பொறுப்புணர்ச்சி சிறந்தது. பொதுவாக, அது குடும்பத்தில் பரம்பரையாக வருவது. ‘எல்லோரும் பொறுப்பாக இருக்கும் ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டும் பொறுப்பாக நடந்து கொள்ளாவிட்டால், மற்றவர்கள் கவலையில் மூழ்கி, பிள்ளைக்குப் பொறுப்பு இல்லை. அவன் எதிர்காலம் என்ன ஆகுமோ தெரியவில்லையே’ எனத் துவண்டு போய் விடுவார்கள்.
விதவையான தாயார் ஒருவர் தன் ஒரே பையனைப் படிக்க வைத்து ஒரு வேலையையும் அவனுக்குத் தேடிக் கொடுத்த பின்பு, ‘பொறுப்பு’ என்பதே துளியும் இல்லாமல், அவன் வீட்டையும், தாயையும் கவனிக்காமல் இருந்து விடுவதும் உண்டு.
நிறைய வருமானம் வரும் குடும்பத்தில், பெண் திருமணத்-திற்கு நிற்கின்ற போது, ‘வருகின்ற பணம் எல்லாம் என்ன ஆகிறது?’ என்று புரியாத அளவுக்குச் செலவாகி, பெண்ணைப் பற்றியோ, அவள் திருமணத்தைப் பற்றியோ நினைவின்றி, தந்தை தன் செளகரியப்படி வாழ்க்கையை நடத்துவதுண்டு.
பொறுப்பற்ற முக்கிய நபர்களால் குடும்பத்தில் ஏற்படும் பல நிலைகளை விளக்கலாம். அவை எல்லாவற்றுக்கும் அடிப்படை ஒன்றே. அவற்றைத் தீர்ப்பதற்கான அடிப்படையும் ஒன்றேயாகும். அடிப்படையான காரணங்களை விளக்கமாகக் கூறி அவற்றை விலக்கும் வழிகளைச் சொன்னால், அனைவருக்கும் பயன்படும். நிலைமை கடுமையாக இருப்பதால், பலருக்கு அவசரமாக ஏதாவது செய்தால்தான் உதவியாக இருக்கும். நீண்ட விளக்கத்தைக் கேட்கவோ, அதன் அடிப்படையில் நடந்து பயன்பெறவோ மனம் இடம் கொடுக்க வேண்டுமானால், உடனடியாக ஏதாவது ஒரு நிவாரணம் (relief) தேவை என்ற நிலையில் அநேகர் இருக்கலாம்.
அவர்களுக்கெல்லாம் பொதுவாகச் சொல்லக்கூடியவை இரண்டு. அவை: முடிவு, பிரார்த்தனை. அவர்கள் தம்மால் முடிந்ததை எல்லாம் குறைவறச் செய்ய முன்வருவதாக முடிவு செய்ய வேண்டும். இரண்டாவதாக, எடுத்த முடிவை நிறைவேற்றவும், உடனடியாகப் பரிகாரம் கிடைக்கவும் மூன்று நாட்கள் இடைவிடாத பிரார்த்தனையை மேற்கொள்ள வேண்டும். பிரார்த்தனைக்குப் பலனாக, இருக்கும் அதிக சிரமம் குறையும். ‘எனக்குப் பொறுப்பு இல்லை. இனிப் பொறுப்பு வரவேண்டும்’ என்று மகனே நினைத்தால், அவனே பிரார்த்தனையை மேற்கொள்ள முன்வந்தால், முழுப் பலன் சீக்கிரம் கிடைக்கும். மகனுக்குப் பொறுப்பில்லை என்று கருதும் நிலையில் உள்ள தாயாரோ, தகப்பனாரோ, மேலே கூறிய முடிவையும், பிரார்த்தனையையும் மேற்கொள்ள முன்வர வேண்டும். தற்காலிகப் பலன் கணிசமாக இருக்கும். பூரணப் பலன் இருக்காது. தற்காலிகப் பலனைக் கண்ணுற்றவுடன் நிரந்தரப் பலனைப் பெறுவதற்கான முயற்சியைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும்.
