Skip to main content
Karmayogi

Main navigation

  • Home
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home
  2. அன்னையின் அருள்
  3. I. அன்னை

01. ஜென்ம தரிசனம்

இருபத்து நான்கு மணிக்கு ஒரு முறை சூரியன் உதயமாகிறான். முப்பது நாட்களுக்கு ஒரு முறை சந்திரன் வளர்ந்து தேய்கிறது. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சூரியன் வடதிøசயிலிருந்து தென் திøசக்குச் சென்று திரும்புகிறது. தட்சிணாயனம், உத்தராயனம் என்று அவற்றை நாம் அழைக்கிறோம். இவற்றுக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் ஆண்டுக்கு ஒரு முறை பூமி சூரியனைச் சுற்றி வருகிறது. இவை இயற்கையில் உள்ள அமைப்புகள் (cycles of nature).

பொழுது விடியும் போது நாம் சக்தி மிகுந்தவர்களாகவும், தெளிவு நிரம்பியவர்களாகவும் இருக்கின்றோம் (full of energy). ஒரு முழுநாளில் அதிகபட்ச விளக்கம் உள்ள நேரம் அதிகாலையேயாகும். மாதம் பிறக்கும் நாளைச் சிறப்பாகக் கருதுகின்றோம்; ஆண்டு பிறக்கும் நாளைக் கொண்டாடுகின்றோம். உடல் மண்ணாலானது; மண்ணிலிருந்து பிறந்தது. பூமிக்கு ஆண்டு ஒரு பூர்த்தியைத் தருவது போல், பூமியிலிருந்து பிறந்த இவ்வுடலுக்கும் ஆண்டுக்கு ஒருமுறை பூர்த்தியுண்டு. அன்று உடல் விளக்கம் பெற்றதாக இருக்கும். உடல் மட்டுமல்லாது உடலிலுள்ள நெஞ்சமும், மனமும், குறிப்பாக ஆன்மாவும் அன்று அதிகபட்ச விளக்கமுள்ளவைகளாக இருக்கும். அதனால் அன்னை சாதகர்களையும், அன்பர்களையும் அன்று சந்தித்து, தரிசனம் கொடுத்து, அனுக்கிரகம் செய்யச் சிறந்த நேரமாகக் கருதும் வழக்கம், ஆசிரமத்தில் உண்டு. ஓராண்டைப் பூர்த்தி செய்த உடல் புதுப்பிறப்பு எடுக்கும் அந்நாளில், அன்னை சாதகரின் ஆன்மாவில் மீண்டும் பிறப்பு எடுக்கிறார். (Mother is born at a higher level in him). சாதகரின் ஜென்ம தினம் அன்னை அருள் ஜனிக்கும் நாளாகும். அன்னையை ஏற்றுக்கொண்ட பொழுது சாதகரின் ஆன்மாவை வந்தடைந்த அன்னையின் ஒளிப்பிழம்பு, அவரது ஜென்ம தினத்தன்று புதுப்பிறவி எடுத்து மேலும் ஒரு கட்டத்தை அடைகிறது.

அன்னையைச் சாதகன் அடையச் செய்யும் முயற்சிக்கு தவம், யோகம் எனப் பெயர். அன்னை சாதகனை அடைந்து அனுக்கிரகம் செய்வதற்கு ‘அருள்’ எனப் பெயர். பிறந்த தினத்தன்று தன் தவ முயற்சியால் அன்னையை நோக்கிச் சென்ற சாதகனின் பக்தியை மெச்சி அவனை நோக்கி வரும் அன்னையை அவன் காண்பது, ‘அன்னை தரிசனம்’ எனப்படும். யோக முயற்சியால் ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிறவி எடுக்கும் சாதகன், அத்தருணத்தை மீண்டும் மீண்டும் பெறலாம். இயற்கையின் சூழல்கள் (cycles) குறுகி வருவதுபோல் அவனது ‘ஆண்டு நிறைவும்’ ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, மாதம் ஒரு முறை, தினமும் ஒரு முறை என வரலாம். அதற்கு மேலும் யோகம் சிறந்து மணிக்கு ஒரு முறை என வரும் பொழுது, பொதுவான பக்தன், சிறப்பான சாதகனாகிறான். ஒரு கண்ணோட்டத்தில் ‘பிறந்த நேரம்’ அடிக்கடி வரலாம் என்பதை, மறு கண்ணோட்டத்தில் ‘அன்னையின் தரிசனம்’ அடிக்கடி கிடைக்கலாம் எனக் கூறலாம். ஒன்று மனித முயற்சி; மற்றது அன்னையின் அருள்.

