Skip to main content
Karmayogi

Main navigation

  • Home
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home
  2. அன்னையின் அருள்
  3. I. அன்னை

06. வாழ்வில் தியானத்தின் பங்கு

தியானத்திற்கும், வாழ்வுக்கும் உள்ள தொடர்பு குறைவு. ‘கடைசி காலத்தில் போகின்ற கதி நல்ல கதியாக இருக்க வேண்டும்’ என்று கருதி தெய்வ வழிபாட்டை மேற்கொள்பவர்கள், ஸ்தோத்திரம், அனுஷ்டானம், பூஜை ஆகியவற்றை ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் தியானத்தை ஏற்றுக் கொள்பவர்கள் மிகவும் குறைவு.

உலகெங்கும் பல்வகையான தியானங்கள் பரவும் காலம் இது. அன்னை தன்னுடைய யோகத்தில் தியானத்திற்கு முதலிடம் கொடுக்காமல், அந்த இடத்தை ஆத்ம சமர்ப்பணத்திற்கே அளிக்கின்றார். ‘தியானம் என்பது என்ன? நம் வாழ்க்கையில் அதற்குரிய பங்கு என்ன? அதன் மூலம் நாம் பெறும் ஆன்மீக உயர்வு எது? தியானம் வாழ்க்கையைச் செம்மைப்படுத்தும் வழி எது?’ என்பன நம்முன் உள்ள கேள்விகள்.

மனிதன் உடல், உணர்வு, மனம், ஆன்மா என்ற பகுதிகளாலும், அவை எல்லாம் சேர்ந்த ஜீவன் என்பதாலும் ஆனவன். ஓடியாடிச் செயல்படுதல் உடலின் முயற்சி. ஆசையாகப் பிள்ளைகளை வளர்ப்பது உணர்வின் நெறி. அறிவைக் கூர்மைப்படுத்திக் கொள்வது மனத்தின் வளர்ச்சி. ஆரம்பக் கட்டத்தில் உடலும், மேற்கட்டத்தில் மனமும் இருப்பதால், மனத்தின் முயற்சி உடலின் முயற்சியைவிடப் பெரியது. அதற்கு அடுத்த கட்டத்தில் சிகரமாக உள்ளது ஆன்மா.

ஆன்மாவின் குரலைப் ‘பிரார்த்தனை’ என்கிறோம். ஆன்மா மௌனமாக, தன் உயர்வுக்காக மேற்கொள்ளும் முயற்சியை, ‘தவம்’ என்கிறோம். தியானம் தவத்தின் கரு; ஆன்மாவின் மௌன சாதனை. எனவே, மனித முயற்சிகளில் தலை சிறந்தது தியானம். இதைவிடப் பெரிய நிலை ஒன்றை, பூரண யோகக்கருவியாக பகவான் ஸ்ரீ அரவிந்தர் விளக்குகின்றார். அதை நான் இங்கு விளக்கமாக எழுதவில்லை. மனம், உணர்வு, உடல், ஆன்மா ஆகிய எல்லாக் கரணங்களும் சேர்ந்த ஜீவன் செய்யும் ஆன்மீக முயற்சியை, ஸ்ரீ அரவிந்தர் உயர்ந்த யோக முறையாகக் குறிக்கின்றார். சிகரமான இந்த ஜீவனின் செயலுக்கு அடுத்தபடியாகவுள்ள தியானமே, இங்கு நமது கவனத்திற்கு உரியது.

‘யோகத்தில் தியானத்தின் பங்கு என்ன?’ என்பதை விலக்கி, ‘வாழ்வில் தியானத்தின் பங்கு என்ன?’ என்பதை மட்டும் கருதுவோம். ‘வாழ்வனைத்தும் யோகம்’ என்ற அடிப்படைத் தத்துவம் இருப்பதால், ‘வாழ்வும் யோகம் தானே?’ என்று ஒரு கேள்வியைக் கேட்கத் தோன்றும். யோகத்தின் ஒரு பகுதியே அது. ஒவ்வொரு பகுதிக்கும் உரிய தனிச் சிறப்பு உண்டு. மத்திய அரசும், மாநில அரசும் நம்மைப் பொறுத்தவரை அரசேயானாலும், சட்டதிட்டங்கள், நடைமுறைகள் இடத்திற்கு இடம் மாறும்.

