“எங்கள் வீடு எப்பொழுதும் சண்டையும் சச்சரவுமாக இருக்கிறது. ‘எப்பொழுது சண்டை வரும்? எதனால் சண்டை உற்பத்தியாகும்’ என்று சொல்ல முடியாது. வீடு வீடாக இல்லை. வீட்டிற்குப் போகவே பிடிக்கவில்லை. எங்காவது ஓடி விடலாமா? என்று தோன்றுகிறது” என்பது சிலர் நிலை.
‘அவர்கள் வீட்டிற்கு அன்னை அமைதியையும், அன்பையும், அழகையும் கொண்டு வருவாரா? அது முடியுமானால் அதை முழுமையாகவும், விரைவாகவும் பெறுவது எப்படி’ என்பனவற்றை இக்கட்டுரையில் விளக்க முற்படுகிறேன்.
இதுபோன்ற வீடுகளிலிருந்து பொதுவாக ஒருவர் அன்னையை ஏற்றுக்கொள்வது குறைவு. அப்படி அவர் ஏற்றுக்கொண்டால், சில ஆண்டுகளில் வீடே மாறிவிடும். சிறப்பான நல்ல இடமாகிவிடும். அதை அன்பர்கள் சில சமயம் கவனிப்பதுண்டு. பல சமயம் வெளியிலிருந்து வருபவர்கள் கவனிப்பார்கள். சில ஆண்டுகளில் தானே ஏற்படக் கூடிய நல்ல மாறுதலை, முயற்சியின் மூலம் சில மாதங்களில், அல்லது வாரங்களில் ஏற்படுத்தலாம்.
பொதுவாக, சச்சரவு ஏற்பட்டுக் கொஞ்ச நாள் நீடித்து விட்டால், பின்னர் ஒற்றுமை குறைந்து வேற்றுமை ஏற்படும். அதன் வழியே ஏற்படும் பிளவு, விரோதத்தை உற்பத்தி செய்து தீராப்பகையை நிலை நிறுத்துவது வழக்கம். ‘சுமுகம்’ என்று ஒரு மலர் உண்டு. அதைக் கொண்டு வந்து தினமும் அன்னைக்குச் சமர்ப்பித்தால், ‘சண்டை மறைந்து சுமுகம் நிறைந்து வீடு அமைதியின் பூக்காடாகப் பொலியும்’ என்பது பலருடைய அனுபவம்.
‘விரும்பத்தகாத இந்நிலையை மாற்றி, வீட்டை அழகுபடுத்த வேண்டும்’ என்று அனைவரும் கருதும் நிலை ஒன்று; அதைப் பற்றியே சிந்தனை இல்லாமல் இருக்கும் நிலை மற்றொன்று.
வீட்டில் பலருக்குச் சுலபமாக எரிச்சல் வரும். அதனால், ‘சண்டை மிகுந்துள்ளது’ என்ற நிலையில் அடிப்படைக் கோளாறு இல்லை. தன் உணர்வு தன் கட்டுப்பாட்டில் இல்லை என்பதால், ‘வீட்டில் அடிக்கடி பலத்த சண்டை ஏற்பட்டு அனைவருக்கும் படபடப்பு (tension) அதிகமாகி விட்டது’ என்பதிலும் கோளாறு அடிப்படையில் இல்லை. கட்டுரை இந்த இரு நிலைகளையும் பற்றியதே. இவற்றை முயன்று முழுவதும் மாற்றி விடலாம். சுயநலம் ஏற்பட்டு வேற்றுமை உற்பத்தியாகி மற்றவர்கள் மீது நம்பிக்கை குறைகிறது என்றால், அது தவற்றுக்கு முதற்கட்டம். அதையும் மாற்றலாம். ஆனால், அவ்வளவு எளிதல்ல. பொறாமை வந்து விகல்பம் ஏற்பட்டு, ‘உன்னை அழித்தே தீருவேன்’ என்று ஒருவர் மற்றவரைக் கருதினால், ‘அங்கு விஷம் ஊறி விட்டது’ என்று பொருள். வீட்டில் ஒருவர் அன்னையின் தீவிர பக்தராக இருப்பாரேயானால், அந்த விஷத்தைக் களைய உள்ளுணர்வுடன் முழு மூச்சாக அவர் பாடுபடுவாரேயானால், அதுவும் முடியும். ஆனால் சிரமமான காரியம்.
