கோயிலுக்குச் சென்று தெய்வத்தை வணங்கும் மனிதன்; ‘வானுலகில் உறையும் தெய்வம் வழிபாட்டுக்குரியது’ என்பதை அறிந்தவன். நாளடைவில் இந்தப் பழக்கம் வேரூன்றி, மனிதன் தெய்வத்திடமிருந்து விலகி, ‘மரணத்திற்குப் பின் சேரவேண்டிய இடம் இறைவனின் திருவடி’எனத் தீர்மானித்து, தன் இக வாழ்வை வழிபாட்டுக்கு உரியதாகக் கொள்கிறான். இதன் விளைவாக, தெய்வம் என்பது உலக வாழ்வில் உணர முடியாத ஒன்று என்று நாம் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் நிலை ஏற்படுகிறது. உலக மாந்தர் அனைவரும் பக்தியால் உந்தப்பட்டவரானாலும், நடைமுறையில் ஆன்மீகம் பின்னணிக்குப் போய், பூஜையும், விழாவும் நிறைந்த மதச்சடங்குகளே நிதர்சனமாக நிலைக்கின்றன.
‘இறைவனின் சக்தியை தவத்தின் மூலம் அறியலாம். எளிய மனிதன் தெய்வத்தை வழிபடலாம். சக்தி வாய்ந்த இறைவனின் திருவிளையாடல்கள் நமக்கு இல்லை’ என உலக மாந்தர் ஏற்றுக்கொள்கின்றனர். எனினும் இதுவே முடிவான ஒன்றில்லை.
ஆபத்துக் காலத்தில் மனிதன் எழுப்பும் வேதனைக் குரல் அலறலாகி, தெய்வத்தின் காதில் விழுந்து அற்புதம் என அறியும் வகையில் தெய்வம் அவனைக் காப்பாற்றுவதுண்டு. இது எப்பொழுதோ அபூர்வமாக நிகழக்கூடிய ஒன்று. மனிதனும் தெய்வத்தின் செயலைப் பார்ப்பதுண்டு. ஆனால் அது அன்றாட நிகழ்ச்சியாக அவன் வாழ்க்கையில் நிகழ்வதில்லை.
அன்னையை ஏற்றுக்கொண்டு நாம் ஆசிரமத்திற்கு வரும்பொழுது, வழிபடும் தெய்வமாகவே அன்னையைப் புரிந்து கொள்கிறோம். இதனாலேயே அன்னை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி, தான் ஒரு சக்தி, இடையறாது இயங்கும் தெய்வீக சக்தி என்று தன் நிலையை விளக்குகிறார். அன்பர்களின் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்கள் அவருக்கு ஆச்சரியமாக இருக்கின்றன. திகைப்பிலிருந்து மீள்வதற்கு முன் அதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. அவன் தன் வாழ்க்கையில் புதிய ஒன்றைக் காண்பதாக நினைக்கின்றான். ‘இந்த விஷயமே வேறு மாதிரி இருக்கிறது’, என்று அறிகின்றான். எதிர்பாராத நிகழ்ச்சிகள், திடீர்த் திருப்பங்கள், தொடர்ந்து மனத்தில் சாந்தி நிலவும் ஆன்மீக உணர்வு போன்ற நிகழ்ச்சிகள் பக்தனைச் சிந்திக்க வைக்கின்றன. ‘அன்னை வெறும் வழிபாட்டுக்குரிய தெய்வம் மட்டும் இல்லை. ஜீவனுள்ள மகத்தான சக்தி’ என்பதை அவன் ஏற்றுக்கொள்ளும் வகையில் நிகழ்ச்சிகள் ஏற்படும். நாளாக நாளாக, பக்தன் அன்னையைச் சக்தியாகக் காண்பது குறையும். பின்னர் அது போன்ற நிகழ்ச்சிகள் நடப்பது நின்றுவிடும். எனினும், முதலில் பக்தன் கண்டவை மனத்தின் ஒரு மூலையில் ஒளிந்து கொண்டிருக்கும்.
