Skip to main content
Karmayogi

Main navigation

  • Home
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home
  2. அன்னையின் அருள்
  3. I. அன்னை

03. பக்தனின் வாழ்வில் அன்னையின் பிரத்யட்சப் பலன் - 2

‘அந்தச் சில முக்கியமான விஷயங்கள் என்ன?’ என்பதைப் பார்ப்போம்.

ஒரு முழுக் காரியம் (complete act) அன்னையின் சக்தியால் நிரம்பப் பெறுமானால், அன்னை தன்னை அக்காரியத்தில் முழுவதுமாக வெளிப்படுத்துவார்கள். ‘எந்த முறையில் அக்காரியம் சக்தியைப் பெற்றது?’ என்பது முக்கியம் இல்லை. ஆழ்ந்த பிரார்த்தனைக்கும் அதே பலன் உண்டு. ஜீவனின் அடியாழத்திலிருந்து பிரார்த்தனை எழும்புவதால், அது அன்னையின் சக்தியைப் பூரணமாகப் பெறுகிறது. அன்னையின் அற்புதத்தை அச்செயலில் காண்கிறோம்.

தம் படிக்கும் பழக்கத்தைச் சமர்ப்பணம் செய்து, அன்னையை ஒருவர் தம் படிப்பில் கண்டுவிட்டார் என்று வைத்துக் கொள்வோம். அவர் படித்துக் கொண்டிருக்கும் பொழுது இருபது ஆண்டுகளாகச் சொந்த ஊரில் செய்து கொண்டிருந்த வேலை ‘இன்று வெளியூருக்கு மாற்றலாகப் போகிறது’ என்ற செய்தி கிடைத்தால், சமர்ப்பணத்தால் அவர் படிப்புப் பெற்ற பெரும் பலன் அப்பொழுது அவர் செய்யும் பிரார்த்தனைக்குக் கிடைக்கும். அப்பொழுது அவர், ‘தான் மாற்றலாகக் கூடாது’ என்று செய்யும் பிரார்த்தனைக்குச் சமர்ப்பணத்தின் முழு ஆற்றல் ஏற்பட்டு விடும். பிரார்த்தனைக்கும் சமர்ப்பணத்திற்குள்ள திறன் உண்டு. பயத்தால் பீடிக்கப்பட்ட நிலையில் செய்யும் பிரார்த்தனைகள் முழுமையானவை. ஏனெனில், அவை ஆழத்திலிருந்து வருபவை. அன்னை அவற்றை முழுமையாகப் பூர்த்தி செய்வார்.

மற்றும் ஒரு கருத்து. அது அருளைப் பற்றியது. சமர்ப்பணத்தால் புனிதம் அடைந்த பூரணச் செயல் (அதாவது முழுக் காரியம் complete act) அன்னையின் சிறப்பை வெளிப்படுத்துவது வேறு; அருளின் செயலால் அன்னை வெளிப்படுத்துவது வேறு. அருள் தானே செயல்படுவது. சமர்ப்பணத்தால் செயல் புனிதப்பட்டு, அன்னையின் சக்தியை தன்னை நோக்கி இழுக்கிறது. சமர்ப்பணம் பூமியிலிருந்து இறைவனைக் கூவிக் குரல் கொடுத்து அழைக்கிறது. அருள் தன்னிச்சையாக, தான் விரும்பியபொழுது, தான் விரும்பியவாறு செயல்படுகிறது. சமர்ப்பணத்தையும், அருளையும் ஒன்றோடு ஒன்று கலந்து, தெளிவைக் கலக்குதல் கூடாது.

ஒரு செயலில் அன்னை தம்மை வெளிப்படுத்துவது என்றால் என்ன? நம் ஊனக் கண்களுக்கு அன்னையின் வெளிப்பாடு தெரியுமா? அன்னையின் சக்தியைத் தெளிவாக விளக்க முடியுமா? வாழ்க்கைக்கும், அதற்கும் உள்ள வேறுபாட்டைச் சுட்டிக் காட்ட முடியுமா?

