Skip to main content
Karmayogi

Main navigation

  • Home
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home
  2. அன்னையின் அருள்
  3. I. அன்னை

04. இடையறாத பிரார்த்தனை

பிரார்த்தனை என்பது தெய்வீகம் பொருந்தியது. மனித உழைப்பைப் போற்றாதவர் இல்லை; நட்பில் விஸ்வாசத்தைப் பாராட்டாதவர் இல்லை. உயர்ந்த ஞாபக சக்தியை அனைவரும் கண்டு வியப்பு அடைவார்கள். உழைப்பு உடலின் முயற்சி. விஸ்வாசம் உணர்வின் நெறி. ஞாபகம் அறிவின் முயற்சி. இவற்றை எல்லாம் கடந்த நிலையில் இருப்பது ஆன்மா. ஆன்மா முயன்று எழுப்பும் குரல் பிரார்த்தனை. அது ஆண்டவனை எட்டும். எட்டிய கணமே அற்புதம் நிகழும். இடையறாத பிரார்த்தனை இறைவன் காதில் தவறாது விழும். மனித வாழ்விலுள்ள எந்தச் சிக்கலையும் அவிழ்க்கும் திறனுடையது இடையறாத பிரார்த்தனை. மூன்று நாள் இடைவிடாமல் பிரார்த்தனை செய்து தீராத பிரச்சனை ஒன்றை இதுவரை நான் கேட்டதில்லை. அன்னையைப் பற்றி பக்தர்கள் அறிந்தவை அநேகம். ஆயிரம் வகைகளில் பக்தனின் துயரைத் தீர்த்தவர் அன்னை. ‘ஆழாக்கு அரிசிகூட வீட்டில் இல்லை’ என்று அழுது புலம்பியவர் வாழ்வில் அன்னை உதயமாகி ‘நமக்கில்லை’ என்று மறந்துவிட்ட பெரும் சொத்து கைக்குக் கிடைக்குமாறு செய்தவர் அன்னை. கஷ்டம் வந்து அடியோடு குடை சாய்ந்தவரை ஒரேயடியாக வாழ்க்கையில் உயர்த்திய அன்னையின் அருட்சக்தியைப் பெருமிதத்தோடு விவரித்துச் சொல்கிறார் அவர்: “இதை அன்னையால் மட்டுமே கொடுக்க முடியும் என்பது எனக்குத் தெளிவாக விளங்குகிறது. எனக்குக் கிடைத்த இப்பேறு வேறு எதனாலும் இல்லை அன்னையால் தான் என்பதை என் நெஞ்சம் உணர்கிறது.”

“இருதயம் கோளாறாக இருக்கிறது ஆப்பரேஷன் செய்து கொள்ளவேண்டும்” என்று 70 பவுண்டு எடையுள்ள ஒரு 30 வயதுப் பெண்மணிக்குச் சொன்ன டாக்டர், கூடவே, “உனக்கு அந்த ஆப்பரேஷன் இல்லை, எந்த ஆப்பரேஷனும் செய்ய முடியாது. உடலில் சதையே இல்லை” என்று கூறி அனுப்பிவிட்டார். 300 ரூபாய் சம்பாதிக்கும் அந்தப் பெண்ணுக்கு டாக்டர் சொன்னதைவிட முக்கியமானது ஆப்பரேஷன் செலவு. அதற்கு வழி இல்லை. அன்னை நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த அந்தப் பெண் பொறுப்போடும், விஸ்வாசத்தோடும் வேலை செய்தவர். அவருக்கு ஒரு புதிய நிலை ஏற்பட்டது. அப்பெண்ணின் ஊருக்கு ஒரு டெல்லி டாக்டர் இதுபோன்ற சிக்கலான கேஸ்களைப் பரீட்சார்த்தமாக ஆப்பரேஷன் செய்ய வந்தார். அப்பெண்ணுக்கு இலவசமாக ஆப்பரேஷன் செய்தார். இருதயக் கோளாறு நீங்கியது. பின்னர் அவருக்குத் திருமணமும் ஆயிற்று. சேவையை உள்ளடக்கமாகக் கொண்ட, ஆனால் செய்யாத பிரார்த்தனையின் பலன் அது. துறைமுகத்தை விட்டுக் கிளம்பிப் போன கப்பல், அன்னைக்குப் பிரார்த்தனை செய்ததால் திரும்பி வந்து அழைத்துப் போனதுண்டு. ஒரு காலனியில் உள்ள எல்லா வீடுகளும் சேதமான நேரத்திலும் அன்னை படம் இருந்த ஒரு வீடும், அதில் வசித்தவர்களும் அந்த அசுரச் சூறாவளியிலிருந்து தப்பும்படி கவசமாக இருந்தது அன்னையின் சூழல். பல ஆண்டுகள் சந்தான பாக்கியம் இல்லாத பலர், ‘அன்னைக்குப் பிரார்த்தனை செய்த அடுத்த மாதமே கர்ப்பமானேன்’ என்று சொன்னதுண்டு.

