Skip to main content
Karmayogi

Main navigation

  • Home
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home
  2. அன்னையின் தரிசனம்
  3. பாகம் 1
  4. பகுதி 3

03. புயலில் சிக்கிய படகு

‘அமுதசுரபி’வாசகர் என்று தம்மை அறிமுகம் செய்துகொண்டு எனக்குக் கடிதம் எழுதிய அந்த அன்பர், 28 வயது நிறைந்த ஒரு பொறியியல் பட்டதாரி. படிப்பை முடித்த பிறகு ஆறு ஆண்டு காலமாக வேலை பார்த்து வருகிறார். இந்தக் குறுகிய காலத்துக்குள் நான்கு நிறுவனங்களில் வேலை செய்துவிட்டு ஐந்தாவதாக ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்தார். ஏறக்குறைய 900 ரூபாய் சம்பளமாகக் கிடைத்துவந்தது.

அண்மையில் அந்நிறுவனத் தொழிலாளர்கள் நடத்திய வேலை நிறுத்தத்தில், அவர்களுக்கு ஆதரவாக அந்த அன்பரும் கலந்துகொண்டு, நிர்வாகத்துக்கு எதிரான வாசகங்களை எழுதினார்; கோஷித்தார். அதனால் பகை கொண்ட நிர்வாகம், அவரை வேலையிலிருந்து விலக்கிப் பழிவாங்க நினைத்தது. தமிழ்நாடு அரசு கொண்டுவந்திருந்த பத்திரிகையாளர் சட்டத்தை உபயோகித்து, அவர் மீது அந்த நிர்வாகம் வழக்குத் தொடர்ந்தது. அதோடு வேறு மாதிரியான பல தொல்லைகளையும் அது அவருக்குத் தொடர்ந்து கொடுத்துவந்தது.

நிர்வாகத்திடம் வரையறையற்ற அதிகாரம் இருந்தது. அதற்குச் சமமான பழியுணர்வும் இருந்தது. பாக்குவெட்டிக்கு நடுவே அகப்பட்டுக்கொண்ட பாக்கைப் போல, அந்த இரண்டுக்கும் இடையே சிக்கி, விழிபிதுங்கிய அந்த அன்பர், வேலையை விட்டு விலகினார். ஆனாலும் நிர்வாகம் அவரை விடுவதாக இல்லை. பத்திரிகையாளர் சட்டத்திருத்தத்தை ஏவிவிட்டு, அவரை மூன்று நாள் சிறைவாசம் செய்யவும் வைத்தது. அதற்குப் பிறகும் நிர்வாகம் அவரை விடவில்லை. பல பொய்யான வழக்குகளில் அவரைச் சம்பந்தப்படுத்தி, எலி-பூனைப் போராட்டத்தை நடத்தியது அந்நிறுவனம்.

பாவம், அவருக்கு வேலை இல்லை; வாழ்க்கையை ஓட்ட வேறு வசதிகளும் இல்லை; எதிர்க்காற்றில் சைக்கிள் விடுவதைப் போல எதிர்ப்பைச் சமாளித்துக் கொண்டு, வாழ்க்கையை ஓட்டவும் வழி தேடிக்கொள்ள வேண்டியிருந்தது. மனிதர் ஆலாய்ப்பறந்தார். எப்படியோ ஒரு நிறுவனத்தில் அவருக்கு வேலை கிடைத்தது. ஆனால் அதுவும் சுவாரசியமாக இல்லை. அங்கும் அவரைத் தொல்லைகள் வளைத்துக்கொண்டுவிட்டன. அதையும் உதறி எறிய வேண்டிய நிலை; உதறிவிட்டார். என்ன செய்வார்? புரியவில்லை. இனி எங்கே போவார்? அவரது வாழ்க்கையின் எல்லா வழிகளுமே அடைபட்டுக்கிடந்தன. பிறந்த வீட்டில் பிடிப்பு இல்லை; பெற்றோரின் தொடர்பு இல்லை; பசி, பட்டினி தொடர்கதைகள் ஆயின; குழாய்த்தண்ணீரே ஆகாரம்; எப்பொழுதாவது கிடைக்கும் கோயில் பட்டைச்சாதமே அமுதம்; கட்டிய உடைக்கு மாற்றுடை இல்லை; வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியவில்லை; பிழைப்பு இல்லாத மனிதருக்கு யாரும் கடன் கொடுத்து உதவவும் தயாராக இல்லை. இந்த நிலையில் ஒரு வெளியூர் நிறுவனத்திலிருந்து நேர்முகத் தேர்வுக்கு வருமாறு அவருக்கு அழைப்பு வந்திருந்தது. அதற்குப் போக வசதி இல்லை. அவரை நோக்கி வரும் ஒவ்வொரு நாளும் அவரை நோக்கி எறியப்படுகிற விஷ ஈட்டியாயிருந்தது.

