Skip to main content
Karmayogi

Main navigation

  • Home
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home
  2. அன்னையின் தரிசனம்
  3. பாகம் 1
  4. பகுதி 4
  5. 02. அன்பர்களும் அன்றாட வாழ்க்கை நெறிமுறைகளும்

07. முழுமையான செலவு

‘முறையான செலவு’ என்ற தலைப்பில் ‘எந்தப் பொருளையும் விரயம் செய்யக்கூடாது’என்று குறிப்பிட்டிருந்தேன். பொருளை அலட்சியமாகவும், சிறு நோக்கங்களுக்காகவும் செலவு செய்வது விரயமாகும். அப்படிச் செய்வது தவறு. அதைப் போலவே, நியாயமாகச் செலவு செய்ய வேண்டியதை முழுமையாகச் செலவு செய்யாமல், அரைகுறையாகச் செய்வதும் தவறு.

உதாரணமாக, ‘உழைப்பை’ எடுத்துக்கொள்வோம். விவசாயியின் தொழில் பயிரிடுவது. அவன் நிலத்தில் ஒரு பகுதியை மட்டும் பயிர் செய்துவிட்டு, மீதியைத் தரிசாகப் போடுவது வருந்தத்தக்க தவறாகும். வீட்டை நிர்வகிக்கும் தலைவி இரண்டொரு முக்கியமான காரியங்களை செய்துவிட்டு, மற்றவற்றைச் செய்யாமல் விட்டுவிடுவது பொறுப்பற்றதனமாகும். நிறுவனப் பணியாளர்கள் அவசரமான பணிகளை மட்டும் செய்துவிட்டு, மற்றவற்றைக் கிடப்பில் போடுவது முறையற்ற செயலாகும்.

கையில் உள்ள பொருளை முழுமையாகவும், முறையாகவும் உபயோகிக்காமல், ‘பொருள் இல்லை’ என்று கூறி ஒதுங்குவதும், ஒதுக்குவதும் தவறு.

முழு உழைப்பைக் கொடுக்காதவர்களுக்கும், கையில் உள்ள பொருளை முறையாகவும், முழுமையாகவும் செலவு செய்யாதவர்களுக்கும், போதிய பொருட்செல்வம் கிடைப்பதில்லை. தவற்றை உணர்ந்து திருத்தம் பெற்றால் செல்வம் தடைப்படாமல் கிடைத்துக்கொண்டே இருக்கும். அது தமிழ்நாட்டில் சிமெண்டுக்குத் தட்டுப்பாடு இருந்த காலம். ஒரு விவசாய அன்பர், தம் தோட்டத்தில் சிமெண்டால் வாய்க்கால் அமைத்துத் தண்ணீர் பாய்ச்ச வேண்டும் என்று திட்டமிட்டார். தாசில்தாரை அணுகித் தம் தேவையைக் கூறி, சிமெண்டுக்குப் பெர்மிட் வழங்குமாறு விண்ணப்பித்தார். ‘உங்களுக்கு முன்னால் 500 பேருக்கு மேல் சிமெண்டுக்காகக் காத்திருக்கிறார்கள். உங்களுக்கு ஆறு மாதங்களுக்குப் பிறகுதான் சிமெண்ட் கிடைக்கும்’ என்று கூறிவிட்டார் தாசில்தார்.

அன்பர் அத்தனை காலம் காத்திருக்கத் தயாராயில்லை. ‘நம் தோட்டத்தில் ஏற்கனவே வாங்கி உபயோகிக்காமல் எங்காவது சிமெண்ட் மிச்சம் இருந்தால், அதைத் தேடிக் கண்டுபிடித்து உபயோகித்துவிடுவோம்’ என முடிவு செய்து, முயற்சியில் இறங்கினார்.

அந்த முயற்சியின் பலனாக, மூன்று மூட்டை சிமெண்ட் அங்கும் இங்குமாகக் கவனியாமல் விடப்பட்டிருந்தது தெரியவந்தது. அதைச் சேகரித்துக் கட்டுமான வேலையைத் தொடங்கிவிட்டார் அன்பர். அப்பொழுது அவர் ஒரு தீர்மானம் செய்துகொண்டார்: ‘முன்னைப்போல இனி வாங்கும் சிமெண்ட் மூட்டைகளை முறையாகவோ அல்லது முழுமையாகவோ உபயோகிக்காமல் இருக்கக்கூடாது’என்பதுதான் அந்தத் தீர்மானம்.