நிரந்தரப் பலனை அடைய, மகனுக்குப் பொறுப்பில்லை என்பதன் அடிப்படைக் காரணங்களை அறிய முற்பட்டு, அவற்றையும் விலக்கவேண்டும். அவை உடம்பில் தெம்பு இல்லை, உற்சாகம் இல்லை என்பதாலோ, அறிவு இல்லை, பயிற்சி இல்லை, நல்ல பழக்கம் இல்லை, முயற்சி இல்லை என்பன போன்ற காரணங்களாலோ ஏற்படுவதுண்டு. பெரும்பாலான காரணங்களை, ‘முயன்று விலக்க முடியும்’ என்பதற்குச் சில உதாரணங்களைக் கொடுக்கின்றேன். உதாரணம் இல்லாத இடங்களில் விளக்கத்தை மட்டும் எழுதுகின்றேன்.
‘பொறுப்பே இல்லை’ என்பதற்குச் சிறந்த உதாரணமாக உள்ள ஒருவர் ‘தனக்குப் பொறுப்பு இல்லை’ என்பதையே அறியவில்லை. அவர் குடும்பத்தாரோ ‘அவருக்குப் பொறுப்பு இல்லை’ என்பதைத்தான் அறிவார்களே தவிர அதற்கான காரணத்தை அறியார். அவருக்குப் பல ஆண்டுகளாக வயிற்றுப் போக்கு உண்டு. அதனால் அவர் உடம்பில் தெம்பு இல்லை. தெம்பு இல்லை என்பதால் அவரால் வேலை செய்ய முடிவதில்லை; பொறுப்பை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. சில மாதங்களில் அவருக்கு வயிற்றுப் போக்கு இருப்பதில்லை. அப்பொழுது எல்லாம் அவர் சுறுசுறுப்பாகவும், பொறுப்பாகவும் நடந்து கொள்வார். இதை அவரோ, அவர் குடும்பத்தினரோ கவனித்ததில்லை. கை வைத்தியமாகச் சில கஷாயங்களைச் சாப்பிடுவாரே தவிர, வயிற்றுப்போக்கை முழுவதும் குணப்படுத்த அவர் முயற்சி செய்வதில்லை. முறையாக அதைக் கவனித்து உடல் நலத்தைப் பெற்றால் அவருக்குப் பொறுப்பு வந்துவிடும். திறமையற்றவர்கள் பொறுப்பைத் தட்டிக் கழிப்பதைப் பார்க்கலாம். உயர்ந்த திறமையை நான் சொல்லவில்லை; எளிய காரியங்களைச் செய்யும் திறமையையே குறிப்பிடுகிறேன். ஒரு குழந்தையைப் பள்ளியில் சேர்ப்பது, கடையில் ஒரு சாமான் வாங்கி வருவது போன்ற எளிமையான காரியங்களை ஒருவர் ஒரு முறை செய்யத் தவறி, மற்றவர்களின் ஏளனத்திற்கு ஆளாகி இருந்தால், அவர் மீண்டும் அந்தக் காரியங்களைச் செய்ய முன்வரமாட்டார். திறமை இழந்த நிலையில் பொறுப்பைத் தட்டிக் கழிப்பார்.
தன் மகனுக்கு இதுபோன்ற குறை இருக்கிறது என்றால், அதைப் பெற்றோர் இப்பொழுது புரிந்து கொண்டால், அவனால் முடிந்த காரியங்களைச் செய்யச் சொல்லி அந்த வெற்றியின் மூலம் அவனை ஊக்குவித்தால், திறமையற்ற இடங்களில் என்ன குறை என்பதைப் பொறுமையாகக் கண்டுபிடித்து, அவற்றை விலக்கப் பாடுபட்டால், எவருக்கும் வெற்றி கிட்டும். ஓரிரு காரியங்களில் தன் திறமை வெற்றிகரமாகச் செயல்படுவதைப் பார்த்தவுடன் அவர்கள் மனநிலை மாறும்; திறமை ஏற்படும்.
