Skip to main content
Karmayogi

Main navigation

  • Home
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home
  2. அன்னையின் அருள்
  3. II. குடும்பம்

01. குடும்ப ஒற்றுமை

ஒரு குடும்பம் முன்னுக்கு வரும் காலத்தில், எந்தக் காரியத்தையும் அனைவரும் சேர்ந்தால்தான் செய்ய முடியும் என்பதாலும், எதிரிகள் இருக்கிறார்கள் என்பதாலும், ஒன்றாகச் சேர்ந்து செயல்படுவார்கள். பிரிந்திருக்க முடியாது. ஒருவரை ஒருவர் பார்க்காமல் இருக்க முடியாது என்பதால், ஒன்றாகச் சேர்ந்து இருப்பார்கள். மற்றவர்களுக்குத் திருப்தி ஏற்படும் வகையில் செயல்படுவதே நமக்கு அதிகத் திருப்தியைக் கொடுக்கிறது என்பதால், அதையே ஒரு முறையாகக் கொண்டு வாழும் குடும்பம் உண்டு. அவசியத்தால் சேர்ந்திருந்தாலும், அன்பால் பிணைக்கப்பட்டாலும், பண்பான செயலால் பக்குவம் அடைந்திருந்தாலும், அவை அனைத்தும் ஒற்றுமையை ஏற்படுத்தி வளர்த்துக் காக்கும்.

சொத்தைச் சம்பாதிக்க ஆரம்பித்த நாளில் தேவைப்பட்ட ஒற்றுமை, ஏராளமாகச் சொத்து சேர்ந்த பிறகு தேவைப்படாது. 4 சகோதரர்கள் இருந்தால், அவர்களில் அதிகத் திறமையுள்ள ஒருவரால் சொத்து உற்பத்தியாகி இருக்கும். இன்று அவர் விலகிப்போனால் அவருக்கு ஆதாயம் என்ற நிலையில், அவர் குடும்பத்தார் பிரிந்து போக நினைப்பது இயற்கை. ‘ஒருவரை ஒருவர் பார்க்காமல் இருக்க முடியாது’ என்றிருந்த குடும்பத்தில் அடுத்த தலைமுறையில் ‘ஒருவரை ஒருவர் பார்க்க முடியாது’ என்ற நிலை உருவாகிப் பிரிந்து போவார்கள். ‘மற்றவர் திருப்தியை நினைத்துக் கொண்டிருந்தால் வேலை நடக்காது, நம் காரியத்தை நாம் கவனிக்க வேண்டும்’ என்று நினைத்து விட்டால், பிணைப்பை ஏற்படுத்திய பண்பு இருக்காது; ஒற்றுமை குறையும்; வேற்றுமை ஏற்படும். ‘குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்’ என்பது பழைய தலைமுறை. ‘தனித்து வாழ வேண்டும்’ என்பது புதிய தலைமுறை.

‘குடும்பம் ஒன்றாயிருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தால் ஒன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் ஒற்றுமை இல்லை’ என்பது ஒரு நிலை. குடும்பம் தனித்தனியாகப் பிரிந்து இருப்பதில் தவறில்லை. ‘மனத்தில் ஒற்றுமை இல்லை என்பதே குறை’ என்பது மற்றொரு நிலை. ‘குடும்பம் என்றால், எப்படிக் குடி இருந்தாலும், எத்தனை ஊர்களில் பரவி இருந்தாலும், அடிப்படை ஒற்றுமை தேவை’ என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள். இந்த ஒற்றுமை இருப்பது எதனால்? இல்லாமல் போவது எதனால்? அன்னைக்குச் செய்யும் பிரார்த்தனைக்கும், குடும்ப ஒற்றுமைக்கும் என்ன தொடர்பு? என்பவை இக்கட்டுரைக்குரிய கேள்விகள்.

