‘பராசக்தியின் திரு அவதாரம்’என்றும், ‘அன்னை’என்றும் பகவான் ஸ்ரீ அரவிந்தரால் அழைக்கப்பட்ட மீரா, பிரான்ஸ் நாட்டில் 1878இல் பிறந்தார். அவர் மிகச்சிறு வயதிலேயே ‘இறைவன் இன்னவன்’என்று இனம் கண்டு கொண்டவராக விளங்கினார். அவர் உறங்குகின்றபொழுது பல ஆசிரியர்கள் அவருடைய கனவில் தோன்றி, அவருக்குத் தேவையான ஆன்மீகப் பயிற்சியை அவ்வப்பொழுது அளித்து வந்தார்கள். இதன் பயனாக அவருக்கென ஒரு கொள்கை உருவாயிற்று. ‘இயல்பாகவே இறைத்தன்மை உடையது ஆன்மா. உடலில் இத்தன்மை வெளிப்படுவதில்லை. இருப்பினும், இவ்வுடல் இறைத் தன்மையை வெளிப்படுத்தும் தகுதி படைத்தது. இவ்வுடலிலும் இத்தகுதியைப் பெறுமாறு செய்ய வேண்டும்’என்பதே மீராவின் குறிக்கோளாக உருப்பெற்றது.
அவருக்கு 1914ஆம் ஆண்டு மகான் ஸ்ரீ அரவிந்தரைப் பாண்டிச்சேரியில் காண்கின்ற வாய்ப்பு ஏற்பட்டது. அப்பொழுது, தமது கனவில் மீண்டும் வந்து உபதேசித்த நல்லாசிரியர் இவரே எனக் கண்டுகொண்டார் அவர். ‘இறைத்தன்மையை இவ்வுடலில் வெளிப்படுத்துகின்ற புரட்சிகரமான பணிக்குப் பாண்டிச்சேரியே சிறந்த உறைவிடம்’என முடிவு செய்த மீரா, 1920ஆம் ஆண்டு முதல் பாண்டிச்சேரியிலேயே தங்கலானார். ‘ஸ்ரீ அரவிந்தரே தம் பணிக்கு வேண்டிய ஊக்கத்தையும், உதவியையும் அளிக்கக்கூடியவர் என்பதை உணர்ந்த அவர், ஸ்ரீ அரவிந்தரையே தம் ஆசிரியராக ஏற்றுக்கொண்டார். ஆனால் ஸ்ரீ அரவிந்தரோ அவரைப் பராசக்தியின் திரு அவதாரம் என்பதை வெளிப்படுத்தி, ‘எல்லாருக்கும் இவர் அன்னையாக விளங்குபவர்’என்று விளக்கினார். சாதகர்களிடத்தும், மற்றவர்களிடத்தும் மிகுந்த அன்பும், அக்கறையும் கொண்ட அவர், அன்னையாகவே விளங்கினார்.
ஸ்ரீ அரவிந்தருடைய கருத்துகளும், எழுத்தும் புரட்சிகரமானவை. அவை போலவே, அவர் வகுத்த யோக நெறியும் புரட்சிகரமானது. பலரும் அவருடைய கருத்துகளை அறிந்துகொள்ளவும், யோக நெறியில் பங்குகொள்ளவும் ஒரு வாய்ப்பினை ஏற்படுத்த எண்ணினார் அன்னை. அதன் பயனாக ஸ்ரீ அரவிந்தரின் பெயரால் ஓர் ஆசிரமம் உருவாயிற்று. இன்று அது உலகம் தழுவிய பெரும்புகழோடு பொலிகிறது. இது மற்ற ஆசிரமங்களைப் போல அல்லாமல் முற்றிலும் வேறுபட்ட ஒன்றாக இயங்கிவருகிறது. இங்கு ஆண்களும், பெண்களும் சாதகர்களாக இருந்துவருகிறார்கள். இவர்களிடையே இன, மத, மொழி வேறுபாடுகள் இல்லை. ‘செயல்களற்றுச் சும்மா இருப்பது’இங்கு யோகத்தின் முக்கிய நிலையாகக் கருதப்படவில்லை. ‘இடையறாது செயல்களைச் செய்து கொண்டே இருக்க வேண்டும்’என்ற கோட்பாட்டின் வழியே சாதகர் ஒவ்வொருவரும் தமக்கென்று கொடுக்கப்பட்ட வேலையைக் கவனத்தோடும், அக்கறையோடும் செய்வதை அங்குக் காணலாம்.
*****