ஓர் அமெரிக்கப் பெண், பயந்த சுபாவம் நிறைந்தவள். அவளுடைய நண்பர்கள் போனில் கூப்பிட்டாலும் பேசப் பயப்படும் அளவுக்கு நடுங்கும் சுபாவம். அவள் இந்தியாவுக்கு வந்தாள். வந்த பிறகு இன்னும் அதிகமாக நடுங்கினாள்; எதைச் செய்யவும் தயங்கினாள்; யாருடன் பேசவும் அஞ்சினாள். மேற்சொன்ன முறையில் அவளை ஊக்குவித்த பின், அவள் அடியோடு மாறி ஆற்றலைப் பெருக்கிக் கொண்டாள். எண்பது பேர் வேலை செய்யும் நிறுவனம் ஒன்றை நடத்தினாள்.
மகளுடைய மாற்றத்தைக் கேள்விப்பட்ட பெற்றோர், அதை நம்பவில்லை. இந்தியாவுக்கு வந்து அதை எல்லாம் கண்கூடாகக் கண்ட பிறகும்கூட, அவர்களால் நம்ப முடியவில்லை.
வளர்ப்பு முறையில் உள்ள குறைகள் பல. சிலருக்கு அவசரம் வந்து எல்லாக் காரியங்களும் கெட்டுவிடும். ஆரம்பகாலத்தில் தொடர்ந்து ஏற்பட்ட தோல்விகளால் தன்னம்பிக்கை போயிருக்கும். அடிநாளில் ஏற்பட்ட அடிகளால் வாழ்க்கையைத் தவறாகப் புரிந்துகொண்டு எந்தப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணிப்பார்கள். காரணம் எதுவானாலும் அதைக் கண்டுபிடிக்கலாம்; திருத்தலாம். இதற்கெல்லாம் பெரிய விவேகம் தேவை இல்லை. பொறுமையும் நிதானமும் இருந்தால் போதும்.
ஒரு வக்கீல், வீட்டில் ஏழாவது பிள்ளை. அவர் 1935-இல் பம்பாயில் பட்டம் பெற்று, தன் குருவின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு, ஒரு பெரிய நிறுவனத்தில் சேர்ந்தார். நிறையப் பொய் சொல்வார். எவரையும் மட்டம் தட்டிப் பேசுவார். அவர் வீட்டில் உள்ள அனைவரும் நல்ல உத்தியோகத்தில் இருந்தார்கள். அவர்களில் பெரும்பாலோர் நல்ல குணம் உடையவர்கள். இவருக்கோ நாய்க் குணம். “யாராக இருந்தாலும் கடித்து விடுவேன்” என்று பெருமையாகச் சொல்லிக் கொள்வார். இவர் தன் குருவுடன் ஒரு பொது நிறுவனத்தில் சிறு வயதில் சேர்ந்தார். குரு இருந்தவரை அவர் நிழலில் இருந்து விட்டார். அறிவு ஏராளம். இருந்தும் குணம் இல்லை. குரு இறந்த ஓரிரு வருடங்களில் நிறுவனத்தில் இருந்த அனைவரும் அவருக்கு எதிரியாகி விட்டனர். எதையும் செய்ய முடியவில்லை. தோல்வி மட்டுமே அவருக்குச் சொந்தமாயிற்று. வயதும் ஐம்பதைத் தாண்டி விட்டது. எல்லோருமே அவரை வெறுத்தனர்; விலக்கினர். புறம்போக்கு நிலமாகியது வாழ்க்கை. அதற்குப்பின் ஏற்பட்ட ஒரு சந்தர்ப்பம் அவரைச் சிந்திக்க வைத்தது. மாறிய நிலையில், அவர் தன் நாய்க் குணத்தை வெளிக்காட்ட வெட்கப்பட்டார். பொய் சொல்வதைப் பல சந்தர்ப்பங்களில் தவிர்த்தார். அதற்குப் பிறகு ஈராண்டுகளில் நிறுவனத்திலேயே அதிகச் செல்வாக்குடையவராகி விட்டார். இது போன்ற முறைகளைக் கண்டுபிடித்து விலக்கலாம்.
