ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தில் பூக்களுக்கு எப்படிப்பட்ட முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது என்பது யாவரும் அறிந்ததே. அதற்கு முக்கிய காரணமாக இருப்பவர் ஸ்ரீ அன்னைதான். அவரைப் பொருத்தவரை, குழந்தைகளுக்கு முதல் இடம் கொடுக்கப்பட வேண்டும்; இரண்டாவது இடம் பூக்களுக்குக் கொடுக்கப்படுகிறது. பூக்களைத் தம்முடைய இரண்டாவது குழந்தை என்றே அன்னை குறிப்பிடுவார். பூக்களின் முக்கியத்துவத்தையும், சிறப்பையும் உலகிற்கு எடுத்துச் சொன்னவர் அன்னை என்றே கூற வேண்டும்.
நம் நாட்டுக் கலாச்சாரத்தில் பூக்கள் இடம்பெறாத நிகழ்ச்சியே இல்லை என்று கூறிவிடலாம். திருமணம் முதற்கொண்டு திருவுருவ வழிபாடு வரை பூக்கள் முக்கியத்துவம் வகிக்கின்றன. பூக்கள் இல்லாத ஒரு நிகழ்ச்சியை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. நம் நாட்டில் பூக்கள் ஏன் இவ்விதமான ஒரு சிறப்பான இடத்தை வகிக்கின்றன என்று நாம் அறிந்துகொள்ள முடியவில்லை. ஆனாலும், பூக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள இடத்தை நாம் கொடுக்கத் தவறுவதில்லை. இதை ஒரு மரபு வழிவந்த பழக்கமாகவே நாம் கொண்டுள்ளோம். அன்னையார் அவர்கள் பூக்களுக்குக் கொடுத்துள்ள விளக்கங்கள், மேற்கூறிய மரபின் பொருளை எடுத்துச் சொல்வதைப் போல அமைந்துள்ளன.
நம் வாழ்க்கையில் நன்மைகளும், தீமைகளும் கலந்துள்ளன. தீமைகளைத் தவிர்க்கவும், நன்மைகளைப் பெருக்கிக்கொள்ளவும் பூக்கள் பெருந்துணையாக அமைந்துள்ளன. பூக்களின் துணையால் நம் வாழ்க்கையைச் செப்பனிட்டுக்கொள்ளலாம். இது ஒரு கலை. நம் செயல்கள் நம்மைக் கட்டுப்படுத்துகின்றன. அவற்றுக்கு ஏற்ப நல்லதும், தீயதும் நம்மிடம் வந்து சேர்கின்றன. பூக்களை எப்படி உபயோகிக்க வேண்டும் என்று அறிந்து கொண்டால் நல்லவை நம்மை நாடுமாறும், தீயவை நம்மை விட்டு நீங்குமாறும் செய்துகொள்ளலாம்.
‘பூக்களை உபயோகப்படுத்துதல்’ என்பது ஒரு சிறப்பான செயல். இதை உணர்ந்து உபயோகித்தால் சிறப்பானவற்றை எல்லாம் நம் வாழ்க்கையில் பெற்றுக் கொள்ளலாம். இதனை ஓர் உதாரணத்தால் அறியலாம். ஒரு சங்கீத ஆசிரியர். அவருக்கு ஒரு சீடன். அவனுக்குப் பயிற்சி முடிந்தது. அவனுக்கு விடை கொடுத்து அனுப்புமுன் ஓர் அறிவுரையைச் சொல்லி அனுப்ப நினைத்தார் ஆசிரியர். ‘ஆகிரி’என்ற ராகத்தின் பெயரைக் குறிப்பிட்டு, ‘எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஆகிரி ராகத்தை மட்டும் பாடாதே!’என்றார். ‘அந்த ராகத்தைப் பாடினால் உண்பதற்கு உணவு கிடைக்காது’என்றும் எச்சரித்து அவனுக்கு விடை கொடுத்தார்.