இன்று இருக்கும் நிலையைக் காப்பாற்ற முயல்வதே வாழ்க்கையின் இயல்பு. வாழ்க்கையில் ‘சிருஷ்டி’ என்று நாம் சொல்வது, நமக்கு ஏற்கனவே தெரிந்த காரியங்களைச் சிறப்பாகச் செய்வதைத்தான். அன்னையின் சக்திக்கு ஒரு சிறப்புண்டு. புதிதாகப் படைக்கும் ஆற்றல் அதற்குண்டு. ‘சிருஷ்டிக்கும் (creative) திறன் உடையது அன்னையின் ஆற்றல்’ என்றால், ‘இதுவரை நாம் கண்டறியாததைச் சிருஷ்டிக்கும் ஆற்றல்’ என்று பொருள். புது வழியில் பிரச்சனைகளைத் தீர்ப்பது, புதிய முறையில் செயல்படுவது, புதிய வாழ்க்கைப் பாதைகளை அமைப்பது போன்றவை, அதன் குறிப்பான திறன். பழைய பிரச்சனைகளுக்குப் புதிய பாணியில் தீர்வு காண்பதும், புதிய வாய்ப்பை ஏற்படுத்துவதும் அன்னைக்குரிய சிறப்புகள். அன்னையின் சக்தியால் ஏற்படும் அனைத்துக்கும் ஒரு முத்திரை உண்டு. ஏதேனும் ஒரு வகையில் அது புதிதாக இருக்கும். அதற்கும் மேலாக, அது இந்தப் புதிய சக்தியை உற்பத்தி செய்யும் திறனையும் உடையது; தானே சுயம்புவாக வளரும் தன்மையும் படைத்தது.

எங்கெல்லாம் புதிய பாதை தென்படுகிறதோ; புதுவழி உற்பத்தியாகிறதோ, புதிதாக ஏதாவது ஒன்று இருக்கிறதோ, அங்கெல்லாம் அன்னை இருப்பதற்கு அவை அடையாளம். முரடன் சாந்தமாகப் பழகினால், வழக்கத்திற்கு மாறாக முதலாளி இனிமையாகப் பேசினால், விதண்டாவாதக்காரன் நியாயமாகப் பழகினால், சுத்தக் கருமி தாராளமாக இருந்தால், பேரத்திற்குப் பெயர் போனவன் சொன்ன விலைக்கு வாங்கிச் சென்றால், ‘அங்கெல்லாம் அன்னை செயல்படுகிறார்’ என அறியலாம்.

வாழ்க்கை ஆற்றொழுக்காகப் போகிறது. அதற்கு ஒரு முறையுண்டு. எதற்கும் ஒரு கால வரையறையுண்டு. பட்டம் வாங்க நான்கு ஆண்டுகள் தேவை என்றால், அதை எவராலும் நான்கு மாதங்களில் பெற முடியாது. பட்டத்திற்கு நான்கு ஆண்டுகள், வாழை பலன் தர பன்னிரண்டு மாதங்கள், பிறந்த குழந்தை நடக்க ஓராண்டு என ஒவ்வொரு செயலுக்கும் ஒரு முறையும், கால வரையறையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஏட்டில் படித்ததை வாழ்க்கை அனுபவமாக மாற்றச் சில ஆண்டுகள் தேவை. பதற்றப்பட்டவன் நிதானம் பெற்று அடங்கப் பல மணி நேரம் தேவை. காலம் வந்து விட்டால் நடக்கும்; நடந்தே தீரும். அதை யாராலும் தடுக்க முடியாது. காலம் வருமுன் அதை முடிக்க உலகில் ஒரு சக்தியும் இல்லை. காலத்தின் முன் அனைத்தும் தலை வணங்கும். ‘பொறுத்தார் பூமி ஆள்வார்’ என்பது வழக்கு. இந்த வழக்குக்கு வரம்பு கட்டுவது அன்னையின் சக்தி. அன்னையின் சக்தி விரைவானது. ஒரு விநாடியில் 26,000 மைல் சுற்றளவுள்ள பூமியை ஏழு முறை சுற்றிவரும் ஒளியின் வேகத்தைவிட அதிக வேகமாகச் செயல்படக் கூடியது அன்னையின் சக்தி. மின்னல் வேகத்தில் செயல்படுவதே அதன் இயல்பு. மனித வாழ்வின் இருள் அதன் வேகத்தைத் தடுக்கிறதே தவிர, அன்னையின் சக்திக்குரிய வேகம் அபரிமிதமானது.