இத்தனைச் சோகமாக யாராவது எழுத முடியுமா? அந்த அன்பர் எழுதி இருந்தார். ஜூன் இரண்டாவது வாரத்தில் வேதனையைப் பிழிந்து எழுதி இருந்த கடிதத்தின் இறுதியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

‘இந்தத் துன்பமான நேரத்தில் என் தவறு எனக்குப் புரிகிறது. பதினைந்து ஆண்டுக் காலமாக நான் பல தவறுகள் செய்திருக்கிறேன். அதனால்தான் இப்பொழுது நான் மிகவும் கஷ்டப்படுகிறேன். இதை எனக்குப் புரியவைத்த அன்னைக்கு என் நமஸ்காரம். என்னை எனக்குக் காட்டிய அன்னைக்கு என்னை நான் பூரணமாகச் சமர்ப்பிக்கிறேன். என் நிலைமை, புயலில் சிக்கிய படகு போல் உள்ளது. என்னுடைய கஷ்டங்களை அன்னையின் அருள் தீர்க்க வேண்டும்'.

சாதாரணமாக நமக்கு வரும் துன்பங்களுக்கெல்லாம் நாம் செய்த தவறுகளே காரணங்கள். இந்த உண்மை எல்லாருக்குமே தெரியும். ஆனால், தமக்கு ஒரு துன்பம் வரும்பொழுது, அத்துன்பத்துக்குக் காரணம் நாம்தாம் என்ற உண்மையை யாரும் ஏற்றுக்கொள்வதில்லை. இதனை நாம் நம்முடைய அன்றாட அனுபவங்களின் மூலம் உணரலாம். துன்பத்தை அனுபவிக்கிற ஒருவன், பிறரைத்தான் காரணமாகக் காட்டுகிறான். நமக்கு ஏற்பட்டுள்ள துன்பத்துக்கு நம் செயல்தான் காரணம் என்பதை நடைமுறையில் ஏற்றுக்கொள்பவர்கள் மிகவும் குறைவு. ‘முள் குத்திவிட்டது', ‘கல் இடித்துவிட்டது’என்றுதானே நாம் கூறுகிறோம்? உண்மையில் முள் குத்துவதும் இல்லை; கல் இடிப்பதும் இல்லை. நாம்தாம் முள்ளின் மீது காலை வைத்துக் குத்திக்கொள்கிறோம்; நாம் தாம் எங்கேயோ பார்த்துக்கொண்டு போய் கல் மீது இடித்துக்கொள்கிறோம். நாம் செய்த தவற்றைப் பிறர் மீது ஏற்றியும், தூற்றியும் பேசுகின்ற பழக்கத்தை எடுத்துக்காட்டுகின்றன, அந்தப் பேச்சுவழக்குகள்.

அன்னை அருளால் துன்பத்தை விலக்கிக்கொள்ள விழைபவர்கள் இந்த உண்மையை - அதாவது நம் துன்பங்களுக்கு நம் செயலே காரணம் என்ற உண்மையை - மனப்பூர்வமாக நடைமுறையில் ஏற்றுக்கொள்ள வேண்டும். நம் துன்பத்துக்குக் காரணமான செயல்கள் எவை என்பதைப் பகுத்தறிந்து, ‘இனி அவற்றைச் செயவதில்லை’என்ற உறுதியை மேற்கொள்ள வேண்டும். செய்த தவற்றுக்கு மனப்பூர்வமாக வருந்தியும், அதற்குப் பிராயச்சித்தம் தேடிக் கொண்டும் தன் மனஇருட்டை முழுதுமாகத் துடைத்த பின்பு, அன்னையிடம் தன் துன்பத்தை நீக்குமாறு நெக்குருகிப் பிரார்த்திக்க வேண்டும். அக்கணமே அத்துன்பம் பனி போல் பறந்தோடிவிடும்.

சில சமயங்களில் ‘இத்துன்பம் எப்படி வந்தது?’ என்பது புரியாமல் இருக்கலாம். உண்மையிலேயே நம் துன்பத்தின் காரணம் புரியாவிட்டால், ‘என் துன்பத்துக்கு என்ன காரணம் என்பது எனக்கு விளங்கவில்லை. அதனை விளங்கிக்கொள்கின்ற சந்தர்ப்பம் கிட்டும்பொழுது நான் என்னை மாற்றிக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்’ என்ற மெய்ப்பாட்டுடன் அன்னையைப் பிரார்த்திக்க வேண்டும். அந்நிலையில் அன்னையின் அருள் நம்மிடம் நிரந்தரமாகத் தங்கியுள்ள துன்பத்தை உடனடியாகத் துடைத்து, நம்மை இன்பப் பாதையில் நடத்திச் செல்லும்.

