‘நமக்க ஏற்படும் துன்பங்கள் யாவும் நம்முடைய செயல்களால் ஏற்படுகின்றன’ என்பதை இதற்குமுன் எழுதியுள்ள கட்டுரைகளில் குறிப்பிட்டு உள்ளேன். துன்பங்களை விலக்குவதற்கான ஒரே வழி, அந்தத் துன்பங்களை உருவாக்கும் செயல்களை விலக்குவதுதான். அதற்குத் தேவையானவை இரண்டு :
- துன்பத்துக்குக் காரணமான செயலைச் செய்ததற்கு மனம் வருந்தி, ‘இனி அதனைச் செய்வதில்லை’என்று உறுதி எடுத்துக்கொள்ளுதல்;
- அவ்வாறு மனம் வருந்திச் செய்துகொண்ட உறுதியை ஏற்றுக்கொண்டு,
அச்செயலை அழிக்கும் அன்னையின் அருளை அவாவுதல். இவற்றை விளக்குகிற வகையில் அமைந்திருக்கிறது, கீழே தரப்பட்டுள்ளது அன்பரின் அனுபவம். 1983ஆம் வருடம் நவம்பர் மாதம், பெண்மணி ஒருவர் எனக்கு ஒரு கடிதம் எழுதினார். அவருடைய கணவர் ஓர் என்ஜினீயர். அவர் அரசுத் துறை ஒன்றில் ஒரு பொறுப்பான பதவியை வகித்துவருபவர். அந்தப் பெண்மணி எழுதி இருந்த கடிதத்தை, அவருடைய சொற்களிலேயே இங்கே தருகிறேன்.
‘நான் ஓர் ‘அமுதசுரபி’ வாசகி. தங்களுடைய கட்டுரைகளைத் தவறாது படித்துவருகின்றேன். துன்பத்தில் சிக்கிக்கொண்டவர்களை விடுவிக்கும் அன்னையின் அருட்செயல்களைப் பற்றிப் படிக்கும்பொழுது, எனக்கு அன்னையிடம் எல்லையற்ற ஈடுபாடும் பக்தியும் ஏற்படுகின்றன. என்னுடைய பிரச்சினை ஒன்றுக்கும் அன்னையின் அருளால் ஒரு முடிவு ஏற்படும் என்று நம்புகிறேன்.
எனக்கு ஒரு தங்கை இருக்கிறாள். அவளுக்கு இப்பொழுது 35 வயது ஆகிறது. அவளுக்கு இதுவரை பார்த்த வரன்கள் யாவும் கூடிவராமல் போய் விட்டன. திருமணம் கூடி வாராததால், பல சோதிடர்களை அணுகி ஆலோசனைக் கேட்டோம். அவர்கள் என் தங்கைக்குப் பல தோஷங்கள் இருப்பதாகவும், அவற்றுக்குத் தக்க பரிகாரங்கள் செய்வதோடு, பல விரதங்களையும் மேற்கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு செய்தால் உடனே திருமணம் கூடிவரும் என்றும் கூறினார்கள். அவர்கள் கூறிய அத்தனை பரிகாரங்களையும் உடனடியாகச் செய்தோம். கடுமையான விரதங்களையும் என் தங்கை மேற்கொண்டாள். என்ன செய்தும் இதுவரை எந்த ஒரு பலனும் ஏற்படவில்லை. அதனால் எங்களுக்கும், என் தங்கைக்கும் மனச்சலிப்பும், சோர்வும்தான் மிஞ்சின.
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு வரன் வந்தது. ‘பத்தாயிரம் ரூபாய் வரதட்சிணையாகக் கொடுக்க வேண்டும்’என்று கேட்டார்கள். எங்களுக்கு அது ஒரு பெரிய தொகையாகும். இருப்பினும், அந்தத் தொகையை எப்பாடு பட்டாவது கொடுத்துவிடுவோம் என்று முடிவு செய்தோம். என் தங்கைக்கு எப்படியாவது திருமணமானால் போதும் என்ற ஆதங்கத்தில் நாங்கள் அந்த முடிவுக்கு வந்தோம். மாப்பிள்ளை வீட்டாரும் என் தங்கையைத் திருமணம் முடித்துக்கொள்வதாகக் கூறிவிட்டுச் சென்றார்கள். அந்த நிலையில் அந்த மாப்பிள்ளைக்கு எங்களைவிட அதிகமான வரதட்சிணை கொடுக்க இன்னொரு பெண் வீட்டார் முன்வரவே, கூடிவந்த சம்பந்தம் எங்களை நாடி வாராமலே நகர்ந்து போய்விட்டது.
