அன்னைக்குச் சூட்சுமச் சக்திகள் பல இருந்தன. சாதாரணமாக நம்மால் பார்க்க முடியாத அல்லது கேட்க முடியாத விஷயங்களை அன்னையால் பார்க்கவோ அல்லது கேட்கவோ முடியும். அன்னை ஒரு மனிதனைப் பார்ப்பதாக வைத்துக்கொள்வோம். கண்களுக்கு மட்டுமே புலப்படுகிற அவனுடைய புறத் தோற்றத்தை மட்டுமே அவர் பார்ப்பதில்லை. அவனைப் பார்த்தமாத்திரத்திலேயே அவனுடைய முற்பிறவி, அவனுடைய சென்ற காலம், எதிர்காலம், அவனுடைய அடுத்த பிறவி, ஆகிய அனைத்தையும் அறிந்துகொள்வார். அன்னைக்கும், உலகிலுள்ள கடவுளர்க்கும் நேரடியான தொடர்புகள் உண்டு. உயிரற்ற ஜடப் பொருள்களும் அன்னையிடம் தங்கள் குறைகளை முறையிட்டு, நிவாரணம் பெற்ற பல நிகழ்ச்சிகள் நடந்திருக்கின்றன.
ஒரு நாள் மாலை நேரம், ஆறு மணி. அன்னை ஆசிரமத்தில் உள்ள ஒரு சாதகரை அழைத்து, ‘ஆரோவில்லில் இருக்கும் மாத்ரி மந்திர் (அன்னைக்குச் சாதகர்கள் எழுப்பிக்கொண்டிருந்த கோயில்) அருகிலுள்ள ஆலமரம் ஒரு துன்பத்தால் வாடுகின்றது. சற்று நேரத்திற்கு முன்னால் அந்த ஆலமரம் தன் துயரைச் சொல்லி என்னிடம் முறையிட்டுக்கொண்டது. ஆகையால் அந்த மரம் இருக்கும் இடத்திற்கு உடனே விரைந்து சென்று, அதற்கு ஏற்பட்டுள்ள துன்பம் எதுவாக இருந்தாலும், அதை நீக்கிவிட்டு எனக்குச் செய்தியை அனுப்பி வைக்கவும்’என்று கூறினார்.
ஆசிரமத்திலிருந்து ஆரோவில் ஐந்து மைல் தொலையில் இருக்கிறது. ‘ஆரோவில்’என்ற அந்நகரத்தில் உலுகம் முழுவதிலும் இருந்து வந்த அன்னையின் 300 பக்தர்கள் குடில்களை அமைத்துக்கொண்டு வாழ்கிறார்கள். ஆன்மநேய ஒருமைப்பாட்டின் சக்தியை உள்ளடக்குவதைப் போல உலகிலுள்ள அனைத்து நாடுகளிலிருந்தும் எடுத்து வரப்பட்ட மண், ஆரோவில்லின் அஸ்திவாரத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. அந்த அஸ்திவாரக் கல்லுக்கும், மாத்ரி மந்திருக்கும் நடுவில் அன்னையிடம் முறையிட்டுக்கொண்ட வயது முதிர்ந்த அந்த ஆலமரம் இருக்கிறது. அந்த மரத்தைச் சுற்றியே அங்குள்ளவர்கள் வசிப்பதாலும், அதே இடத்தில் அவர்களுடைய வேலை அமைந்திருப்பதாலும், அங்கு எது நடந்தாலும் அவர்களுடைய கவனத்திற்கு வராமல் போக முடியாது.