இக்கட்டுரையில், ‘அன்னை சக்தி நிறைந்த தெய்வம், அற்புதங்களை அன்றாடம் நிகழ்த்தும் சக்தி என்பதை எப்படிக் கண்டுகொள்வது? கண்டுகொண்டதை எங்ஙனம் நிரந்தரமாக நிலைபடச் செய்வது?’ என்பதை விளக்க முற்படுகிறேன்.
அன்னையைப் பற்றிக் கேள்விப்பட்டு, மனத்தில் அன்னை தெய்வம் என்றுணர்ந்து, அன்னையை ஏற்றுக்கொள்ளும் நேரத்தில், பக்தன் மனித வாழ்க்கையின் மையத்திலிருந்து நகர்ந்து வந்து, சூட்சும உலகின் சூழலில் அன்னை உறையும் நிலையை அடைந்து, அன்னை தன்னை ஏற்றுக் கொள்ளக் காத்திருக்கும் பொழுது, அன்னையின் ஜோதியில் இருந்து ஒரு பொறி புறப்பட்டு அவன் ஜீவனில் வந்து தங்கி, அவனுக்கு ‘அன்னை பக்தன்’ என்ற ஆன்மீகத் தகுதியை நிரந்தரமாகத் தருகின்றது. அவனுடைய அகவாழ்வில் ஏற்படும் மாறுதல்கள் அசாதாரணமானவை; எவரும் மறுக்க முடியாதவை. இதன் பிரதிபலிப்பாக, எதிர்பாராத அளவில் மிகப் பெரிய நல்லவை நடக்கின்றன. நாளடைவில் இந்தப் புதுமை பழகிப்போன காரணத்தால், பழைமையாகிறது. ஆரம்ப காலத்தில் ஏற்பட்ட ஜீவனுடைய சிறப்பும், வாழ்க்கைப் பொலிவும் தூசி படிந்து கண்ணுக்குத் தெரியாத வண்ணம் புதைந்து விடுகின்றன.
சிறுபான்மையான ஒரு தரத்தாரின் வாழ்வில், அன்னையிடம் வந்த ஆரம்ப நாட்களில் இதுபோன்ற புதுமைகள் காணப்படுவதில்லை. அதனால், ‘அன்னையின் சக்தி செயல்படவில்லை’ என்பதில்லை. செயல்படும் விதம் கண்ணுக்குப் புலப்படாத வகையில் இருக்கும். தீராத வியாதி ஆரம்ப நிலையில் இருக்கின்ற ஒருவர் அன்னையிடம் வந்தால், அன்னையின் ஜோதி அவருள் எந்த அளவில் இறங்கிச் செயல்பட்டாலும், அதன் திறன் முழுவதும் அந்த வியாதியைக் குணப்படுத்தவே உதவும். அன்பருக்கு அது தெரிவதில்லை. வியாதி வந்ததையே அவர் தெரிந்து கொள்வதில்லை. அதனால் ஆரம்ப நிலையில் இருந்த அவருடைய வியாதியை அன்னை குணப்படுத்தியது அவருக்குத் தெரிவதில்லை.
சனி தசையின் ஆரம்ப காலம், பயங்கர நோய், பலத்த கண்டம் வரும் நேரங்களில் அன்பர் புதிதாக அன்னையை வந்து அடைந்திருந்தால், அன்னையின் அருள் அவர் வாழ்வில் அற்புதங்கள் நிகழ்த்துவதை அவரால் பார்க்க முடியாது. வரும்பொழுதே அருளுக்கு வேலையையும் தாங்கி வந்திருக்கிறார் அன்னை. அவர் சனி பகவானுக்கு ஈடு கொடுப்பதையும், வியாதியின் மூலவேரை அரிப்பதையும் கண்டத்தைக் கரைப்பதையும் அருளுக்குக் கடமையாகக் கொண்டு வந்துள்ளார்.
