பெறற்கரிய பேறாகக் கருதப்படுவது புத்திர சந்தானம். புத்திரர்களைப் பெறுவதால் வாழ்வு ஆன்மீக நிறைவடைகிறது. செல்வத்தைப் பெறுவதாலும், அறிவைப் பெறுவதாலும், கீர்த்தி அடைவதாலும் அடைய முடியாத நிறைவை புத்திரர்களைப் பெறுவதால் அடைய முடியும். ‘சத்புத்திரர்களைப் பெற்றால் ஏழு பிறப்பிலும் தீயவை தீண்டா’ என்பது ஆன்றோர் சொல்.
திருமணமான பிறகு 5 அல்லது 10 ஆண்டுகள் புத்திர பாக்கியம் இல்லாமல் போனால், மனம் வேதனை அடைகின்றது. வேதனை அடைவதுடன் அதைப் பெரும் குறையாகவும் கருதுகின்றது. மேலும், ‘இந்தக் குறையைப் போக்க எந்த சக்தியாலும் முடியாது’ என்ற தீவிரமான முடிவுக்கு மனம் வந்து விடுகிறது. ஆனால் உண்மை அவ்வாறில்லை. ‘பெரும்பாலானவர்கள் இந்தக் குறையை மிக எளிமையாகவும், ஒரு சிலர் முயன்றும் நீக்கலாம்’ என்பதே உண்மை. எந்த வகையிலும் முடியாது என்று விதியால் கைவிடப்பட்டவர்கள் அன்னையின் மீது பூரண நம்பிக்கை கொண்டால் அவர்களுக்கும் பூரண பலன் கிடைக்கும்.
‘இனி நமக்குச் சந்தான பாக்கியம் இல்லை’ என்று பரிபூரணமான நம்பிக்கை இழந்த ஒருவர், திருமணமான 14 ஆண்டுகளுக்குப் பின் மனத்தை ஒருவாறு தேற்றிக் கொண்டார். அந்த நிலையில் அவருக்கு ஒரு பெரிய ஆபத்து வந்தது. அப்பொழுது அவர் எல்லாத் தெய்வங்களுக்கும் பிரார்த்தனை செய்து கொண்டார். ஆசிரமத்திற்கும் வந்தார். அவரை வாட்டி வதைத்த ஆபத்து பூரணமாக விலகியது. அடுத்த ஆண்டு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இது அவர் செய்யாத பிரார்த்தனை! கேளாதாருக்கும் அன்னை வழங்கிய அருட்கொடை அது!
மற்றொருவர் வயது 50. வறுமையால் சக்கையாகப் பிழியப்பட்ட அவர், ஆசிரமத் தோட்டம் ஒன்றில், வேலை தேடிப் பெற்றார். சம்பளமாக 70 அல்லது 60 ரூபாய் எதிர்பார்த்தார். ஆனால் அவருக்கு 150 ரூபாய் சம்பளம் கிடைத்தது. கூடவே குடி இருக்க வீடும் இலவசமாகக் கிடைத்தது. குழந்தைகள் விஷயத்தில் அவர் கொடுத்து வைக்காதவர். ஒன்றுக்கு நான்கு குழந்தைகள் பிறந்தனர். ஆனால் அவருடைய முப்பது வயதுக்குள் அவர்களை எல்லாம் வைசூரியிலும் மற்ற நோய்களிலும் பறிகொடுத்து விட்டுப் பரிதாபமாக வாழ்ந்து வந்தார். தோட்டத்தில் அவர் ‘வேலை’ என்ற அளவில்தான் பணி செய்து வந்தார்.
