‘அன்னையை எப்படி வழிபடுவது? அன்னையை வழிபடுவதற்கு ஏதேனும் விதிமுறைகள் இருக்கின்றனவா? எத்தகைய விதிகளைக் கடைப்பிடித்தால் அன்னையின் அருளை எளிதில் பெறவும், விரும்பியதை அடையவும், சிக்கல்களிலிருந்து விடுபடவும் முடியும்’ எனக் கேட்டு ‘அமுதசுரபி’ வாசகர்கள் பலர் எனக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள். எனக்குக் கடிதம் எழுதாத பல வாசகர்கள் மனதிலும் இதே போன்ற வினாக்கள் தோன்றி இருக்கக்கூடும் என நினைக்கிறேன்.
அன்னையின் பெருமைகளை, அளப்பரிய அருட்சக்தியை அறிந்து கொண்ட வாசகர்கள், அன்னையை வணங்குவதற்கான வழிமுறைகளையும் அறிந்துகொள்ள வேண்டியது மிக முக்கியமாகும்.
விவசாயி பயிர் செய்யும்முன் நிலத்தை உழுது நன்கு திருத்துகிறான். தேவையான அளவு எருவிட்டு மண்ணில் சத்தைச் சேர்க்கிறான். காலம் அறிந்து பக்குவமாகப் பயிரை நடுகிறான். உரிய காலங்களில் தண்ணீர் பாய்ச்சிக் களைகளை நீக்குகிறான். பூச்சி, எலி, ஆடு, மாடுகள் பயிரை அழித்துவிடாமல் பாதுகாக்கிறான். பயிர் செழித்து வளரும்போதெல்லாம் பூரிக்கிறான். பயிர் வாடினால் அவனும் வாடிப்போகிறான். இப்படியாக அவன் தன் உழைப்பையும், கவனத்தையும் முழுமையாகப் பயிரின் மீதே செலுத்துகிறான். பயிர் பலன் தரும் வரை பொறுமையோடு காத்திருக்கிறான். அறுவடையின் மூலம் கிடைக்கும் பலனை, அவன் ‘பொன்' எனப் போற்றி மகிழ்கிறான்.
ஒரு வகையில் பக்தனும், விவசாயியும் ஒத்த நிலையை உடையவர்கள் என்று கூற வேண்டும். அன்னையின் அருள் கற்பக விருட்சம் போன்றது. அது விரும்பிய அனைத்தையும் அபரிமிதமாக வழங்கவல்லது அதனை நன்கு பயிர் செய்து, அதன் மூலம் கிடைக்கும் அளவற்ற பலன்களை அறுவடை செய்து, மகிழ்ச்சியாக வாழத் தெரிந்தவன் பக்தன். ஒரு நல்ல விவசாயியிடம் காணப்படும் அனைத்துக் கட்டுப்பாடுகளும் பக்குவத்தில் சிறந்த பக்தனிடத்தில் காணப்படுகின்றன.
1
அன்னையின் அருளால் ஏதேனும் ஒன்றைப் பெற அவாவுறும்போது, ‘அதை அது நிச்சயம் கொடுக்கும்’என்ற உண்மையும், உறுதியும் மிக்க நம்பிக்கையே அவ்வருள் செயல்படுவதற்கு மிக முக்கியமானதாகும். ‘அன்னையே! அரசுடைமையாக்கப்பட்ட வங்கி ஒன்றில் எனக்கு அதிகாரி பதவி கிடைக்க அருள் செய்ய வேண்டும்’என்ற நம்பிக்கையோடு ஒருவர் அன்னையைப் பிரார்த்திப்பதாக வைத்துக்கொள்வோம். தாம் கேட்டதை அன்னை அருள்வார் என்ற நம்பிக்கை இருப்பதால்தான் அவர் அன்னையிடம் பிரார்த்தனை செய்துகொள்கிறார். ஆனால் அவர் செயலில் இறங்கும்போது அவருடைய நம்பிக்கை இடம் மாறிப்போய்விடலாம். ‘நான் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன். ஆகவே என்னை அதிகாரியாகத் தேர்ந்தெடுக்கச் சட்டம் சலுகை அளிக்கிறது. சட்டத்தின் சலுகையால் எனக்கு அந்த வேலை நிச்சயம் கிடைக்க வேண்டும்’ என்று பிற்பட்ட வகுப்பûச் சேர்ந்த அவர் நினைப்பது இயற்கை. செயலில் இறங்கும்போது அவருக்குச் சட்டத்தில் நம்பிக்கை இருக்கின்றதே தவிர, அன்னையிடத்தில் இல்லை.