ஒரு சமயம் அந்தச் சீடன் காட்டு வழியாக ஓர் ஊருக்குப் போய்க் கொண்டிருந்தான். அவன் கையில் கட்டுச்சோறு இருந்தது. அவன் பசுமையான இடத்துக்கு வந்தான். அங்கு ஒரு மூங்கில் புதரும் இருந்தது. ரம்மியமான சூழ்நிலையால் ஈர்க்கப்பட்ட அவன், ஒரு ராகத்தைப் பாட விரும்பினான். அப்பொழுது, ‘ஆசிரியர், எக்காரணத்தை முன்னிட்டும் ஆகிரி ராகத்தை மட்டும் பாடாதே என்று எச்சரித்த ராகத்தையே பாடினால் என்ன?’என்று நினைத்தான். ‘அந்த ராகத்தைப் பாடினால் உணவு கிடைக்காமல் போய்விடும் என்று பயப்படத் தேவை இல்லை. ஏனென்றால், கையில் கட்டுச்சோற்று மூட்டை இருக்கிறது’என்று தன்னைத் தானே தேற்றிக்கொண்டான். அவன் பாடுவதற்கு முன் கட்டுச்சோற்று மூட்டையைப் பக்கத்தில் உள்ள வளைந்த மூங்கில் நுனியில் கட்டி வைத்துப் பத்திரப்படுத்தினான். பிறகு ஆகிரி ராகத்தைப் பாடத் தொடங்கினான். நேரம் போனதே தெரியவில்லை. சூரியன் உச்சிக்கு வந்துவிட்டான். அவனுக்குப் பசி எடுத்தது. சோற்று மூட்டையைக் கட்டிவைத்த இடத்தைப் பார்த்தான். அது அங்கு காணப்படவில்லை. ஒரு கணம் திகைத்துப்போய்விட்டான். ஆசிரியரின் அறிவுரையைப் புறக்கணித்தது தவறு என்று உணர்ந்தான். தற்செயலாக அவன் மேலே பார்த்தபொழுது, மூங்கில் நுனியின் உச்சியில் கட்டுச்சோற்று மூட்டை தொங்கிக்கொண்டு இருந்தது. காலை வேளையில் தரைமட்டத்திற்குத் தாழ்ந்திருந்த மூங்கில் நுனி, வெய்யில் ஏற ஏற நிமிர்ந்து உயர்ந்துவிட்டது. அதனால்தான் சோற்று மூட்டை கைக்கு எட்டாத உயரத்திற்குச் சென்றுவிட்டது. இந்த நிகழ்ச்சியின் மூலம் நம்மை நாடி வரும் நல்லனவும், தீயனவும் நம் செயல்களைப் பொருத்தே வருகின்றன என்பதை உணரலாம்.
நாகலிங்கப் பூவை (Properity) நாம் யாவரும் பார்த்திருக்கின்றோம். இந்தப் பூவிற்குப் பொருள் பற்றாக்குறையை நீக்கி, செல்வத்தைக் கொடுக்கக் கூடிய ஓர் ஆற்றல் உண்டு. இதனை நிதர்சனமாக நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியால் விளக்கலாம்.
செல்வத்தை இழந்து என்ன செய்வது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தார் ஒருவர். ‘நாகலிங்கப் பூவைக் கொண்டுவந்து தினமும் அன்னையாரின் படத்திற்குச் சமர்ப்பித்து வணங்கிவந்தால் கூடிய விரைவிலேயே வறுமை நீங்கும்’என்று கேள்வியுற்றார். அவர் ஒவ்வொரு நாளும் இந்தப் பூவைக் கொண்டுவந்து அன்னையாரின் திருவுருவத்திற்கு அணிவித்து வணங்கி வரலானார். பதினைந்து நாள்களிலேயே பலன் தெரிய ஆரம்பித்தது. மாதம் ரூ.500 சம்பளத்தில் ஒரு வேலை அவரைத் தேடிவந்தது. ஓர் ஆண்டு சென்றது. தொடர்ந்து நாகலிங்கப் பூவை அன்னையார் திருவுருவத்திற்குச் சூட்டி, வழிபட்டுக்கொண்டிருந்தார் அவர். ஓராண்டு சென்றபின் மாதம் இரண்டாயிரம் ரூபாய் சம்பாதிக்கக்கூடிய தொழிலே அவரைத் தேடிவந்தது. இரண்டு ஆண்டுகள் கழிந்தன. மாதம் ஒன்றுக்கு எண்ணாயிரம் ரூபாய் சம்பாதிக்கின்ற அளவுக்கு அவருடைய தொழில் நன்கு பெருகிவிட்டது. வறுமை அவரை விட்டு முற்றிலும் நீங்கியது.
