Skip to main content
Karmayogi

Main navigation

  • Home
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home
  2. அன்னையின் தரிசனம்
  3. பாகம் 1
  4. பகுதி 3

07. பேசவைத்த பிரார்த்தனை

நான் அன்று வழக்கம்போல ஸ்ரீ அரவிந்தாசிரமத்துக்குப் போய்விட்டு வீட்டுக்குப் பஸ்ஸில் திரும்பிக்கொண்டிருந்தேன். அதே பஸ்ஸில் நண்பர் ஒருவரைப் பார்த்தேன். அவரும் புதுச்சேரிக்குப் போய்விட்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அவர் முகம் மிகவும் சோர்ந்துபோயிருப்பதைக் கவனித்த நான், ஏதோ ஒரு கவலை அவர் நெஞ்சை அரித்துக்கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டேன். ‘என்ன வேலையாகப் புதுச்சேரிக்குப் போய்விட்டு வருகிறீர்கள்?’ என்று கேட்டேன்.

ஜிப்மர் மருத்துவ விடுதிக்குப் போய் வருவதாகவும், மூன்று வாரங்களுக்கு முன்னால் அங்கே சேர்க்கப்பட்ட தம் தம்பியைப் பார்த்துவிட்டு வருவதாகவும் சொன்னார் அவர்.

‘உங்கள் தம்பி ஏன் மருத்துவ விடுதியில் சேர்க்கப்பட்டார்? அவருக்கு என்ன நோய்?’என்று கேட்டேன் நான்.

‘விளக்கமாகச் சொல்கிறேன்’என்று ஆரம்பித்த அவர், தொடர்ந்தார்: ‘என் தம்பிக்குப் பதினேழு வயது. இப்போது அவன் எஸ்.எஸ்.எல்.ஸி. படித்துக் கொண்டிருக்கிறான். மூன்று வாரங்களுக்கு முன்னால் திடீரென்று அவனுக்குச் சரளமாகப் பேசுவதற்குச் சங்கடம் ஏற்பட்டது. ஆனால் அதை அவன் வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை. அது என்ன சங்கடம்? தொண்டையில் ஏதாவது கோளாறா? அல்லது வேறு ஏதேனுமா? அது அவனுக்கே புரியாமல் இருந்திருக்க வேண்டும்.

ஒரு நாள் அவனால் பேசவே முடியவில்லை. நாங்கள் என்ன கேட்டாலும் அவன் மௌனமாகத் தலையாட்டினான். பொதுவாக, அவன் அதிகமாகப் பேசும் பழக்கம் உள்ளவன் அல்லன். அதனால் அவனுடைய மௌனத்தை நாங்கள் இயல்பாக எடுத்துக்கொண்டோம். இரண்டு, மூன்று நாள்களாக இந்த நிலை நீடிக்கவே, அவனைத் துருவித் துருவி விசாரித்தோம். தன்னால் பேச முடியவில்லை என்று சைகையின் மூலம் தெரிவித்தான் அவன்.

இது எங்கள் குடும்பத்தில் எல்லோருக்குமே துயரைக் கொடுத்தது. அக்கம் பக்கத்தவர்கள், ‘அந்நிலை தற்காலிகமானதுதான். கவலைப்பட வேண்டாம்’ என்று எங்களுக்கு ஆறுதல் கூறினார்கள். வேறு சிலர் ஏதேதோ பயமுறுத்தும் வகையில் ஹேஷ்யங்களைக் கூறினார்கள். எங்கள் அண்ணனால் என் தம்பியின் தலையைச் சாதாரணமாக நினைக்க முடியவில்லை. அவருக்கு அதிகமான பீதி ஏற்பட்டுவிட்டது. அதைப் பார்த்ததும் குடும்பத்தில் உள்ள எங்களுக்கு ஒரே பயம். தம்பி மீண்டும் பேசுவதற்கு என்ன செய்யலாம்? யார் யாரிடமோ விசாரணைகள்; கருத்துப் பரிமாறல்கள். அந்த நிலையில் சிலர், ‘போன பேச்சு, போனதுதான். இனி ஒருவேளை அவன் பேசினாலும் திக்கித் திக்கித்தான் பேசுவான்’என்று கருத்துத் தெரிவித்தார்கள். எங்களுக்குத் தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் எல்லாரும் இப்படிப் பல மாதிரியான கருத்துகளைக் கூறி எங்களை அதிகம் குழப்பினார்கள். எல்லாருமே என் தம்பிக்குப் பேச்சுத் திரும்ப வேண்டும் என்று விரும்புகிறவர்கள்தாம். ஆனாலும் அவர்கள் பேச்சு எங்களுக்குக் கவலை அளிப்பதாகவே இருந்தது. இறுதியில் எல்லாரும் ஒரு முடிவுக்கு வந்து, தம்பியை ஜிப்மர் மருத்துவ விடுதியில் கொண்டுபோய்ச் சேர்த்தோம். டாக்டர்களும், நர்ஸ்களும், நோயாளிகளும் அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களையும், அபிப்பிராயங்களையும் சொல்லத் தொடங்கினார்கள். அவற்றைக் கேட்ட போது மேலும் குழப்பமாக இருந்தது.