எளிய பக்தனுக்கு உரியது வழிபாடு. தியானம் அவனுக்கு இயல்பாக அமைவதில்லை. தரிசன நாட்களில் தியானத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள், அரை மணி நேரம் ஆனந்தமாகப் போனதைப் பார்த்து, ‘இது தினமும் இருந்தால் தேவலை’ என்று நினைப்பதுண்டு. ஆசிரமத்திற்கு வந்து சமாதியருகில் அமர்ந்து செய்யும் தியானம் சிறப்பாகவும், நிலையாகவும் இருப்பதைப் பார்த்து, ‘நம் ஊரில் இதுபோன்ற வசதி இல்லையே!’ என்ற எண்ணம் பலர் மனத்தில் தோன்று-வதுண்டு. அந்த ஆன்மீகத் தேவையைச் சில ஊர்களில் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் அன்னைக்காகச் சிறு அமைப்புகளைத் தோற்றுவித்து, அடிக்கடி தியானம் நடத்துகிறார்கள். வட இந்தியாவிலும், பிற மாநிலங்களிலும், வெகு தொலைவிலும் உள்ள பக்தர்கள், ஆசிரமம் வர இயலாத காரணத்தால், உள்ளூர் அமைப்புகளில் கூடித் தியானம் செய்வதுண்டு. இது போன்ற தியானக்கூட்டங்களில் அன்னையின் சாந்நித்யம் தத்ரூபமாக இருப்பதைக் கண்டு வியக்கும் பலர், “ஆசிரமத் தியானம் போலவே எந்தக் குறையுமின்றி அமைந்து இருக்கிறதே!” எனச் சொல்கின்றார்கள். பவித்ரமான பக்தியின் சிறப்பு உயர்வு பெற்று மனம் அடங்கும் நிலையில், அன்னை அதை ஏற்றுக் கொண்டு அளிக்கும் ஆன்மீக வரம், அவன் கேட்காத வரம் ‘இப்படி ஒரு வரத்தைக் கேட்க வேண்டும்’ என்று அவனுக்குத் தெரிவதில்லை.

சில ஊர்களில் மாதம் ஒரு முறையும், சில இடங்களில் வாரம் ஒரு முறையும் கூடித் தியானம் செய்கிறார்கள். இந்தியாவில் நூற்றுக்கும் மேலான இடங்களில் இதுபோன்ற அமைப்புகளை அமைக்க ஒரு சாதகர் பெரும் பாடுபட்டு வெற்றி பெற்றார். ஒரிசா மாநிலத்தில் ஆயிரத்திற்கும் மேலான அமைப்புகளைத் தோற்றுவித்து, நூலகங்களையும், தியானங்களையும் நடத்துகிறார்கள்.

‘வழிபாடுதான் பக்தனுக்கு இயல்பானது தியானம் அவனைப் பொறுத்தவரையில் கொம்புத் தேன்’ என்னும் போது, அவன் ஏன் தியானத்தை நாடுகிறான்? அன்னை அவனை நாடி வருவதால், அவர் வருகை அவன் மனத்தில் ஆன்மீக உணர்வாகத் தெரிவதால், பக்தன் தியானத்தை நாடுகிறான். பக்தன் தியானம் செய்ய விழைவது, அன்னை அவனை ஆட்கொள்ள நினைப்பதற்கு நல்ல அறிகுறி. அன்னை பக்தனை நோக்கி வருகின்ற நேரத்தில், அவன் மனம் தியானத்தை விழைகின்றது. பக்தனுக்கு இது உயர்ந்த மனநிலை. இம் மனநிலை சிறக்க வேண்டிய செயல்களை அவன் செய்வது நல்லது.