காகிதப் பூக்கள் (Protection) பல நிறங்களில் காணப்படுகின்றன. இவற்றிற்கு, நேர இருக்கின்ற ஆபத்துகளைத் தவிர்த்து, பாதுகாப்பு அளிக்கக்கூடிய ஆற்றல் உண்டு. இதனை ஒரு நிகழ்ச்சியால் விளக்கலாம்.
சென்னையில் ஒரு தொழிற்சாலையை வைத்திருந்தார் ஒருவர். அந்தத் தொழிற்சாலையில், தொழிலாளிகளில் பாதிக்கு மேற்பட்டவர்கள் வேலை நிறுத்தம் செய்ததோடு, வேலைக்கு வந்தவர்களையும் ‘வேலை செய்ய வேண்டாம்’என்று தடுத்தார்கள். குழப்பங்களும், கூச்சல்களும் தொடர்ந்து பெருகிக்கொண்டே இருந்தன. நிலைமை கட்டுக்கு அடங்காமல்போய்விட்டது. எங்கும் ஒரு விதமான பீதியும், கலவரமும் சூழ்ந்திருந்தன.
காகிதப் பூவின் ஆற்றலை அறிந்த தொழிலதிபர், அதனைத் தினமும் கொண்டுவந்து அன்னையாரின் திருவுருவத்திற்குச் சூட்டி, வணங்கினார். இரண்டு மாதங்களுக்குள் வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்களில் முக்கியமான ஒருவன் நோய்வாய்ப்படவே, குழப்பங்களும், கூச்சல்களும், அச்சுறுத்தல்களும் படிப்படியாகக் குறையலாயின. நோய்வாய்ப்பட்ட அந்தத் தொழிலாளியின் உடல்நலம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. அதனால் அவனுடைய தூண்டுதல்கள் முற்றிலும் நீங்கின. தொழிலாளர்களும் வேலைக்குத் திரும்ப வேண்டும் என்று எண்ணலானார்கள். செய்த தவற்றை உணர்ந்தார்கள். தங்களை வேலை செய்ய அனுமதிக்கும்படித் தொழிலதிபரை வேண்டிக் கொண்டார்கள். தொழிலும் முன்போல் எந்தவித நெருக்கடியும் இல்லாமல் நடக்கத் தொடங்கியது.
விருட்சிப் பூவில் (Peace in the cells) வெண்மை நிறமுள்ள பூ, குளுமை நிறைந்த அமைதியை உடலில் உள்ள அணுக்களில் பாய்ச்சுகின்ற சக்தி படைத்தது. அந்த அமைதி, நோய்களைக் குணப்படுத்துகின்ற வல்லமை வாய்ந்தது. இந்த விருட்சிப் பூவை அன்னையாரின் திருவுருவத்திற்குச் சார்த்தி, வணங்கி வந்தால், எந்த நோயாக இருந்தாலும் விலகும்; விரைவில் பூரண குணம் கிடைக்கும். அது மட்டுமன்றி, மனத்தில் குழப்பமோ அல்லது பீதியோ ஏற்படுகின்ற ஒரு சூழ்நிலையில் செயல்பட வேண்டுமானால், இந்தப் பூவின் உதவியால் அவற்றை நீக்கிக்கொள்ளலாம்; சிறப்பாகச் செயல்படலாம். சிலருக்குப் பரீட்சைக்குச் செல்லும்பொழுது அல்லது முன்பின் தெரியாத ஒருவரிடம் பேசி ஒரு குறிப்பிட்ட காரியத்தைச் சாதிக்க வேண்டியபொழுது குழப்பமோ அல்லது பீதியோ ஏற்படுவதைப் பார்க்கலாம். இந்தச் சூழ்நிலையில் மேற்கூறிய பூவின் துணையால் குழப்பத்தையும், பீதியையும் தவிர்த்து, செய்ய வேண்டிய காரியத்தைச் சிறப்பாகச் செய்து முடிக்கலாம்.