அதே சமயத்தில் மற்றவர்களின் வாழ்க்கையில் கண்டறியாத புதுமைகள் கணக்கின்றி நிகழும். அருள் செயல்படும் வகை ஆயிரம். மனிதன் அருளைப் பெறும் வகைகள் அநேகம். அருளிலிருந்து தப்பித்துப் போய், தன் சுபாவத்தின் சுக துக்கங்களை மனிதன் அனுபவிப்பதும் அநேக வழிகள். அவற்றை எல்லாம் நான் விளக்க முற்படவில்லை. பெற்ற அருளின் பெரும் பேறு, ஆயுள் முழுவதும் நிலைக்க என்ன செய்யலாம்? முதலில் பெற்று, பின்னர் இழந்த அருளை, மீண்டும் எப்படிப் பெறலாம் என்பனவற்றை மட்டும் இக்கட்டுரையில் கருதுவோம்.
நாமறிந்த மனித வாழ்வுக்கும், அன்னையை மனிதன் ஏற்றுக்கொண்ட பின் அவனுக்கு அமையும் வாழ்வுக்கும் உள்ள வித்தியாசம், எவரும் மறுக்க முடியாத ஒன்று. அது குருடனுக்கும் புரியும் வகையில் இருப்பதால், கண்ணில் படாமல் இருக்காது; மனத்தில் ஆழ்ந்த புதிய கருத்தை ஏற்படுத்தத் தவறாது. விரைவு, நெகிழ்வு, மகிழ்ச்சி, வெற்றி, அழைப்பை ஏற்கும் வேகம் ஆகியவை உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவாக இருக்கும். திடீரென்று மரியாதை ஏற்படுகிறது; அன்றாடக் காரியங்கள் அபரிமிதமான பலனை அளிக்கின்றன. புதிதாகப் புத்திசாலித்தனம் பொங்கி வருகிறது; நாள் முழுவதும் கடுமையாக உழைத்தாலும் களைப்பு ஏற்படவில்லை; உற்சாகம் வழக்கத்திற்கும் அதிகமாக உற்பத்தியாகிறது; எதுவும் அளவுகடந்து கூடி வருகிறது; மனிதர்களும், நிகழ்ச்சிகளும் நம்மை வரவேற்று, பலன் அளிக்க விழைகின்றனர்; வாழ்வு பொலிகிறது. அன்னையை ஏற்றுக் கொண்ட பின் நிகழும் அற்புதங்கள் இவை.
அன்னையை ஏற்றுக்கொண்ட பின் அமையும் வாழ்வு, நம் அன்றாட வாழ்வைவிடத் திறனுடையதால் இந்த மாற்றம் நமக்குத் தெரிகிறது. புதுமை மாறினாலும் பக்தன் பழைய நிலைக்குத் தள்ளப்படுவதில்லை. அடுத்த நிலைக்குப் போக முடியாமல் அங்கேயே நிற்பான். தொடர்ந்த முன்னேற்றம் தொலைவுக்குப் போய்விடும். இருப்பினும், அடிக்கடி மின்னல்போல அன்னையின் சக்தி அங்கும் இங்குமாய்ச் செயல்பட்டுக் கொண்டு இருக்கும்.
புதிதாக அன்னையிடம் வரும்பொழுது நமக்கும் அன்னைக்கும் உள்ள இடைவெளி பெரிதாக இருப்பதால் நடக்கும் நிகழ்ச்சிகள் ஆச்சரியமாக இருக்கின்றன. அன்னை பழகிப்போனபின் புதுமை குறைந்து, நிகழ்ச்சிகள் பழைமையாகி விடுகின்றன. அதனால் ‘அன்னையிடம் இருந்து நாம் பெறக்கூடியது அவ்வளவுதான்’ என்று எண்ண வேண்டியதில்லை. புதுமையுணர்வு தொடர்ந்து இருந்தால், புதுமை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடக்கும்.