அவருக்கு அன்னையையோ அன்னையின் அருளைப் பற்றியோ ஏதும் தெரியாது. ஒரு மைல் தொலைவில் உள்ள சமாதிக்கு அவர் விரும்பிப் போனதும் இல்லை என்றாலும் ஓர் அதிசயம் நிகழ்ந்தது. அவர் தோட்டத்தில் வேலைக்குச் சேர்ந்தபின் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவர் பிரார்த்தனை செய்திருந்தால் அன்னையை வேண்டி இருக்க மாட்டார். தன் குலதெய்வத்தைத் தான் வேண்டி இருப்பார். சேவையினால், மனத்தில் ஆழத்தில் இருந்த எண்ணம், தன்னாலேயே பூர்த்தியாயிற்று.
புத்திர சந்தானம் பெரிய பேறுதான். ‘அது கிடைக்கவில்லை’ என்பதால், ‘அதைக் கொடுக்கும் திறன் எவருக்கும் இல்லை’ என்ற அவநம்பிக்கை ஏற்பட வேண்டிய அவசியம் இல்லை. ‘இனி நமக்கு இல்லை’ என்று மனம் நம்பினால், அந்த நம்பிக்கையே தடையாக நிற்கும். அன்னைக்குப் பிரார்த்தனை செய்வதற்கு முன்னால் மனத்தில் தடையாக இருக்கும் அது போன்றவற்றை விலக்க வேண்டும். ‘அன்னையிடம் செய்யும் பிரார்த்தனைகள் அனைத்தும் பூர்த்தியாகும்’ என்ற நம்பிக்கையே முழு நம்பிக்கை. முழு நம்பிக்கையுள்ளவர்களுக்குப் பிரார்த்தனை பலிக்கும். தடை இருந்தால் விலக்க வழி சொல்லலாம்.
மகப்பேறு இல்லாதவர்கள் தம்முடைய பிரச்சனையைப் பல கோணங்களிலும் ஆராய்ந்து பார்த்திருப்பார்கள். ஆராய்ச்சியின் பலன், இருக்கும் நம்பிக்கையையும் அழிப்பதுதான் மிச்சம். பலர் ஜாதகத்தைப் பல ஜோஸ்யர்களிடம் காட்டி இருப்பார்கள். ‘ஜாதகப்படி குழந்தை இருக்க நியாயம் இல்லை’ என்று ஜோஸ்யர்கள் சொல்லி இருந்தால், ஜோஸ்யருடைய கணக்குத் தவறாக இருந்தாலும், அதை மனம் நம்பியதால், அந்த நம்பிக்கை பலித்து விடும். அது போன்ற தம்பதிகள் இன்று என்னிடம் வந்து “ஜோஸ்யரே சொல்லி விட்டார். இனி எப்படி நம்புவது?” என்று கேட்டால், நான் அவர்களுக்குச் சொல்லும் பதில் வேறாக இருக்கும்.
அன்னையிடம் வந்து, அன்னையை முழு மனத்துடன் ஏற்றுக்கொண்ட ஒருவர் சில வருடங்களுக்குப் பின் தன் ஜாதகத்தைக் கணித்துப் பார்த்தால், இரண்டு விஷயங்கள் புலப்படும். இந்த ஓரிரு ஆண்டுகளாக நடந்த நல்ல காரியங்களில் பாதிக்கு மேல் ஜாதகத்தில் இல்லை என்பதும் ஜாதகப்படி இதே காலத்தில் ஏற்பட்டிருக்க வேண்டிய தொந்தரவுகளில் முக்கால்வாசிக்கு மேல் ஏற்படவில்லை என்பதும் விளங்கும். அன்னையை ஏற்றுக்கொண்ட பின் ஜாதகம் பலிப்பதில்லை. ‘ஜோஸ்யரே சொல்லி விட்டார். இனி எப்படி நம்புவது?’ என்று கேட்ட தம்பதிகளுக்கு நான் சொல்லக்கூடியது, ‘ஜாதகத்தில் விதித்துள்ளதை மீறி அன்னை பிரார்த்தனையைப் பூர்த்தி செய்வார். ஜாதகம் சொல்வது சரியாக இருக்கலாம். அது அன்னை பக்தருக்குப் பலிக்க வேண்டும் என்பதில்லை. பக்தர் மனத்திலுள்ள நம்பிக்கை பலிக்கும்’ என்பதாக இருக்கும்.
