Skip to main content
Karmayogi

Main navigation

  • Home
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home
  2. அன்னையின் தரிசனம்
  3. பாகம் 1
  4. பகுதி 3

06. அன்பர் வேலுச்சாமி

திருநெல்வேலி மாவட்டத்தில் எட்டையபுரத்துக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பர் வேலுச்சாமி. அவர் ஓர் ‘அமுதசுரபி’வாசகர். விவசாயி; அவருக்கு 40 ஏக்கர் நிலமும், சொந்த வீடும் உள்ளன. மிகுந்த செல்வாக்குடன் வாழ்ந்த அவருடைய தகப்பனார் நிறையக் கடன்களை வைத்துவிட்டுக் காலமாகிவிட்டார். நல்ல திறமையும், கடுமையான உழைப்பும் நிறைந்த வேலுச்சாமி, தம் தகப்பனார் வைத்துவிட்டுப்போன கடன்களை விரைவில் அடைத்ததோடு, பழைய வீட்டைத் திருத்திப் புதுக்கிக் கட்டினார். நிலங்களை நன்கு பண்படுத்தி, முன்னிலும் பன்மடங்கு விளைந்துகொழிக்கும் பொன் சொரியும் பூமியாக்கினார். தம் தந்தையைப் போவே வேலுச்சாமியும் அந்த ஊரில் நல்ல செல்வாக்கோடு வாழ்ந்துவருகிறார்.

அவருக்கு விவசாயத்தில் மட்டும் அல்லாது கைத்தொழிலிலும் தீவிரமான ஈடுபாடு உண்டு. அவர் சொந்தத்தில் ஒரு சிறு தீப்பெட்டித் தொழிற்சாலையும் நடத்திக்கொண்டிருக்கிறார். அந்த ஊரில் ஒரு கூட்டுறவுச் சங்கம் இயங்கி வருகிறது. அதில் அவரும் ஓர் உறுப்பினர். தம் தொழிற்சாலையில் தயாராகும் தீப்பெட்டிகளை அவர் அந்தக் கூட்டுறவுச் சங்கத்தில் விற்பார். அந்தச் சங்கம் தன் உறுப்பினர்களிடமிருந்து வாங்கும் தீப்பெட்டிகளை வடநாட்டில் உள்ள ஒரு வியாபாரிக்கு மொத்தமாக விற்கும். இந்த விற்பனையில் எதுவுமே ரொக்க விற்பனை இல்லை. உறுப்பினர்கள், தம் பொருளைச் சங்கத்துக்குக் கடனாக விற்பார்கள். சங்கம் அந்தப் பொருளை வடநாட்டு வியாபாரிக்குக் கடனாக விற்கும். அந்த வடநாட்டு வியாபாரியின் பாக்கி சங்கத்திற்கு வந்த பிறகே, சங்கம் தன் உறுப்பினருக்குச் சேர வேண்டிய பணத்தைப் பட்டுவாடா செய்யும்.

சமீபத்தில் என்ன உட்காரணத்தாலோ அந்தக் கூட்டுறவுச் சங்கத்தில் ஒரு நெருக்கடி ஏற்பட்டுவிட்டது. அதன் நிர்வாகப் பொறுப்பில் உள்ள யாருமே அந்த நெருக்கடியான பொறுப்பை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. இந்த நிலையில் வேலுச்சாமிக்கு அந்தச் சங்கத்திலிருந்து பணம் வர வேண்டியிருந்தது. ‘இந்தப் பணம் இனி உங்களுக்குக் கிடைக்காது. அதை நஷ்டமாகக் கருதி விட்டுவிடுங்கள்’என்று சங்கத்தைச் சேர்ந்த பலரும் சொல்லும் அளவுக்கு நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது. வேலுச்சாமிக்கும் தமக்குச் சேர வேண்டிய பணத்தை இனிப் பெற முடியாது என்ற நம்பிக்கை அறவே போய்விட்டது.