தரிசன காலங்களில் ஆசிரமம் சென்று தியானம் செய்தது போக, உள்ளூரில் அதற்குரிய ஏற்பாடு இருந்தால், அங்கு மாதந்தோறும் சென்று தியானக் கூட்டங்களில் கலந்து கொள்ளலாம். பிரச்சனை இருந்து பிரார்த்தனை செய்பவர்கள் இதுபோன்ற கூட்டங்களுக்கு வந்து தியானத்தை ஆரம்பிக்கும் முன் தங்கள் பிரார்த்தனையைச் செய்தால், அக்கூட்டத்தில் உள்ள சூழலின் சிறப்பால் பிரார்த்தனைக்கு வலு அதிகமாகும். கூட்டம் இல்லாத நாட்களிலும் தியானத்தை விழைபவர் உண்டு. அவர்களுக்குத் தியான அறை என்ற அமைப்புள்ள இடம் உதவும். யாராவது ஓர் அன்பர் தியானத்திற்காக அறை ஒன்றை ஒதுக்க முடியுமானால், அங்கு அன்னையின் சூழல் இருக்கும் அளவுக்கு அவருக்கு ஈடுபாடு இருந்தால், அவருடைய தியான அறையில் மற்றவர்கள் வந்து தியானம் செய்தல் நல்லது. அங்குள்ள தியானச் சூழல் பக்தர்கள் வருகையால் உயரும். அறையின் அமைப்பால் பக்தர்கள் மனநிறைவு பெறுவார்கள். அவர்கள் பிரச்சனை எளிதில் விலகும். தன் வீட்டிலேயே ஓர் அறையை ஒதுக்கித் தியான ஏற்பாடு செய்ய முடியுமானால், அது சிறப்பு. அதற்குரிய சில நிபந்தனைகள் உண்டு. அந்த அறையில் அன்னையின் சூழல் வந்து தங்க வேண்டுமானால், அங்குச் சுத்தம் சிறப்பாக இருக்க வேண்டும். அவருடைய மனத்தில் அன்னை நிரந்தரமாக இருக்க வேண்டும். ‘அறை’ என்பது அவருடைய மனத்தின் புறப் பிரதிபலிப்பு. ஆதலால், அறையின் ஆன்மீகச் சிறப்பு அவருடைய மனத்தின் பக்திச் சிறப்பைப் பொறுத்தது.

இடையறாத அன்னை நினைவு சிறந்தது. அதைவிட உயர்ந்தது ஒன்று உண்டு. தன்னுடைய கடமைகளை வீட்டிலும், பணியகத்திலும் அன்னையின் சேவையாகக் கருதி, அன்னையை நினைத்து, அன்னைக்குச் சமர்ப்பணம் செய்து கடமைகளை நிறைவேற்றினால், கடமை கர்மயோகமாக மாறும். அத்தகைய அன்பனையும், அவனது கர்மங்களையும் அன்னை விரும்பி, நாடி, தேடி வருவார். அவனுடைய மனத்திலும், செயலிலும், வாழ்விலும், அன்னை என்றும், எப்பொழுதும் ஆனந்தமாக நிரம்பி இருப்பார். எனவே, அவனுடைய வீட்டுத் தியான அறையில் தியானச் சூழல் இருக்கும். உள்ளே நுழைந்தவுடன் தியானம் நம்மை ஆட்கொள்ளும். நம் வீட்டில் அந்தச் சூழலைக் கொணரும்வரை, அத்தகைய அன்பர் வீட்டிற்குச் சென்று தியானம் செய்யலாம்.