அன்னையைப் பல வகைகளில் அறியலாம். முதற்கட்டம் முடிந்து பழகிப் போனபின், அன்னையை அதிகம் தெரிந்து கொள்ள முயன்றால், ஆரம்ப காலத்தைப் போல மீண்டும் வாழ்க்கை மாறும். ஒவ்வொரு கட்டமும் பழகிப்போனபின், அன்னையை அதிகமாக ஏற்றுக்கொள்ள முயல்வது, தொடர்ந்து அன்னையை நம் வாழ்வில் ஆரம்ப காலத்தில் செயல்பட்டதுபோல் செயல்படச் செய்யும். அதிகம் தெரிந்துகொள்ள உதவுவது ஆர்வம் (aspiration). அன்னையின் சக்தியைப் பெற்றுத் தருவது அழைப்பு. எனவே, ஆர்வமும் அழைப்பும் சேர்ந்து தொடர்ந்து செயல்பட்டால், அன்னை என்றும் நம் வாழ்வில் புது மணம் பரப்பும் நறுமலராக விளங்குவார்கள்.
ஒருவர் அன்னையை நாள் முழுவதும் நினைவு கூர்ந்தால் அவருடைய அகவாழ்வு ஒளி பெறும். சிறக்கும். ஆனால் அன்னை இக்காரணத்தாலேயே செயல்பட மாட்டார்கள். ஏராளமாகப் படிக்கும் பையனுக்கு அறிவு அதிகமாகும்.
ஆனால் அத்தகைய படிப்பால், ஒரு பட்டத்தைப் பெற்றுவிட முடியாது. பட்டம் பெற அதற்குரிய புத்தகங்களை ஆழ்ந்து பயிலவேண்டும். அதேபோல அன்னையை இடைவிடாது நினைத்தால் மனநிலையை உயர்த்துமே தவிர, எந்த ஒரு குறிப்பிட்ட காரியத்திலும் அன்னையை வெளிப்படுத்த உதவாது.
ஒரு செயலில் அன்னை வெளிப்பட வேண்டுமானால் அச்செயல் அன்னையின் சக்தியால் நிரம்பி வழிய வேண்டும். நம் வாழ்வு பலதரப்பட்டது. அலுவலக வேலை, வீட்டு வேலை, சொந்த வேலை எனப் பலவகைகளாகப் பிரித்து, ஒவ்வொன்றும் தனியானவை போலத் தோன்றும் அளவுக்கு அமைந்துள்ளன. ஒவ்வொரு வேலையிலும் பல பகுதிகள் உள்ளன. உண்ணுதல், உறங்குதல், படித்தல், விருந்தினரை வரவேற்றல், நட்பு, உறவு, வேலை ஏவுதல், கடைக்குச் செல்லல், பொழுது போக்கல், புத்தாடை வாங்குதல், பயணம், விசேட நிகழ்ச்சிகள் ஆகியவை அத்தன்மையானவை.
அன்னையை வாழ்வில் முழுவதுமாக ஏற்றுக்கொள்ளுதல் முழு யோகம் என்பதால், அதைக் கருதாது, ஏதாவது ஒரு முழுக் காரியம் (complete act) அன்னையால் நிரப்பப்பட்டு, அன்னையின் புதுமை பொலிவுற வெளிப்படுதல் எப்படி என்பதை மட்டும் கருதுவோம். தீவிர பக்தர் எவராலும் இதைச் செய்ய முடியும் என்பதால், இதை மட்டும் எடுத்துக் கொள்கிறேன்.
