்பு இருப்பதில்லை. சில சமயம் அதிகமாகவே பாதிப்பு ஏற்படுவதும் உண்டு. சம்பளம் வாங்கும் அனைவரையுமே அதிகமாகப் பாதிப்பது இந்த விலைவாசி ஏற்றம்தான். இந்த மாற்றத்தினால் சம்பளக்காரனுக்குப் பல தொல்லைகளும், சில வசதிகளும், ஏற்பட்டிருப்பதைக் குறிப்பிட்டு, இந்தச் சிக்கலிலிருந்து வெளிவர உதவும் மனநிலையை மட்டும் குறிப்பாகச் சுட்டிக்காட்டி, அதன் மூலம் பிரார்த்தனை பலிக்கும் முறையை எழுதுகிறேன்.

அரசாங்கக் கணக்குப்படி இந்த ஐம்பது ஆண்டுகளில் விலைவாசி சுமார் நூறு மடங்கு ஏறியுள்ளது. ஆனால் அரசாங்க சம்பளமோ, தனியார்த் துறை சம்பளமோ முப்பது மடங்குதான் ஏறியுள்ளது. சில இடங்களில் குறைந்தும் ஒரு சில இடங்களில் கூடியும் இருக்கும். 1930-இல் இருந்த வாழ்க்கைப்பாணியை (life style) இன்று அதே உத்தியோகத்தில் உள்ளவர் பூர்த்தி செய்ய முடியாத நிலையில் இன்றைய வாழ்க்கைப் பாணி புதிய தேவைகளை, புதிய பழக்கங்களை, புதிய செலவுகளை ஏராளமாகக் கொண்டு வந்திருக்கிறது.

இன்று நாம் 1930-இல் வாழ்ந்தது போல் வாழ முயன்றால் கிடைக்கும் சம்பளம் போதாது. வாழ்க்கைப் பாணி மாறுவதால் புதிய செலவுகள் ஏராளமாக வரும் பொழுது புதிய வருமானம் சில இடங்களில் ஏற்படுகிறது. அது பலருக்குக் கிடைக்கிறது. சிலருக்குக் கிடைப்பதில்லை. சில விஷயங்களில் கிடைப்பதில்லை. சமூகத்தில் நம் நிலையைக் காத்துக் கொள்ள வேண்டிய (social status) நிர்ப்பந்தம் இருப்பதால், நம் வருமானத்தைக் கருதாது, சில செலவுகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுவதுண்டு. அது கடனாக மாறும். அதை அடைக்க வருமானம் இடம் தருவதில்லை. பிரச்சனை ஏற்பட்டு வளர்கிறது. தீர்வுக்கு வழி இல்லை. இந்த இலாப நஷ்டக் கணக்கில் சிலர் தேறுகிறார்கள். பலர் அடிபட்டு விடுகிறார்கள். அடிப்பட்டவர்களின் பிரச்சனையே நம் முன்னுள்ள பிரச்சனை.

அந்தக் காலத்தில் பெண்களுக்குப் படிப்புச் செலவு இல்லை. ‘பிள்ளைகள் கு.கு.ஃ.இ. படித்தாலே அதிகம்’ என்று கருதினார்கள். இன்று போல் அன்று வைத்தியச் செலவு இல்லை. பிரயாணச் செலவு இல்லை. பத்திரிக்கை வாங்குவது, சினிமாச் செலவு இன்றுபோல் இல்லை. காப்பி, டீ இந்த அளவுக்குப் பழக்கம் இல்லை. ஓட்டல் செலவு அநேகமாக இல்லை. அண்ணன் சட்டையைத் தம்பி போட்டுக் கொள்வான். ஆபீசர் வீட்டுக் குழந்தைகளும் பழைய பாடப் புத்தகங்களைப் படிப்பர். உடைகளில் இன்றுள்ள நாகரிகம் அன்று இல்லாததால் செலவும் அதிகம் இல்லை. எழுபது வயதான ஒருவர், தம் பிள்ளைகள், பேரக் குழந்தைகள் 1930-இல் இருந்த வாழ்க்கையையும், மனப்பாங்கையும் ஏற்றுக்கொண்டு வாழ்வதைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது. வருமானத்தைப் பொறுத்தவரை அன்றைய வாழ்வை இன்று மேற்கொண்டால் ஓரளவு உதவியாக இருக்குமே தவிர, முழு அளவு கஷ்டம் தீராது. அன்று இல்லாத சில வசதிகள் இன்று ஏற்பட்டு, அவற்றில் சில அனைவருக்கும் பயன்படுகின்றன. மற்றவை சிலருக்குப் பயன்படுகின்றன.