இதற்குள் மூன்று நாள்கள் முடிந்துவிட்டன. இருப்பில் இருந்த மூன்று மூட்டை சிமெண்டும் தீர்ந்துவிட்டது. ‘இனி சிமெண்டுக்கு எங்கே போவது? தாசில்தாரின் பெர்மிட்டுக்காக இன்னும் ஆறு மாதங்கள் காத்திருக்கத்தான் வேண்டுமா?’ என்றெல்லாம் மாய்ந்து மருகினார் அன்பர்.

நான்காவது நாள். அன்பரின் தோட்டத்தில் வேலை செய்துவருபவரின் உறவினர் ஒருவர், தன்னிடம் மூன்று மூட்டை சிமெண்ட் இருப்பதாகவும், அதை விற்க விரும்புவதாகவும் அன்பருக்குச் செய்தி அனுப்பினார்.

எதிர்பாராமல் கிடைத்த செய்தி! அன்பர் விடுவாரா? வாங்கிப் போட்டார். கட்டுமான வேலை தடைப்படாமல் தொடர்ந்தது. மேலும் மூன்று நாள்கள் சென்றதும் அதே பிரச்சினை. வாங்கிய மூன்று மூட்டை சிமெண்டும் தீர்ந்து போயிற்று. இனி வழி என்ன?

‘சிமெண்ட்தானே? நாங்கள் தருகிறோம்’ என்று கூறிக்கொண்டே இருவர் வந்தார்கள். ஒருவர் பதினைந்து மூட்டைகளும், மற்றொருவர் ஐம்பது மூட்டைகளும் கொடுத்தனர். ‘சும்மா இல்லை, விலைக்குத்தான்’ என்றாலும், அந்த நெருக்கடியான காலத்தில் அவர்கள் கொடுத்ததற்குப் பெயர் சிமெண்ட் இல்லை; வரம்.

பிறகென்ன? தாசில்தார் இல்லாமல், பெர்மிட் இல்லாமல் தடையின்றிச் சிமெண்ட் கிடைக்க, அன்பரின் வாய்க்கால் வேலை நல்லவிதத்தில் நடந்து முடிந்தது. ‘அது எப்படி நடந்து முடிந்தது?’ என்று வியந்துபோனார் அவர்.

இதில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை. ஆனால் விவரித்துரைப்பதற்கு ஒன்று உண்டு. ‘கையிலிருக்கும் சிமெண்டை வீணாக்காமல், முழுமையாக உபயோகிக்க வேண்டும்’ என அவர் முடிவு எடுத்துச் செயல்பட்டவுடன், தட்டுப்பாடான காலத்திலும் அவருக்குத் தேவையான சிமெண்ட் மூட்டைகள் தட்டுப்பாடின்றிக் கிடைத்துவிட்டன.

Book traversal links for 07. முழுமையான செலவு

  • 06. விட்டுப் போன கடன்
  • Up
  • 08. கடமையைச் செய்யாதபொழுது ஏற்படும் தடை

Book navigation

  • அன்னையின் திருவடிகள்
  • பாகம் 1
    • பகுதி 1
    • பகுதி 2
    • பகுதி 3
    • பகுதி 4
      • 01. அன்னையை வழிபடுவது எப்படி?
      • 02. அன்பர்களும் அன்றாட வாழ்க்கை நெறிமுறைகளும்
        • 01. நம்பிக்கை, பக்தி, தெய்வச் சிந்தனை
        • 02. பொருட்செல்வம்
        • 03. சுத்தம், வரிசைக்கிரமம்
        • 04. முறையான செலவு
        • 05. தணிவான பேச்சு
        • 06. விட்டுப் போன கடன்
        • 07. முழுமையான செலவு
        • 08. கடமையைச் செய்யாதபொழுது ஏற்படும் தடை
        • 09. கணக்கால் பணம்
  • பாகம் 2
RSS feed
Powered by Drupal