பெற்றோர்கள் சிலர் தங்கள் குழந்தைகளுக்குப் பிறர் விஷயத்தில் பொறுப்பைத் தட்டிக் கழிக்கக் கற்றுக் கொடுப்பார்கள். ஆனால் தங்கள் விஷயத்தில் மட்டும் அவர்கள் பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். ஒரு மானேஜருடைய மகனை, அவருடைய நிறுவனத்திற்கு வந்த ஒருவன் குறுக்கு விசாரணை செய்துவிட்டு ப் போனான். மானேஜர் எட்ட இருந்து அந்தக் காட்சியைப் பார்த்தார். அந்த ஆள் போனபிறகு மகனிடம் சென்று, “சாமர்த்தியமாகக் கழற்றிக் கொண்டாய் அல்லவா?” என்று கேட்டார். தான் பொறுப்பைத் தட்டிக் கழித்த முறையை மகன் விளக்கினார். தகப்பனார் மெச்சினார். அவனுக்குத் திருமணம் ஆயிற்று. அவன் வேலை செய்வதைத் தட்டிக் கழித்துவிட்டு, தறுதலை நண்பர்களுடன் சேர்ந்து ஊரைச் சுற்றினான். தகப்பனார் கவலை அடைந்தார். ‘இது நாள் வரை அவனைக் கெடுத்தது தாம் தான், என்பதை அவர் அறியவில்லை.’
அவரைப் போன்ற பெற்றோர்கள், அடிப்படைக் காரணத்தைத் தன்னிடம் கண்டுபிடித்து, முதலில் தன் மனத்தை மாற்றிக் கொண்டு, பிறகு மகனைத் திருத்த முயன்றால் வெற்றி கிடைக்கும்.
ஓர் ஏழைப் பையன். அவனை எட்டாவது வகுப்பிலிருந்து இன்ஜினீயரிங் வரை அவனுடைய தாய் மாமன் பணம் செலவழித்துப் படிக்க வைத்தார். அவன் பழையதை மறந்தான். புதுப் பட்டத்திற்கு ஏற்ப நடக்கப் பிரியப்பட்டான். மாமனுக்குத் திருமண வயதில் ஒரு பெண் இருந்தாள்.
மாமனிடம் அவளைப் பெண் கேட்காமல், அந்தஸ்தான இடத்தில் ஒரு பெண் பார்த்துத் தனக்குத் திருமணம் செய்து வைக்கும்படி கேட்டான். மாமனுக்குத் தன் பெண்ணை அவனுக்குக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம். ஆனால் அவன் அப்படிக் கேட்டபிறகு அவர் தன் விருப்பத்தைக் கூறவில்லை. பையனுடைய தந்தைக்கும் பையனைப் போலவே அபிப்ராயம்.
ஒருநாள் பையன் தன் ஆசிரியரைச் சந்தித்தான். திருமணப் பேச்சு வந்தது. பெரிய இடத்துப் பெண்ணாகத் தேடிக்கொண்டு இருப்பதாகக் கூறினான் பையன். ஆசிரியர் அவன் தவற்றைச் சுட்டிக் காட்டினார். “உனக்குக் கல்வி விளக்கை ஏற்றிய உன் மாமனின் பெண்ணை அல்லவா நீ குடும்ப விளக்காக ஏற்றுக் கொள்ள வேண்டும்?”‘நன்றி மறப்பது நன்றன்று’ என்று இடித்துரைத்தார். பையன் தன் தவற்றை உணர்ந்து மாமன் மகளையே திருமணம் செய்து கொள்ள முன்வந்தான்.