அன்று எந்தக் குடும்பத்திலும் ஆறு, ஏழு பிள்ளைகள் இருப்பர். பத்துக் குழந்தைகள் உள்ள குடும்பமும் உண்டு. கூட்டுக் குடும்பத்தைப் பாதுகாக்கும் பழக்கம் இருந்ததால் வீட்டில் 10, 15 பேருக்கும் குறையாமல் இருப்பார்கள். இன்றைய குடும்பங்கள் பெரும்பாலும் சிறு குடும்பங்கள். பத்து ஏக்கர் நிலமுள்ள குடும்பத்தில் ஐந்து சகோதரர்கள் இருந்தால், படிப்பும் குறைவாக இருந்தால் அனைவரும் நிலத்தில் வேலை செய்வார்கள். இருப்பது குறைவு, அதையே பகிர்ந்து கொள்ள வேண்டும். அல்லது அதிக நிலம் வாங்க வேண்டும். இன்று அதைப் போன்று ஒரு குடும்பம் இருந்தால், பெரும்பாலும் படிப்பு இருக்கும் காரணத்தால், பெரும்பாலோர் வேலைக்குப் போக, ஒருவர் நிலத்தைக் கவனித்துக் கொள்கிறார்.

அன்று நானூறு ரூபாய்க்குக் கிடைத்த ஓர் ஏக்கர் நிலம், இன்று இடத்துக்குத் தக்கபடி 40,000 ரூபாய் வரை விலை போகிறது. நிலங்கள் இன்று வீடு கட்டும் மனைகளாக விற்கப்படுவதால், அன்றைய ஏக்கர் விலைக்கு இன்று ஒரு சென்ட் கூட வாங்க முடியவில்லை.

பெண்கள் இன்று வேலைக்குப் போகும் மனப்பான்மையை ஏற்றுக்கொண்டு இருப்பதால், அதை ஏற்றுக் கொண்ட குடும்பங்களில் வருமானம் அதிகமாகிறது. வியாபாரம், விவசாயம் இல்லாவிட்டால், வேறு வருமானத்திற்கு வழி இல்லை. அதுவும் நடுத்தரக் குடும்பங்களில் சம்பாதிப்பவர் இறந்துவிட்டால், இட்லி போட்டு விற்கும் தொழில் அல்லது சமையல் வேலையைத் தவிர வேறு வழி இல்லை. இன்று அந்த விதவைக்குப் ‘பென்ஷன்’ உண்டு. செய்வதற்குப் பலவிதமான தொழில்கள் உண்டு. அதன் மூலம் அதிக வருமானம் பெறுபவர்களும் உண்டு.

‘வழி வாயில் இருக்கிறது’ என்றொரு பழமொழி உண்டு. அந்த நாளில், ‘எத்தகைய திறமை இருந்தாலும் வழி இல்லை’ என்பது நிலை. இன்று உழைக்கத் தயாராக இருப்பவர்களுக்கு ‘ஒரு கோடி வழிகள் உண்டு’ என்பது கண்கூடு.

ஒரு குடும்பத்தில் எந்தச் செளகரியம் ஏற்பட்டுள்ளது, எந்த அசெளகரியம் ஏற்பட்டுள்ளது. அதனால் மிஞ்சுவது அசெளகரியமா, செளகரியமா என்பது குடும்பத்தைப் பொறுத்த விஷயம். எப்படிப்பட்ட குடும்பங்கள் அதிகம், எவை குறைவு என்பது பொருளாதாரப் பிரச்சனை. சிறிய சமூக நிலையில் ஏராளமான அசெளகரியங்களும், பல செளகரியங்களும் ஏற்பட்டு, பல குடும்பங்களை, பல வகைகளில் பாதிப்பது உண்மை. இந்தச் சமூக மாற்றத்தால் அளவு கடந்த செளகரியங்களை அடைந்த குடும்பங்களும், பாதகமான அசெளகரியங்களை அடைந்த குடும்பங்களும் ஏராளமாக உண்டு. பெரும்பாலான குடும்பங்கள் சிரமப்படுவது உண்மை. இந்த உண்மையைச் சமூகக் கண்ணோட்டத்தில் கணிக்காமல் பொருளாதாரக் கணக்குப் போட்டால், மனப்பாங்கை மட்டும் எடுத்துக்கொண்டு கணித்துப் பார்த்தால், அந்த அடிப்படையில் குடும்பங்களைப் பாகுபாடு செய்தால், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அனைத்திற்கும் இன்றைய குடும்பக் கடனிலிருந்து விடுபட அன்னை முறைகளும், அன்னைக்குச் செய்யும் பிரார்த்தனையும் உதவும். பாதிக்கப்பட்ட குடும்பங்களையும், தப்பித்துக் கொண்ட குடும்பங்களையும் கீழ்க்கண்டவாறு விவரிக்கலாம்: 