அநேகமாக அன்னையின் பக்தர்களில் பலர் இதுபோன்ற தவறு செய்வதைப் பார்க்கலாம். இது ஒரு தவறு என்பதையே பலரும் அறிய மாட்டார்கள். சொல்லில் உள்ள நம்பிக்கை செயலிலும் வெளிப்பட வேண்டும். அது செயலில் வெளிப்படாதபோது நாம் விரும்பியது கிடைக்கவில்லை என்றால், அன்னையின் அருளைக் குறை கூறுவது தவறு என்பதை உணர வேண்டும். ‘பயிருக்கு எரு போட வேண்டும்’ என்று மனத்தில் மட்டும் நினைத்துக்கொண்டு, எரு போடாமலே பயிர் செய்கின்றபோது என்ன பலன் கிடைக்குமோ, அதே அளவு பலன்தான் சொல்லோடு நின்றுவிடுகின்ற நம்பிக்கைக்கும் கிடைக்கும்.
அதற்காக, ‘அன்னையிடம் எனக்குப் பூரண நம்பிக்கை இருப்பதால், நான் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன் என்ற சான்றிதழை அனுப்பத் தேவை இல்லை’ என நினைப்பதும் தவறு. விண்ணப்பத்தில் கண்டுள்ள நிபந்தனைகளை ‘வேண்டும்' என்றே புறக்கணிப்பது பெருந்தவறாகும். அன்னையின் அருள் விரும்பிய பலனைக் கொடுக்க வேண்டுமானால், விண்ணப்பத்தை அனுப்புவது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் விண்ணப்பத்தில் உள்ள நிபந்தனைகளை நிறைவேற்றுவது. எடுத்த காரியத்தில் நமது முயற்சி முழுமையாக இருக்க வேண்டும். ஆனால் நம் நம்பிக்கை நம் முயற்சியில் இல்லாமல், அன்னையின் அருளில் மட்டும்தான் இருக்க வேண்டும்.
2
எந்த ஒன்றை அன்னையின் அருளால் பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்துகொள்கிறோமோ, அது சம்பந்தப்பட்ட அனைத்தையும் அன்னையிடம் ஒப்படைத்துவிட வேண்டும். அப்படிச் செய்வதன் மூலம் நாம் விரும்பிய எதுவும் நமக்குச் சுலபமாகக் கிடைத்துவிடும்.
ஒரு சமயம் என் நண்பர் அமெரிக்கப் பெண் ஒருவர் அன்னையின் திருவுருவப் படம் ஒன்றை ஆசிரமத்தில் வாங்கி, அதனைத் தம் சைக்கிளின் பின்புறத்தில் கட்டி எடுத்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். அது 30x40 அளவுள்ள பெரிய படம். படம் நசுங்கிவிடாமல் இருக்க நூலால் கட்டியிருந்தார். வரும் வழி எல்லாம் படம் நழுவி, விழாமல் பத்திரமாக இருக்கிறதா எனப் பார்த்துக்கொண்டே வந்தார். வீட்டுக்கு வருமுன் ஒரு குறுகிய தெருவைக் கடந்து வர வேண்டும். அந்தத் தெருவுக்குள் அவர் நுழையும்போதும் படம் பத்திரமாக இருந்தது.