தரிசன காலங்களில் ஆசிரமத்திலும், மாதம் ஒருமுறை உள்ளூர் தியானக் கூட்டங்களிலும், வாரம் ஒருமுறை குறிப்பிட்ட அன்பரின் தியான அறையிலும், நாள்தோறும் அன்னையின் திருவுருவப் படத்திற்கு முன் நம் வீட்டிலும் தியானம் செய்வது நல்லது. நான்கு, ஐந்து அன்பர்கள் அவர்கள் உள்ள இடத்தில் வாரம் ஒருமுறை சந்திக்க ஏற்பாடு செய்தல் நலம். மாதாந்தரக் கூட்டமானாலும் வாராந்தரக் கூட்டமானாலும் முக்கியமாகக் கவனிக்க வேண்டியவை சில:

  1. கூட்டத்திற்கு எண்ணிக்கை முக்கியம் அல்ல; இருவர் அல்லது மூவர் இருந்தாலும் போதும். கூட்டத்தைக் குறிப்பிட்டு விட்டால் அங்கு அன்னை வந்து காத்திருப்பார். அதன்பின் எண்ணிக்கைக்கு முக்கியத்துவம் கிடையாது.
  2. முக்கியத்துவம் உடையவை சில உண்டு. அது குறிப்பிட்ட நேரம் தவறாமல் (punctual) தியானத்தை ஆரம்பிப்பது. சொற்பொழிவுகள் தியானத்துக்கு எதிரானவை. தொடக்க காலத்தில் விவரம் தெரியாதவர்களுக்குத் தெரிவிப்பதற்காக ஓரிரு சொற்பொழிவுகளை ஏற்படுத்தலாம். ஒரு கட்டத்திற்கு மேல் சொற்பொழிவுகள் தேவை இல்லை. ஏனென்றால், அதற்குப் பிறகு விவரம் தெரிந்தவர்களே தியானத்துக்கு வருகிறார்கள்.
  3. தியானத்திற்கு வருபவர்களுக்கு மனம் அடங்கி அமைதியுற்றிருக்க வேண்டும். ‘மன அமைதியை நாடித் தானே இங்கு வருகிறோம்? வரும்பொழுதே மனம் அடங்க வேண்டும் என்றால் எப்படி முடியும்?’ என்ற ஐயம் தோன்றலாம். மனம் அமைதியுற்றால்தான், அல்லது மனம் அமைதியை நாடினால்தான் வாய் பேசாமல் இருக்கும். மனத்தால் அமைதியை நாடுபவனே வாய் திறந்து பேசாமல் இருக்க இசைவான். மனம் அலைந்தால் வாய் பேசத் துடிக்கும். அப்பேச்சுக்கு ஏதோ ஒரு காரணம் காட்டி இடம் கொடுத்தால், பேச்சு வளரும். முடிவில் அது வம்புப் பேச்சாக மாறும். அது குளிக்கப் போய்ச் சேற்றைப் பூசிக் கொள்வதற்கு ஒப்பாகும். ‘பலர் கூடும் இடத்தில் எப்படிப் பேசாமல் இருப்பது?’ என்று தோன்றும். அதனால் ஒரு முறையைக் கையாளலாம். தியானத்தைக் குறிப்பிட்ட நேரத்தில், ஒரு நொடி கூட மிகாமல் ஆரம்பித்து விடவேண்டும். தியானம் முடிந்தபின் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். பேச வேண்டும் என்றால், அன்னையை மட்டுமே பேச வேண்டும். அதையும் தியானத்திற்கு முன்பே முடித்துக் கொள்ளவேண்டும்.
  4. பேச்சு வம்புப் பேச்சாக (gossip) மாறுவதைத் தவிர்க்க வேண்டும். மனிதர்களைத் தவிர்த்து, விஷயங்களைப் பேசினால் வம்புப்பேச்சுக் குறையும் (discuss issues, not personalities).
  5. ‘இது போன்ற சந்தர்ப்பங்களில் எழும் சந்தேகங்களைக் கேட்கலாமா, கூடாதா?’ என்றொரு கேள்வி. அனுபவம் இல்லாதவர்களுக்கு, விவரம் தெரிந்தவர்கள் சொல்வது சரி. அடிப்படையான விஷயங்கள், சிக்கலான பிரச்சனைகள் எழும்பொழுது எனக்கு எழுதினால், உடன் விளக்கம் எழுதி விடுகிறேன்.
  6. ‘அன்னையின் தியான அறையில் எந்தப் படம் இருக்கலாம்? எந்தப் படம் இருக்கக் கூடாது?’ என்ற ஒரு பிரச்சனையை எழுப்பாமல் இருப்பது நல்லது. தியானச் சூழல் இருந்தால், அது தியானத்திற்குரிய இடம். அன்னை படம் மட்டும் இருப்பது சிறப்பு. அதற்கு மேல் அன்பர்களுடைய சொந்த வழிபாட்டு முறைகளில் பிறர் தலையிடாமல் இருப்பது நல்லது.