மேற்கூறிய கண்ணோட்டத்தோடு அந்த அன்பரின் கடிதத்தைப் படித்த போது, அவருடைய துன்பம் நிச்சயம் விலகிப்போகும் என்று நினைத்தேன். என்னை அப்படி நினைக்கத் தூண்டியவை, அவருடைய தவறுகளைப் பற்றி அவர் குறிப்பிட்டிருந்த வரிகள்தாம்.

அன்னையின் அருள் தம்முடைய துன்பத்தைத் தீர்க்கும் என்று அவர் உறுதியாக நம்பினார்.

அன்னையிடம் நம்மை ஒப்படைத்துக்கொள்ள இத்தகைய நம்பிக்கை இன்றியமையாதது.

தம்மைச் சரண் அடைந்தவர்களை அன்னையின் அருள் விதியின் பிடியில் இருந்து விடுவித்துக் காப்பாற்றும். அந்த அன்பரும் அன்னையின் அருளால் காப்பாற்றப்பட இருப்பவர் என்பது எனக்குத் தெளிவாகியது.

அவருக்கு நான் ஒரு பதில் கடிதம் எழுதினேன். அதில், ‘அமைதியான மனத்தோடு, சிறிதும் பதற்றமின்றி, உங்கள் துன்பங்களை எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக அன்னையிடம் எடுத்துச் சொல்லி, அருள்புரியுமாறு வேண்டுங்கள். உங்கள் துன்பங்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்துபோகும்’ என்று குறிப்பிட்டிருந்தேன்.

ஒரு ஜூலை மாதம் முதல் வாரத்தில் அந்த அன்பர் இரண்டாவதாக எனக்கொரு கடிதம் எழுதியிருந்தார். கடிதத்தின் முதல் வரியில், ‘அன்னையின் அருளால் நல்ல மாற்றம் ஏற்பட்டிருக்கிறது’ என்று குறிப்பிட்டிருந்தார். நான் ஆர்வத்தோடு கடிதத்தை முழுதும் படித்தேன். அவருடைய கடிதத்தை இப்பொழுது நீங்களும் படியுங்கள்.

‘அன்னையின் அருளால் நல்ல மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. பத்திரிகையாளர் சட்டத் திருத்தத்தின் துணைகொண்டு என்னை விடுதலை செய்த பிறகும்கூட எனக்குப் பலவிதமான தொல்லைகளையும், அச்சுறுத்தல்களையும் தொடர்ந்து கொடுத்துவந்தார்கள். இப்பொழுது தமிழகத்தில் பத்திரிகையாளர் திருத்தச் சட்டம் அறவே கைவிடப்பட்டுவிட்டது. தமிழகத்துக்கு முன்னோடியாக பீஹாரிலும் இது போன்ற ஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்தார்கள். அதற்குக் கடும் எதிர்ப்பு ஏற்படவே, பீஹார் அரசு அந்தச் சட்டத்தை வாபஸ் பெற்றது. அங்கே ஏற்பட்டது போலவே தமிழ்நாட்டிலும் பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது.

அதன் காரணமாக ஐந்து பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்து, ‘அரசு கொண்டு வந்த சட்டத்தினால் பத்திரிகையாளரின் சுதந்திரம் உண்மையிலேயே பாதிக்கப்படுமா?’ என்பதை ஆராய்ந்து, தன் முடிவைத் தெரிவிக்கும்படித் தமிழ்நாடு அரசு அக்குழுவைக் கேட்டுக்கொண்டது. அந்தக் குழு அமைக்கப்பட்ட சிறிது காலத்துக்குள், அதன் உறுப்பினர்கள் தாங்களாகவே விலகிக்கொள்ள, தமிழக அரசுக்கு ஒரு நெருக்கடி ஏற்பட்டது. அது எந்த ஒரு முடிவும் எடுக்காமல் மெத்தனமாக இருந்துவந்தது.

இந்த நிலையில்தான் நான் உங்களுக்குக் கடிதம் எழுதினேன். நான் உங்களுக்குக் கடிதத்தை அனுப்பிய சில நாள்களுக்குள் தமிழ்நாடு அரசு தன் முடிவை மாற்றிக்கொண்டு, தான் கொண்டுவந்த பத்திரிகையாளர் சட்டத் திருத்தத்தை முழுவதுமாக வாபஸ் பெற்றுக்கொண்டுவிட்டது. என்னைப் பொருத்தவரையில் அன்னையின் அருளே இந்த மாற்றத்துக்குக் காரணம் என உணர்கிறேன். அன்னையின் பூரண அருளை என்னவென்று சொல்வது?’