ஒருவருக்குத் திருமணமாகி மாமனார் வீட்டுக்குப் போனார். அங்கு வீட்டில் ஏழு பேர், வீடு எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும். எப்பொழுதாவது ஒரு சமயம் சண்டை வந்தால், இடி இடித்து மழை பெய்வதைப் போல அமர்க்களமாக இருக்கும். ஆனால் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு வீடு மறுபடியும் கலகலப்பாகி விடும். அவற்றை எல்லாம் கவனித்த அந்த மனிதர், தம் வீட்டை நினைத்துப் பார்த்தார். அங்குச் சண்டையே வந்ததில்லை. ஆனால் எப்பொழுதும் யாரும் மற்றவர்களுடன் கலகலப்பாகப் பேசி பார்க்க முடியாது. ஒரு படபடப்பு (tension) அங்கே நிரந்தரமாக நிலவிக் கொண்டிருக்கும். இதற்குக் காரணம் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. அந்த வீட்டில் மலர்ந்த சந்தோஷம் பார்த்து அறியாத ஒன்று. காரணம், வீட்டில் சந்தோஷமான குணம் படைத்தவர் எவரும் இலர். அத்தகைய விசித்ரமான வீடும் அன்னையை ஏற்றுக்கொண்ட சில வருடங்களுக்குப் பிறகு, அமைதியும் ஒட்டுறவும், மகிழ்ச்சியும் கொண்ட அன்பாலயமாக மாறிவிட்டது.
இது போன்றதொரு வீட்டில் ஒருவர் அன்னை பக்தராக இருந்து, ‘வீட்டை அமைதியுறச் செய்ய வேண்டும்’ என்று கங்கணம் கட்டிக் கொண்டால், முதற்காரியமாக ‘சுமுகம்’ என்ற மலரைத் தினமும் அன்னைக்குச் சூட்டி, 3 நாட்கள் இடைவிடாத பிரார்த்தனையை மேற்கொண்டால் திடீரென ஒரு நல்ல மாற்றம் கணிசமாகத் தெரியும். சண்டை குறையும். சண்டை பொதுவாக உருவாகும் சந்தர்ப்பங்களில், அது உருவாக முடியாமல் போவது தெரியும். தற்காலிகமாக, முக்கால் பங்குக்கு மேல் மனம் திருப்தியடையும்படியான மாற்றம் இருக்கும். இந்த நல்ல சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திப் பல முயற்சிகளை மேற்கொண்டால், சண்டை, சச்சரவு, பூசல், கடுகடுப்பு ஆகியவை முழுதுமாக மறைந்து, அமைதி, பாசம், இணக்கம், இனிமை ஆகியவை வீட்டில் காலடி எடுத்து வைப்பது தெரியும். அவை உள்ளே வந்தபின், அவற்றை நிலை நிறுத்தப் பாடுபட்டு வீட்டின் அடிப்படையையே மாற்றுவது நல்லது.