அதன் வேகம் சிருஷ்டிக்கு முன்னுள்ள இறைவனின் சக்திக்குரிய வேகம். அது மனிதனுக்குத் தெரியாமல் போகாது. அலுவலக விசாரணை (departmental enquiry) ஆரம்பிக்கப் பல மாதங்களாகும். குற்றம் சாட்டியபின் அதை நீக்க எல்லா விதங்களிலும் சாதகமான சூழ்நிலை இருந்தாலும், பல மாதங்கள் நீடிக்கும். நான்கு ஆண்டுகளாகத் திட்டம் தீட்டி, ஆறு மாதங்களாகத் தயார் செய்து ஓர் அன்பரின் மீது சுமத்தப்பட்ட அபாண்டத்தை, அன்னையிடம் ஒரு நாள் காலை பத்து மணிக்குச் சொன்னபொழுது, அன்று மாலை குற்றப்பத்திரிக்கை கிழித்தெறியப்பட்டு, குற்றத்தைச் சுமத்தியவர் தலை குனிந்து வெட்கி, தான் செய்த பாவத்தை அழித்தெறிந்தார். அன்னையின் முத்திரைக்கு மற்றோர் அடையாளம் உண்டு. அன்னையால் தீர்ந்த பிரச்சனைகளில் மிச்ச சொச்சம் என்று இருக்காது; பாவத்தை முழுவதுமாகத் துடைத்து எடுத்துவிடும்.

அதிர்ஷ்டக்காரர்கள் பலருண்டு. நூறு கோடி ரூபாய் மூலதனமுள்ள ஒரு கம்பெனிக்கு ஊர், பெயர் தெரியாத சப்ளையராக ஓர் அன்பர் வந்து சேர்ந்தார். அன்னையின் முறைகளைத் தன் கம்பெனி நிர்வாகத்தில் சீராகப் பயன்படுத்தினார். அவர் பத்து ஆண்டுகளுக்குள் தான் சப்ளை செய்யும் கம்பெனியின் அளவுக்கு வளர்ந்துவிட்டார்.

ஐம்பது ஆண்டுகளில் கம்பெனி முதலாளி பெற்ற பெரும் செல்வத்தை, ஊர், பெயர் தெரியாத அந்த அன்னையின் அன்பர் பத்து ஆண்டுகளில் பெற்றார்.

அன்னையின் பக்தர் ஒருவர் தன் படைப்புத்திறன் முழுவதையும் பயன்படுத்தி, திறமையான திட்டம் தீட்டி, பணக்காரர்களின் உதவியால் ஊரார் பொறாமைப்படும் அளவுக்கு ஐந்தே ஆண்டுகளில் பிரபலம் பெற்றுப் பெரும் வெற்றி கண்டார். அவர் அடுத்த திட்டம் ஒன்றைத் தீட்டினார். ‘தன் புத்திசாலித்தனத்தைப் புறக்கணிப்பது’ என முடிவு செய்தார். ‘பணக்காரர்களை நாடக்கூடாது’ எனக் கருதினார். ‘எதற்காகவும் அலைவதில்லை’ எனச் சபதம் பூண்டார். ‘யாரையும் போய்ப் பார்க்க வேண்டாம்’ என்றார். ‘எதையும் எதிர்பார்த்துச் செயலாற்றுவது இல்லை’ எனத் தீர்மானித்தார். மனித யத்தனத்தை நம்ப வேண்டாம்; மற்றவர்களையும் எதிர்பார்க்க வேண்டாம் என்பதே அவருடைய திட்டவட்ட மான கொள்கை. இந்தத் திட்டம் நினைவுக்கு வரும்பொழுதெல்லாம், அந்நினைவைப் புறக்கணித்து, ‘அன்னையை மட்டும் நினைப்பது’ என்ற விரதத்தை மேற்கொண்டார். நிலைமை மாறியது. புதியன புறப்பட்டன. காண்பவரெல்லாம் கருத்தொருமித்தவராய்க் கலந்துரையாடினர். அவரை முன் பின் அறியாதவர்களுக்கெல்லாம் அவர் திட்டத்தில் திடீரென ஆர்வம் ஏற்பட்டது. அளவு கடந்த செல்வர்களிடம், அறியாதவர்கள் எல்லாம் தாங்களே தலையில் அட்சதையைப் போட்டுக்கொண்டு, அந்த அன்பரின் திட்டத்தைப் பற்றிப் பிரஸ்தாபித்தார்கள். ‘கேட்கும் ஒலியிலெல்லாம் உந்தன் கீதம் இசைக்குதடா நந்தலாலா!’ என்பதைப் போல் வாயைத் திறந்து பேசியவர் அனைவரும் நல்ல வார்த்தைகளை மட்டும் பேசினார்கள். அவர்கள் அனைவரும் இவரது திட்டத்தை விரைவில் முடிக்க வேண்டும் என்று ஆர்வம் காட்டினர். எல்லாம் கூடிவந்தன. திட்டம் இரு மடங்கு ஆகியது. 63-ஆம் நாள் அனைத்தும் நடந்தேறின. நம்மை ஒதுக்கி, நம் அறிவை ரத்து செய்து, நம் அவசரத்திற்கு விடுமுறை அளித்து, நம் கணக்கைக் காத தூரம் தள்ளி வைத்து, ஆசையை அழித்து, அன்னையை மட்டும் பூரணமாக ஏற்றுக்கொண்டு, அன்னை முழுமையாகச் செயல்பட நாமும், நம் அறிவும் முழுமையாக அனுமதியளித்தால் முதல் திட்டத்தை 63 மாதங்கள் அல்லலுற்றுச் சாதித்ததை 63 நாட்களிலேயே அன்னை அற்புதமாகச் செயல்படுத்துகிறார்கள்.