அன்னையின் ஆக்ஞையை நிறைவேற்ற உடனே ஆரோவில்லுக்குப் புறப்பட்டு வந்த சாதகர், நேராக ஆலமரம் இருக்கும் இடத்திற்குச் சென்றார். அப்பொழுது மாலை மறைந்து இருள் பரவிக்கொண்டிருந்தது. மரத்தைத் தெளிவாகப் பார்க்கக்கூடிய அளவுக்குத் தெருவிளக்குகள்கூட இல்லை. மரத்திற்கு நேர்ந்த துன்பம் என்ன என்பது சாதகருக்குத் தெளிவாகவில்லை. மற்றவர்கள் கண்ணில் படக்கூடிய ஒன்றாக அது இருக்குமானால், அங்குள்ளவர்கள் ஏற்கெனவே அதைக் கவனித்திருப்பார்கள். விஷயத்தையும் அவருக்குச் சொல்லி இருப்பார்கள். புதிராக உள்ள இந்த மரத்தின் துயரை எப்படிப் புரிந்துகொள்வது என்று தோன்றாமல், அந்த முதியவர் மரத்தடிக்குப் போய்ச் சேர்ந்தார். அங்கு வேலை செய்த யாரோ ஒருவர், தம்முடைய கோடரியை ஆலமரத்தின் அடிப்பாகத்தில் கொத்தித் தொங்க விட்டிருந்தார்.
பொதுவாக தோட்டங்களில் வேலை செய்பவர்கள் தங்களுடைய கோடரி, அரிவாள் போன்ற ஆயுதங்களை வேலை முடிந்தவுடன் ஏதாவது ஒரு மரத்தின் அடிப்பாகத்திலோ, அல்லது கனமான மரக்கிளைகளிலோ கொத்தித் தொங்க விட்டுவிட்டு வீட்டிற்குப் போய்விடுவார்கள். மறுநாள் வேலைக்கு வந்ததும் பத்திரப்படுத்திவிட்டுப் போன தங்களின் கருவிகளை அங்கே போய் எடுத்துக் கொண்டுவந்து தம் வேலைகளைத் தொடங்குவார்கள். அது போன்ற பழக்கம் உடைய ஒருவர், தம்முடைய கோடரியை அந்த ஆலமரத்தில் கொத்தித் தொங்க விட்டுப் போய்விட்டார். அதனால் அந்த மரம் எந்த அளவிற்குப் பாதிக்கப் படுகின்றது என்பதை, அப்படிச் செய்தவரால் உணர முடியவில்லை.
அங்கு மரத்தில் காயத்தை விளைவித்தவாறு தொங்கிக்கொண்டிருந்த கோடரியைப் பார்த்தவுடன், தம்மிடம் அன்னை என்ன செய்யச் சொன்னார் என்பது ஒரு விநாடியில் அவருக்கு விளங்கிவிட்டது. உடனே அந்தக் கோடரியைப் பிடுங்கி எடுத்தார். பிறகு அந்தக் கோடரிக்கு உரியவர் யார் என்று விசாரித்து, அவரைக் கண்டுபிடித்துக் கோடரியைக் கொடுத்துவிட்டு, ‘இனி இது போல் செய்ய வேண்டாம்’என்று கூறிவிட்டு ஆசிரமத்துக்குத் திரும்பி நடந்ததை அன்னையிடம் விவரித்தார்.
‘அந்தக் கோடரியை மரத்திலிருந்து எடுத்த அந்தக் கணத்திலேயே என்னிடத்தில் துயரம் நீங்கியது போன்ற ஓர் உணர்வு ஏற்பட்டது’என்று கூறினார் அன்னை.
ஒரு நாள் தம்முடைய டிரஸ்டிகளில் ஒருவரை அழைத்தார் அன்னை. பக்கத்தில் உள்ள பிள்ளையார் கோயிலுக்கு ஆசிரமத்துக் கட்டடத்தின் ஒரு பகுதியை விட்டுக்கொடுக்கத் தீர்மானித்திருப்பதாகக் கூறினார்.