நண்பர் வீட்டை நெருங்குவதற்குச் சில கெஜ தூரம் இருந்தபோது, ‘படம் பத்திரமாக இருக்கிறதா?’ என்பதைத் தெரிந்துகொள்ளப் பின்புறம் திரும்பிப் பார்த்தார். படத்தைக் காணவில்லை. இரண்டு நிமிடங்களுக்கு முன்பு வரை பத்திரமாக இருந்த படம் எப்படிக் காணாமல் போயிற்று? அவர் திடுக்கிட்டார். எதைத் தவறவிட்டாலும், அன்னையின் படத்தைத் தவறவிடுவது பெருந்தவறு ஆயிற்றே! என்று கவலையும், கலவரமும் அடைந்தார். வந்த வழியே படத்தைத் தேடிப் புறப்பட்டார். அந்தத் தெருவின் இரு மருங்கிலும் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் ஏறி, இறங்கிப் படத்தைப் பற்றி விசாரித்தார். அது கிடைத்தபாடாக இல்லை.
காலை எட்டு மணி அளவில் இந்தச் சம்பவம் நடந்தது. மாலை 6.30 மணி வரை தொடர்ந்து தேடியும் படம் கிடைக்கவில்லை. அது இனிக் கிடைக்கும் என்ற நம்பிக்கையை நண்பர் முழுவதுமாக இழந்துவிட்டார். அப்பொழுது, ‘அன்னையே! உங்கள் படம் கிடைக்க வேண்டும்’ என்று அன்னையைப் பிரார்த்தித்துக்கொள்ள வேண்டியது மிக மிக முக்கியம் என்பது ஏனோ அவருக்குத் தோன்றவில்லை.
அவர் என்னிடம் கலவரத்துடன் விஷயத்தைச் சொன்னார். நான் வேறொருவரை அழைத்து, படத்தை தேடச் சொன்னேன். விபரம் முழுவதும் தெரியுமாதலால் அவருக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. ‘நடுரோட்டில் விழுந்தது எப்படிக் கிடைக்கும்? என்ற கேள்வியை மனதில் அனுமதிக்காமல், அன்னைக்குப் பிரார்த்தனை செய்துவிட்டுப் போய் பாருங்கள்’ என்றேன். அவர் படத்தோடு திரும்பிவந்து கீழ்கண்டவாறு கூறினார்:
‘அது என்னால் முடியுமா? ஒரு சிறிய தெருவுக்குள் அப்பெண் பத்தரை மணி நேரம் தேடிப் பார்த்தும் கிடைக்காத படம், நான் தேடினால் மட்டும் கிடைக்குமா? அதற்கு முதலில் ‘கிடைக்கும்’ என்று நம்ப வேண்டும்; நம்பினேன். ‘அது கிடைக்க அருள் செய்ய வேண்டும்’ என்று அன்னையைப் பிரார்த்தித்தேன். காணாமல்போன படம் சம்பந்தப்பட்ட அனைத்தையும் ஒவ்வொன்றாக நினைவில் கொண்டுவந்து, அவற்றை அன்னையிடம் ஒப்படைத்துவிட்டுப் படத்தைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டேன்.
என்னோடு என் நண்பர் ஒருவரும் உதவியாக வந்தார். இருவரும் படம் காணாமல்போன தெருமுனையில் வந்து நின்றோம். வலப்புறத்தில் ஒரு பிள்ளையார் கோயில். அதை ஒட்டி ஒரு ஸ்தபதியார் வீடு. அந்த வீட்டில் சிலைகளை வடிக்கும் வேலை நடைபெறுவதால், அங்கே பலர் வருவதும், போவதுமாக இருப்பார்கள். அதை நான் பல முறை பார்த்திருக்கிறேன். ‘அந்த ஸ்தபதியாரின் வீட்டில் போய்ப் படத்தைப் பற்றி விசாரிக்கலாமா?’என்று நினைத்தேன். ஆனால் என் நண்பர், ‘தெருவில் உள்ள அத்தனை வீடுகளிலும் விசாரித்துப் பார்த்துவிட்டேன்; படம் கிடைக்கவில்லை’என்று கூறியது அப்போது என் நினைவுக்கு வந்தது. அவர் கூற்றுப்படி பார்த்தால், ஸ்தபதியாரின் வீட்டிலும் தேடிப் பார்த்திருக்க வேண்டும். கிடைக்காத இடத்தில் போய் மீண்டும் முயன்று என்ன பயன்?
