பொருட்செல்வம் இல்லாமல் வாழ்க்கையில் முன்னேறுவது கடினம். பொருள் இல்லாத வீடும், நாடும் சிறக்க முடியாது. ‘பொருட்செல்வம்’என்பது பொருளுக்கு அடிமைப்பட்டுச் சேமிக்கும் செல்வமன்று. அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவைப்படுவதுதான் பொருட்செல்வம். அன்னையிடம் நம்பிக்கையும், பக்தியும் கொண்டு, அவரை இடையறாது சிந்தித்தும், வந்தித்தும் வாழ்க்கையை நடத்துகின்ற அன்பருக்கு உணவு, உடை, வீடு, ஆரோக்கியம், கல்வி ஆகியவை எந்த வகையாலும் தடைப்படாது கிடைத்தல் வேண்டும். ‘அதற்குத் தேவையான பொருட்செல்வத்தைப் பெற என்ன செய்ய வேண்டும்?’என்பதை இங்கே காண்போம்.
வேறொரு கட்டுரையில், ‘பூக்கள் எவ்வாறு இன்றியமையாத துணையாக மனிதருக்கு அமைந்துள்ளன?’என்பதைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அதில், நாகலிங்கப் பூ பொருட்செல்வத்தை பெருக்குவதில் பெரும்பங்கு வகிக்கின்றது என்று கூறியிருந்தேன். நாகலிங்கப் பூ கிடைக்கின்ற பகுதிகளில் வசிப்பவர்கள், அதனைத் தினமும் கொண்டுவந்து அன்னையின் திருவுருவப் படத்துக்குச்சார்த்தி வழிபடுவது அவசியமாகும். அந்தப் பூ கிடைப்பதற்கு வழி இல்லை என்றால், அதற்காக வருந்தத் தேவையில்லை. ஏனெனில் அப்பூவை அன்னையின் படத்துக்குச் சார்த்துவதால் மட்டுமே பலன் ஏற்படுவதில்லை. பொருட்செல்வத்தைப் பெற நாம் செய்யும் உண்மையான முயற்சியினால் ஏற்படும் பலனை விரைவுப்படுத்தி, அதனைக் கூட்டிவைக்க மட்டுமே உதவி செய்கின்றது அந்தப் பூ. உழைப்பு இல்லாமல் செல்வத்தைப் பெறுவது கடினம். அப்படி உழைத்துப் பெறும் பலனைச் சிதறிவிடாமல் கூட்டிவைப்பதுதான் அந்தப் பூவின் சிறப்பான இயல்பு. ஆகவே அந்தப் பூ கிடைக்காவிட்டாலும் பொருளைப் பெறுவதற்குச் செய்த முயற்சி, உழைத்த உழைப்பு வீண் போகா. இருப்பினும் அந்தப் பூ கிடைக்க வாய்ப்பு இருந்தால், அதை உபயோகிக்க முயல வேண்டும்.
‘பொருட்செல்வம் கிடைக்க முயற்சி தேவை’என்று முன்னர் குறிப்பிட்டு இருந்தேன். முயற்சி என்பது இரண்டு வகைகளாகப் பொருள்படும். ஒன்று, பொருளை ஈட்டுவதற்கு மேற்கொள்ளப்படும் தொழில்; இரண்டு, பொருள் சேர்வதற்குச் சரியான சூழ்நிலையை உருவாக்குகின்ற உழைப்பு. அநேகமாக ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தொழிலைச் செய்துதான் பொருளைச் சம்பாதிக்கின்றார்கள். ஆனால், தொழில் மட்டுமே போதிய அளவு செல்வத்தைக் கொடுப்பதில்லை. தொழில் செய்கின்ற பலர் போதிய பொருள் இல்லாமல் துன்புறுவதை நாம் பார்க்கின்றோம். அதற்குக் காரணம், மேற்கூறிய உழைப்பு இல்லாததுதான். இந்த உழைப்பு மிகுந்து உள்ளவர்களிடம் தொழில் லாபகரமாக அமைந்து, போதிய செல்வத்தைக் கொடுக்கின்றது. எந்தத் தொழிலாக இருந்தாலும், அது போதிய அளவு செல்வத்தைக் கொடுக்க வேண்டுமானால், அதற்கு வேண்டிய சரியான உழைப்பை அது பின்னணியாகக் கொண்டிருக்கவேண்டும். இதிலிருந்து, ‘தொழிலைவிட, அதற்குப் பின்னணியாக இருக்கவேண்டிய உழைப்பு மிகவும் முக்கியமானது’என்பது நமக்குப் புரிகின்றது.
இந்தக் கருத்தை ஓர் உதாரணத்தால் விளக்கலாம். நல்ல விதையாக இருந்தாலும், அது விதைக்கப்பட்ட மண்ணுக்கு ஏற்பத்தான் பலனைக் கொடுக்கின்றது. சத்தான மண்ணில் விதைக்கப்பட்ட விதை அபரிமிதமான பலனைக் கொடுக்கின்றது. வளம் இல்லாத மண்ணில் விதைத்த விதை மிகச்சொற்ப அளவில் பலனைக் கொடுக்கின்றது. இங்கே தொழில் விதை போன்றது. தொழிலுக்குத் தேவையான உழைப்பு, வளம் பொருந்திய மண்ணைப் போன்றது.
‘பொருட்செல்வத்தைப் பெறுவதற்கான தக்க சூழ்நிலையை உருவாக்கும் உழைப்பு என்பது என்ன?’ என்று சொல்கின்றேன். பொருட்செல்வம் நம்மை விரும்பி வரவேண்டுமானால், விரும்பத்தகாத வகையில் நாம் எந்தப் பொருளையும் உபயோகிக்கக்கூடாது; எவர் ஒருவரையும் விரும்பத் தகாத வகையில் நடத்தக்கூடாது; எந்த ஒரு செயலையும் விரும்பத் தகாத வழியில் செய்யக்கூடாது. அன்னையையே இடையறாது சிந்திக்கும் அன்பர்கள், விரும்பத் தகுந்தவற்றையே செய்யப் பழகிக்கொள்ள வேண்டும். இத்தகைய அன்பர்களிடம் பொருட்செல்வம் தானாகவே விரும்பி வருவதைக் கண்கூடாகக் காணலாம்.