டிரஸ்டிக்கு ஒரே ஆச்சர்யம். கொஞ்ச காலமாகவே அந்தப் பிள்ளையார் கோயிலுக்குச் சிறிது இடம் தேவை என்று கோயில் நிர்வாகிகள் அந்த டிரஸ்டியிடம் கேட்டுவந்தார்கள். அவர்கள் கோரிக்கையை அன்னையின் முன் வைத்து அவருடைய அனுமதியைப் பெற டிரஸ்டி எண்ணிக்கொண்டிருந்த நேரத்தில், அன்னையே அவரை அழைத்து பிள்ளையார் கோயிலுக்கு இடம் கொடுக்கத் தீர்மானித்துவிட்டதாகக் கூறிகிறார்! அவரைத் தவிர அன்னையிடம் இந்த விஷயம் பற்றி வேறு யாரும் பேசி இருக்க முடியாது. பிறகு இந்த விஷயம் அன்னைக்கு எப்படித் தெரிந்தது? தெரிவிக்காமலே தெரிந்து கொள்ளக்கூடிய அருட்சக்தி அன்னைக்கு உண்டு என்பது அந்த டிரஸ்டிக்கு நன்கு தெரிந்த ஒன்றுதான்.
அந்தச் சமயத்தில் அந்தப் பிள்ளையார் கோயிலைப் புதுப்பித்துக் கொண்டு இருந்தார்கள். அந்தக் கோயில் மக்கள் அதிகமாக வசிக்கின்ற ஒரு பகுதியில் இருந்தது. பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சிபுரிந்த காலத்தில் அது இடிந்தும், பாழடைந்தும்போய் இருந்தது. அங்கு பக்தர்கள் அதிகமாக வருவதில்லை.
அந்தக் கோயிலைப் பற்றி ஒரு கதை உலவிவந்தது. ‘இந்தியர்கள் விக்கிரக வழபாடு என்னும் மூடப்பழக்கத்திற்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள். அதற்கு மூலகாரணமான விக்கிரகத்தை அப்புறப்படுத்திவிட்டால் அவர்களுடைய மூடப்பழக்கமும் ஒழிந்துபோகும்’என்று நினைத்த ஒரு பிரெஞ்சுக்காரர், அந்தக் கோயிலிலிருந்த பிள்ளையாரைப் பெயர்த்து எடுத்துக்கொண்டு போய் நடுக்கடலில் போட்டுவிட்டார். இது அக்கோயிலைச் சுற்றி இருந்தவர்களிடையே ஒரு பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. ‘ஒரு பிரெஞ்சுக்காரர்தாம் பிள்ளையார் காணாமல்போனதற்குக் காரணம்’என்பது மக்களுக்குத் தெரிந்தது. ஆனாலும் ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவரின் அடாத செயலைக் கண்டிக்கக்கூடிய நிலையில் இல்லை இந்த அடிமை மக்கள். அவர்கள் மறுநாள் தம் மௌனப் புரட்சியை வெளிக்காட்டுவதைப்போல ஆலயத்தில் கூடினார்கள்.
என்ன அதிசயம்! கடலில் வீசப்பட்ட விநாயகர் எதுவுமே நடக்காதது போல ஆலயத்தில் வீற்றிருந்தார்! அந்த நிகழ்ச்சிக்குப் பிறகுதான் இந்தக் கோயில் பெரும்புகழ் பெற்றது. பக்தர்களும் நாளுக்கு நாள் பெருகி வழிந்தனர்.
இப்பொழுது அந்தக் கோயிலைப் புதுப்பிக்கின்ற பணியைத் தொடங்கி இருந்தார்கள். கோயிலின் முன்புறத்தில் இடம் இல்லாத காரணத்தால், தெருவின் கிழக்கு, மேற்குப் பக்கங்களில் தூண்களை எழுப்பி, அவற்றின்மேல் மண்டபத்தைக் கட்டினார்கள். பிரகாரத்திற்குப் போதிய இடம் இல்லை. தெற்குப் பக்கத்தில் கொஞ்சம் இடம் தேவையாக இருந்தது. அக்கம்பக்கத்தில் குடியிருப்புகள் இருந்ததால் போதிய இடம் கிடைக்கவில்லை. அதே சமயத்தில் கோயிலைச் சுற்றி ஆசிரமத்திற்குச் சொந்தமான இடங்கள் இருந்தன. அந்த இடங்களிலும் கோயிலுக்கு வேண்டிய இடத்தைப் பெற முடியவில்லை.
