‘பேச்சு’ என்பது மனிதனுக்குக் கிடைத்தற்கரிய ஒரு சிறந்த கருவியாகும். சாதாரணமாக, ‘பேச்சு’ என்பது, எண்ணங்கள் ஒலி வடிவமாக வெளிப்படுவதைக் குறிக்கின்றது.
கேட்டவை, பார்த்தவை, மற்ற புலன்களால் அறிந்தவை ஆகியயாவும் எண்ணங்களாக உருவெடுத்து நம் மனத்தில் இடம் பெறுகின்றன. நாம் இந்த எண்ணங்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும்பொழுது, அது ஒலி வடிவம் பெற்றுப் பேச்சாக வெளிப்படுகின்றது.
‘பேச்சு என்றால் எண்ணங்களை வெளியிடும் ஓர் உபாயமேயன்றி வேறு இல்லை’ என்று பாமர மக்கள் கருதுகின்றார்கள். அதனால் அவர்கள், ‘பேச்சு கவனத்துக்குரிய ஒரு செயல்’ என்பதைப் புரிந்துகொள்வதில்லை.
பேச்சுக்கு மூன்று அம்சங்கள் உள்ளன.
- பேசப்படும் கருத்து அல்லது விஷயம்;
- பேசப்படுகின்ற விதம்;
- பேச்சினால் ஏற்படும் விளைவு.
கருத்துக்கு ஏற்பப் பேசப்படுகின்ற விதமும், பேசப்படுகின்ற விதத்தைப் பொருத்து அதன் விளைவும் அமைகின்றன. உதாரணமாக, கோபத்தை வெளிப்படுத்தும் பேச்சு சுடுசொற்களாக வெளிப்படுகின்றது. அது மற்றவர்களிடத்தில் பயத்தையோ அல்லது ஆத்திரத்தையோ உண்டாக்குகின்றது. கோபம் கோபத்தை எழுப்புகின்றது. அதற்குச் சுடுசொற்கள் கருவிகளாக அமைகின்றன.
எண்ணங்கள் பேச்சாக வெளிப்படுகின்றன என்று கூறினோம். உணர்ச்சிகளும் பேச்சாக வெளிப்படுகின்றன. எண்ணங்களும், உணர்ச்சிகளும் தாமாக மனத்தில் தோன்றி, தாமாகவே மறைகின்றன. அவற்றின் மீது நமக்கு எந்தவித ஆதிக்கமும் இருப்பதில்லை. அது மட்டுமன்று, எண்ணங்களும், உணர்ச்சிகளும் வெளிப்பட்ட பின்பு ஏற்படும் விளைவுகளின் மீதும் நமக்கு ஆதிக்கம் இல்லை. கோபம் பொங்கிவரும்போது கோபமான சொற்கள் வெளிப்படுகின்றன. இவற்றிற்கு இலக்கானவர்கள் கோபம் அடைகிறார்கள். சுடுசொற்களுக்கு இலக்கானவர்கள் கோபம் அடையும்பொழுது, அதை யாரால் தடுக்க முடியும்? பிறிதோர் இடத்தில், ‘வீட்டில் விரும்பத்தகாத சூழ்நிலைக்கு இடம் கொடுக்கக்கூடாது’ என்று குறிப்பிட்டிருந்தேன். விரும்பத்தகாத எண்ணங்களுக்கும், உணர்ச்சிகளுக்கும் அடிமையான ஒரு சாதாரண மனிதன், எப்படி விரும்பத்தக்க ஒரு சூழ்நிலையை ஏற்படுத்த முடியும்? தன் மனத்தின் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடிய திண்மை பெற்ற ஒருவனால் மட்டுமே தன்னைச் சுற்றி விரும்பத்தக்க சூழ்நிலையை ஏற்படுத்த முடியும். அலைபாயும் மனத்தை எப்படிக் கட்டுப்படுத்துவது? விரும்பத்தக்க எண்ணங்களும், உணர்ச்சிகளும் மட்டுமே மனத்தில் இடம் பெற வேண்டுமானால், அதற்கு என்ன செய்ய வேண்டும்? இந்தக் கேள்விகளுக்குப் பதில்: தணிவான பேச்சு.
‘தணிவான பேச்சு’ என்பது தாழ்ந்த குரலில் பேசுவது மட்டுமன்று; அமைதியாகவும், அடக்கமாகவும் பேசுவதையும் குறிக்கும். எதைப் பேசினாலும் அதை எந்த அளவுக்குத் தணிவாகப் பேச முடியுமோ அந்த அளவுக்கு அமைதியாகவும், அடக்கமாகவும் பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும். ‘அந்தக் கட்டுப்பாட்டை எக்காரணம் கொண்டும் தளர்த்துவது இல்லை’ என உறுதி எடுத்துக்கொண்டு, அதன்படி நடக்க வேண்டும். ‘விரும்பத்தகாத உணர்ச்சிகளும், எண்ணங்களும் தோன்றும்போதுகூடத் தணிவான பேச்சையே உபயோகிப்பது’ என்ற முடிவிலிருந்து விலகாது நிற்க வேண்டும். தணிவான பேச்சின் மூலமாக அவை வெளிப்படும்பொழுது, வழக்கமாக அவற்றால் ஏற்படும் விளைவுகள் பெரும்பாலும் குறைந்துபோய்விடுகின்றன. கோபம் நம்மை ஆட்கொள்ளும்பொழுது அதைத் தணிவான பேச்சின் மூலமாக வெளிப்படுத்தினால், அதன் விளைவு அத்தனை மோசமாக இராது என்பதை நடைமுறையில் பார்க்கலாம்.
எடுத்த எடுப்பில் கோபதாபங்களை முற்றும் களைவது என்பது இயலாத காரியம். ஆரம்பத்தில் வேண்டாத எண்ணங்களோ, உணர்ச்சிகளோ தோன்றிக் கொண்டிருந்தால், அதற்காக வருந்த வேண்டாம். தடுக்க முடியாவிட்டாலும், அவற்றைத் தணிவான பேச்சின் மூலமாகக் கட்டுப்படுத்தி வெளிப்படுத்தலாம். முடிவில் அவை நம்மை அணுகா. பேச்சில் உள்ள அமைதியும், தூய்மையும் மெல்ல மெல்ல மனத்தில் புகுந்து அங்கே நீங்காத இடத்தைப் பெற்றுவிடும் என்பதில் சந்தேகம் இல்லை. அமைதியும், தூய்மையும் இடம் பெற்ற பிறகு மனத்தில் வேண்டாத எண்ணங்களும், உணர்ச்சிகளும் தோன்றமாட்டா.
சொல் அடங்க, மனம் அடங்கும்; மனம் அடங்க உள்ளும், புறமும் அமைதி குடிகொள்ளும்; அமைதியுள்ள இடத்தில் செல்வமும், சுபிட்சமும் பெருகும்.