பையனுக்கு அறிவில்லை என்றால், தந்தை நல்ல அறிவுரையைக் கூறவேண்டும். அல்லது வேறு யாராவது ஒருவர் அவனுக்கு வழிகாட்ட வேண்டும். ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உடையவர்களுக்கும், எடுத்துச் சொல்பவர்கள் இல்லை என்றால், வாழ்க்கை தடம் மாறிப் போகும்.
வங்கியில் ஸ்காலர்ஷிப் கடன் வாங்கி, எம்.ஏ. படித்து வேலைக்குப் போய், கொஞ்சம் கடனை அடைத்துவிட்டு மீதியை அடைக்காமல் விட்டுவிட்ட பையனுக்குத் தகப்பனார் ஆதரவு. வேலை போய்விட்டது. மீண்டும் அது கிடைக்க இரண்டு ஆண்டுகள் கடுமையாக முயன்றான். பலன் இல்லை. கடைசியாக ஒரு பெரியவரைச் சந்தித்து, தன் பூர்வாங்கத்தைக் கூறி ஆலோசனை கேட்டான். அவன் செய்த தவறு அவருக்குப் புரிந்தது. வாங்கிய கடனைக் கொடுக்க முன்வராவிட்டால், பண வருவாய் தடைப்படும்.
பெரியவர் இதை அவனிடம் கூறி, வங்கிக் கடன் முழுவதையும் கட்டிவிடச் சொன்னார். அவனுடைய நல்ல காலம், அதை நம்பினான். கடனைக் கட்டினான். அதற்குப் பிறகு நாற்பத்தைந்து நாட்களில் போன வேலை திரும்பக் கிடைத்தது.
“என் மகனைப் போல ஒரு பிள்ளை யாருக்கும் பிறக்கக் கூடாது” என்று பொருமும் பலரில் பாதிப் பேருக்கு மேல் தங்கள் மகனை அதுபோலவே வளர்த்திருப்பார்கள். தங்கள் வளர்ப்பு முறையில் குறை இருந்தால், அதை உணர வேண்டும். அதற்குப் பிறகு தன்னை மாற்றிக் கொள்ள முன்வர வேண்டும். அப்படிச் செய்த பின் மகனிடம் மாற்றம் ஏற்படுத்த முடியும். அதன்பின் அன்னைக்குச் செய்யும் பிரார்த்தனை முழுப் பலனைக் கொடுக்கும்.
மாவட்டம் முழுவதும் நல்ல பெயர் வாங்கிய ஒரு வக்கீலின் மகன் தொழில் செய்ய ஆரம்பித்தார். அதிகமாகச் சம்பாதித்தார். வங்கி நிறையக் கடன் கொடுத்தது.
தகப்பனாரின் பெயரைக் கேட்டதும் வங்கி மேலும் கடன் கொடுத்தது. பையனுக்குத் தலைகால் புரியவில்லை. தொழிலைக் கவனிக்காமல் சுகத்தைக் கவனித்தார். பணம் எல்லாம் காற்றாய்க் கரைந்தது. வங்கியை ஏமாற்றினார். திவாலாகி விட்டது. தற்கொலை செய்து கொள்ளத் தூக்குக் கயிற்றைத் தேடி அலைந்தார். “என் மகனுக்கு எப்படி இத்தனை மோசமான குணங்கள் வந்தன?” என்று கவலைப்பட்டார் வக்கீல். அவரைத் தவிர மற்றவர்களுக்கு அந்தப் பையனை அவர் தாயார் வளர்த்த விதம் தெரியும். தாயின் வளர்ப்பு முறை தந்தையின் நல்ல பெயரைக் கெடுத்து விட்டது. நிரந்தரமாகப் பையன் திருந்த வேண்டுமானால், அவருடைய தாய் தன் தவற்றை உணரவேண்டும். தன்னை மாற்றிக் கொள்ள முன்வர வேண்டும்.