இந்த நிலையில் ரூபாய் ஐம்பதை, தம் காணிக்கையாக அன்னைக்கு அனுப்பிவைத்தார், வேலுச்சாமி. ஆசிரமத்திலிருந்து அவருக்கு அன்னையின் ஆசிகளும், பிரசாதமும் அனுப்பிவைக்கப்பட்டன. அன்றையத் தபாலில் வந்த அன்னையின் ஆசிகளையும், பிரசாதத்தையும் பெற்றுக்கொண்ட வேலுச்சாமி, வேலைகளின் நிமித்தம் வெளியே கிளம்பினார். வழியிலே கூட்டுறவுச் சங்கத்தின் அலுவலகம் இருந்தது. வேறொரு வேலை காரணமாக அவர் அங்கே சென்றார். அதிகாரி ஒருவர் வேலுச்சாமியை அழைத்து அவருக்குச் சேர வேண்டிய ரூ.7,000க்கும் ஒரு செக் போட்டுக் கொடுத்தார். அவரால் தம் கண்களையே நம்ப முடியவில்லை.

‘வடநாட்டிலிருந்து வர வேண்டிய தொகை ரூ.90,000 இன்றுதான் வந்து சேர்ந்தது. அதனால் உங்களுக்குச் சேர வேண்டிய தொகைக்கு உடனே செக் போட்டுக் கொடுத்துவிட்டோம். அந்தப் பணம் வரும் என்று நாங்கள் யாருமே நினைக்கவில்லை. எதிர்பாராதவிதமாக அது இன்று வந்து சேர்ந்தது’என்று வேலுச்சாமிக்கு விளக்கினார் அந்த அதிகாரி.

அன்னையின் ஆசிகளும், பிரசாதமும் கைக்குக் கிடைத்தவுடனேயே, ‘இனி வாராது’என்று கைவிடப்பட்ட அந்தப் பணம், கைக்கு வந்து சேர்ந்து விட்டது. அதை எண்ணும்பொழுது வேலுச்சாமிக்கு மகிழ்ச்சியாகவும், வியப்பாகவும் இருந்தது. ‘பாண்டிச்சேரிக்குச் சென்று அன்னை, ஸ்ரீ அரவிந்தர் சமாதியைத் தரிசித்து, தம் நன்றியைச் செலுத்த வேண்டும்’என்று முடிவு செய்த அவர் பாண்டிச்சேரிக்குப் புறப்பட்டு வந்து சேர்ந்தார். ஆசிரமத்துக்குச் சென்று அன்னை, ஸ்ரீ அரவிந்தர் சமாதியை வழிபட்டுத் தம் நன்றியைத் தெரிவித்துவிட்டு, என்னையும் சந்திக்க என் இல்லத்துக்கு வந்தார்.

என்னிடம் தன்னை அறிமுகம் செய்துகொண்ட வேலுச்சாமி, தம்முடைய பாண்டிச்சேரி வருகைக்கான காரணத்தை விவரித்துவிட்டு, ‘நீண்ட தொலையும், நெடும் பயணமும் என் நன்றிக்குத் தடைகளாக இல்லை. அன்னையின் அருளால் ‘வாராது’என்று கருதப்பட்ட பணம் உடனே கிடைத்தது. இத்தனை விரைவாகச் செயல்பட்டு எனக்கு அருள் செய்த அன்னையின் தெய்வீக ஆற்றலை எண்ணி நான் மெய்சிலிர்த்தேன். அன்னை, ஸ்ரீ அரவிந்தர் சமாதியை வணங்கி என் நன்றியைச் சமர்ப்பித்தேன். என் ஆயுளுக்கும் நான் அன்னைக்கு நன்றி உடையவனாக இருப்பேன்’என்று சிலிர்த்த குரலில் நன்றியைத் சொரிந்துவிட்டுக் கரம்கூப்பி விடைபெற்றுச் சென்றார்.

*****

Book traversal links for 06. அன்பர் வேலுச்சாமி

  • 05. வெள்ளத்திற்கு ஒரு வரம்பு
  • Up
  • 07. பேசவைத்த பிரார்த்தனை

Book navigation

  • அன்னையின் திருவடிகள்
  • பாகம் 1
    • பகுதி 1
    • பகுதி 2
    • பகுதி 3
      • 01. தூய்மையால் கிடைத்த அருளும் பொருளும்
      • 02. ஒளி வெள்ளம்
      • 03. புயலில் சிக்கிய படகு
      • 04. ஒரு திருமணம்
      • 05. வெள்ளத்திற்கு ஒரு வரம்பு
      • 06. அன்பர் வேலுச்சாமி
      • 07. பேசவைத்த பிரார்த்தனை
      • 08. அன்னையின் பொறுப்பில் வருபவர்கள்
    • பகுதி 4
  • பாகம் 2
RSS feed
Powered by Drupal