அன்னையின் அருளை நாடிய அந்த அன்பருக்கு மட்டுமன்று, அந்தச் சட்டத்தினால் பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கும் அதுவரை இருந்தவந்த கெடுபிடிகளும், அச்சுறுத்தல்களும் முற்றும் நீங்கிவிட்டன. கேட்டவருக்கு மட்டுமின்றி, கேட்டவர் மூலம் அவரைப் போல அவதியுற்றுவந்த அனைவருக்கும் கிட்டிய அன்னையின் அருளைத்தான் ‘பூரண அருள்’ என்று அவர் குறிப்பிட்டு உள்ளார் என்று நினைத்தேன்.

அந்த அன்பரைப் போலவே நம்பிக்கையோடு அன்னையின் அருளை நாடுபவர்களின் துன்பம் உடனடியாக நீங்கிப்போவதை நான் நாள்தோறும் கண்டுகொண்டிருக்கிறேன்.

அன்னையின் அருளால் துன்பங்களிலிருந்து விடுதலையானவர்கள் ஒன்றை மறவாமல் நினைவில் கொள்ள வேண்டும். மழை நின்றதும் குடையை மடக்குவது போல நமது காரியம் முடிந்தவுடன் அன்னையை மறந்துவிடக் கூடாது. நமக்குத் துணை செய்த அருளின் உயர்வையும், பெருமையையும் உணர்ந்து நன்றி செலுத்தும்போது, அன்னையின் அருள் நமக்குள் அகண்டமாகப் பெருகி, நாம் எதிர்பார்க்காத, எதிர்பார்க்க முடியாத பெரிய பலன்களைப் பரிசாக அளிக்கிறது. நம்மைக் காத்து ரட்சிப்பதற்காக நம்மைத் தேடி வந்த அன்னையின் அருள், ஒரு குறிப்பிட்ட துன்பத்தை நீக்கியதோடு நின்றுவிடுவதில்லை; அது நமக்கு எது தேவையோ, அதனையும், அதற்கு மேலானவற்றையும் கொடுக்கும் சிறப்புடையது. இந்த உண்மையை விளக்குவது போல அமைந்தது, அந்த அன்பரிடமிருந்து வந்த அடுத்த கடிதம்.

‘அன்னையின் அருளால் நலம். அவ்வருளால் எனக்கு ஒரு நல்ல வேலை கிடைத்திருக்கிறது. மாதச் சம்பளம் ரூபாய் 1,000. ஆகஸ்ட் 15க்குள் நான் வேலையில் சேர வேண்டும். அதற்கு முன்னால் நான் அன்னைலிஸ்ரீ அரவிந்தர் சமாதியைத் தரிசிக்க வேண்டும் என்ற ஆவலோடு இருக்கிறேன். எந்தத் தேதியில் நான் அங்கு வர முடியும் என்பதை என்னால் இப்பொழுது குறிப்பிட முடியவில்லை. மேலும், சென்னையில் உள்ள வேறொரு நிறுவனத்துக்கும் நான் விண்ணப்பித்திருக்கிறேன். அந்த வேலைக்கு மாதச் சம்பளம் ரூபாய் 1,750. அந்த நிறுவனம் எதிர்பார்க்கும் எல்லாத் தகுதிகளும் எனக்கு நிறையவே இருப்பதால், அந்த வேலையும் அன்னையின் அருளால் கிடைக்கக்கூடும்’ என்று கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் அந்த அன்பர்.

இந்தக் கடிதத்தை அவர், அந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் எழுதியிருந்தார்.

ஜூன் மாதத்தில் அவர் இருந்த நிலையையும், இந்தக் கடிதத்தை எழுதும்போது அவர் இருந்த நிலையையும் ஒப்பிட்டுப்பார்க்குங்கால், அந்த அன்பர் எப்படிப்பட்ட பெரும்பேற்றைப் பெற்றுள்ளார் என்பது தெளிவாகப் புரிகிறது.

ஆக, அன்னையின் அருளால் புயலில் சிக்கிய ஒரு சோதனைப் படகு இன்னல் இன்றிக் கரை சேர்ந்துவிட்டது!

*****

Book traversal links for 03. புயலில் சிக்கிய படகு

  • 02. ஒளி வெள்ளம்
  • Up
  • 04. ஒரு திருமணம்

Book navigation

  • அன்னையின் திருவடிகள்
  • பாகம் 1
    • பகுதி 1
    • பகுதி 2
    • பகுதி 3
      • 01. தூய்மையால் கிடைத்த அருளும் பொருளும்
      • 02. ஒளி வெள்ளம்
      • 03. புயலில் சிக்கிய படகு
      • 04. ஒரு திருமணம்
      • 05. வெள்ளத்திற்கு ஒரு வரம்பு
      • 06. அன்பர் வேலுச்சாமி
      • 07. பேசவைத்த பிரார்த்தனை
      • 08. அன்னையின் பொறுப்பில் வருபவர்கள்
    • பகுதி 4
  • பாகம் 2
RSS feed
Powered by Drupal