எங்கள் மன வேதனையை அதிகப்படுத்துவது போல, கல்யாணமாகாத என் தங்கையைப் பற்றி ஊரில் பல விதங்களில் கேலி பேசுகின்றார்கள். அவர்களின் குத்தலான கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறோம். ‘இவளுக்கு இத்தனை வயதாகிவிட்டது. இனி எங்கே கல்யாணம் நடக்கப்போகிறது?’ என்று குத்தலாகவும், சாபம் கொடுப்பதைப் போலவும் அடுத்தவர்கள் பேசுவதைக் கேட்கும்போது எங்கள் மனத்தை ரம்பம் கொண்டு அறுப்பதைப் போல இருக்கிறது.
இதில் எங்களுடைய தவறும் இருக்கிறது. ஆரம்பத்தில் வந்த சில வரன்களை நாங்களாகவே தட்டிக்கழித்துவிட்டோம். இப்பொழுது நாங்களே வலிய வரன்களைத் தேடிப் போனாலும் எப்படியோ அவை குதிராமல்போய் விடுகின்றன. கன்னி ஒருத்திக்குக் காலாகாலத்தில் திருமணமாகாவிட்டால் ஊரார் எப்படி எல்லாம் பேசுவார்கள் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரிந்து இருக்கும். அதிலும் கிராமத்தில் உள்ளவர்கள் எத்தனை மோசமாகப் பேசுவார்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை. என் பிறந்தகம் இருப்பது ஒரு கிராமத்தில்தான்.
என் தங்கையும், என் பிறந்த வீட்டாரும் மனம் நொந்துபோய் இருக்கிறார்கள். உடன்பிறந்த பாசம் என்னை வாட்டுகிறது. என் தங்கையை நினைத்தாலே என் மனம் அளவற்ற துன்பத்தை அடைகிறது. ‘விரைவிலேயே அவளுக்குத் திருமணம் நடக்க வேண்டும்’என்று தினமும் அன்னையிடம் வேண்டுகிறேன். அன்னை என் தங்கைக்கு அருள் செய்வார்களா? இப்பொழுது அவள் மிகவும் விரக்தி அடைந்திருக்கிறாள். யாராவது ‘திருமணம்’ என்ற பேச்சை எடுத்தாலே, அவள் கண்ணீர் வடிக்கிறாள். அன்னையின் அருளைப் பெறுவதற்குத் தங்களுடைய ஆலோசனைகளை வழங்குமாறு வேண்டுகிறேன்'.
அன்பர்களிடமிருந்து எனக்கு வரும் கடிதங்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். ‘தங்களுடைய பிரச்சினை இன்னது’ என்பதைக் குறிப்பிட்டுவிட்டு, விவரங்கள் எதையும் எழுதாமல் விட்டுவிடும் கடிதங்கள் ஒரு வகை. ‘பிரச்சினை என்ன?’ என்பதைக் குறிப்பிடுவதுடன் நின்றுவிடாமல், அது சம்பந்தப்பட்ட பல விவரங்களையும் எழுதிவிட்டு, முக்கியமான விவரங்களைச் சொல்லாமல் விட்டுவிடுவது இரண்டாவது வகை.
‘பிரச்சினை என்ன?’என்பதைக் கூறி, அதனோடு சம்பந்தப்பட்ட முக்கிய விவரங்களையும் தருவது மூன்றாவது வகை. பொதுவாக எல்லாக் கடிதங்களும் முதல் இரண்டு வகைகளில் அடங்கிவிடும். இந்தக் கடிதங்களுக்கு அனுப்பப்படுகிற பதில்கள் பொதுவாகத்தான் அமைந்திருக்கும். பொதுவாக அமைந்துள்ள ஆலோசனைகளைச் செயல்படுத்தும்பொழுது பலன்கள் சில சமயங்களில் தாமதமாகவும் கிடைக்கும். மூன்றாவது வகைக் கடிதங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் ஆலோசனைகள் மிகவிரைவில் பலன்களைக் கொடுக்கும். அதற்குக் காரணம், பிரச்சினை சம்பந்தப்பட்ட முக்கிய விவரங்களை அடிப்படையாகக் கொண்டு அந்த ஆலோசனைகள் அமைந்திருப்பதுதான்.
அந்தப் பெண்மணி எழுதியுள்ள கடிதத்தில் ஒரு முக்கியமான விவரம் காணப்படுகிறது. தம்முடைய தங்கைக்குப் பார்த்த வரன்களில் எதுவும் கூடி வரவில்லை என்று எழுதியுள்ள அவர், நடந்துவிட்ட தவறு ஒன்றையும் குறிப்பிட்டு உள்ளார், ‘இதில் எங்களுடைய தவறும் இருக்கிறது’ என்று.