அன்னையின் சக்தி, சத்தியத்தின் சக்தி. வாழ்வு பொய்யால் ஆனது. என்றாலும் வாழ்வுக்குச் சத்தியம் தேவை. தன் பொய்யை ஆதரிக்கும் அளவுக்கு மட்டுமே மெய் தேவை. ஒருவர் உண்மை மட்டுமே பேச முடிவு செய்தால், தன் பூர்வோத்திரங்களை ஒளிவு மறைவின்றிக் கூறினால், அவருக்கு வேலை கிடைப்பது கடினம்; திருமணம் ஆகாது.

‘உடையது விளம்பேல்’, ‘தோழனோடும் ஏழைமை பேசேல்’ என நீதி மொழிகள் எச்சரிக்கின்றன. ‘சொல்ல வேண்டியதைச் சொல். எல்லாவற்றையும் சொன்னால் உண்மை பேசுவதாக அர்த்தம் இல்லை’ என்று சமூக நெறி நம்மை நிர்ப்பந்தப்படுத்துகிறது. அன்னை அதற்கு நேர்மாறாக, பூரணமான சத்தியத்தை நம்மிடம் எதிர்பார்க்கிறார். நம்மிடம் எவ்வளவுக்கு எவ்வளவு உண்மை இருக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு அன்னையின் வெளிப்பாடு சிறக்கும். பார்லிமெண்ட்டில் வந்து உன்னை அலசிப் பார்க்கலாம். பயங்கர எதிர்ப்பு உருவாகலாம். கலங்க வேண்டியதில்லை. அன்னை உன் மீது சுமத்தப்பட்ட பழியைத் துடைப்பதுடன், புதிய வெற்றி வாகைகளையும் வழங்குகிறார். உன் சத்தியம் அன்னையின் பொக்கிஷம். சத்தியமே பேசினால் வாழ்க்கையில் சத்தியமாக அவன் அழிந்துவிடுவான்; அழிக்கப்படுவான். வாழ்க்கைக்கே உரிய சட்டம் அது. அந்தச் சட்டத்தைப் புறக்கணிக்கிறார் அன்னை. சத்தியம் மட்டுமே பேசினால் அன்னை அவனுக்குச் சத்திய ஜீவியத்தை (Supramental consciousness) அளிக்கிறார். எது வாழ்க்கையின் அழிவுக்கு அடிகோலுகிறதோ, அதுவே அன்னையிடம் மகுடம் பெற அஸ்திவாரம் ஆகிறது!