நாம் எடுத்துக்கொண்ட செயலின் எல்லாச் சிறு பகுதிகளிலும் அன்னையை நினைவு கூர்ந்தால், அன்னை அச்செயலில் வெளிப்படுவார். கடைக்குச் செல்வதை ஒரு முழுக் காரியமாகக் கொண்டு இந்தச் சேõதனையைச் செய்யலாம். கடைக்குப் போவதுடன், தொடர்புள்ள எல்லாச் சிறு செயல்களிலும் அன்னையை நினைத்துச் செயல்பட்டால், கடைக்குப் போய் வந்தவுடன் அன்னை அச்செயலில் முழுவதுமாகப் புதுமையை நிரப்பி, தம் முத்திரையிட்டிருப்பது தெரியும்.
ஒரு காரியம் என்பது எண்ணமாக உதித்து, உணர்வால் பூரித்து, செயலாக நடக்கிறது. ஒரு டிக்ஷனரி வாங்க வேண்டும் என்றவுடன், அன்னை நினைவுக்கு வருவதில்லை. “எந்தக் கடையில் வாங்கலாம்? எத்தனை மணிக்குப் போகலாம்? யாரை அழைத்துப் போகலாம்?’ என்றெல்லாம் மனத்தில் தோன்றும். முதல் எண்ணம் தோன்றியவுடன், அதை விலக்கி அன்னையை நினைக்க வேண்டும். அதே போல் ஒவ்வோர் எண்ணத்தையும் சமர்ப்பணம் செய்ய வேண்டும். அதாவது எண்ணத்தை விலக்கி, அன்னையை நினைக்க வேண்டும். அதையே இங்குச் சமர்ப்பணம் என்று கூறுகிறேன். அதேபோல், கடைக்குள் நுழைந்தவுடன் ‘இவன் இன்று இருக்கிறான்’ என்ற விருப்ப உணர்வோ, ‘எனக்குப் பிடிக்காதவன் இருந்து தொலைக்கிறான்’ என்ற வெறுப்புணர்வோ தோன்றலாம். அதனால் எண்ணங்களைச் சமர்ப்பணம் செய்ததுபோல உணர்ச்சிகளையும் சமர்ப்பணம் செய்ய வேண்டும். அதாவது உணர்ச்சிகளை விலக்கி, அன்னையை உணர வேண்டும். அதேபோல் நம் ஒவ்வொரு செயலையும், டிக்ஷனரி வாங்குவதில் உள்ள ஒவ்வொரு செயலையும் சமர்ப்பணம் செய்ய வேண்டும்.
‘கடைக்குப் போவது’ என்ற காரியத்தைக் குறிப்பிட்டு நம் சேõதனைக்குட்படுத்தி, சமர்ப்பணம் செய்ய ஆரம்பித்து, தொடர்ந்து வந்தால், அதனுடன் சம்பந்தப்பட்ட எரிச்சலான காரியங்கள் விலகிவிட்டதைப் பார்க்கலாம். கடைக்குப் போக ஆரம்பித்தால் அதற்குத் தேவையான சந்தர்ப்பங்கள் அனைத்தும் தானே பொருந்தி, அமைந்து, செயல் சிறப்பாக இருக்கும். பொருத்தத்தில் தொடங்கி, நம் மனத்தில் இல்லாத சிறப்புகள் எல்லாம் அந்தச் செயலில் ஒவ்வொன்றாய் வெளிப்படும்.