வாழ்க்கையில் தீராத பிரச்சனைகள் சிலவற்றை நாம் கேள்விப்படும் பொழுது, ‘இது தீர்க்க முடியாத பிரச்சனை’ என்று தெளிவாகப் புரியும். பெரும்பாலும் பிரச்சனைக்குரியவர்கள் இனி இது ‘நடக்காது’ என்று கைவிட்டு விடுவார்கள். சிலர் ‘நடக்காது’ என்று தெளிவாக அறிந்திருந்தாலும், தொடர்ந்து முயன்று கொண்டிருப்பார்கள். ஆண்டுகள் ஓடும். ஆனால் பலன் பூஜ்யமாக இருக்கும். நாளாக நாளாக, சிக்கல் பெரிய சிக்கலாவதைக் காண்பார்கள். அதுபோன்ற சில விஷயங்களைக் குறிப்பிடுகிறேன்.

  1. இன்று 41 வருடமாகிறது. குத்தகைக்காரன் நிலத்தை ஆக்ரமித்துக் கொண்டான். கொடுப்பதைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொண்டே வந்து அடியோடு நிறுத்தி விட்டான். 15 வருடங்களாக எதுவும் வரவில்லை. உரிமையும் போயிற்று. உடைமையும் போயிற்று; வருமானமும் இல்லை.
  2. இந்த வட்டாரத்திலேயே பெரிய மிராசுதார் இவர். பெரிய செல்வர். இரண்டு குழந்தைகளையும் விட்டுத் தாயைப் பிரித்து, 22 வருடங்களுக்கு முன் தாய் வீட்டுக்கு அனுப்பினார். அவரைச் சமாதானப்படுத்த எவரும் இல்லை. இனிமேல்தானா நிலைமை மாறப்போகிறது?
  3. எங்கள் குடும்பம் செல்வம் நிறைந்தது. பெரும்பாலானவர்களுக்குப் புத்திர பாக்கியம் இல்லை. போகாத கோயில் இல்லை. இந்த 20 வருடங்களாக எந்த வழியும் புலப்படவில்லை.
  4. என் அண்ணன், தம்பி, அக்கா, தங்கைகள் அனைவரும் நல்ல நிலையில் இருக்கிறார்கள். எனக்கு வசதி இல்லை. அதனால் மரியாதை இல்லை. 30 வருடமாக மனம் புழுங்குகிறது. எவரும் எங்களைப் பொருட்படுத்துவதில்லை. இதற்கு வழியே தெரியவில்லை.
  5. கணவருடைய குடிப்பழக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிறது. இப்படியே 12 ஆண்டுகள் ஓடிவிட்டன. இனி எந்த மார்க்கமும் தென்படவில்லை.
  6. என் பிள்ளை 20 வருடமாக உத்தியோகம் பார்க்கிறான். ஆனால் 19 கம்பெனிகளில் இடம் மாறிவிட்டான். ‘வருடத்திற்கு ஓர் இடம்’ என கூடுவிட்டுக் கூடு பாய்வதே அவனுக்கு வழக்கமாகிவிட்டது. இனி அவன் மாறுவான் என்று எனக்குத் தோன்றவில்லை.
  7. 30 வருடங்களுக்கு முன் 45-ஆவது வயதில் 26 புத்தகங்கள் எழுதினேன். 45 ஆண்டுகளாக அகில இந்தியப் பத்திரிக்கை ஒன்றுக்கு ஆசிரியராக இருக்கிறேன். எனக்குத் தெரியாத பெரிய மனிதர்கள் இந்தியாவில் இல்லை. என் நூல்களைப் பாராட்டாதவர்கள் இல்லை. என்றாலும் இந்த 75-ஆவது வயதிலும் அந்த நூல்களை வெளியிட வேண்டும் என்ற நினைவு என்னை விட்டு அகலவில்லை. ஆனால் நம்பிக்கை இல்லை. ஒரு நூலைக் கூட வெளியிட முடியவில்லை.
  8. யுத்த காலத்திற்கு முன்னால் என் தந்தை 25 இலட்ச ரூபாய் சம்பாதித்தார். அவருடைய கூட்டாளி ஆங்கிலேயர். அவர் இலண்டனுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். ‘தன் கையில் உள்ள பெரும் தொகையால் தன் உயிருக்கு ஆபத்து நேரலாம்’ என்று முடிவு செய்து, தன் பார்ட்னரிடம் அவ்வளவு பெரிய தொகையையும் கொடுத்து “என் மகனிடம் சேர்த்து விடுங்கள்” என்றார். அந்த ஆங்கிலேயர் ஒரு வங்கியில் பணத்தைப் போட்டு என் பெயரையும், ஊரையும் மட்டுமே குறிப்பிட்டு டெபாசிட் செய்துவிட்டுப் போய்விட்டார். அதற்கு அடுத்த வாரம் உறவினர்கள் என் தந்தையை அடித்துக் கொன்று விட்டார்கள். அப்பொழுது நான் பள்ளிக்குச் செல்லும் சிறுவன். 25 ஆண்டுகளுக்குப் பிறகு எங்கள் மாவட்ட ஆட்சியாளரிடம் ரிஸர்வ் வங்கியிலிருந்து என் பெயரைக் குறிப்பிட்டு விவரம் கேட்டிருந்தார்கள். அப்பொழுதுதான் நடந்தது தெரிய வந்தது. எனக்குப் புரிகிறது, ‘அது என் பணம் தான்’ என்று. தந்தையின் பெயர் இல்லாமல், முகவரி இல்லாமல் நான் அதைப் பெற்றுக் கொள்ளச் சட்டம் இடம் கொடுக்கவில்லை. பணம் அரசாங்கத்துக்குப் போய்விட்டது. எனக்கு வழி வகை சொல்ல ஒருவரும் இல்லை.