எங்கெல்லாம் சத்தியம் வெல்கிறதோ, அங்கெல்லாம் அன்னையைக் காணலாம். கசப்பான உண்மைகள் கற்பனைக்கு எட்டாத, விருதுகளைக் கொண்டு வரும் அபூர்வ நிகழ்ச்சிகளும் உண்டு. மனிதன் எதையும் ஒரு நேரத்தில் விட்டுக் கொடுத்து விடுவான். ஆனால் மானத்தை இழக்க மனித மனம் சம்மதிக்காது. பாதாளத்தில் புதைந்துள்ள உண்மைகளைக் காப்பது மானம். அதே ஆழத்தில் மறைந்துள்ள அவமானத்தைக் காத்துக் கொண்டிருப்பது சொரணை. கோரமான உண்மைகள் ஆழமான இடத்தில் இருக்கலாம். சொரணையை இழந்தால் தான் அவற்றைக் கூற முடியும். சூடு சொரணைகளை இழந்தால்தான் அவற்றைச் சொல்ல முடியும். ‘இந்தச் சூடு, சொரணை என்பவற்றையும் ஒதுக்கிவைத்து உண்மை பேசினால் மட்டுமே இறைவனின் கருவியாகி பிரபஞ்சத்தில் இறைவனின் பெரிய காரியங்கள் செய்வதற்கு மனிதனால் துணை நிற்க முடியும்’ என்கிறார் அன்னை.

அன்னையின் சக்தி செயல்பட, தனியே அறிவு தேவை இல்லை. இதன் அமைப்பு இன்று உலகில் இல்லாத ஒன்று. சக்தி வெளிப்பட்டால், அறிவு தானே செயல்படும் அமைப்பு இதனுடையது. ஏனெனில், அறிவும், திறனும் ஒருங்கே அமைந்த சக்தி அன்னையின் சக்தி. ஓர் இன்ஜினீயர் வீடு கட்ட முற்பட்டால், அதற்குப் போதுமான அறிவு அவருக்கு இருக்கிறது. ஆள் பலமும், பணமும் வீட்டைக் கட்டி முடிக்கத் தேவை. அவை தேவையான சக்தியை அளிக்கின்றன. ஆனால் ஒரு காண்ட்ராக்டரிடம் ஏராளமான ஆட்களும், மூட்டை மூட்டையாகப் பணமும் இருப்பதால் மட்டுமே அவரால் ஒரு பாலத்தைக் கட்டிவிட முடியாது. அனுபவம் உள்ள ஓர் இன்ஜினீயரை அவர் நாடிச் செல்ல வேண்டும். அப்பொழுதுதான் அவரால் ஒரு பாலம் கட்ட முடியும்.

நம் வாழ்வில் அறிவும், திறனும் தனித்து இயங்குகின்றன. ஒரு காரியம் நடைபெறுவதற்கு அவை இணைந்து செயல்பட வேண்டும். அன்னையின் சக்தியில் அறிவும், அன்னையின் ஞானத்தில் சக்தியும் உள்ளுறைந்து நிற்கின்றன. ஒன்றில் மற்றொன்று பிணைந்துள்ளது. ஒரு செயலில் தனக்கு இல்லாத அறிவை ஒரு மனிதன் உபயோகப்படுத்துவதைப் பார்த்தால், ‘அது அன்னையின் சக்தி’ என அறியலாம். திறனற்ற ஒருவன் தன் அறிவை வெளிப்படுத்தும்போது, அதற்குரிய சக்தி இயல்பாக அமைந்துள்ளது என்றால், அதை ‘அன்னையின் ஞானம்’ என நாம் உணரலாம். அன்னையின் சக்தியைப் பெற்றால், அதற்குரிய ஞானம் தானே ஏற்படும்.

அன்னையின் ஞானத்தை அடைந்தால், அதற்குரிய சக்தியை அதுவே கொண்டு வரும்.

அறிவில் சிறந்த அன்பர் பல இலட்சம் சம்பாதிக்கும் திட்டத்தை, கையில் ஆயிரம் ரூபாய் கூட இல்லாமல் ஆரம்பித்தபொழுது, திட்டத்திற்குத் தேவையான ரூபாய் 1,15,000 அவரைத் தேடி வந்தது. தேவைப்பட்ட எல்லாத் திறன்களையும் (பணத்தையும்) தன்னை நோக்கி இழுக்கும் திறனுள்ள அவருடைய அறிவு ‘அன்னையின் ஞானம்’ என்பதில் சந்தேகம் இல்லை.