இந்தக் கேள்வி என்னைக் குழப்பினாலும் அதில் ஓர் அறிவிப்பு இருப்பதை நான் அறிந்தேன். அந்தத் தெருவில் எத்தனையோ வீடுகள் இருக்கும்போது ‘ஸ்தபதியாரின் வீட்டில் மட்டும் விசாரிக்க வேண்டும்’ என்று எனக்கு ஏன் தோன்றியது? ஆகவே, ‘அங்கே விசாரித்துப் பார்க்கும்படி அன்னை தூண்டுகிறார்’என்பதை உணர்ந்தேன். நண்பருடன் ஸ்தபதியாரின் வீட்டுக்குச் சென்றேன். காணாமல்போன அன்னையின் படத்தைப் பற்றி ஸ்தபதியாரிடம் கேட்டேன்.
‘நீங்கள் தேடுகிற படம் இதுதானா என்று பாருங்கள்’ என்று அவர், காகிதச்சுருள் ஒன்றை எடுத்து என்னிடம் கொடுத்தார்.
பிரித்துப் பார்த்தேன். அது காணாமல்போன அன்னையின் படம்தான்!
‘அது காலையிலிருந்து என்னிடம்தான் இருக்கிறது. படத்தைத் தேடி யாராவது வந்தால், கொடுக்கலாம் என்று காத்துக்கொண்டிருந்தேன். இதுவரை யாரும் வரவில்லை. இப்போதுதான் நீங்கள் வந்தீர்கள்’என்றார் ஸ்தபதியார்.
அவருக்கு நன்றி கூறிவிட்டுத் துணைக்கு வந்த நண்பருடன் வீட்டை நோக்கி நடந்தேன். வழியெல்லாம் ஒரே சிந்தனை. ‘எல்லா வீடுகளிலும் விசாரித்துவிட்டேன். படம் கிடைக்கவில்லை’ என்றல்லவா அப்பெண் கூறினார்? ஆனால் ஸ்தபதியாரோ தம் வீட்டுக்கு இதுவரை யாருமே வரவில்லை என்று தீர்மானமாகக் கூறினார். எனவே, நண்பர் அவர் வீட்டுக்குப் போய் விசாரிக்கவில்லையா? என்ற கேள்விகளுடனும், அன்னையின் படத்துடனும் வீட்டுக்குள் நுழைந்தேன்.
‘இனிக் கிடைக்கவே கிடைக்காது’ என்று நம்பிக்கையை இழந்து, கவலையுடன் உட்கார்ந்திருந்த அவர், நான் அன்னையின் படத்துடன் சென்றதும் மகிழ்ச்சியோடு துள்ளி எழுந்தார்.
‘நீங்கள் காலையில் படத்தைத் தேடிச் சென்றபோது பிள்ளையார் கோயிலுக்குப் பக்கத்தில் உள்ள ஸ்தபதியாரின் வீட்டில் விசாரித்தீர்களா?’ என்று அவரிடம் கேட்டேன் நான்.
‘இல்லை. நான் ஒவ்வொரு வீடாகச் சென்று விசாரித்தபின் அந்த ஸ்தபதியாரின் வீடு ஒன்றுதான் பாக்கி இருந்தது. இத்தனை வீடுகளில் விசாரித்தும் கிடைக்காத அந்தப் படம், அந்த ஸ்தபதியாரின் வீட்டில் மட்டுமா இருக்கப்போகிறது என்று நினைத்து, அவர் வீட்டில் விசாரிக்காமலேயே வந்துவிட்டேன்’ என்றார் அவர்.