இவை போன்ற பிரச்சனைகள் அன்னைக்குச் செய்யும் பிரார்த்தனையால் அகலும். இடைவிடாத பிரார்த்தனை அதற்கு உதவும். அதை மேற்கொள்ள ஸ்லோகங்கள் இல்லை. மந்திரங்கள் தேவை இல்லை. மனத்தில் நம்பிக்கையும், இடைவிடாமல் நெஞ்சம் எழுப்பும் குரலும் போதும். அதன் அம்சங்களையும், வழிமுறைகளையும் கீழே குறிப்பிடுகிறேன்.

‘இதுவரை எதுவும் பலிக்கவில்லை. இதையும்தான் பார்க்கலாமே’ என்ற எண்ணம் சில விஷயங்களில் பலிக்கலாம். ஆனால் இதுபோன்ற நீண்ட நாளைய சிக்கலைத் தீர்க்க அது பயன்படாது. ‘பலிக்குமா?’ என்ற கேள்வியை மனம் எழுப்பினால் அதற்கு ‘நம்பிக்கை இல்லை’ என்று பொருள். சோதனையாகச் செய்யும் பிரார்த்தனைக்கு இது போன்ற பெரிய பிரச்சனைகளைத் தீர்க்கும் திறன் இல்லை. அன்னையைப் பற்றி இதுவரை கேள்விப்பட்ட விஷயங்களால் மனத்தில் திடமான நம்பிக்கை தீர்க்கமாக உதயமானவருக்கே இதனால் பலன் ஏற்படும். நம்பிக்கை அவசியம். அதுவே அஸ்திவாரம். பூரண நம்பிக்கையே பூரண பலனைக் கொடுக்கும். ‘ஒரு நேரம் நம்பிக்கை இருக்கிறது. ஒரு விஷயத்தில் நம்பிக்கை இருக்கிறது’ என்பவர்களுக்கு வேறு அனுபவம் உண்டு. ‘தீவிரமாகப் பிரார்த்தனை செய்கிறேன். பலன் இல்லை’ என்பவர்கள் அவர்கள். ‘நம்பிக்கை திடமாகவும், நிலையாகவும், பூரணமாகவும் இல்லை’ என்பதே அதற்குக் காரணம். அன்னையிடம் நம்பிக்கை உள்ளவர்கள் இம்முறையைக் கையாளலாம். அடுத்தாற்போல அவர்கள் செய்ய வேண்டியது தீர்மானம். அரைகுறையாக முடிவு செய்து ஆயுள் முழுவதும் ஒரு காரியத்தைப் பேச்சளவிலேயே சொல்லிக்கொண்டு இருப்பது ஒரு சுபாவம். அதற்கு எதிரான தீர்க்கமான முடிவு தேவை.