சில நேரங்களில் குடும்ப ஒற்றுமை அவசியமாகத் தேவைப்படும். ஆனால் உண்மையில் ஒற்றுமை இருக்காது. பிரார்த்தனை கையிலுள்ள காரியத்தைப் பூர்த்தி செய்வதற்காக ஒற்றுமையை ஏற்படுத்தும்; அதற்குரிய சந்தர்ப்பங்களை உருவாக்கும். அதை நிறைவேற்ற குடும்பத்தில் முக்கியமான ஒருவர் ஒற்றுமையின் அவசியத்தை உணர்ந்து பிரார்த்தனையை மேற்கொள்ள வேண்டும்.

‘நிரந்தரமாக சிறப்பான ஒற்றுமை மனத்தளவில் உண்மையாக ஏற்பட, பிரார்த்தனை உதவுமா? அப்பிரார்த்தனை பூர்த்தியாக நிபந்தனை ஏதேனும் உண்டா? என்பது ஒரு கேள்வி. இயல்பாக ஒற்றுமை ஏற்படும் முறைகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும். வேற்றுமை ஏற்படும் முறைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவற்றை ஏற்றுச் செயல்பட்டால் வேற்றுமை குறைந்து ஒற்றுமை ஏற்படுவதுடன், பிரார்த்தனை அதிகம் பலிக்க உதவும். ‘கூட்டுக் குடும்பங்களுக்கே, ஒற்றுமைப் பிரச்சனை உண்டு என்று நாம் நினைப்பதில் தவறில்லை. தனிக் குடும்பங்களிலும் ஒற்றுமைக்கு முக்கியத்துவம் உண்டு. இரண்டிற்கும் அடிப்படையும், வழிமுறைகளும் ஒன்றே.’

எல்லாருக்குமே நல்ல பழக்கங்கள் (good manners) இருந்தால், இனிமையாகவும், இதமாகவும் பேசத் தெரிந்து கொண்டிருந்தால், குடும்பத்தில் சண்டை, சச்சரவு இருக்காது. உதாரணமாக, ஒருவர் சொல்வது மற்றவருக்குச் சரியாகப் படவில்லை என்றால், தன்னைப் பாதிக்காத வரையில் அவரை மறுத்துப் பேசாது மௌனமாக இருப்பது ஒரு நல்ல பழக்கம்; பண்பு. மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்புக் கொடுத்து, மறுத்துப் பேசாமல் இருப்பது ஓர் எளிய பழக்கமானாலும், நல்ல பழக்கமாகும். அடுத்த நிலையில் தேவைப்படுவது positive behaviour. எதையும் நல்லதாக மட்டுமே செய்யும் பழக்கம். அதுபோன்ற பழக்கங்கள் அனைவருக்குமே இருந்தால், குடும்பத்திற்குள் சிறந்த ஒத்துழைப்பு இருக்கும். உதாரணமாக, ஒருவர் சைக்கிளை எடுத்துக் கொண்டு கடைக்குப் போக வேண்டுமானால், அதற்கு முன் யாருக்காவது சைக்கிள் தேவைப்படுகிறதா என்பதை விசாரித்துத் தெரிந்து கொள்வதும், மற்றவர்களுக்கு கடையிலிருந்து ஏதேனும் வாங்கிவர வேண்டுமா என்று கேட்டுக்கொள்வதும் நல்ல பழக்கங்கள். இதுபோன்ற இயல்பு (பழக்கம்) அனைவரிடமும் இருந்தால், ஒற்றுமைக்குரிய அடிப்படை ஏற்படும். மற்றவர்களுடன் சுமுகமாக இருந்தால், உயர்ந்த ஒற்றுமை பூரணமாக ஏற்படும்.

ஒற்றுமையை ஒருவர் நாடி, அதற்கான முயற்சியையும், பிரார்த்தனையையும் மேற்கொண்டால் அதற்கேற்ற சூழ்நிலையை அன்னை உருவாக்கி நம் முயற்சியைப் பூர்த்தி செய்கிறார்.