ரூபாய் நூறு மாதச் சம்பளம் பெற்ற ஒருவர், நான்கு இலட்ச ரூபாய்க்கு ஒரு திட்டம் தீட்டினார். வங்கி அவருடைய திட்டத்தை ‘சாங்ஷன்’ செய்தது. வங்கிச் சேர்மனிடம் அந்த விஷயம் போனபோது, அவருக்கு ஏராளமாய்க் கோபம் வந்துவிட்டது. ‘மோசடி’ எனச் சந்தேகப்பட்டார். மனுதாரர் அவர் முன் கொண்டுவந்து நிறுத்தப்பட்டார். மனுதாரரிடம் சத்தியம் இருந்தது. ஆனால் அவர் அதுவரை அவ்வளவு பெரிய அதிகாரியிடம் பேசியதில்லை. ஒரு கணம் திகைத்துப் போனார். அன்னை அவர் கட்சி. இம்மாதிரியான சந்தர்ப்பங்-களை எதிர்கொள்ளக்கூடிய அனுபவமோ, திறமையோ அவருக்கில்லை. தன் கட்சியை எடுத்துக் கூறினார். அவர் அபரிமிதமாக வெற்றி பெற்றார். சேர்மன் அவரைப் பாராட்டினார். ‘எப்படிப் பேசினோம்?’ என்பது அவருக்குத் தெரியாது. பின்னர் யோசித்த பொழுது, தான் கூறிய வாதங்கள் தனக்கே வியப்பளிப்பதை உணர்ந்தார். அவருடைய திறன் அன்னையின் சக்தி என்பதால், அதற்குரிய அறிவு தானே அவருக்கு ஏற்பட்டது.

தன்னுடைய இராசியை யாரும் அறிவார்கள். “என் கர்மவினை” என்பார்கள். சிலருக்கு எதுவும் பலிக்காது. ஏதோ சிலருக்குப் பல தோல்விகளுக்குப் பிறகு பலிக்கும். ஒரு சிலருக்குப் பண விஷயம் கூடிவராது. இன்னும் சிலர் எதைச் செய்தாலும் புரளி பறக்கும். சிலருடைய இராசி, வீட்டில் இருப்பவர்களே எப்பொழுதும் எதிர்ப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் அன்னையை ஏற்றுக்கொண்டு செயலில் இறங்கி, ‘தங்கள் இராசியும், கர்மமும் வந்து கழுத்தை அறுக்கவில்லை’ என்று கண்டால், ‘அவர்களின் செயலில் வெளிப்படுவது அன்னையின் சக்தி’ என நாம் அறியலாம். கர்மம் விலகுகிறது என்றால், ‘அங்கு அன்னை இருக்கிறார்’ என்று பொருள். வாழ்க்கை கர்மத்திற்கு அடிமை. கர்மம் செயல்பட, வாழ்க்கை பூரணமாக அனுமதிக்கும். சமர்ப்பணத்தால் ஒரு செயல் அன்னையின் சக்தியால் நிரம்பினால், அச்செயலில் கர்ம பலன் இருக்காது. அதைவிட்டுக் கர்மம் விலகும்.

‘சாமி வரம் கொடுத்தாலும், பூசாரி குறுக்கே நிற்கிறார்’ என்போம். பார்லிமெண்ட் சாங்ஷன் செய்தபின், நிர்வாகம் தடை செய்யும். M.P.S.C. பாஸ் செய்தபின் போஸ்டிங் வராது. தலைமை அலுவலகம் ஆர்டர் போட்டபின், உள்ளூர்க் காஷியர் ஒன்பது தடைகளைக் கிளப்புவார். அன்னையின் சக்தியால் நிரப்பப்பெற்ற செயல் முன் அனைத்துத் தடைகளும் விலகிப் போகும்.

அன்னையின் சக்தி ஒரு செயலில் நுழைந்துவிட்டால், அது எதிர்ச் சக்திகளை விரட்டிவிட்டு வேகமாகச் செயல்படும். தான் செயல்படச் சாதகமான சூழ்நிலை இல்லை என்றால், தனக்கேற்ற சூழ்நிலையை அன்னை ஏற்படுத்திக் கொள்கிறார். பழைய சந்தர்ப்பங்கள் மூலமாகவும் அன்னை சக்தி செயல்படும். ஆனால் புதிய சந்தர்ப்பங்கள் மூலமாகச் செயல்படுவதையே அது பெரிதும் விரும்பும்.