சண்டை, சச்சரவு ஏற்படுவது விஷம், விஷமம், விகல்பமான உள்ளங்களால் அல்ல. குணநலக் குறைவு, அவசரம், எரிச்சல், யோசனை இல்லாமல் பேசுவது, சிறுசிறு தவறான பழக்கங்கள், தன் காரியங்களைத் தானே செய்து கொள்ளும் அளவுக்குத் திறமை இல்லாமல் இருப்பது, பொறுப்பற்று இருப்பது போன்ற சிறு குறைகளால் சச்சரவு ஏற்படுகிறது. ஒன்று பத்தாகி பூதம் போல் பயமுறுத்துகிறது. மொத்தத்தில் மனிதர்கள் நல்லவர்கள். அவர்கள், ‘வம்பு செய்ய வேண்டும்’ என்று கச்சை கட்டிக்கொண்டு இருப்பவர்களல்லர். ஆனால், ‘எந்த விஷயம் வம்பாக முடியும்? எந்த வம்பினால் எதிர்காலமே இருண்டு போகக் கூடும்’ என்று தெளிந்து அறியும் திறன் அற்றவர்கள்.
ஒரு பையனுக்கு வெண்டைக்காய் பிடிக்காது என்றால், அவன் தாயார் அவனுக்குப் பிடித்த சேப்பங்கிழங்கை ஸ்பெஷலாகச் சமைத்து வைப்பது ஒரு வகை. மற்றொரு வகைத் தாயார், ‘வெண்டைக்காய் உடம்புக்கு நல்லது. போட்டதைச் சாப்பிட வேண்டும்’ என்று வற்புறுத்தி, சாப்பாட்டின் மீதும், வீட்டின் மீதும், வெறுப்பை உற்பத்தி செய்யும் தாயார். பையன் எதுவும் பேசாமல் பிடிக்காத வெண்டைக்காயை விழுங்கிவிட்டுத் தன் மேஜைக்கு வந்து, “யார் என் புத்தகங்களைக் கலைத்தது?” என்று காட்டுக் கத்தலாய்க் கத்துவான். சில சமயங்களில் விஷயம் அதோடு முடியும். பல சமயங்களில் அது ஒரு நீண்ட போராட்டத்திற்கு வித்தாகி விடுவதுண்டு. ‘வித்து பையனுடைய கத்தல்’ என்று நாம் புரிந்து கொள்கிறோம். ஆனால் ‘பிடிக்காத வெண்டைக்காயை விழுங்குமாறு தாயார் வற்புறுத்தியதே சண்டைக்கு வித்து’ என்று புரிவதில்லை. தாயாருக்குப் பையனைக் கொடுமைப்படுத்தும் எண்ணம் இல்லை. பையனுக்கோ வம்பு வளர்க்கப் பிரியம் இல்லை. ஆனால் நடப்பதோ சண்டை. குழந்தைகள் விஷயத்தில் மட்டும் இல்லை. பெரியவர்களின் விஷயத்திலும் இது முழு உண்மை.
அன்னைக்கு ஒருவர் செய்த பிரார்த்தனையால் வீடு ஓரளவு மாறும். பிடிக்காத வெண்டைக்காய்ச் சண்டையை வளர்ப்பதைத் தவிர்க்குமாறு வேறொரு விஷயம் அதே சமயம் தோன்றும். சண்டை உற்பத்தியாகாது. பல உதாரணங்களை விளக்குவதற்குப் பதிலாக இந்த நிலையில் செய்ய வேண்டியதை மடடும் சொல்கிறேன். இதுபோன்ற முயற்சியை மேற்கொள்ளும் நபர், வீட்டில் தோன்றும் ஒவ்வொரு கலவரத்தையும் கவனித்துப் பார்த்தால், அதன் அஸ்திவாரங்கள் அனைத்தும் புரிந்து விடும்.
அவை கீழ்க்கண்டவாறு இருக்கும்:
- மற்றவர் குறையைச் சுட்டிக்காட்டிப் பேசும் பழக்கம்.
- ஒருவர் தன் பிரியத்தை மற்றவர்கள் மீது திணிக்கும் பழக்கம்.
- ஒரு காரியம் கெட்டுப்போனால், விஷயத்தை இரண்டாம் பட்சமாக்கி, யாரால் அது கெட்டதோ, அவரைப் பழிவாங்குவது போலப் பேசுவது.
