அன்பர்களுக்குத் தேவையானவை மூன்று. அவை: (1) நம்பிக்கை, (2) பக்தி, (3) இடையறாத தெய்வச் சிந்தனை. ‘நாம் வேண்டும் என்று கேட்டதைத் தவறாமல் கொடுக்கும் ஆற்றலுடையது அன்னையின் அருள்’ என உறுதியாக நம்புவது நம்பிக்கை. எந்தக் காரியத்தைச் செய்தாலும் அன்னையை மனத்தால் பணிந்து செய்வது பக்தி. மனத்தை எப்பொழுதும் அன்னையிடம் பதித்து வைத்திருப்பது இடையறாத தெய்வச் சிந்தனை. இந்த மூன்றும் செயல்படும் விதத்தை இங்கே பார்க்கலாம். செயல்கள் நிறைந்தது நம் வாழ்க்கை. செயல்கள் இரு வகைப்படும். ஒன்று, முடிவு செய்த ஒன்றை நிறைவேற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் செயல்கள்; இரண்டு, நடைமுறையில் இயல்பாகச் செயல்படும் செயல்கள். உதாரணமாக, ‘பெண்ணுக்குத் திருமணம் செய்ய வேண்டும்’ என்று நிச்சயித்து, அதைச் செயல் வடிவில் கொண்டுவருவதற்காக மேற்கொள்ளப்படும் செயல்கள் முதல் வகையைச் சேர்ந்தவை. இதுவன்றி, அன்றாட வாழ்க்கையில் உண்பது, உறங்குவது, எழுதுவது, பேசுவது, நடப்பது, உட்காருவது, குளிப்பது, விளையாடுவது போன்ற பல செயல்களிலும் நாம் ஈடுபடுகின்றோம். இவை இரண்டாவது வகையைச் சேர்ந்தவையாகும். நம்பிக்கையும், பக்தியும் முதல் வகையைச் சேர்ந்த செயல்களில் வெளிப்பட வேண்டும். இடையறாத தெய்வச் சிந்தனை இரண்டாவது வகையான செயல்களில் கலந்து நிற்க வேண்டும்.
‘நம்பிக்கையும், பக்தியும் முதல் வகையைச் சேர்ந்த செயல்களில் வெளிப்பட வேண்டும்’எனக் குறிப்பிட்டேன். அதனை விளங்கிக்கொள்வோம். திருமணம் செய்விப்பதையே முதல் வகையைச் சேர்ந்த செயல்களுக்கு ஓர் உதாரணமாகக் கொண்டு பார்க்கலாம். அந்தச் செயலுக்குப் பல கட்டங்கள் இருக்கின்றன. ‘பெண்ணுக்குத் திருமணம் செய்ய வேண்டும்’ என முடிவெடுப்பது முதலாவது கட்டமாகும். இதைத் தொடர்ந்து பல கட்டங்கள் உள்ளன. பெண்ணிடத்தும், குடும்பத்தினர், உறவினர், நெருங்கிய நண்பர்கள் ஆகியோரிடத்தும் அதை வெளிப்படுத்துதல்; தக்கவர்களை அணுகி வரன்களைப் பற்றிய விவரங்களைச் சேகரித்தல்; ‘தேடிய வரன்களில் பொருத்தமாக அமையக்கூடிய வாய்ப்பை அதிகமாகப் பெற்றிருக்கும் வரன் யார்?’ என்று ஆய்ந்து, ஒரு முடிவுக்கு வருதல்; எடுத்த முடிவின்படி விரும்பிய வரனை அணுகி எல்லா விவரங்களையும் கேட்டறிந்து மாப்பிள்ளை வீட்டாரின் ஒப்புதலைப் பெறுதல்; இந்த ஒப்புதலை நான்கு பேர் முன்னிலையில் நிச்சயப்படுத்துதல்; பின்னர், நிச்சயித்தபடி திருமணத்தை முடிப்பதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்தல்; குறிக்கப்பட்ட தேதியில் திருமணத்தை நடத்தி முடித்தல்; என்ற பல கட்டங்களில் திருமணம் நிறைவேறுகின்றது.
‘திருமணம் செய்ய வேண்டும்’ என முடிவெடுக்கும்போது, ‘இந்தத் திருமணம் எவ்விதத் தடையுமின்றி இனிதே முடிய வேண்டும்’என்று அன்னையிடம் பிரார்த்தனை செய்து, ‘இந்தக் கோரிக்கையை அன்னை ஏற்றுக் கொண்டு, அதனை நிச்சயம் நிறைவேற்றிவைப்பார்’ என்ற உறுதிப்பாட்டை அடைவது நம்பிக்கையாகும். இந்த உறுதிப்பாட்டைக் குலைக்கும் விதத்தில் அவ்வப்போது சந்தேகங்கள் எழும். அந்தச் சந்தேகங்களுக்கு இடம் கொடாமல், ‘அவை ஏன் ஏற்பட்டன?’ என்பதற்கான காரணங்களை அறிந்து, அவற்றை அறவே நீக்கிவிட வேண்டும். அவற்றை ஒவ்வொரு தடவையும் நெஞ்சை விட்டு நீக்கும்போது, அந்த உறுதிப்பாடு மேலும் மேலும் வளர்ந்து நம்பிக்கையை முழுமையாக்கிவிடுகின்றது.