ஒரு குடும்பத்தில் ஒற்றுமை இல்லை. மிகவும் கடுமையான சூழ்நிலை. ஆனால் அந்தக் குடும்பத்தில் உள்ள ஒருவர் மட்டும் குடும்பத்தின் ஒற்றுமையை முக்கியமாகக் கருதுகிறார் என்றால், அவர் செய்ய வேண்டியது என்ன?

முதற்காரியமாக, அவர் குடும்பத்தில் ஒற்றுமையை நாடுவது உண்மை; முழு உண்மை; முழு மனத்துடன் ஒற்றுமையைத் தேடுகிறார் என்ற அளவில் மனநிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். வாயால் சொல்வதை மனத்தால் முழுமைப்படுத்த வேண்டும். அப்படிச் செய்தவுடன் புறச்சூழ்நிலை மாறி, மற்றவர்களும் ‘ஒற்றுமை வேண்டும்’ என்பதுபோல் பேசவும், நடக்கவும் ஆரம்பிப்பார்கள். அந்த அளவுக்கு ஒற்றுமை வளரக்கூடிய காரியங்களைச் செய்தால், அந்த அடிப்படையில் ஒற்றுமை வளர ஆரம்பிக்கும்.

ஆரம்பத்தில் அறிவுக்குத் தகுந்தவற்றை மட்டும் கடைப்பிடித்தால், அடுத்த கட்டத்தில் தன் மனநிலைக்கும், புறச் செயலுக்கும் உள்ள தொடர்பைக் கண்டுகொள்ள முயல வேண்டும். அந்தக் கட்டத்தில் அவர் காண்பது அவருக்கே வியப்பு அளிக்கும். குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நிலைமைக்கும் பொருத்தமான மனநிலையை உள்ளே காண்பார். அதுவே ஆன்மீக உண்மை. மனம் அதை ஏற்றுக் கொள்ள முன்வர வேண்டும். உதாரணமாக தம்பி அண்ணனை, ‘உதவாக்கரை’ என்று கருதுகிறான். அதுபோல் பேசுகிறான். அதனால் அண்ணன் மனம் புண்பட்டுக் கடுமையாகிறது என்றால், அவர் மனத்தில் உள்ள எண்ணத்தைக் கூர்ந்து கவனித்தால், “இந்தப் பையன்கள் அனைவரும் உதவாக்கரைப் பையன்கள்” என்ற ஓர் எண்ணம் இருப்பது தெரியவரும். மேலும் ஆராய்ச்சி செய்தால், ‘உண்மை அது அல்ல’ என்பதும், ‘அது அவருடைய கருத்து’ என்பதும் தெரியவரும்.

இந்த உண்மையை அவர் மனம் ஏற்றுக்கொண்டால், தன் மனத்தில் உள்ள கருத்தை மாற்றிக் கொள்ள முன்வந்தால், அவருடைய மனம் மாறிய அக்கணமே அண்ணனும், தம்பியும் சுமுகமாகிவிட்டதைக் காணலாம். மனத்தின் உணர்வுக்கும், புறநிகழ்ச்சிகளுக்கும் உள்ளது ஜீவனுள்ள தொடர்பு. ஒற்றுமைக்காகப் பாடுபடும் ஜீவன் இந்த நிலையில் மனத்தால் ஏற்படுத்தும் மாற்றங்கள் வீட்டு நிலைமையைப் பெரும் அளவுக்கு மாற்றிவிடும்.

இதற்கு அடுத்த நிலையில் வீட்டில் உள்ளவர்களுடைய ஒத்துழைப்பு அதிகமாக இருப்பதால், நல்ல பழக்கங்களையும், எதையும் நல்லதாக மட்டுமே செய்யும் பழக்கங்களையும், மற்றவர்களுடன் சுமுகமாகப் பழக வேண்டிய சுபாவத்தையும், (good manners, positive behaviour, harmonious character) வலியுறுத்தினால் வீடு ஒற்றுமையாகி விடும். ஒவ்வொரு கட்டத்திலும் அன்னைக்குப் பிரார்த்தனை செய்யும்முன் மனத்தைச் சரிசெய்து, பின்னர் பிரார்த்தனை செய்தால் ஏற்றம் போட்டுத் தண்ணீர் இறைப்பதற்குப் பதிலாக, மோட்டார் இறைப்பது போன்ற மாற்றத்தைக் காணலாம்.