‘மூன்று நாள் பிரார்த்தனை செய்ய வேண்டும்’ என்று முடிவு செய்ய ஆரம்பிக்கும்பொழுதே, ‘அது முடியுமா?’ என்ற கேள்வி எழும். ‘மூன்று நாள் பிரார்த்தனையால் 30 வருடப் பிரச்சனை தீருமா?’ என்று தோன்றும். ‘மூன்று நாள் என்றால் இரவு என்ன ஆகிறது? சாப்பாடு மற்ற காரியங்களை எப்படிச் செய்வது?’ என்ற ஐயம் வரும். ‘தெரியவில்லை’ என்பதால் ஏற்படும் குழப்பங்களை எல்லாம் நீக்கிவிடலாம். “மூன்று நாள் தினமும் காலையில் ஒரு மணி நேரம் செய்தால் போதும்” என்ற நினைவு வரும். அதனால் மூன்றுநாள் பிரார்த்தனையை மேற்கொள்ளுமுன், ‘முடிவை அறிவு ஏற்றுக் கொள்கிறதா? அதை உணர்வு ஆமோதிக்கின்றதா? உடல் ஒத்துழைக்குமா?’ என்று நிதானித்து, தெளிந்து ஒரு முடிவை எடுத்தல் அவசியம். முடிவு எடுத்தபின் அதை நெறியாக நிறைவேற்ற வேண்டும்.

அடுத்ததாக, பிரச்சனையின் வரலாற்றை அன்னையிடம் தினமும் ஒருமுறை சொல்ல வேண்டும். மூன்று முறை சொல்வது சிறப்பு. முடிந்தால் இரண்டு முறையாவது சொல்ல வேண்டும். இதைப் பதினைந்து நாள் தொடர்ந்து செய்த பின்னரே இடைவிடாத பிரார்த்தனையை ஆரம்பிக்க வேண்டும்.

மூன்று நாள் இடைவிடாது எந்த எண்ணத்தையுமே தொடர்ந்து மனத்தில் நிறுத்த முடியாதவர்கள் உண்டு. அவர்களுக்குப் பிரார்த்தனையை ஆரம்பித்த ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, தானே அது நின்றுவிடும். மேலே தொடர முடியாது. சிலர் நான்கு, ஐந்து மணி நேரம் பிரார்த்தனை செய்தபின் முயற்சியைக் கைவிட்டு விடுவார்கள்.

36-ஆம் வயதில் திருமணமாகாத பெண், 300 ஏக்கர் நிலத்தை 30 ஆண்டுகளுக்கு முன் உழுதவனிடமே பறிகொடுத்தவர் போன்றவர்களுடைய பிரச்சனையை நோக்கும் பொழுது, மூன்று நாள் தொடர்ந்து பிரார்த்தனை செய்தால், அந்தப் பிரச்சனையைத் தீர்க்க அதிக முயற்சி இல்லை என்பதை நாம் அறிவோம். ‘உலகத்திலேயே ஒரு வழி இல்லை’ என்ற நிலையில், ‘ஒரு புது வழியை அன்னை தன் அருள் மூலம் கொண்டு வந்திருக்கின்றார்’ என்னும் பொழுது, ‘என்னால் மூன்று நாள் பிரார்த்தனை செய்து அதைப் பெற்றுக்கொள்ள முடியாது என்பவருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.’ ‘என்னால் முடியவில்லை; உதவி வேண்டும்’ என்பவர்களுக்கு வழி சொல்லலாம்.

இடைவிடாத பிரார்த்தனையை ஆரம்பிப்பதற்கு முன்னால், அதைச் செய்யத் தன்னைத் தயார் செய்துகொள்ள வேண்டும்.