ஒரு பெரிய தனவந்தர், அவருடைய தந்தை, முதல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். தனவந்தரிடம் ஒருவர் நோட்டுச் சீட்டு எதுவும் இல்லாமல் வாய் நாணயமாக 78,500 ரூபாய் தரவேண்டிய நிலை ஏற்பட்டபோது “60,000 ரூபாய்தான் வாங்கினேன்” என்று பொய்யாகச் சாதித்தார்.
வட்டித் தொகையைக் கொண்டு அசலை நினைவுபடுத்தி, கெஞ்சிக் கூத்தாடி கொடுத்த பணத்தை வாங்க நேரிட்டது. ரூபாய் 2000 என்று சொல்லி, நூறைக் குறைத்து 1900 ரூபாயைக் கொடுப்பவர் இவர். இவருக்கு ஒரு மகன். அவன் தந்தையை மிஞ்சியவனாக இருந்தான். சகல ரோக குணங்களோடு வளர்ந்தான். தனயனைப் பார்த்துத் தந்தை கதி கலங்கிப் போய் விட்டார். அவனைத் திருத்த நினைத்தார். அது போதாது. முதலில் அவர் தம்மைத் திருத்திக் கொள்ள முன்வரவேண்டும். பிறகு அவனைத் திருத்துவது சுலபம். ‘எல்லாரும் தமக்குக் கட்டுப்பட்டவர்கள்’ என்று நினைக்கும் பெரிய புள்ளிகளுக்குத் தவறு செய்ய எத்தனையோ சந்தர்ப்பங்கள் உண்டு. அவர்கள் தவறு செய்தால் தடுப்பார் இல்லை. அதுபோல எல்லாரும் நல்லவர்களாக உள்ள இடத்தில் தவறான பழக்கம் உடைய ஒருவர் இருந்தால், அது அவருக்குச் சாதகமாகி விடும். எவரும் அவருடைய குறையைச் சுட்டிக் காட்ட மாட்டார்கள். அதனால் தொடர்ந்து தவறு செய்யலாம். அதனால் அதற்கும் ஒரு முடிவு உண்டு. பின்னால் அது அவர்கள் மீதே திரும்பிப் பாயும்.
ஒரு கிராமத்து நாட்டாண்மைக்காரர். கிராமத்தில் திருமணம் போன்ற விசேடங்களை முன்னின்று நடத்தி வைக்க வேண்டிய பொறுப்பில் உள்ளவர். ஆனால் அவர் தம் பொறுப்பை ஒப்புக்குத்தான் நிறைவேற்றுவார்.
உண்மையாக ஒத்துழைக்க மாட்டார். திருமணங்களுக்கு வந்தால் கையில் தடியுடன் வருவார். சிறிது நேரம் இருந்துவிட்டுப் போய் விடுவார். போகும்போது தடியை விட்டுவிட்டுப் போவார். போனவர் திரும்பி வரமாட்டார். ‘அவர் எங்கே’ என்று கேட்பவர்கள், ‘தடி இருப்பதால் வந்துவிடுவார்’ என்று வைத்துக் கொள்ள வேண்டும். விசேடம் முடிந்ததும் அவரிடம் தடியைக் கொண்டு போய்க் கொடுத்து விடுவார்கள். இதுவே வழக்கம்.
அவர் தன் மகனுக்குத் திருமணம் செய்தார். அனைவரும் வந்திருந்தனர். அவர் ஒரு முக்கிய வேலையைக் கவனிப்பதற்காகச் சென்று, சற்று நேரம் பொறுத்துத் திரும்பி வந்தார்.