அன்னை, டிரஸ்டியிடம், தாம் தியானத்தில் இருந்தபொழுது விநாயகர் தோன்றி, தம்முடைய கோயிலுக்குச் சிறிது இடம் வேண்டும் என்று கேட்டதாகக் கூறினார். ஆகவே, கோயிலுக்கு வேண்டிய இடத்தைக் கொடுப்பதற்குத் தீர்மானித்துவிட்டதாகவும், அதற்குரிய உத்தரவைப் பிறப்பித்துவிட்டதாகவும் மொழிந்தார் அன்னை.
ஐம்பது வருடங்களுக்கு முன்னால் ‘செல்வராஜ் செட்டியார்’என்பவர் பாண்டிச்சேரியில் மேயராக இருந்தார். அவர் பெரிய இறக்குமதி வியாபாரியும்கூட.
‘மேயர்’என்ற மேன்மையான பதவி காரணமாக, அவருக்கு பிரான்ஸ் நாட்டிலும், பிரான்ஸ் அரசியலிலும் மிகுந்த செல்வாக்கு இருந்தது. அவர் இறக்குமதி செய்த நிலக்கரியைச் சேமித்து வைப்பதற்காகக் கடல் ஓரமாக ஒரு பெரிய கிடங்கைக் கட்டி வைத்திருந்தார். சிறிது காலத்தில் கடல் அலைகள் அந்தக் கிடங்கின் சுற்றுப்புறச் சுவர்களைத் தகர்த்துவிட்டன. அங்கு மீண்டும் சுவர்கள் எழுப்பப்பட்டன. கடல் அலைகள் மீண்டும் அச்சுவர்களை இடித்துத் தள்ளிவிட்டன. மறுபடியும் சுவர்களை எழுப்ப, மறுபடியும் கடல் அலைகள் அவற்றை நாசம் செய்ய, இப்படிப் பல தடவை நடந்துவிட்டன. ‘இனிச் சுவர் எழாது’என்ற நிலைமை ஏற்பட்டது.
செல்வராஜ் செட்டியார் விலை மிகுந்த அந்தக் கிடங்கைக் காப்பாற்ற எண்ணி, பிரான்ஸ் நாட்டிலுள்ள புகழ்பெற்ற என்ஜினீயர்களைக் கலந்து ஆலோசித்தார். சூயஸ் கால்வாயை நிர்மாணித்த பிரெஞ்சு என்ஜினீயர்கள், கடல் சம்பந்தப்பட்ட என்ஜினீயரிங் தொழிலில் உலகப்புகழ் பெற்றவர்கள், அவர்களுடைய ஆலோசனையின்பேரில், தம் கிடங்கைச் சுற்றி மீண்டும் சுவர்களை எழுப்பினார் செட்டியார். அந்தச் சுவர்களும் கடல் அலைகளின் தாக்குதலால் தகர்ந்து விழுந்துவிட்டன. ‘இனி, கடல் அரிப்பைத் தடுக்க முடியாது’என்பது தெளிவாகிவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாகக் கிடங்குக்குள் கடல் புகுந்துவிடும் அபாயம் அதிகமாயிற்று. பல லட்சங்கள் மதிப்புள்ள அந்தக் கிடங்கு கடல் அரிப்பில் சிக்கிக்கொண்டுவிட்ட செய்தியே அன்றைய நாளில் புதுவையின் முக்கிய செய்தியாகவும், பரபரப்பான செய்தியாகவும் உலவியது.
செட்டியார் பயனற்றுவரும் அந்தக் கிடங்கையும், அதைச் சார்ந்த இடத்தையும் விற்க முடிவு செய்து விலை பேசினார். ஆனால் அதை வாங்க யாரும் முன்வரவில்லை. இனி அதை விற்கவே முடியாது என்ற நிலை ஏற்பட்டு விட்டது. செட்டியார் இறுதியில், அந்தக் கிடங்கை அன்னை வாங்கிக் கொள்வாரா என்று கேட்டனுப்பினார். அந்தச் செய்தியை அன்னையிடம் கொண்டு சென்ற சாதகர்கள், அந்தக் கிடங்கைப் பற்றிய எல்லா விவரங்களையும் கூறினார்கள். எல்லாருமே ‘அந்த இடத்தை அன்னை வாங்கக் கூடாது’என்று நினைத்தார்கள். ஆனால், தமது கருத்தை அன்னையிடம் வலியுறுத்திப் பேசி அவர்களுக்குப் பழக்கம் இல்லை. அன்னை என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்று அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.