குடும்பத்தில் உள்ளவர்கள் பலதரப்பட்ட சுபாவம் உடையவர்களாக இருப்பார்கள். ‘ஒவ்வொரு சுபாவம் உடையவரும் செய்யக்கூடியது என்ன’ என்பதை விளக்கமாகச் சொல்லலாம். அதுபோன்ற மனக் கட்டுப்பாட்டை அனைவரும் ஏற்றுக்கொள்ள முன்வருவது அரிது என்பதால், அதை விலக்கி ஒருவரால் முடிந்ததை மட்டும் எழுதுகிறேன்.

‘மற்ற எல்லாருமே தாம் நினைப்பதுபோல் நடக்க வேண்டும்’ என்று மனிதன் எதிர்பார்ப்பதால்தான் பிரச்சனைகள் உற்பத்தியாகின்றன என்று அன்னை கூறுகிறார். ஒற்றுமைக்காகப் பாடுபடுபவர் இங்கிருந்துதான் முயற்சியைத் தொடங்க வேண்டும்.

அவர் தம்மைப் பொறுத்தவரை மற்றவர்களுடன் பழகும்போது மற்றவர்களுக்குப் பிடித்தமானதைச் செய்ய முன்வர வேண்டும். இதுவே அவருடைய முயற்சிக்கு அடையாளக்குறி. ஒவ்வொருவருடனும் இதுபோன்ற மனநிலையில் தொடர்பு வைத்துக்கொண்டால், அவர் ஒருவருடைய முயற்சிக்குரிய பலன் அதிகமாகக் குடும்பத்தில் தெரியும். எந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டால் குடும்பம் சீரழியுமோ, ‘அந்தப் பெண்ணையே மணப்பேன்’ என்று பிள்ளை பிடிவாதம் செய்கிறான். தந்தை தன் எண்ணத்தையும், மனத்தையும் நேர் எதிராக மாற்றிக்கொண்டு, ‘மகன் சந்தோஷமாக இருந்தால் போதும்’ என்று அவனுடைய விருப்பத்தைப் பூர்த்தி செய்ய முனைந்தார். நிலைமை எதிர்பாராத விதமாக மாறியது. பெண் வீட்டார் பிள்ளையை விட்டுத் தாமே விலகிக்கொண்டனர். பிறகு பையனுக்குச் செய்த திருமணம் சிறப்பாக அமைந்தது. ஒற்றுமை ஒருவரின் நல்லெண்ணத்தால் ஏற்படும். அவருடைய மனப்பான்மையின் மூலம் அன்னை செயல்பட முடியும். ஒற்றுமையை ஏற்படுத்த முடியும்.

ஒற்றுமை குறைவாக உள்ள நேரத்தில் ஒரு சிறிய காரியம் நடக்கும் பொழுது ஒருவர் தாமதமாக வந்தால், மற்றவர்கள் வாய்க்கு வந்தபடி பேச ஆரம்பித்து, அதனால் காரியம் கெட்டு, இருக்கும் வேற்றுமையை விகல்பமாக்குவதைக் காணலாம். பொருட்களைக் கண்ட இடத்தில் கலைத்துப் போடும் பழக்கத்தால், ஒற்றுமை குறைந்த குடும்பத்தில் திடீரென்று சண்டை ஏற்பட, காணாமல் போன ஒரு சிறு பொருள் காரணமாகிவிடும். ‘என்ன பேசுகிறோம்’ என்று யோசிக்காமல் பேசினால், நல்ல குடும்பங்களில் யாரும் அதைப் பொருட்படுத்தமாட்டார்கள். ‘அர்த்தமற்ற பேச்சு’ என்று கருதிச் சிரித்து, அதைப் புறக்கணித்துவிடுவார்கள். ‘கடுகடு’ என்றிருக்கும் வீட்டில் அதே சொல் கலவரத்திற்கு அஸ்திவாரமாகிவிடும்.