முதல் கட்டத்தைத் தொடர்ந்து பல கட்டங்கள் வருகின்றன என்பதைப் பார்த்தோம். ஒவ்வொரு கட்டத்தையும் தொடங்கும்போதும், முடிக்கும்போதும் அன்னையின் திருவருளைத் துணையாகக் கொண்டு செயல்படுவது பக்தியாகும். ‘பஜ்’ என்ற சொல்லிலிருந்து வந்தது ‘பக்தி'. ‘பஜ்’ என்பது ‘பணிதல்’ எனப் பொருள்படும். ஆகவே ‘பக்தி’ எனப்படுவது ‘பணிந்து செயல்படுதல்’ என்பதைக் குறிக்கும். அன்னையைப் பணிந்து செய்யப்படுகின்ற செயல்கள் அனைத்தும் பக்தியை வளர்க்கும் செயல்களாகும்.
ஒவ்வொரு கட்டத்திலும் தடைகளோ அல்லது சிக்கல்களோ ஏற்படலாம். ஏதாவது ஒரு கட்டத்தில் திருவருளின் துணையை நாடாமல் நாம் செயல்பட்டிருப்பதே அவை ஏற்படுவதற்குக் காரணமாகும். இந்தக் காரணத்தை உணர்ந்தவுடன், ‘நான் செய்தது தவறு’ என்று மனப்பூர்வமாக ஒப்புக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால், நடுவில் வந்த சிக்கலோ அல்லது இடையூறோ விலகிப்போகும். அப்படிச் செய்யத் தவறிவிட்டால், மேற்கூறிய சிக்கல்களினால் மனம் குழம்பி, சந்தேகம் எழுந்து, நம்பிக்கை உறுதி இழந்து அழிந்துபோகும் நிலை ஏற்படும். அதற்கு மாறாக, மேற்கூறிய முறைப்படி சிக்கல்களை விலக்கிக் கொண்டால், சந்தேகமும் எழாது; நம்பிக்கையும் தொடர்ந்து உறுதிப்பட்டுவிடும்.
பக்தியினால் நம்பிக்கை மேன்மேலும் வலுவடைந்து, முழுமையாகிவிடுகின்றது. ஆகவே, நம்பிக்கையும், பக்தியும் ஒன்றுக்கொன்று இணை பிரியாதவை என்பதை நாம் உணர வேண்டும். நம்பிக்கை பூரணமாக உறுதிப்பட்ட பிறகு, திருமணம் எல்லாக் கட்டங்களையும் சுலபமாகக் கடந்து, சிறப்பாக முடிந்துவிடுவதை அனுபவ வாயிலாக அறியலாம்.
செயல்களை இரண்டு வகைகளாகப் பிரித்து, ‘முதல் வகையைச் சேர்ந்த செயல்களில் எவ்வாறு நம்பிக்கையும், பக்தியும் வெளிப்பட வேண்டும்?’ என்பதை ‘திருமணம்’ என்னும் உதாரணத்தால் விளக்கினேன். இரண்டாவது வகையைச் சேர்ந்த செயல்களுக்கு உதாரணம் தேவை இல்லை. ‘அன்றாட வாழ்க்கையில் இயல்பாக நிகழ்கின்ற செயல்கள் அனைத்தும் இந்த வகையில் அடங்கும்’ என்பதை முன்பே குறிப்பிட்டுள்ளேன். அவற்றில் சிலவற்றை முக்கியமாக் கொள்ளலாம்.
உண்ணல், உறங்கல், உறங்கி விழித்தல், வீட்டை விட்டு வெளியேறிச் செல்லல், திரும்ப வீட்டுக்கு வருதல், குழந்தை, மனைவி, தாய், தந்தை, சகோதர சகோதரியர், உறவினர், நண்பர் போன்றோரிடம் ஏதேனும் உதவியைப் பெறுதல் அல்லது உதவி செய்தல், நண்பர்களையோ அல்லது உறவினர்களையோ வரவேற்று உபசரித்தல், அல்லது வழி அனுப்பி வைத்தல் போன்றவை மிகவும் முக்கியமானவை. அச்செயல்களை எல்லாம் செய்யும் பொழுது மனம் அன்னையிடம் பதிந்தவண்ணம் இருக்கப் பழகிக்கொள்ளவேண்டும். அதன் காரணமாக இடையறாத தெய்வச் சிந்தனையானது நம்மிடம் நிலைபெற்றுவிடும்.
நம்பிக்கை, பக்தி, இடையறாத தெய்வச் சிந்தனை ஆகிய மூன்றையும் பெற்றவர், ‘அன்னையின் அன்பர்’ என்ற தகுதியைப் பெற்றவராகிறார். இந்த மூன்றையும் அடைந்தவர்களுக்கு எந்த நாளும் இன்பமேயன்றித் துன்பமே இல்லை.