‘ஆரம்பத்தில் வந்த சில வரன்களை நாங்களாகவே தட்டிக்கழித்து விட்டோம்’என்பதுதான் அந்தத் தவறு. தாமாக நம்மைத் தேடி வரும் நல்லவற்றை நாம் புறக்கணித்துவிட்டால், அவையும் நம்மைப் புறக்கணித்துவிடுகின்றன. பிறகு எவ்வளவுதான் முயன்று அவற்றை நாடிச் சென்றாலும், அவை நம்மைத் திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை. ஆகையால்தான் ‘வலிய வந்த லட்சுமியை விரட்டி அடிக்கக்கூடாது’ என்று கூறுகிறது நமது பண்டைய நீதிநெறி ஒன்று.
இந்தத் தவற்றைத் திருத்திக்கொள்ளாமல் அந்த அன்பரின் குடும்பம் பல வரன்களைத் தேடிச் சென்றது. அதனால் எந்த வரனும் அமையாமல் காலம் சென்றுகொண்டிருந்தது. நடந்துவிட்ட தவற்றைப் பற்றி அந்த வாசகி எழுதி இருந்தாலும், ‘அந்தத் தவற்றை விலக்கிக்கொள்ளாதவரை எந்த வரனும் கூடி வாராது’என்பதை அவர் உணரவில்லை. ஆகவே, ‘உங்கள் தங்கையின் திருமணம் தடைப்பட்டிருப்பதற்கு முக்கிய காரணம், ஆரம்பத்தில் வந்த வரன்களை நீங்கள் புறக்கணித்ததுதான். அதற்காக அன்னையிடம் மனம் வருந்தி மன்னிப்புக் கேளுங்கள். ‘தங்கையின் திருமணத்தைச் சீக்கிரமே முடித்து வைக்க வேண்டும்’ என தினமும் அன்னையிடம் நீங்களும், உங்கள் தங்கையும் மனம் நெகிழ்ந்து பிரார்த்தனை செய்யுங்கள். விரைவிலேயே நல்ல பலன் தெரியும்’ என்று அவருக்குக் கடிதம் எழுதி அனுப்பினேன்.
செய்த பிழையை ஒப்புக்கொண்டு அதற்காக மனம் வருந்தி, ‘அந்தத் தவற்றை நீக்கியருள வேண்டும்’என்று அன்னையிடம் கேட்டுக்கொண்டால், அந்தத் தவற்றை அடுத்த கணமே அவர் நீக்கி அருள்வார் என்பது அன்பர்கள் பலரின் அனுபவமாகும். ஆகவே, ‘அந்தப் பெண்ணின் திருமணம் வெகுவிரைவில் முடிந்துவிடும்’ என்று நான் நினைத்தேன்.
மூன்று மாதங்களுக்குப் பிறகு அவரிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதைப் பிரித்துப் படித்தேன். அந்தக் கடிதத்தை வாசகர்களும் படிக்க வேண்டும் என்று விரும்புகின்றேன். ஆதலால் அந்தக் கடிதத்தை அவர் எழுதிய பிரகாரம் இங்கே தருகின்றேன்:
‘உயர்திரு கர்மயோகி அவர்களுக்கு, அன்னையின் பக்தை எழுதிக் கொண்டது.
கடந்த நவம்பர் மாதம் தங்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அதில் என் தங்கையின் திருமணப் பிரச்சினை சம்பந்தமாக எழுதி இருந்தேன். தங்களுடைய அறிவுரைப்படி, நடந்துவிட்ட தவற்றுக்காக மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டு அன்னையை வணங்கிவந்தேன். ‘அமுதசுரபி'யில் வெளிவந்த அன்னையின் திருவருவத்தை எடுத்து வைத்துப் பூஜை செய்துவந்தேன். முப்பது நாள்களுக்குள் என் தங்கையின் திருமணம் நிச்சயமாகிவிட்டது. கிட்டத்தட்ட பதினான்கு வருடங்களாகத் திகையாத வரன், அன்னையின் அருளால் கிட்டிவிட்டது. மாப்பிள்ளை மிக வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். மாப்பிள்ளையும், அவர் குடும்பத்தாரும் நல்ல குணம் நிரம்பப் பெற்றவர்களாக இருக்கின்றார்கள்.
பணத்தைக் கருதாமல் பெண்ணையும், பெண்ணின் குணத்தையும் கருதி என் தங்கையை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். நிச்சயம் செய்யப்பட்ட இத்திருமணம் முடிவதற்குள் ஒரு தடங்கல் மலையெனத் தோன்றி மாயமாக மறைந்துவிட்டது.