  1. எதிர்காலம் மாற்றமாக இருக்கும் என்பதால் ‘நிலைமைக்கு ஏற்ப மாறிக் கொள்ள வேண்டும்’ என்று நினைத்தவர்கள்.
  2. எதிர்காலத்தைப் பற்றியும் நினைக்காமல் நிகழ்கால மாற்றங்களையும் உணராமல் கண்மூடித்தனமாகக் குடும்பம் நடத்தியவர்கள்.
  3. பிடிவாதமாகப் பழைய பழக்கங்களையும், முறை-களை யும் வலியுறுத்தியவர்கள்.
  4. காலத்திற்கேற்ப முழுதும் மாறிக் கொள்ளத் தயாராக இருந்தும், நிலைமை ஒத்து வராதவர்கள். 

சிதம்பரம் பெரிய கோயிலில் வேதம் ஓதிய கனபாடிகள் ஒருவர், உள்ளூரில் பல்கலைக் கழகம் வந்தவுடன், ‘வேதம் ஓதியது போதும், என் பிள்ளைகள் பட்டம் பெறட்டும்’ என்று நினைத்தார். அவர் பிள்ளைகள் கல்லூரிப் பேராசிரியர் ஆனார்கள். அவர்களுக்குப் பிரச்சனை இல்லை. அதே இடத்தில் வேதத்தைப் பக்தியுடன் ஓதியவர்களுக்குச் சிரமங்கள் தலைதூக்கின என்றாலும், இன்றைய புதிய நிலையில் பக்தர்கள் கூட்டம் பெருகி, கோயிலின் சிறப்பு உயர்ந்தது. வசதி அதிகமாகப் பெருகிவிட்டது. உண்மையான பக்தி வீண் போனதில்லை. முன்யோசனை பலன் தருகிறது. உண்மையான பக்தியும் இல்லாமல், முன்யோசனையும் இல்லாமல் இடர்ப்பாடுகளில் சிக்கிக் கொண்டவர்களும் உண்டு.

பழைய வாழ்வில் பழைய நாளைக்குரிய செளகரியங்கள் இருந்தன. புதிய வாழ்வில் இன்றைக்குரிய செளகரியங்கள் இருக்கின்றன. பழைய வாழ்வு முறைகள் இன்று அசெளகரியமாக மாறுவது தவிர்க்க முடியாதது. ஒரு செகண்டரி கிரேட் ஆசிரியர், தன் இனத்தைச் சேர்ந்த பிற்பட்ட வகுப்பினருக்குச் சலுகை வந்ததை அறிந்து, தன் மூன்று பெண்களை டாக்டராகவும், தன் இரண்டு பையன்களை இன்ஜினீயராகவும், படிக்க வைத்தார். சலுகை வந்த நேரத்தை நன்கு பயன்படுத்திக் கொண்ட மனப்பான்மை படைத்தவர் அந்த ஆசிரியர். படிப்பில்லாத ஒருவர் பல கோடிகளைச் சம்பாதித்தார். அவருக்கு ஒரு மகள். அவள் வயதுக்கு வந்தாள். ‘பருவப் பெண்ணை வெளியே அனுப்பக் கூடாது’ என்று நினைத்து, தன் மகளின் படிப்பைப் பாதி-யி@ லயே நிறுத்திவிட்டார். அவர் ஏராளமான சீர்வரிசைகளைக் கொடுக்கத் தயாராக இருந்தாலும், மகளுக்குப் படித்த மாப்பிள்ளை கிடைப்பது சுலபமாக இல்லை.