  7. குறிப்பிட்ட நேரம், குறிப்பிட்ட இடம் என்று ஏற்படுத்தினால், அவற்றை மாற்றாமல் இருப்பது நல்லது. இடத்திற்கும், நேரத்திற்கும் ஒரு சிறப்பு உண்டு. அதனால் ஒரு நேரத்தைக் குறிப்பிட்டு விட்டால், அதே இடத்தில் அதே நேரத்தில் தியானத்தை வாரம் தோறும் ஏற்பாடு செய்தால், அங்கு அன்னையின் சூழல் (Mother’s atmosphere) வளர உதவியாக இருக்கும். உதாரணமாக, சென்னைக்கு அருகேயுள்ள அம்பத்தூரில் முதல், மூன்றாம், நான்காம் ஞாயிறுகளில் தியானக் கூட்டத்தைக் ‘கந்தசாமி’ என்பவருடைய வீட்டில் காலை பத்து மணிக்கு ஏற்பாடு செய்தால், மாற்றாமல் இருப்பது நல்லது. அதைத் தவிர்த்து ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு அன்பர்களுடைய வீடுகளில் தியானக் கூட்டத்தை நடத்த முற்பட்டால், எந்த இடத்திலும் அன்னையின் சூழல் உருவாகாது. அவர்கள் தங்கள் வீடுகளில் ஞாயிறு தவிர மற்ற நாட்களில் தியானத்திற்கு ஏற்பாடு செய்யலாம். எதைச் செய்தாலும் ஆரம்பிக்கும் முன் தீவிரமாகச் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும். ஆரம்பித்துவிட்டால், பின்னர் நிறுத்தாமல் நடத்த வேண்டும். வீட்டிற்கு உரியவர் தியான தினத்தன்று ஊரில் இருக்க முடியாத நிலை ஏற்பட்டால், தியானம் நடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொள்ள ஒருவர் முன்வர வேண்டும். ஆரம்பிப்பதற்கு முன்பே இவற்றை எல்லாம் சிந்தித்து, ஒரு தெளிந்த முடிவுக்கு வந்துவிட வேண்டும்.
  8. ‘நாம் செய்வது சரியா?’ என்பதைத் தெரிந்துகொள்ளச் சில அறிகுறிகள் உண்டு. தவறாமல் குறிப்பிட்ட நேரத்தில் தியானத்துக்கு நம்மால் வரமுடிகிறது என்றால், ‘மனம் தியானத்தை ஏற்றுக்கொண்டது’ என்று பொருள். தவிர்க்க முடியாத வேலை வந்தால் தியானக் கூட்டத்திற்குப் போக முடியாமல் கடமையைச் செய்யும்பொழுது தியானச் சூழலைக் காணலாம். அப்பொழுது, ‘கூட்டத்திற்குப் போக முடியவில்லையே’ என்ற ஏமாற்றம் இருக்காது.
  9. புஷ்பங்கள் நிறையக் கிடைப்பது, இரைந்து பேச இயலாமல் போவது, அதிகமான சுத்தம் ஆகியவை நம் தியானத்தின் சிறப்புக்கு அறிகுறிகளாகும்.
  10. ஆசிரமத்தைப் பற்றியோ, கூட்டத்திற்கு வரும் அன்பர்களைப் பற்றியோ நமக்கு எழும் சந்தேகங்களை விவாதித்துத் தீர்த்துக்கொள்ள வேண்டியது இல்லை. ஸ்ரீ அரவிந்தர் முப்பது நூல்களை எழுதி இருக்கிறார். அவை எவருடைய சந்தேகங்களையும் தீர்க்கும். ‘சந்தேகநிவர்த்தி’ என்பது வேறு; ‘விவாத மனப்பான்மை’ என்பது வேறு. சந்தேகத்தை நிவர்த்தி செய்யலாம். விவாத மனப்பான்மையைத் தவிர்க்க வேண்டும். சந்தேகநிவர்த்தி மனத்தைத் தெளிவுப் படுத்தும். விவாத மனப்பான்மை, இருக்கும் தெளிவைக் குறைக்கும்.
  11. அறிவு இல்லாமல் சொல்வதை எல்லாம் ஏற்றுக்-கொள்வதைவிட, அறிவுடன் கேட்கப்படும் கேள்விகள் சிறந்தவை. கேட்கும் மனப்பான்மை முக்கியம். நல்ல மனப்பான்மையுடன் கேட்கும் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்லலாம்.
  12. ‘புஷ்பங்களை மாலையாகக் கட்டி வைக்கலாமா, உதிரியாக வைக்கலாமா?’ என்பது மற்றொன்று. நாமே மாலையாகக் கட்டினால் அது சேவையாகிறது. கட்டாமல் வைக்கப்படும் பொழுது புஷ்பம் சிதையாமல் இருப்பதால், அது உயர்வு ஆகின்றது. 