பொதுவாக, ‘அன்னையின் சக்தி எப்படிச் செயல்படுகிறது? அதன் வழி வகைகள் என்ன?’ என்று நாம் புரிந்துகொள்ள முடிவதில்லை. நாம் முடிவான பலனை மட்டுமே பார்க்கிறோம். நாம் இருளில் புதைந்துள்ளோம். அன்னை மின்னலாகச் செயல்படுகிறார். இருளை விலக்கிப் பலனை அளிக்கிறார். கணத்தில் நம் இருள் மீண்டும் வந்து நம்மைக் கவ்விக் கொள்கிறது.

அன்னையின் சட்ட திட்டங்களை நாம் அறிவோம். ‘அறிவை நம்பாதே’, ‘வசதியைத் தேடாதே’, ‘ஆசைப்படாதே’, ‘குறை கூறாதே’, ‘முழு முயற்சி எடு’, ‘உண்ணும் முன்னும், உறங்கும் முன்னும், பேசும் முன்பும், செயல்படும் முன்னும் அன்னையை நினைவு கூர்ந்து செயல்படு’ என்பன அவர்களின் சட்டங்கள். எளிய பக்தனால் ஆகக்கூடிய காரியம் இல்லை. இது பூரணமாக முடியவில்லை என்றால், பக்தன் ஒரு சிறிய செயலில் சோதித்துப் பார்க்கலாம். முறை எளிது. அன்னையை அழைத்து, செயலை சமர்ப்பணம் செய்து, அதை அன்னையின் சக்தியால், அளவிறந்து நிரப்பி, பலன் கருதாது பொறுமையாக இருப்பதே முறை. மேலும் ஒரு நிபந்தனை: மேற்கூறிய பத்து விதிகளையும் ஒரு சிறு செயலில் பூர்த்தி செய்யும் பொழுது, பொதுவாக, ‘அன்னைக்கு எதிரான எதையும் செய்தல் கூடாது, என்பது முக்கியமான நிபந்தனை.’

இவற்றைப் பூர்த்தி செய்தால், அன்னை செயலில் தரிசனம் தருகிறார்கள். அப்பொழுது ஜீவனற்ற செயல் உயிர் பெற்று எழும்; உன் பிறந்த நாளன்று ஹர்த்தாலால் ஆசிரமம் போகத் தடை ஏற்படும் பொழுது, உன் எதிரே ஒரு டாக்ஸி வந்து நின்று உன்னை அழைத்துச் செல்லும்; பெரும் புயலால் இலட்சக்கணக்கில் சேதம் ஏற்பட்டு ஐம்பது ரூபாய்கூடப் புரட்ட முடியாத நிலையில் உன்னைப் பிடித்து வலுக்கட்டாயமாக உன் பையில் ஐயாயிரம் ரூபாயைத் திணிக்கிறது வாழ்க்கை; அநாதைப் பையனுக்கு நகராட்சித் தலைவர் எடுத்துக் கட்டிக்கொண்டு வேலை பெற்றுத்தர உயிரைவிட்டு வேலை செய்கிறார்; பிறந்த நாள் பொற்கிழி, எதிர்பார்த்ததை-விட 24 மடங்கு பெருகுகிறது; ஓராண்டு வருமானம் இரண்@ட நாள் வேலையில் கிடைக்கிறது; எட்டுமுறை பாஸாகாத பரீட்சைகள் இரண்டில் ஒரே சமயத்தில் உடனே பாஸ் வருகிறது; மோசடிக்குப் பேர்போன வாடிக்கையாளர்கள் வங்கிக் கடனைத் தாமே முழுவதும் திருப்பிக் கொடுக்கிறார்கள்; இருபது ஆண்டுகளாகத் தேடியும் கிடைக்காத வேலை, மூன்று நாட்களில் மும்மடங்கு சம்பளத்துடன் வருகிறது. அன்னை வந்தபின் தடைகள் தகர்ந்து போகின்றன. எனினும் பிடிவாதம், வக்கிர புத்தி, பொறுப்பின்மை ஆகியவை அன்னையின் செயல் வேகத்தைக் குறைக்கக் கூடியவை. மின்னல் வேகத்தில் வேலை நடக்கும்பொழுது தடை ஏற்பட்டால், ‘என்ன குறை?’ என்று யோசனை செய்தாலும், ‘எங்குத் தடை?’ என்று பரிசீலனை செய்தாலும், உடனே அது தென்படும். விடமுடியாத பழக்கங்கள், ‘வேண்டும்’ என்றே செய்யும் காரியங்கள் அத்தகைய தடைகளை உற்பத்தி செய்யும். அவற்றைக் களைந்தால், மின்னல் வேகம் தொடரும். பழைய தடைகள் ஆத்ம சமர்ப்பணத்தால் விலகும். ‘வேண்டும்’ என்றே செய்யும் காரியங்களை விலக்க நாமே முன்வர வேண்டும். ஒரு காரியத்தை, அதாவது ஒரு வகையான காரியத்தை, (உதாரணம்: கடைக்குப் போவது) ஓர் அன்பர் சமர்ப்பணத்தின் மூலம் அன்னையின் ஆட்சிக்கு உட்படுத்திவிட்டால், அவருக்கு ‘வாழ்க்கையில் வெற்றி கிட்டி விட்டது’ என்று அர்த்தம். மற்ற வகைப்பட்ட செயல்களையும் அதே போல் சமர்ப்பணத்தால் அன்னையின் ஆளுகைக்குள் கொண்டு வருவது சிறப்பு. இந்த இரகசியம் அடிப்படையானது. இது மனிதனுக்குப் பிடிபடாத ஒன்று. இரகசியம் கிடைத்தபின், எந்தச் செயலையும் இதன் மூலம் வெற்றி காணச் செய்யலாம். இதே முறையைப் பயன்படுத்தி எவ்வளவு பெரிய காரியத்-தை யும் சாதிக்கலாம்; நெடுநாளைய குறிக்கோளைப் பூர்த்தி செய்யலாம்.