சமூக மாற்றங்களால் வரும் தொல்லைகள் அனைவருக்கும் உண்டு. அவரவர் நிலைக்கேற்ப அவை செளகரியத்தி- லாவது, அசெளகரியத்திலாவது முடியும். சமூகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், சந்தர்ப்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மாற்றங்கள் புதிய நிலையைத் தோற்றுவித்து கஷ்டத்தை விலக்கும். குடும்பக் கடன் இதுபோல் ஏற்பட்டிருந்தால், அவர்கள் இன்று அன்னையின் பக்தர்களாக இருந்தால், ஆத்ம சமர்ப்பணமும், இடைவிடாத பிரார்த்தனையும் அவர்கள் பிரச்சனையைத் தீர்க்கும். அதுவும் குறுகிய காலத்தில் தீர்க்கும். ஏனெனில், ஏற்பட்ட கடன் பாரம் அன்பரின் உளப் பாங்கால் ஏற்பட்டதல்ல. புறநிகழ்ச்சிகளால் ஏற்பட்டவை. அவை பிரார்த்தனைக்கு எளிதில் கட்டுப்படும். அப்படிப்பட்டவர்கள் கடன் தீரும் வேகத்தைக் கண்டு பிரமிப்பார்கள்.

பழைய பழக்கத்தைப் பிடிவாதமாகப் பிடித்துக்கொண்டு இருந்த காரணத்தால் கடன் ஏற்பட்டிருந்தாலும், புதிய சந்தர்ப்பங்களை ஏற்க மறுத்து நஷ்டம் ஏற்பட்டுக் கடன் ஏற்பட்டிருந்தாலும், அவற்றுக்கு ‘மனப்பாங்கால் ஏற்பட்ட கஷ்டங்கள்’ என்று பெயர். அந்த மனப்பான்மையை இன்று தவறு என்று உணர்ந்து பிரார்த்தனை செய்தால், கடன் நிச்சயமாகக் கரையும். இதை எல்லாம் தாண்டிய மனப்பான்மைகள் உண்டு. அவர்கள் காலத்தால் கட்டுண்டவர்கள் இல்லை. காலத்தைத் தாண்டியவர்கள்; அவர்கள் அந்தக் காலத்திலும் கடனாளியாகக் கூடியவர்கள்; இந்தக் காலத்திலும் கடன் பெறுபவர்கள். நாட்டு நிலையால் ஏற்பட்ட கடன் அல்ல அது. அவர்களைப் பற்றி ஒரு நீண்ட கட்டுரை எழுதி, அதைத் தனியாக வெளியிட்டிருக்கிறேன். அது தவிர, நாட்டின் பொருளாதார நிலையாலும் வாழ்க்கை பாணியின் மாற்றத்தாலும் ஏற்பட்ட கடன்களில் கடனாளியாகும் பழக்கத்தால் ஏற்பட்ட பகுதியும் இருக்கும். ஒருவருக்கு ரூபாய் 70,000 கடன் ஏற்பட்டு அதில் 40,000 சூழ்நிலையாலும், 30,000 மனநிலையாலும் ஏற்பட்டு இருந்தால், மன நிலையை மாற்றிக் கொண்டு பிரார்த்தனை செய்தால், முழுக் கடனும் கரையும். கடன் கரையும் விதம், பார்க்க ஆச்சரியமாக இருக்கும். கரையும் வேகம் நம்பமுடியாத ஒன்றாக இருக்கும்.

உலகியல் மாற்றத்தில் சிலர் அழிவதையும் சிலர் செழிப்பதையும் உலகம் பார்த்துக்கொண்டு இருப்பதைப் போல் ‘தெய்வமும் பார்த்துக்கொண்டு இருக்கும். தெய்வத்-திற்குக் கண் இல்லை’ என்று புலம்புவது வழக்கம். அன்னை அந்நிலையிலிருந்து நம்மைக் காப்பாற்றுவார். நம் மனத்தைப் பொறுத்தவரை நல்ல மாற்றத்திற்கு நாம் தயாரானால் பிரார்த்தனை பலிக்கும்.

************

Book traversal links for 05. குடும்பக் கடன்

  • 04. மகனுக்குப் பொறுப்பு
  • Up
  • 06. தீய சக்திகள்

Book navigation

  • முன்னுரை
  • I. அன்னை
  • II. குடும்பம்
    • 01. குடும்ப ஒற்றுமை
    • 02. அன்பும் அமைதியும் ஏற்பட
    • 03. புத்திர சந்தானம்
    • 04. மகனுக்குப் பொறுப்பு
    • 05. குடும்பக் கடன்
    • 06. தீய சக்திகள்
    • 07. புஷ்பாஞ்சலி
  • III. யோகம்
  • IV. வேலை
  • V. நோய்
RSS feed
Powered by Drupal