‘பிள்ளைப்பேறு இல்லை’ என்றால், ‘உடற்குறை இருக்கிறது’ என்பது ஒரு நிலை. டாக்டரிடம் பரிசோதனை செய்வதன் மூலம் பலவகையான குறைகளை நீக்க முடியும். ‘சிலவற்றை நீக்க முடியாது’என்ற நிலையில், ‘அடிப்படையில் உடலிலேயே குறை இருந்தால், யார்தான் என்ன செய்ய முடியும்?’ என்று நினைப்பது இயல்பு. அன்னையிடம் வேண்டிக்கொண்ட பின் பிரார்த்தனை பலிக்கத் தடையாக இருப்பது உடற்குறையன்று. அதை ஏற்றுக்கொண்ட மனத்தின் நம்பிக்கைக் குறையேயாகும். 15 ஆண்டுகளாகக் குழந்தைப்பேறு இல்லாமல், ‘உடற்குறை இருப்பதால் கருத்தரிக்க வழி இல்லை’ என்று டாக்டர் சொல்லிய பிறகு, அன்னைக்குப் பிரார்த்தனை செய்து மனக்குறை தீர்ந்ததாக ஒருவர் எழுதினார்.
உடலுக்குக் குறையுண்டு. அதன் வகைகள் பல. அன்னையின் சக்தி சிருஷ்டிக்கும் திறன் (creative force) உடையது. அன்னையை ஏற்றுக் கொண்ட பின் அவரது சிருஷ்டித் திறன் உடலில் செயல்படுவதால், பழைய குறை தடையாக இருக்காது. சிருஷ்டித் திறன் மனத்தில் புதிய கருத்துகளையும், உணர்வில் கலைத் திறனையும் உடலில் குழந்தைப் பேற்றையும் ஏற்படுத்த வல்லது. இந்த மூன்றில் மனம் உயர்ந்தது. உடல் எளிமையானது. எளிமையான இடத்தில் பிரார்த்தனை பலிப்பது சுலபம்.
உணர்ச்சியைப் பொறுத்துப் பலவிதமான தடைகள் உருவாவதுண்டு. சில தீராத வியாதிகள் ஒரு தலைமுறை விட்டு அடுத்த தலைமுறையில் வரும். தன் தாயாருக்கு அது போன்ற வியாதி இருந்ததால், தனக்குக் குழந்தை பிறந்தால் அதே வியாதி வந்துவிடும் என்று ஒருவருக்குப் பயம். பயம் பலித்துவிட்டது. அவருக்குக் குழந்தையே பிறக்கவில்லை.
மனிதர்கள் பலதரப்பட்டவர்கள். சிலர் எதையும் பொருட்படுத்தமாட்டார்கள். சிலருக்கு எந்தக் குறையையும் குறை என்று உணரும் அளவுக்குத் திறன் இருக்காது. சிலர், பெருந்தன்மை காரணமாக, மற்றவர்களின் குறைகளைப் பெரிதுபடுத்த மாட்டார்கள். மற்றும் சிலர் Sensitive ஆக இருப்பார்கள். இவர்கள் சின்னஞ்சிறு விஷயத்தையும் பெரிதாகச் சிந்தித்து, அதைப் பூதாகாரமாக வளர்த்து, பிரச்சனையைத் தீவிரமாக்கிக் கொள்வார்கள். இவர்களுக்கு உண்மையிலேயே ஒரு முக்கியமான விஷயம் குறையாக மனத்தில் பட்டால், அதிலிருந்து அவர்களால் மீளவே முடியாது. இத்தகையவர்களுக்குத் திருமணம் இனிமையாக அமையாவிட்டால் வாழ்க்கையே பிரச்சனையாகிவிடும். மற்றவர்கள் பொருட்படுத்தாத குறைகள் இவர்களுக்கு மீளா நரகமாகத் தெரியும். அதிலிருந்து தொடங்கி, உணர்ச்சியை மனத்திற்குள் சூடுபடுத்தி தம் வாழ்க்கையையே திசை மாற்றிச் செல்லும் அளவுக்குத் தீவிரம் அடைவார்கள்.