உடலுக்கு ஓராண்டு பூர்த்தியாவது போல் உணர்வுக்கும் ஒரு சுழற்சியுண்டு; மனத்திற்கும் ஒன்றுண்டு, ஆன்மாவுக்கும் ஒன்றுண்டு. இறப்பதற்கு முன் ஆன்மா தன் குகையில் இருந்து வெளிவந்து, இப்பிறப்பின் நிகழ்ச்சிகளை எல்லாம் தன் கண்முன் திரையில் பார்ப்பதுபோல ஒரு கணத்தில் கொணர்ந்து விமர்சனம் செய்து, இப்பிறவிப் பயனை அடைந்துவிட்டதால், உடலை உதறித் தள்ளி, அடுத்த பிறவியில் எங்குப் பிறப்பது என முடிவு செய்து மீண்டும் தன் குகைக்குள் போய்விடும். இறப்பதற்குமுன் எல்லா நினைவுகளும் வருவது என்பது இதைத்தான். இப்பிறவியில் பெற வேண்டிய அனுபவங்களை விதிக்கப்பட்ட 87 வயதில் பூர்த்தி செய்தால், ஆயுள் 87-இல் முடிகிறது. மரணம் நேர்கிறது. தவமுயற்சியில் 50-இல் அதே அனுபவத்தைப் பெற்றால், ஆன்மா மேலே வந்து விமர்சனம் செய்கிறது. ஆனால் அது உடலை உதறித் தள்ளுவதில்லை. 87-இல் முடியவேண்டிய சுழல் 50-இல் பூர்த்தியானால், அவனுக்கு மேலும் ஓர் 50 ஆண்டுகள் வாழ வாய்ப்புண்டு.

தவத்தின் சிறப்பைப் பொறுத்து ஐம்பதிலும் அப்பலன் வரலாம். அதற்குமுன் இருபதிலும் வரலாம். எந்த வயதில் வந்தாலும், அடுத்த சுழலை மீண்டும் ஓர் 50 ஆண்டுகளில் தான் பெற வேண்டும் என்பதில்லை. தவம் அதையும் சுருக்க முடியும். ஆண்டுக்கு ஒரு முறை ஆன்மா புதுப் பிறப்பு எடுக்கும். ஒரு யோகிக்கு, அவரது 40-ஆம் ஆண்டில் 15 ஜென்ம ஞானம் ஏற்படுகிறது. இதுவே தவத்தின் சிறப்பு. ‘பிறந்த தினம்’ ஒரு முழு ஜென்ம பலனை அளிக்கலாம். அல்லது ஓர் ஆண்டின் அனுபவத்தைக் கொடுக்கலாம். அவரவர் தவப் பாதையின் அமைப்பைப் பொறுத்துப் பலன் கிடைக்கிறது.

அன்னையின் சிரிப்பை, ‘laughter of a 15 year girl’ என வர்ணித்திருக்கிறார் ஒருவர். அடிக்கடி அன்னை தன்னை, “நான்தான் ஆசிரமத்தில் உள்ள எல்லோரிலும் இளமையானவள்” எனக் கூறுவதுண்டு. உடல் முதுமையை அடையவில்லை, என்பதை இதன் மூலம் குறிப்பிடுகிறார். பகவான் ஸ்ரீ அரவிந்தரைத் தரிசித்த ஒரு முனிவர், “500 வயது நிரம்பிய புராதன புருஷரைப்போல் ஸ்ரீ அரவிந்தர் காட்சியளிக்கிறார்” என்றார். அவர் குறிப்பிடும் முதுமை, அறிவின் முதிர்ச்சியைக் குறிக்கின்றது.

மீண்டும் மீண்டும் ‘பிறந்த தருணம்’ வருவதால், ஒவ்வொரு முறையும் அனுபவ முதிர்ச்சியும், உடலுக்கு இளமையும் சேர்வதுண்டு.

அன்னையின் பிறந்த தினம், ‘அனைத்து ஜீவராசிகளின் பிறந்த தினமாகும்’ என அன்னை கூறுகிறார். அன்னை தன் பிறந்த தினத்தன்று, தன்னை அறியாத இந்தப் பூவுலகிலுள்ள எல்லா ஜீவராசிகளுக்கும் அனுக்கிரகம் செய்ய, தான் அவர்களுக்குள்ளே பிறப்பு எடுப்பதால், அப்புனித தினம் ஒவ்வொரு ஜீவராசியின் பிறந்த தினமுமாகும்.

********

Book traversal links for 01. ஜென்ம தரிசனம்

  • I. அன்னை
  • Up
  • 02. பக்தனின் வாழ்வில் அன்னையின் பிரத்யட்சப் பலன் - 1

Book navigation

  • முன்னுரை
  • I. அன்னை
    • 01. ஜென்ம தரிசனம்
    • 02. பக்தனின் வாழ்வில் அன்னையின் பிரத்யட்சப் பலன் - 1
    • 03. பக்தனின் வாழ்வில் அன்னையின் பிரத்யட்சப் பலன் - 2
    • 04. இடையறாத பிரார்த்தனை
    • 05. அன்னை சோதனை செய்வதில்லை
    • 06. வாழ்வில் தியானத்தின் பங்கு
  • II. குடும்பம்
  • III. யோகம்
  • IV. வேலை
  • V. நோய்
RSS feed
Powered by Drupal