ஒரு முக்கியமான கேள்வி: வழிவகை (process) தெரியும் என்பதால், பெரிய இலட்சியங்களையும் இதனால் பெற முடியும் என்றால், அதற்குரிய வலிமை எங்கிருந்து வரும்? எப்படிக் கிடைக்க முடியும்? ‘வலிமை’ என்பது ஞானத்தைவிடச் சிறியது. ஞானம் மனத்தில் உதிப்பது. மனத்தைவிடச் சிறிதான பிராணனில் செயல்படுவது வலிமை. ஞானம் வழிவகையில் உள்ளது. வழிவகை புரிந்தால் ஞானம் ஏற்பட்டுவிடும். இந்த முறையை எத்தனை பெரிய திட்டத்தை நிறைவேற்றவும் பயன்படுத்தலாம். அதற்குரிய முயற்சியை விரும்பி ஏற்பது பக்தனின் பங்கு. பெரியதான ஞானம் வந்த பின்பு, சிறியதான வலிமையை அடைய பக்தன் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். தான் எடுத்துக் கொள்ளும் திட்டம் பூர்த்தியடைய முழு விருப்பத்துடனும், முழு மனத்துடனும் உழைக்க அவன் முன்வர வேண்டும்.

அன்னை உட்பட எந்தத் தெய்வத்திற்கும் இல்லாத திறன் ஒன்று உண்டு. விருப்பம் இல்லாத மனிதனை, விருப்பத்துடன் செயல்பட வைக்க முடியாத திறன் அது. இறைவனாலும் மனிதனைக் கட்டாயப்படுத்தி, அவனுக்குப் பிரியம் இல்லாத காரியத்தைப் பூர்த்தி செய்ய முடியாது.

மனிதன் விரும்பி ஏற்றுக் கொள்ளும் திட்டம், இலட்சியம் எவ்வளவு பெரியதானாலும், அன்னை அதைப் பூர்த்தி செய்வார்.

********

Book traversal links for 03. பக்தனின் வாழ்வில் அன்னையின் பிரத்யட்சப் பலன் - 2

  • 02. பக்தனின் வாழ்வில் அன்னையின் பிரத்யட்சப் பலன் - 1
  • Up
  • 04. இடையறாத பிரார்த்தனை

Book navigation

  • முன்னுரை
  • I. அன்னை
    • 01. ஜென்ம தரிசனம்
    • 02. பக்தனின் வாழ்வில் அன்னையின் பிரத்யட்சப் பலன் - 1
    • 03. பக்தனின் வாழ்வில் அன்னையின் பிரத்யட்சப் பலன் - 2
    • 04. இடையறாத பிரார்த்தனை
    • 05. அன்னை சோதனை செய்வதில்லை
    • 06. வாழ்வில் தியானத்தின் பங்கு
  • II. குடும்பம்
  • III. யோகம்
  • IV. வேலை
  • V. நோய்
RSS feed
Powered by Drupal