இவர்களில் இரு பிரிவுகள் உண்டு. உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று அவர்களைப் பிரித்தால், தாழ்ந்தவர்கள் ரோஷக்காரர்களாக இருப்பார்கள். இவர்கள் வாய்ச் சண்டைக்காக உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடிய இயல்புள்ளவர்கள். இவர்களில் உயர்ந்தவர்களை ஆங்கிலத்தில் ‘sensitive people’ என்பார்கள். இவர்கள் கவரிமான் போல் உணர்ச்சிகளையும், மானத்தையும், பண்பையும் தமது செயலாலும், மனத்தாலும் கட்டிக் காப்பவர்கள்.
இதுபோன்ற பெண்ணுக்குத் தனவந்தனான கணவன் பிற பெண்களை நாடுபவனாக அமைந்துவிட்டால், அளவு கடந்த கருமியாக இருந்தால், பிறர் மனம் புண்படப் பேசுவதையே ஒரு திறமையாக வளர்த்துக் கொண்டவனாக இருந்தால், பணத்தைக் கொண்டே மனிதர்களையும், செயல்களையும் கணிப்பவனாக இருந்தால், கொடுமையான உள்ளம் படைத்தவனாக அமைந்தால், அவன் குடும்பத்தைப் பற்றிய அவமானகரமான செய்திகள் திருமணத்திற்குப் பிறகு தெரிய வந்தால், அந்தப் பெண்ணின் மனம் நிலை குலையும். உணர்ச்சி கருகிப் போகும். உடல் ஜீவனற்றுப் போகும். ‘இப்படிப்பட்ட கணவனுக்குப் பிறக்கும் பிள்ளை எப்படி இருக்கும்?’ என்று நடுங்கிப் போய்விடுவாள். ‘தனக்குப் பிள்ளையே வேண்டாம்’ என்று ஆழ்ந்த நிலையில் அவள் ஜீவன் முடிவு செய்துவிடும். அதற்குப் பிறகு, ‘ஜாதகப்படி குழந்தை உண்டு’ என்றாலும், ‘உடலில் எந்தக் குறையும் இல்லை’ என்று டாக்டர் சொன்னாலும், அவளுக்குக் கருத்தரிக்காது. கணவர் Sensitive ஆக இருந்து, மனைவி மாறாக அமைந்துவிட்டாலும் கருத்தரிக்காது. மருந்தும், சாஸ்திரப்படி செய்யும் சாந்திகளும் அவர்களுக்கு உதவா.
‘தாம் மாற்றாந்தாயிடம் கொடுமைப்பட்டதால், தாம் சிறு வயதில் வறுமையில் வாடியதால், அல்லது ஏதோ ஒரு வகையில் குழந்தைப் பிராயத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டதால், தமக்கு ஒரு பிள்ளை பிறந்தால், அதற்கும் இது போன்ற சீரழிவு ஏற்படும்’ என்ற தவறான பயம் (phobia) சிலரை ஆட்கொள்வதுண்டு. அது அவர்கள் குழந்தை பெறத் தடையாக இருக்கும். அந்தத் தடை நீங்கும் வரையில் கருத்தரிக்காது. ‘தமக்கு வருமானம் இல்லை. அதனால் பிறக்கப் போகும் குழந்தை அல்லற்படும்’ என்று ஆழ்ந்து கருதி, அந்தக் கருத்துக்கு மனத்தில் உயிர் கொடுத்தாலும் கருத்தரிக்காது.