டிக்ஷனரி வாங்குவதையே எடுத்துக் கொள்வோம். நாம் கடைக்குப் போய், ‘டிக்ஷனரி வேண்டும்’ என்றவுடன், ‘புதிய பதிப்பு ஒன்று வந்திருக்கிறது. பழைய பதிப்பில் 1920-ஆம் ஆண்டு வரையுள்ள சொற்கள் சேர்க்கப்பட்டு இருக்கும். 1952 வரையுள்ள புதிய சேர்க்கையுள்ளது’ என்ற செய்தி கிடைக்கும். டிக்ஷனரியையும் அதற்குரிய மற்றவற்றை யும் எடுத்துக்கொண்டு ஒரு சேல்ஸ்மேன் உங்களை வந்து ஆபீஸில் சந்திக்கும் விநோதமும் நிகழும். சட்டென்று நினைவுக்கு வராத ஒரு நண்பர் திடீரென்று வந்து, எந்த டிக்ஷனரியை நாம் வாங்க வேண்டும் என்று விருப்பப்பட்டோமோ, அதையே அன்பளிப்பாகக் கொடுக்கும் அதிசயத்தையும் பார்க்கலாம். அடுத்தடுத்து நம்ப முடியாத செயல்கள் “கடைக்குப் போவது’ என்ற இக்காரியத்தில் தொடர்ந்து நடக்கும்.
ஆசிரம தரிசனங்களுக்கு வருவதை ஒருவர் சமர்ப்பணத்தின் முழுப் பிடியில் கொண்டு வந்தார். தொடர்ந்து 22 ஆண்டு காலம் எந்த ஹர்த்தாலும், தடைகளும், ஆபீஸ் இன்ஸ்பெக்ஷனும், முக்கியமான திருமணங்களும், தவிர்க்க முடியாத நெருக்கடிகளும், புயலும், வெள்ளமும் அவர் தரிசனங்களுக்குப் போவதை ஒருமுறை கூடத் தடை செய்ததில்லை. எல்லாம் தானே ஒதுங்கி விலகி வழிவிட்டன. அவர் செய்த சமர்ப்பணத்தை அன்னை ஏற்றுக் கொண்டதற்கு அது அடையாள முத்திரை.
தன் வீட்டில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தியானத்தை ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு பக்தர் தியான நேரத்தில் மின்சாரம் நிற்கக் கூடாது என்பதற்காக, தியானம் சம்பந்தப்ப ட்ட அனைத்தையும் சமர்ப்பணம் செய்ததன் விளைவாக வாரத்தில் பத்து முறை நின்று போகும் மின்சாரம், பன்னிரண்டு ஆண்டுகளாக அவருடைய தியான நேரத்தில் ஒ@ரயொரு தடவைகூட நின்றதில்லை.
ஒரு கடையில் நீங்கள் சேல்ஸ்மேனாக இருந்தால், விற்கும் ஒவ்வொரு பொருளையும் இதுபோன்ற சமர்ப்பணத்திற்கு உட்படுத்தினால், வருடம் பத்தானாலும் உங்கள் கையால் விற்ற பொருட்கள் பத்தாயிரமானாலும் எந்த ஒரு பொருளிலும் குற்றம், குறை, திருப்பிக் கொடுப்பது போன்ற எதுவும் நிகழாது. ஆழ்துளை கிணறு (bore well) தோண்டுவது என்பது லாட்டரிச் சீட்டு வாங்குவது போன்றது. இதை மேற்கொண்டு திவாலானவர்கள் ஏராளம். சமர்ப்பணத்திற்கு ஆளாக்கி, தான் தோண்டிய 15, 20 கிணறுகளிலும் வற்றாத ஊற்றைக் கண்டுபிடித்தார் ஓர் அன்பர். வங்கியில் கடன் பெறுவதைச் சமர்ப்பணம் செய்து தன்னுடைய சிறு அக்கௌண்டில் மூன்று ஆண்டு காலம் கேட்ட தொகையை எல்லாம் பெற்றார் மற்றொருவர். அதிலும் ஒரு சிறப்பு: ஈடு இல்லாமல் அவருக்குத் தானே வலிய 13 இலட்சம் கொடுக்க முன் வந்தது வங்கி.
இந்தக் கருத்துக்கு முழு விளக்கம் கொடுப்பதற்கு முன், இதனுடன் சம்பந்தப்பட்ட வேறு சில முக்கிய விஷயங்களையும் கருத வேண்டியிருக்கின்றது.
*********