ஓரளவு சுமுகமான சூழல் ஏற்பட்டவுடன் ஒழுங்குமுறை, கட்டுப்பாடு, நிதானமான பேச்சு, மற்றவர்கள் மனம் இனிக்கப் பழகுதல் ஆகிய பண்புகளைக் கொண்டு வந்து நிலை நிறுத்தப் பாடுபட்டால், அதன் மூலம் வரும் அன்னையின் அருள், ஒற்றுமை உணர்வைத் தினமும் அதிகரிக்கச் செய்வதைக் கண்கூடாகப் பார்க்கலாம்.

ஒற்றுமையான குடும்பங்களில் தன்னலமற்ற குணம், பிறருக்காக விட்டுக்கொடுக்கும் பழக்கம், தன்னுடைய தீவிரமான கருத்தையும் வலியுறுத்தாத மனநிலை போன்ற பழக்கங்கள் இருக்கும். எல்லாரும் குடும்பத் தலைவருக்குக் கட்டுப்பட்டிருப்பார்கள். நல்ல பழக்கவழக்கங்களில் குறை ஏற்படும்பொழுது, தலைவர் உடனுக்குடன் அதைச் சரி செய்வார்.

புதிதாக ஒற்றுமை ஏற்படும் இடத்தில் ஒரு தலைவரை ஏற்றுக்கொள்ள அனைவரும் முன்வந்தால், அவரால் ஏற்படுத்திய ஒற்றுமையைக் கட்டிக் காக்க முடியும்.

பெரும்பாலும் அது இருப்பதில்லை. அதற்குப் பதிலாக நல்லெண்ணம், தன்னலமற்ற செயல்கள் போன்ற நல்ல மனப்பான்மைக்குத் தங்கள் செயலை அனைவரும் உட்படுத்திக் கொள்ள முன்வந்தால், ஏற்பட்ட ஒற்றுமை நீடிக்கும்; வளரும்.

அறிவு, பண்பு, இனிமை, கட்டுப்பாடு குறைந்து ஒற்றுமை அழிகிறது. அன்னைக்குச் செய்யும் பிரார்த்தனை ஓரளவு இந்த நல்ல பண்புகளை எல்லாருடைய மனத்திலும் ஏற்படுத்தும். அது பூரணமான பலனை விரைவில் பெறப் போதுமானதில்லை. குடும்பத்தில் உள்ள ஒருவரின் மனத்தில் அறிவும், பண்பும், இனிமையும், கட்டுப்பாடும் முழுவதும் அழியாமல் இருந்தால், அவர் செய்யும் பிரார்த்தனை மூலம் அனைவர் மனத்திலும் இந்த நல்ல குணங்கள் பெருகி, மீண்டும் ஒற்றுமை ஏற்படும். மனத்தின் திண்மையாலும், தூய்மையாலும், பிரார்த்தனையாலும் குடும்பத்தில் ஒற்றுமையை வளர்க்க முடியும். அதை மேற்கொள்பவர் பொறுமையைக் கைக்கொள்ள வேண்டும். பூரண நம்பிக்கையுடையவராகவும் இருத்தல் அவசியம்.

**********

Book traversal links for 01. குடும்ப ஒற்றுமை

  • II. குடும்பம்
  • Up
  • 02. அன்பும் அமைதியும் ஏற்பட

Book navigation

  • முன்னுரை
  • I. அன்னை
  • II. குடும்பம்
    • 01. குடும்ப ஒற்றுமை
    • 02. அன்பும் அமைதியும் ஏற்பட
    • 03. புத்திர சந்தானம்
    • 04. மகனுக்குப் பொறுப்பு
    • 05. குடும்பக் கடன்
    • 06. தீய சக்திகள்
    • 07. புஷ்பாஞ்சலி
  • III. யோகம்
  • IV. வேலை
  • V. நோய்
RSS feed
Powered by Drupal