- பலர் சேர்ந்து செயல்பட வேண்டிய நேரங்களில், முன்கூட்டி யார் எதைச் செய்வது என்று நிர்ணயிக்காமல் வேலையை ஆரம்பித்துவிட்டு, தலைக்கு ஒரு வேலையாகச் செய்ய முனைதல்.
- தன் செயல் மற்றவருக்கு அசெளகரியமாக இருக்கும் என்று தெரிந்தாலும், வேண்டும் என்றே அதைச் செய்வது.
- மற்றவர்களை விடத் தனக்கு அதிகமாகத் தெரியும் என்று நினைப்பது.
- தனக்கு இல்லாத அதிகாரத்தைச் செலுத்த முயல்வது.
- தினமும் தான் செய்யும் தவற்றை ஒரு நாள் மற்றொருவர் செய்தால், குடி முழுகிப் போனதைப் போலப் பேசுவது.
- குறைந்தபட்சக் கடமைகளான தான் படுத்த படுக்கையைச் சுருட்டி வைப்பது, நேரத்தில் குளிப்பது, சாப்பிடுவது, தன் பொருள்களைப் பத்திரமாக வைத்துக் கொள்வது, அலுவலகத்திற்குத் தாமதம் இல்லாமல் போவது போன்றவற்றில் அதிக அளவு குறை இருப்பது.
- ‘தன் செளகரியத்திற்காக மட்டுமே வீடு இருக்கிறது’ என்ற எண்ணத்தின் அடிப்படையில் செயல்படுவது.
இந்தப் பட்டியலை நீட்டலாம், அல்லது சுருக்கலாம். அன்பருடைய பிரார்த்தனையால் ஓரளவு சுமுகம் ஏற்பட்ட-வுடன், வீட்டில் உள்ள அனைவரையும் எந்த அளவுக்கு அவர்கள் ஏற்றுக்கொள்ள முன்வருகிறார்களோ, அந்த அளவுக்கு மேற்சொன்ன குறைகளைத் தாங்களாகவே முன் வந்து விலக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டால், அது நிறைவேறும். அனைவரையும் ஒன்று சேர்த்துக் கலந்தும் ஏற்பாடு செய்யலாம், அல்லது தனித்தனியாகக் கலந்து பேசியும் ஏற்பாடு செய்யலாம். இம்முயற்சி எந்த அளவு பலித்தாலும் அதன் மூலம் அருள் அதிகமாகச் செயல்பட்டு மேலும் நல்ல சூழ்நிலையை அதிகமாக உற்பத்தி செய்யும்.
ஒவ்வொரு வீட்டிலும் ஒரு குறிப்பிட்ட நேரம், குறிப்பிட்ட நிகழ்ச்சி சண்டையை வளர்ப்பதை எல்லாரும் அறிவார்கள். குறிப்பாக அந்த நேரத்தில், அந்த நிகழ்ச்சி விஷயத்தில் கவனம் செலுத்தி, முயன்று, அதைக் களைய வேண்டும். நிலைமை சாதகமாக மாறிவிட்டதால், இதுபோன்ற முயற்சிக்கு இப்பொழுது பலன் இருக்கும். அவற்றைச் சமாளிக்கும் வகை தெரியவில்லை என்றால், அந்நிகழ்ச்சியை முன்கூட்டியே அன்னைக்குச் சமர்ப்பணம் செய்துவிட்டுக் காத்திருந்தால், வேறு பல காரணங்களால் சண்டை தவிர்க்கப்படுவதை ஒவ்வொரு முறையும் காணலாம்.