எங்கள் குடும்பத்துக்கும், மாப்பிள்ளை குடும்பத்துக்கும் நடுவில் இருந்து மிக ஆர்வமாகத் திருமணத்தை ஏற்பாடு செய்த ஒருவர், திடீரென அத்திருமணம் முடியாதபடி தடுக்க நினைத்தார். எங்கள் வீட்டார் தம்மை அவமதித்துவிட்டதாக எண்ணிவிட்ட அவருக்கு, எங்கள் மீது கோபம் வந்துவிட்டது. உண்மையில் அப்படிப்பட்ட ஒரு தவற்றை நாங்கள் அவருக்குச் செய்யவில்லை. ‘இந்தப் பெண்ணுக்கு வயதும் அதிகம். வரும் வரதட்சணையும், நகைகளும் குறைவாக உள்ளன. ஆகவே, வேறு இடத்தில் பெண் பார்ப்போம்’ என்று கூறி, மாப்பிள்ளை வீட்டாருடைய முடிவை மாற்றுவதற்கு முயன்றார் அவர். ‘என்ன ஆகுமோ?’ என்று நிலைகுலைந்துபோயிருந்த எங்களுக்கு, அன்னையின் அருள் துணை நின்றது.
‘நிச்சயம் செய்தபின் திருமணம் முடிக்க விரும்பவில்லை என்று நாம் கூறினால், அது பெண்ணையும், பெண்ணின் பெற்றோரையும் எவ்வளவு பாதிக்கும் என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். இதே நிலை நமக்கு ஏற்பட்டால் நாம் எவ்வளவு வருந்துவோம்? அது போலத்தான் அவர்களும் வருந்த நேரிடும். ஆகவே அந்தப் பெண்ணுக்கு 60 வயதாக இருந்தால்கூட எனக்குக் கவலை இல்லை. அந்தப் பெண்ணையே மணம் முடிக்க வேண்டும்’ என்று உறுதியாகக் கூறிவிட்டார் மாப்பிள்ளை. இம்மாபெருந் தடையைத் தகர்த்துவிட்ட அற்புதத்தை நினைத்து, அன்னையின் திருவடிகளை ஒவ்வொரு நிமிடமும் வணங்குகின்றேன். அன்னையின் அருளும், கருணையும், பரிவும் எப்படிப்பட்டவை என வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ‘துன்பப்படுவோரை அன்னை தேடி வந்து அவர்களின் துயர் துடைப்பார்கள்’ என்று கோவை அன்பர் ஒருவருக்கு நீங்கள் எழுதி இருந்தது போல, அன்னை ஓடோடி வந்து எங்கள் துயரை எல்லாம் துடைத்து, இன்பம் தந்திருக்கின்றார்கள். கடந்த பிப்ரவரி மாதம், 6ஆம் தேதி என் தங்கையின் திருமணம் மிகச்சிறப்பாக நடந்துவிட்டது. திருமணத்துக்கு முன் அன்னைக்குச் சிறு காணிக்கை ஒன்றை அனுப்பியிருந்தேன். ஆசிரமத்திலிருந்து அன்னையின் திருவுருவப் படம் ஒன்றும், ஆசீர்வாதங்களும் வந்து சேர்ந்தன. அந்தப் படத்தை வைத்துத் தினமும் நான் பூஜித்துவருகின்றேன். ‘என் மனத்தை விட்டு அன்னை அகலாமல் இருக்க வேண்டும்’ என்று சதாசர்வகாலமும் வேண்டுவருகின்றேன். ‘துன்பம் வரும்போது மட்டும் அன்னையை நினைப்பது; இன்பம் வரும்போது மறந்துவிடுவது என்ற பழக்கம் என்னை அணுகாமல் இருக்க வேண்டும்’ என்று வேண்டிக்கொள்கிறேன்.
எதிலும் நம்பிக்கை இல்லாத என் கணவர் அன்னையின் அருளைப் பூரணமாக நம்புகின்றார். தினம் காலையும், மாலையும் அவர் அன்னையை வணங்கிவருகின்றார். எங்கள் குடும்பத்துக்கு அன்னைதான் யாவுமாக இருக்கின்றார்கள். ‘அன்னை ஓடோடி வந்து துயர் துடைப்பார்கள்’ என்பதை நாங்கள் பூரணமாக நம்புகின்றோம்.
அன்னையின் அருள் எவ்வளவு நிதர்சனமாக இருந்திருக்கின்றது என்பதற்கு எங்களுக்குக் கிடைத்த மாப்பிள்ளையின் பெயரே ஓர் உன்னதமான சான்றாகும். அவருடைய பெயர் ‘அரவிந்தன்’ என்று அமைந்திருப்பது தற்செயலாக ஏற்பட்ட ஒரு நிகழ்ச்சி என்று கருதுவதற்கில்லை'.
அன்னையின் அருளுக்குப் பாத்திரமான அந்தக் குடும்பத்தைப் பற்றிப் படிக்கவும், எழுதவும் எனக்குக் கிடைத்த இந்தச் சந்தர்ப்பத்தை ஒரு பெரும் பாக்கியமாகக் கருதுகின்றேன்.
*****