ஒரு வாரம் சென்றது. தம்பியின் நிலை என்ன? புரிந்துகொள்ள முடியவில்லை. டாக்டர்களிடம் கேட்டபோது ‘இன்னும் எங்கள் பரிசோதனை முடியவில்லை’என்றார்கள். முடிவைத் தெரிந்துகொள்ள நாங்கள் கவலையோடு காத்துக்கொண்டிருந்தபோது, இரண்டாவது வாரமும் சென்றுவிட்டது. டாக்டர் வாய் திறப்பதாக இல்லை. நர்ஸ்களிடம் கெஞ்சிக்கூத்தாடிக் கேட்டபோது, ‘இழந்த பேச்சை மீண்டும் பெறுவதற்குச் சிகிச்சை முறை எதுவும் இல்லை’என்று தீர்மானமாகக் கூறினார்கள்.

அதைக் கேட்டதும் எங்களுக்குக் கொஞ்சநஞ்சம் இருந்த நம்பிக்கையும் போய்விட்டது. அது சரி, சிகிச்சை செய்ய முடியாத நிலையில் எதற்காக என் தம்பியை மருத்துவ விடுதியில் வைத்துக்கொண்டிருக்கிறார்கள்? அதுவும் எங்களுக்குப் புரியவில்லை. அவனை நல்ல முறையில் கவனித்துக்கொண்டதால் நோய் தீர வாய்ப்பு இல்லாவிட்டாலும், நோயாளி நம்பிக்கை இழக்காமல் இருக்க வாய்ப்பு உள்ளது. அந்தக் காரணத்தால்தான் அவனை மருத்துவ விடுதியில் தங்க வைத்திருக்கிறார்கள் என்று நாங்கள் எண்ணினோம். அவர்கள் அனுப்பும் போது அழைத்து வரலாம் என்று அவனை அங்கே விட்டுவைத்திருக்கிறோம்.

டாக்டர்களில் ஒருவர் எங்களிடம் அனுதாபம் கொண்டு, ‘இந்த வியாதி மருத்துவ உலகத்துக்கே புரியாத ஒரு புதிர். எல்லாப் புதிர்களுக்கும் முடிவு காணக்கூடிய இறைவனிடம் பிரார்த்தித்துக்கொள்ளுங்கள். அதுதான் உள்ள ஒரே வழி’என்று கூறினார்.

நாங்கள் உலகத்தில் உள்ள ஒரு தெய்வத்தையும் பாக்கி வைக்கவில்லை. எல்லாத் தெய்வங்களையும் வேண்டிவிட்டோம். ஆனால் என் தம்பிக்கு இன்னும் பேச்சு வரவில்லை’ கவலையோடும், கலக்கத்தோடும் கூறி முடித்தார் நண்பர்.

இவர் வெறோரு நண்பர் மூலம் எனக்கு அறிமுகமானவர். இவரிடம் நெருங்கிய பழக்கம் இல்லாவிட்டாலும், இவரைப் பற்றி எனக்கு ஓரளவு தெரியும். இவரும், இவரை எனக்கு அறிமுகப்படுத்திய நண்பரும் சிறு பிராயத்திலிருந்தே நண்பர்கள். என் நண்பர் பட்டதாரியாகிவிட்டார். அவருடைய நண்பரான இவர் எஸ்.எஸ்.எல்.ஸி.யோடு பின்தங்கிப்போனார்.

இவருக்குத் தம் கல்வியின் குறைபாடு தெரிந்ததால் உத்தியோகத்தைப் பொருத்தவரையில் பெரிய ஆசைகள் இல்லை. ‘ஒரு குமாஸ்தா உத்தியோகமே போதும்’என்று எண்ணி, அதற்காக முயன்றார். பப்ளிக் சர்வீஸ் கமிஷனால் தேர்ந்தெடுக்கப்படாததால், இவருக்கு நிரந்தரமான உத்தியோகம் கிடைக்க வழி இல்லாமல் இருந்தது. மிகவும் கெட்டிக்காரர்; முயற்சி மிகுந்தவர். ‘லீவ் வேகன்சி’ ஒன்றில் இவருக்கு வேலை கிடைத்தது. ஒரு மாதம் வரையில்தான் இவர் அந்த வேலையில் இருக்க முடியும். இவருடைய திறமையையும், உழைப்பையும் கூர்ந்து கவனித்த இவரின் மேலதிகாரி இவருக்கு உதவ முன்வந்தார். வேறோர் அலுவலகத்தில் பதினைந்து நாள்களுக்குத் தற்காலிகமாக இவருக்கு வேலை கிடைக்க ஏற்பாடு செய்தார்.