முதலில் அரைமணி நேரம் பிரார்த்தனை செய்து, அடுத்த நாளிலிருந்து அதை ஒரு மணி, இரண்டு மணி என்று அரைநாள் வரை தயார் செய்துவிட்டால், தொடர்ந்து மூன்றுநாள் பிரார்த்தனையை ஆரம்பிக்கலாம். ‘பிரார்த்தனையை ஆரம்பித்த பின் தபால்காரர் கூப்பிடு-கிறா ர். தட்ட முடியாத ஐந்து நிமிட வேலை என்று வந்துவிட்டால் என்ன செய்வது?’ என்று மனம் கேட்கும். மூன்று நாள் குறுக்கீடு இல்லாமல் சொல்வது சிறந்தது. அது முடியவில்லை என்றால், குறுக்கீடுகளைக் குறைந்த பட்சமாக்கிக் கொண்டு மனத்தைத் தியானத்தில் நிறுத்தி, ஐந்து நிமிடம் வெளியே வந்து கடமையைப் பூர்த்தி செய்து விட்டுத் திரும்பவும் பிரார்த்தனைக்குப் போக வேண்டும். மீண்டும் பிரார்த்தனை முன்போலத் தொடர்ந்தால், குறுக்கீடு மேலெழுந்தவாரியானது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

பிரார்த்தனையை எளிய முறையில் சொல்லலாம். ‘திருமணமாக வேண்டும்’, ‘வறுமை தீர வேண்டும்’ என்பது போலச் சுலபமாகச் சொல்லலாம். அதற்குப் பதிலாக Mother, அம்மா, அன்னை என்று சொன்னாலும், அதுவும் பிரார்த்தனைக்கு ஒப்பாகும். மூன்று நான்கு மணி நேரத்திற்குப் பின் பிரார்த்தனை தானே நெஞ்சில் ஒலிக்கும்.

மூன்று நாள் பிரார்த்தனை முடித்த பின், பிரச்சனை தீர்வதற்கான அறிகுறிகள் தென்படும். முழுவதும் தீரும் வரை பிரச்சனை நினைவுக்கு வரும்பொழுதெல்லாம் அதை ஒதுக்கிவிட்டு, அன்னையை மட்டுமே நினைக்கவேண்டும்.

சுருக்கமாக மீண்டும் அவற்றைச் சொல்கிறேன்:

  1. ஆத்ம சமர்ப்பணம் - பிரச்சனையின் வரலாற்றை அன்னையிடம் கூறுதல் - 15 நாட்கள் செய்ய வேண்டும்.
  2. அன்னை மீது முழு நம்பிக்கை கொள்ளுதல் அவசியம்.
  3. மூன்று நாள் பிரார்த்தனையை மேற்கொள்ளத் தீர்க்கமான முடிவை எடுத்தல் தேவை.
  4. ‘பிரார்த்தனையை ஆரம்பித்தால் தொடர வேண்டும்’ என்பதற்காக, தன்னைத் தயார் செய்து கொள்ள வேண்டும்.
  5. மூன்று நாட்கள் இடைவிடாமல் வாயாலோ, மனத்தாலோ, நெஞ்சாலோ பிரார்த்தனையைச் சொல்ல வேண்டும்.
  6. இடையில் பிரச்சனை நினைவுக்கு வந்தால் அன்னையை நினைத்துக் கொள்ள வேண்டும்.

பிரச்சனையைத் தீர்க்கும் இம்முறையைப் பின்பற்றி வாய்ப்பை உற்பத்தி செய்யலாம். ‘மாநிலத்தில் முதல் மாணவனாகத் தேற வேண்டும். பெரிய மகசூல் எடுக்க வேண்டும். பத்து இலட்ச ரூபாய்க் கம்பெனியைப் பத்து கோடிக் கம்பெனியாக மாற்ற வேண்டும்’ என்பன போன்றவற்றிற்கும் இந்த முறையைப் பின்பற்றலாம். நம்பிக்கையும், முயற்சியும் அன்னையிடத்தில் பூரண பலனை அளிக்கும்.

**********

Book traversal links for 04. இடையறாத பிரார்த்தனை

  • 03. பக்தனின் வாழ்வில் அன்னையின் பிரத்யட்சப் பலன் - 2
  • Up
  • 05. அன்னை சோதனை செய்வதில்லை

Book navigation

  • முன்னுரை
  • I. அன்னை
    • 01. ஜென்ம தரிசனம்
    • 02. பக்தனின் வாழ்வில் அன்னையின் பிரத்யட்சப் பலன் - 1
    • 03. பக்தனின் வாழ்வில் அன்னையின் பிரத்யட்சப் பலன் - 2
    • 04. இடையறாத பிரார்த்தனை
    • 05. அன்னை சோதனை செய்வதில்லை
    • 06. வாழ்வில் தியானத்தின் பங்கு
  • II. குடும்பம்
  • III. யோகம்
  • IV. வேலை
  • V. நோய்
RSS feed
Powered by Drupal