சற்று ஆழ்ந்த மௌனத்திற்குப் பிறகு அந்தக் கிடங்கை வாங்க ஒப்புக் கொள்ளுமாறு அவர்களிடம் கூறினார் அன்னை. அதைக் கேட்டவுடன் யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. ‘அந்தக் கிடங்கு சிறிது காலத்திற்குள் கடலால் அழிக்கப்பட்டுவிடும்’என்று எண்ணினார்கள். அதே சமயத்தில் அன்னையின் அபரிமிதமான சக்தியில் அவர்கள் அளவற்ற நம்பிக்கை வைத்திருந்தார்கள். ஆகவே, அன்னை கூறியபடி அந்தக் கிடங்கை விலைக்கு வாங்கிவிட்டார்கள். பிறகு, ‘இனி அந்த இடத்தில் என்ன செய்ய வேண்டும்?’என்று அன்னையிடம் கேட்டார்கள். அதற்கு அன்னை சுற்றுப்புறச் சுவர்களைக் கட்டச் சொல்ல, அப்படியே கட்டப்பட்டன. வழக்கம்போல அவை இடிந்துவிட்டன. மீண்டும் கட்ட, மீண்டும் இடிந்து விழ, இது தொல்லையின் தொடராக வளர்ந்துகொண்டு இருந்தது. இதை அறிந்த அன்னை, கட்டுமான வேலையை நிறுத்திவைக்கும்படிச் சொல்லி அனுப்பினார். அவ்வாறே செய்யப்பட்டது.
அன்று மாலை கிடங்கு இருந்த இடத்திற்கு அன்னை வந்தார். ஒரு நாற்காலியைக் கொண்டுவரச் செய்து, கடல் ஓரமாகப் போட்டு, அதில் சிறிது நேரம் உட்கார்ந்திருந்துவிட்டு எழுந்து வந்தார். சாதகர்களை அழைத்து அச்சுவர்களைத் தொடர்ந்து கட்டுமாறு கூறினார். மறுநாள் சுவர் கட்டப்பட்டது. அதற்குப் பிறகு அது இடியவில்லை. இன்றவரை அது உறுதியாக இருந்து வருகிறது.
கடற்கரையில் தாம் நாற்காலியில் உட்கார்ந்திருந்தபொழுது என்ன நடந்தது என்பதை பின்னொரு காலத்தில் விளக்கினார் அன்னை. அப்பொழுது கடல் தேவதை அன்னையிடம் வந்து, ‘கிடங்கு உள்ள இடம் எனக்குச் சேர வேண்டும். ஆகவே அந்த இடத்தை ஆக்கிரமித்துக்கொள்ள நான் முடிவு செய்து விட்டேன்’என்று கூறியது. ‘இந்த இடம் எனக்குத் தேவைப்படுகிறது. ஆகவே கடல் நீர் அதில் நுழையக்கூடாது’என்று அன்னை கேட்டுக்கொண்டார். பொதுவாக, எந்தத் தெய்வமாக இருந்தாலும் அன்னையின் சொல்லுக்கு உடனே கட்டுப்பட்டுவிடும். ஆனால் கடல் தேவதையோ தன் முடிவை மாற்றிக் கொள்ளாமல் மறுத்தது. நீண்ட நேரம் அதோடு விவாதம் செய்து, ‘ஆசிரமத்தில் நடக்கும் பணிக்கு இந்த இடம் தேவை’என்று விளக்கவே, கடல் தெய்வம் தன் முடிவை மாற்றிக்கொண்டு, அந்த இடத்தை அன்னையிடம் ஒப்படைத்தது.
*****