கண்ணாடி உடைந்துவிட்டது. அம்மா வெளியிலிருந்து வந்தால் ஒரு புயல் வீசப் போகிறது. தரையில் இங்க் புட்டி உடைந்து சிதறிக் கிடக்கிறது. அப்பா வந்தவுடன் எல்லாருக்கும் அர்ச்சனை காத்திருக்கிறது. தம்பி காமிராவை உடைத்துவிட்டான். அண்ணன் வந்தவுடன் என்ன ஆகுமோ தெரியவில்லை என்பன போன்ற நிகழ்ச்சிகளும் பல. நம் வீட்டில் ஊருக்குப் போக ஆயத்தம் செய்தால், ஒவ்வொரு முறையும், கலாட்டா, சம்பளம் வாங்கி வீட்டிற்குக் கொண்டு வந்தால், அப்பாவுக்கும் அம்மாவுக்கும் தவறாமல் சண்டை வருகிறது எனப் பல உதாரணங்களைக் கொடுக்கலாம். இவை எல்லாம் வருஷக் கணக்கில் வீட்டில் நிரந்தரமாகத் தங்கிவிட்டவையாகவும் இருக்கும்.
ஓரளவு மாறிய சூழ்நிலையில் இதுபோன்ற நேரங்களை முன்கூட்டியே எதிர்பார்த்து அன்னைக்குச் சமர்ப்பணம் செய்தால், அந்த முறை அந்தச் சண்டை தவிர்க்கப்படும். அதைவிடச் சிறந்த ஒரு முறை உண்டு. சமாதானத்தை வீட்டில் நிலைநிறுத்த விரும்புபவர், இதுபோன்ற காரியங்களை ஆராய்ந்து விலக்கக் கூடியவற்றை விலக்க ஏற்பாடு செய்தபின், தனக்குச் செயல் அளவில் அல்லது மனதளவில் அதில் ஒரு பங்கு இருந்தால், அதைப் பூரணமாக விலக்கி, அதன்பின் அன்னைக்குப் பிரார்த்தனை செய்தால், அந்தக் குறிப்பிட்ட சண்டை அதன்பின் ஒரு முறை கூட வராது.
உதாரணமாக, தம்பி காமிராவை உடைத்தவுடன், அக்காள் மனத்தில், நான் அப்பொழுதே காமிராவை வாங்க வேண்டாம் என்று சொன்னேன். அதை யாரும் கேட்கவில்லை என்ற எண்ணம் தோன்றினால், சமாதானத்தை வீட்டில் நிலைநிறுத்தப் பாடுபடுவதும் அவரே என்றால், முதலில் தன் மனத்தில் உள்ள எண்ணம் சரியா, தவறா என்பதைக் கருதாது, அதை விலக்க முன்வர வேண்டும். அவர் அதைச் செய்த பின்னர் செய்யும் பிரார்த்தனை, அந்த வகையான சண்டையை நிரந்தரமாக விலக்கிவிடும்.
வீட்டில் அனைவரும் அன்னையை ஏற்றுக்கொண்டால் சச்சரவு தானே விலகிவிடும். இதுபோன்ற முறைகளை அனைவரும் அன்னையை ஏற்றுக்கொண்ட பிறகு பின்பற்றினால், சண்டை ஒழிந்து சமாதானம் ஏற்படுவதற்குப் பதிலாகப் பாசமும், அன்பும் உற்பத்தியாகும்.
சமாதானத்தை விழையும் பக்தர், தினமும் வீட்டில் அன்னையின் சாந்தம் மழையாகப் பொழிந்து நிரம்புவதாகக் கற்பனை செய்தாலும், அதற்குப் பெரும் பலன் உண்டு.
சண்டையை அழிக்கச் செய்யும் முயற்சி வெற்றி பெற்றால், அதை நிரந்தரமாக்கிக் கொள்ளச் சிறந்த வழி, ஒற்றுமையை ஆழமாக வேர் ஊன்றும் காரியங்களை முடிந்த வரை செய்தலேயாகும். அவ்வாறு செய்தால் சண்டை அழிவதுடன், நிரந்தரமாக ஒற்றுமை உயர்ந்த அளவில் வளர ஆரம்பிக்கும்.
**********