வறுமையில் வாடிய ஒரு வளையல்காரரின் மகன், தன் மாமன் உதவியால் ஏதோ கொஞ்சம் படித்து, அந்தக் கொஞ்சப் படிப்புக்குத் தகுந்த மாதிரி குறைந்த வருமானத்தைப் பெற்று, ‘இவ்வளவு குறைந்த வருமானம் உள்ள தமக்கு இந்தப் பிறவியில் திருமணம் நடக்கப் போவதில்லை’ என்று முடிவு செய்து, தறுதலையாக மாறி வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு இருந்தார். அவருக்கு எப்படியோ முப்பதாவது வயதில் திருமணம் ஆயிற்று. அதற்குப் பிறகு பத்து வருடங்கள் ஓடி விட்டன. அவருடைய மனைவி ஒருமுறை கூடக் கருத்தரிக்கவில்லை. ‘நான் என்ன பாவம் செய்தேன்? குழந்தை பாக்கியம் இல்லையே!’ என்று வாய் ஓயாது புலம்புவார்.
‘டாக்டரிடம் சென்று ஆலோசனை கேட்க வேண்டும்’ என்று தோன்றாத காலம் அது. சுதந்திரம் வருவதற்கு முன், படிப்பு அதிகம் இல்லாதவர்கள் டாக்டரிடம் அதிகமாகப் போவதில்லை. ‘போக வேண்டும்’ என்று தோன்றுவதும் இல்லை. அவருடைய புலம்பலைத் தினமும் கேட்டு அலுத்துப் போன ஒருவர், டாக்டரைக் கலந்து ஆலோசிக்குமாறு கூறினார். அவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. நாட்கள் நகர்ந்தன. அவர் பிடிவாதமும் நகர்ந்தது. டாக்டரிடம் சென்றார். யோசனை கேட்டார். சோதனை செய்த டாக்டர், “உங்களுக்குக் குழந்தை பிறக்காவிட்டால் வேறு யாருக்குப் பிறக்கும்?” என்றார். அடுத்த மாதமே அவர் மனைவி கருவுற்றாள்.
அவருடைய கடந்த கால வாழ்க்கையில் ‘தனக்குத் திருமணமும் ஆகாது, சந்ததி பாக்கியமும் இல்லாமல் போகும்’ என்று அவர் தன் நெஞ்சில் ஆழமாக ஊன்றி இருந்த எண்ணம், தடையாக அமைந்தது. டாக்டர் சொன்ன சொல் தடையை விலக்கியது.
பிரார்த்திப்பவர்களுக்குப் பலன் உண்டு. குழந்தைப் பேறு வேண்டி அன்னையிடம் பலனைப் பெற வேண்டுமானால், அவர்களுக்கு அன்னை மீது முழு நம்பிக்கை வேண்டும். மனத்தாலோ, உணர்வாலோ, உடற்குறையாலோ ஏற்படும் தடைகள், பிரார்த்தனை பலிக்கத் தடை இல்லை. உள்ள குறையை மனம் நம்பினால், குறை பலித்துவிடும்.
பிரார்த்தனை பலிக்காது. தனக்குத் தெரிந்த குறைகளிருந்தால், அவற்றை மனம் நம்பினால், நம்பிக்கையை இடம் மாற்றி, “இனி நான் அன்னையை நம்புகிறேன், குறைகளை நம்பவில்லை” என்று புது மனநிலையை ஏற்படுத்த வேண்டும். அதற்கு மனம் உடன்படவில்லை என்றால், ஆத்ம சமர்ப்பணத்தை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யின் ஊடுருவி வரும் அன்னையின் ஒளி குறைகளைக் கரைத்துவிடும். தினமும் பிரச்சனையின் வரலாற்றை அன்னையிடம் சொல்வதையே ‘ஆத்ம சமர்ப்பணம்’ என்று குறிக்கின்றேன்.
அன்னை மீது பூரண நம்பிக்கை வைத்து, ஆத்ம சமர்ப்பணத்தை மேற்கொண்டு, அதன் பின் செய்யும் பிரார்த்தனை பூரணமாகப் பலிக்கும்.
***********