அங்கேயும் இவருக்கு நல்ல பெயர். ஆனால் இவரைப் பதினைந்து நாள்களுக்கு மேல் நீடித்து வைத்திருப்பதற்கு வழி இல்லை. இவர் ஒரு நாளைக்கு இருபது பைல்களைப் பார்த்து முடித்துவிடுவார். ஆனால், நிரந்தர வேலையில் இருப்பவர்களால் இத்தனை பைல்களைப் பார்த்து முடிக்க இயல்வதில்லை. இப்படியாக நல்ல பெயரும், குறுகிய கால வேலைகளும் இவரைத் தொடர்ந்தன. அந்த மாவட்டத்தில் இவர் வேலை பார்க்காத ஊரும் இல்லை; இவர் பணிபுரியாத துறையும் இல்லை. அரசுப் பணியின் விதிமுறைகள், செயல்முறைகள் ஆகிய அனைத்தும் இவருக்கு அத்துபடி. ஆனால், வேலைதான் நிரந்தரம் இல்லை.

இப்படியாகப் பத்து வருடங்கள் ஓடிவிட்டன. என் நண்பருக்கு, தம் நண்பரின் உறுதியற்ற நிலையைப் பார்த்துப் பரிதாபமாக இருந்தது. அவர் முதன் முதலில் எனக்கு ஸ்ரீ அரவிந்தாசிரமத்தில் அறிமுகமானபோது, தம் நண்பருக்காக ஸ்ரீ அன்னையிடம் செய்துகொண்ட பிரார்த்தனையைப் பற்றி என்னிடம் தெரிவித்தார். ‘அன்னையே! என் நண்பருக்கு ஒரு நிரந்தரமான உத்தியோகத்தைக் கொடுத்து அருள் புரிய வேண்டும்’என்பதுதான் அவர் செய்துகொண்ட பிரார்த்தனை.

அவர் பிரார்த்தனை செய்துகொண்ட சில நாள்களுக்குள் எதிர்பாராத விதமாகச் சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தது அரசு. அந்தச் சட்டம், ‘ஒருவர் மொத்தத்தில் பத்து ஆண்டுகள் தற்காலிக உத்தியோகம் செய்திருந்தால் அவரை நிரந்தர உத்தியோகத்திற்குத் தகுதியுள்ளவராகக் கருத வேண்டும்’என்பதே.

அந்தச் சட்டம் என் நண்பரின் சிநேகிதருக்கு நிரந்தரமான உத்தியோகத்தைப் பெற்றுத் தந்துவிட்டது. அன்னையின் அருள் தம் பக்தரின் பிரார்த்தனையை நிறைவேற்றுவதற்காக அரசின் கொள்கை வரையில் ஊடுருவிச் சென்றது. இந்த அற்புதத்தை என் நண்பர், தம் நண்பரிடம் அடக்கம் காரணமாகச் சொல்லவில்லை. அதனால் இவருக்குத் தம் நண்பர் அன்னையிடம் செய்துகொண்ட பிரார்த்தனை தெரியாமலேபோயிற்று.

அவரைப் பற்றிய அத்தனை விஷயங்களையும் தெரிந்துகொண்டிருந்த நானும், அவரும் பஸ்ஸை விட்டு இறங்கினோம். ஓர் ஓரமாக அவரை அழைத்துச் சென்றேன். அன்னையின் அருட்பிரவாகச் சக்தியை அவரிடம் சிறிது விவரித்து விட்டு, ‘இன்று ஆகஸ்ட் 14ஆம் தேதி. நாளைக்கு அன்னை தரிசனம் கொடுக்கிறார். நீங்கள் அவரைத் தரிசியுங்கள். ‘என் தம்பி மீண்டும் பேசும் சக்தியைப் பெற வேண்டும்’ என்று பிரார்த்தித்துக்கொள்ளுங்கள். ஸ்ரீ அரவிந்தர் சமாதியிலிருந்து ஒரு பூவை எடுத்துக்கொண்டு போய் உங்கள் தம்பியிடம் கொடுங்கள். அவரையும் பிரார்த்தித்துக்கொள்ளச் சொல்லுங்கள். உங்கள் தம்பி நிச்சயம் பேசும் சக்தியைப் பெறுவார்’என்று கூறினேன்.

அதைக் கூர்ந்து கேட்டுக்கொண்டிருந்த அவர், அப்படியே செய்வதாகக் கூறிவிட்டு விடைபெற்றுக்கொண்டார்.