தியானத்திற்கு வருபவர்கள் ஓரளவு வயது வந்தவர்களே. அவர்களுக்கு ‘எது நல்லது எது கெட்டது?’ என்று பகுத்துணரத் தெரியும். எனவே, அவரவர்கள் ‘மனத்திற்கு நல்லது’ என்று புரிந்ததைச் செய்வதே சிறப்பு. ‘எந்த நூலைப் படிக்கலாம்? எந்தப் படத்தை வைத்துக் கொள்ளலாம்? எந்த தெய்வ வழிபாட்டை ஏற்றுக்கொள்ளலாம்? எவற்றைத் தவிர்க்க வேண்டும்?’ என்று ஒரு சட்டம் கிடையாது. அன்பரின் மனம் ஏற்றுக் கொள்பவை எல்லாம் நல்லவை. ஏற்றுக்கொள்ள முடியாதவற்றை விலக்குவது நல்லது. அதற்கு ஒரு முறை உண்டா என்றால், உண்டு. ஒரு படம், ஒரு நூல் நம் மனநிலையை அன்னையிடம் மேலும் எடுத்துச் சென்றால், அது நமக்கு ஏற்றது. நம் மனச் சூழலை அன்னையை விட்டு அகற்றக்கூடியவை எல்லாம் விலக்கப்பட வேண்டியவை. அதுவே பொதுவான விதி.

*********

Book traversal links for 06. வாழ்வில் தியானத்தின் பங்கு

  • 05. அன்னை சோதனை செய்வதில்லை
  • Up
  • II. குடும்பம்

Book navigation

  • முன்னுரை
  • I. அன்னை
    • 01. ஜென்ம தரிசனம்
    • 02. பக்தனின் வாழ்வில் அன்னையின் பிரத்யட்சப் பலன் - 1
    • 03. பக்தனின் வாழ்வில் அன்னையின் பிரத்யட்சப் பலன் - 2
    • 04. இடையறாத பிரார்த்தனை
    • 05. அன்னை சோதனை செய்வதில்லை
    • 06. வாழ்வில் தியானத்தின் பங்கு
  • II. குடும்பம்
  • III. யோகம்
  • IV. வேலை
  • V. நோய்
RSS feed
Powered by Drupal