விருந்துண்ண ஆளே இல்லை. நாட்டாண்மைக்காரருக்குக் கவலை ஏற்பட்டது. அப்போது அவர் பேரன் அவர் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய் ஒரு மூலையைக் காட்டினான். அந்த மூலையில் ஏராளமான தடிகள் இருந்தன. அவருக்கு விஷயம் புரிந்தது. ‘தன்னைக் கேட்க ஒருவர் இல்லை’ என்று தொடர்ந்து தவறு செய்பவர்களுக்கு வாழ்க்கை பாடம் கற்பிக்கும்போது கசப்பாக இருக்கும். அது போன்ற பழக்கங்களின் பலன் தம் பிள்ளைகளின் வாழ்க்கை மூலமாகத் திரும்பி வந்து தம்மையே பாதிப்பதுண்டு. தம்மை உணர்ந்து தற்சமயம் மனத்தளவில் உண்மையாக மாறிக் கொள்ள முன் வருபவர்களுக்கு இன்றையப் பிரச்சனையிலிருந்து பூரண விடுதலை கிடைக்கும். ஏதோ காரணத்தால் அது கிடைக்கவில்லை என்றால், அன்னைக்குச் செய்யும் பிரார்த்தனை பரிபூரண பலனைப் பெற்றுத் தரும்.
உடலில் நலக்குறை, எளிய திறமைக் குறைவு, சிறிய வேலையில் ஏற்பட்ட முதல் தோல்வி, தன்னை அறியாமல் கற்றுக் கொண்ட தவறான பழக்கம், தவறான மனப்பான்மை, ஆதாயமான தவறு, வளர்ப்பு முறையில் உள்ள தவறுகள், பெற்றோருடைய குறைகள் பிள்ளைகளுக்கு ஏற்படுதல் போன்ற பல காரணங்களால் ஒருவருக்குப் பொறுப்பின்மை ஏற்படுவது உண்டு. இக்காரணங்களைச் சம்பந்தப்பட்டவரோ, அவருடைய பெற்றோரோ ஆராய்ந்து கண்டுபிடிக்க முடியும். கண்டு பிடித்த பின்பு விலக்க முடியும். விலக்கிய பின், நிலைமை மாறி புது வாழ்வு மலரும். அதன்பின் அன்னைக்குப் பிரார்த்தனை செய்தால் அபரிமிதமான பலன் கிடைக்கும்.
இவை எல்லாம் தாண்டிய கட்டத்தில் வீட்டில் உள்ள ஐந்து பிள்ளைகளில் பொறுப்பே இல்லாத ஒரு பிள்ளை, “தாமே எல்லாப் பொறுப்புகளுக்கும் உறைவிடம், மற்றவர்கள் எல்லாம் பொறுப்பு இல்லாதவர்கள்” என்று தீர்க்கமாக நம்பிப் பறை சாற்றுவதுண்டு. அடிப்படை சுபாவத்திலேயே பொறுப்பு இல்லாமல் இருக்க வேண்டும் என்று ஆழ்ந்து நம்புவதுண்டு. அப்படிப்பட்ட ஒருவரை மாற்றுதல் கடினம். ஆனால் அதுவும் ஓரளவு முடியும். அவரால் பாதிக்கப்பட்ட தாயாரோ, மனைவியோ, மகனோ, ‘அவர் திருந்த வேண்டும்’ என்ற தீவிரப் பிரார்த்தனையை நிரந்தரமாக ஏற்றுக் கொண்டால், நல்ல பயன் சுரந்து பெருகி வரும்.
அறிவுக்கும், முயற்சிக்கும் உட்பட்ட பிரச்சனைகளில் அன்னையிடம் பிரார்த்தனை செய்தால் அபரிமிதமான பலன் உடனே கிடைக்கும். அன்னை மீது பூரண நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்தால் முழுப் பலன் உண்டு. இதை எல்லாம் தாண்டியது மனித சுபாவமான நாய் வால், அதற்கும் அன்னையிடம் பலன் காணலாம். ஆனால், பொதுவான பலனே கிடைக்கும்.
உடனடி நிவாரணத்திற்கு இடைவிடாத பிரார்த்தனையும், நிரந்தரப் பலனுக்குப் பிரச்சனையின் காரணத்தை அகற்ற முயற்சி செய்வதும், முழுப் பலன் பெற முழு நம்பிக்கையும், உயர்ந்த பலன் பெற தன் அடிப்படைச் சுபாவத்தை மாற்றிக் கொள்வதுமே அன்னையிடம் அருள் பெறும் வழிகளாகும்.
*********