மறுநாள் ஆகஸ்ட் 15, வியாழக் கிழமை  ஸ்ரீ அரவிந்தாசிரமத்தில் அந்த நண்பர் அன்னையின் தரிசனத்துக்கு வந்திருந்ததைப் பார்த்தேன். ஆனால், சந்திக்கவில்லை. அன்னையின் தரிசனத்துக்காக வந்திருந்த வேறு பல நண்பர்கள் வெள்ளியன்றும், சனியன்றும் ஊருக்குப் புறப்பட்டுப் போய் விட்டார்கள். ஞாயிற்றுக் கிழமை, நான் இரவு பதினொரு மணி வரை ஒரு நண்பரிடம் அன்னையைப் பற்றி உரையாடிவிட்டு மாடிக்குச் சென்றேன். சில நிமிடங்களுக்குள் என் மனைவி மாடிக்கு வந்து, யாரோ ஒருவர் என்னைச் சந்திக்க வந்திருப்பதாகச் சொன்னாள்.

‘இந்த அகால வேளையில் யார் என்னைத் தேடி வந்திருப்பார்கள்?’ என்ற வினாக்குறியுடன் கீழே இறங்கி வந்தேன். என்னைச் சந்திக்க வந்தவர் நாலைந்து நாள்களுக்கு முன்னால் நான் பஸ்ஸில் சந்தித்த நண்பர்தாம்.

அவர் முகம் மலர்ச்சியாக இருந்தது. ‘ஏதோ நல்ல செய்தியுடன் வந்து இருக்கிறார் மனிதர்!’ என்று எண்ணிக்கொண்டு, ‘உங்கள் தம்பி எப்படி இருக்கிறார்?’ என்று கேட்டேன்.

‘அதைச் சொல்லத்தான் நான் இரண்டாவது முறையாக வந்திருக்கிறேன். என் தம்பி இன்று மாலையில் சில வார்த்தைகள் பேசினான். பிறகு இரவு பத்து மணிக்கு ஆஸ்பத்திரியிலிருந்து திரும்பிய என் அண்ணனும், மற்றவர்களும், இப்போது அவன் வழக்கம்போலச் சரளமாகப் பேச ஆரம்பித்துவிட்டதாகச் சொன்னார்கள். அவன் மாலையில் சில வார்த்தைகள் பேசியவுடன், அந்தச் செய்தியை உங்களிடம் சொல்ல, நான் ஆறு மணிக்கெல்லாம் வந்தேன். நீங்கள் வீட்டில் இல்லை. என் தம்பி நன்றாகப் பேசும் முழுச் செய்தியையும் உங்களிடம் தெரிவிக்க வேண்டும் என்பது அன்னையின் திருவுள்ளம் போலும்! அதனாலேயே நான் இரண்டாவது முறையாகவும் உங்களைத் தேடி வருமாறு பணிக்கப்பட்டு இருக்கிறேன். அன்னையின் சக்திக்கு எல்லையே இல்லை. மருத்துவ உலகத்துக்கே பிரச்சினையாக இருந்த ஒன்று, அன்னையைப் பிரார்த்தனை செய்துகொண்ட சில நாள்களுக்குள்ளேயே தீர்ந்தது. சோறு மட்டும்தான் ஊட்டுவாள் பெற்ற அன்னை; சொல்லையே ஊட்டிவிட்டார், அந்த தெய்வ அன்னை’என்று நெஞ்சம் உருக, கண்ணீர் பெருகத் தழுதழுத்தார் அந்த நண்பர்.

தவிப்பவர்களையும், தழுதழுப்பவர்களையும், தன்னை நாடி வருபவர்களையும் கைகொடுத்துக் கரை ஏற்ற, ‘அன்னை’ என்னும் அந்தத் தெய்வப்படகு நம் திசையிலேயே திருவருள் புரிய எதிர்நோக்கி இருக்கின்றது.

*****

Book traversal links for 07. பேசவைத்த பிரார்த்தனை

  • 06. அன்பர் வேலுச்சாமி
  • Up
  • 08. அன்னையின் பொறுப்பில் வருபவர்கள்

Book navigation

  • அன்னையின் திருவடிகள்
  • பாகம் 1
    • பகுதி 1
    • பகுதி 2
    • பகுதி 3
      • 01. தூய்மையால் கிடைத்த அருளும் பொருளும்
      • 02. ஒளி வெள்ளம்
      • 03. புயலில் சிக்கிய படகு
      • 04. ஒரு திருமணம்
      • 05. வெள்ளத்திற்கு ஒரு வரம்பு
      • 06. அன்பர் வேலுச்சாமி
      • 07. பேசவைத்த பிரார்த்தனை
      • 08. அன்னையின் பொறுப்பில் வருபவர்கள்
    • பகுதி 4
  • பாகம் 2
RSS feed
Powered by Drupal