3
இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வேறு சில விதிகளை இங்கே சுருக்கமாப் பார்க்கலாம்.
- விரும்பியது நமக்குக் கிடைத்தவுடன் அன்னைக்கு மறவாது நன்றி செலுத்தி, அதனைப் பூரணமான பொறுப்போடும், மகிழ்ச்சியோடும் பெற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு கிடைத்ததைப் புனிதமாகக் கருதி, முறையாக அனுபவிக்க வேண்டியது அவசியம்.
- அன்னையிடம் எதை வேண்டுமானாலும் கேட்கலாம். ஆனால், அது நேர்மையானதாகவும், முறையானதாகவும் இருக்க வேண்டும்.
- விரும்பியது கைகூடும்வரை பொறுமையாகவும், உறுதியாகவும் இருக்கவேண்டும்.
- உண்மையைக் கடைப்பிடிக்கின்றவர்கள், அன்னைக்குப் பிரியம் ஆனவர்கள். அவர்கள் விரும்பும் எதனையும் அன்னை விரைவாகவும்,பன்மடங்காகப் பெருக்கியும் கொடுக்கின்றார். ஆகவே பொய்யை விலக்குவதும், தவறு செய்யாமல் இருப்பதும் முக்கியமாகும். பயம், கோபம், பொறாமை, வெறுப்பு, சச்சரவு, புறம் பேசுதல், வீண் விரயம் செய்தல், கூச்சலிடுதல் போன்றவற்றை விலக்க வேண்டும். குழந்தைகளிடத்தில் பரிவோடும், பாசத்தோடும் நடந்துகொள்ள வேண்டும். மகிழ்ச்சியாகவும், சுறுசுறுப்பாகவும், சுத்தமாகவும், அன்பாகவும் இருக்க வேண்டும். ‘வேண்டாதவற்றை உடனடியாக விட முடியாவிட்டாலும், சிறிது சிறிதாக விட முயல வேண்டும்’ என்ற எண்ணத்தை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்.
- எதைச் செய்தாலும் மிகக்கவனமாகவும், பொறுப்பாகவும் செய்ய வேண்டும்.
- காலையில் படுக்கையை விட்டு எழுந்தவுடனும், இரவில் படுப்பதற்கு முன்பும் அன்னையை நினைத்து வணங்க வேண்டும்.
- நமக்கு நேரும் துன்பங்கள் அனைத்தும் நம்முடைய எண்ணங்களாலும், உணர்ச்சிகளாலும், செயல்களாலும் விளைந்தவை என்பதை உணரவேண்டும். தொல்லைப்படுத்தும் துன்பங்கள் விலக வேண்டுமானால், நமது தவறான எண்ணங்களையும், உணர்ச்சிகளையும், செயல்களையும் அன்னையிடம் ஒப்படைத்து, அவற்றை நீக்கி அருளும்படி வேண்டிக்கொள்ளவேண்டும். அப்படிச் செய்தால், தொல்லை தரும் இடர்கள் விலகுவதோடு, இனி ஓர் இடரும் நம்மை அணுகாது.
மேற்கூறிய விதிகளைப் பின்பற்றுபவர்களுக்கு அன்னையின் அருள், வேண்டியன அனைத்தையும் வழங்கி, எல்லையற்ற மகிழ்ச்சியையும், அமைதியையும் கொடுக்கும். இவ்விதிகளைப் பின்பற்றுவதோடு, அன்னையின் திருவுருவத்தை வணங்குதலும், ஏதேனும் ஒரு சேவையை அவருக்குச் செய்தலும், நம்மால் முடிந்த காணிக்கையை அவருக்குச் சமர்ப்பித்தலும் மிக மிக முக்கியமானவையாகும்.
****