இது மட்டுமன்று, பூக்களின் உதவியால் சிறந்த குணங்களை நாம் வளர்த்துக்கொள்ளலாம். முல்லை அரும்புக்குத் (Purity) தூய்மையைக் கொடுக்கும் ஆற்றல் உண்டு. மனம் முதலிய கரணங்களில் படிந்த தீய குணங்களை நீக்கி, தூய்மையை ஏற்படுத்திக்கொள்ளலாம். நாட்டு ரோஜாவின் (Ordinary Rose) துணையால் தன்முனைப்புக் கெடுமாறு செய்து கொள்ளலாம். துளசியின் (Devotion) உதவியால் நம் நெஞ்சில் பக்தியைப் பெருக்கிக்கொள்ளலாம். பூவரசம் பூவினால் (Health) ஆரோக்கியத்தை மேலும் பெருக்கிக்கொள்ளலாம். எருக்கம் பூவினால் (Courage) பயத்தை ஒழித்து, தைரியத்தை வளர்த்துக்கொள்ளலாம். வெள்ளைத்தாமரையினால் (Divine Conciousness) இறை உணர்வை நம்மிடம் பெருக்கிக்கொள்ளலாம். மாதுளம் பூவினால் (Divine Love) புனிதமான அன்பைப் பெற்றுக்கொள்ளலாம். வாடாமல்லிகையினால் (Immortality) ஆயுளை நீட்டித்துக்கொள்ளலாம். உயிருக்கு ஏற்படும் எந்த ஆபத்தினையும் இதன் மூலம் நீக்கிக்கொள்ளலாம். சம்பங்கிப்பூவினால் (New creation) புதுப்புதுத் திறமைகளை வளர்த்துக் கொள்ளலாம். அரளிப்பூவினால் (Surrender of falshood) நம்மிடம் நிறைந்து உள்ள பொய்களை நீக்கிக்கொள்ளலாம். மகிழம்பூ (Patience) பொறுமையைக் கொடுக்கும். பருத்தி ரோஜா (Grace) இறையருள் கிட்டுமாறு செய்யும். சாமந்திப்பூ (Life Energy) ஜீவசக்தியை அளிக்கும். சிவப்பு அல்லி (Wealth of Mahalakshmi) செல்வங்களுக்குத் தலைவியான மகாலக்ஷ்மியின் அனுக்கிரகம் கிடைக்குமாறு செய்யும். பவழமல்லியினால் (Aspiration) சிறந்த விருப்பங்களை வளர்க்கலாம். மரமல்லிகையினால் (Transformation) கீழான குணங்களை எல்லாம் மாற்றி, சிறப்பான குணங்களை வளர்த்துக்கொள்ளலாம். மருக்கொழுந்தினால் (New Birth) வேண்டாதவற்றை விட்டுவிட்டு வேண்டியவற்றைப் பெற்றுக்கொள்ளலாம். இது புதிய வாழ்வை அளிக்கவல்லது.
இப்படி எண்ணூறுக்கும் மேற்பட்ட பூக்களின் தன்மைகளையும், நன்மைகளையும் ஒரு நூலில் எடுத்து விளக்கியுள்ளார் அருள்மிகு அன்னையார். அந்நூலின் பெயர் ‘பூக்களும் அவை சொல்கின்ற செய்திகளும்’என்பதாகும்.
*****