‘ஸ்ரீ அரவிந்தாசிரமம் ஏற்றமிகு எதிர்காலச் சமுதாயத்தை உருவாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு சோதனைக்கூடம்’என்று சொல்வார் ஸ்ரீ அரவிந்தர். இதன் பொருள் என்ன? இப்பொழுதுள்ள மனித சமுதாயம் தன்னலம், பயம், பொறாமை, வெறுப்பு, பொய், ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இத்தீமைகளை வேரறுத்து, உண்மை, அன்பு, இரக்கம், தைரியம், தியாகம், ஆகியவற்றை மனித சமுதாயத்தில் நிலைபெறச் செய்ய வேண்டும். அவ்வப்போது தோன்றிய மகான்கள் மனித சமுதாயத்தில் நோயாகப் பரவிக்கிடக்கும் தீமைகளோடு போராடிவந்தாலும், கட்டிய அணையையே திரும்பத் திரும்பக் கட்டிய கதையாகிவிட்டது. கட்டிய அணை சிறிது காலம் தாக்குப் பிடிக்கும். பிறகு தகர்ந்துபோய்விடும். ஆதலால் அத்தீமைகளை ஒடுக்குவதால் பயன் இல்லை. அவற்றை அடியோடு ஒழிப்பதன் மூலம்தான் ஒரு நிரந்தரமான வழியைக் காண முடியும். இவ்வழியை வகுக்கவும், வகுத்த வழியில் செயல்படுவதற்காகவும் ஏற்படுத்தப்பட்ட ஒரு சிறு சமுதாயம்தான் ஸ்ரீ அரவிந்தாசிரமம்.
பாண்டிச்சேரியில் கடற்கரைக்கு அண்மையில் அமைதி தவழும் சூழலில் அமைந்துள்ளது ஸ்ரீ அரவிந்தாசிரமம். ஆசிரமத்தின் நான்கு பக்கங்களிலும் சாலைகள் இருக்கின்றன. ஆசிரமத்தில் நுழைந்தவுடன் கிழக்கு மேற்காக அமைந்துள்ள சமாதிக் கட்டடம் காணப்படும். அதில் ஸ்ரீ அரவிந்தர், அன்னையின் திருமேனிகள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. இச்சமாதி வெள்ளைப்பளிங்குக் கற்களால் கட்டப்பட்டிருக்கிறது. சமாதியின் மேற்பரப்பு பல வகையான பூக்களால் ஒவ்வொரு நாளும் அலங்கரிக்கப்படுகிறது. மலர்கள்பால் அன்னைக்குள்ள ஈடுபாட்டை விளக்குவதைப் போன்று ஆசிரமம் முழுதும் மலர்ச்செடிகள் நிறைய இருக்கின்றன. சமாதியை ஒட்டி வடக்கே ஒரு பெரிய மரம் அடர்ந்த நிழலைப் பரப்பிக்கொண்டிருக்கிறது. இதை ‘Service tree’என்று அழைக்கிறார்கள்.
சிறிது உள்ளே போனால் வடகிழக்குப் பகுதியில் அன்னையார் உபயோகித்த ஓர் இரும்புக் கட்டிலைப் பார்க்கலாம். இந்தக் கட்டிலில்தான் 1973, நவம்பர் 17ஆம் தேதி அன்னையார் மகாசமாதி அடைந்தார்கள். இதன் முன்பு பல சாதகர்கள் உட்கார்ந்து தியானம் செய்துகொண்டிருக்கும் காட்சியைக் காணலாம். இப்படுக்கைக்குத் தென்புறமாக மாடிக்குச் செல்லும் வழி இருக்கிறது. முதல் மாடியில் வலப்புறமாக இருப்பது ஸ்ரீ அரவிந்தரின் அறை. இங்கு அவர் உபயோகித்த மரக்கட்டில் உள்ளது. இதில் புலித்தோல் விரித்து வைக்கப்பட்டு இருக்கிறது. இக்கட்டிலில்தான் 1950, டிசம்பர் 5ஆம் தேதி மகாசமாதி அடைந்தார், ஸ்ரீ அரவிந்தர். இந்த அறை தினமும் காலை 9.30க்குத் திறக்கப்படுகிறது. சாதகர்களுடைய அல்லது வெளியிலிருந்து வரும் பக்தர்களுடைய பிறந்த தினமாக இருக்குமானால், ஸ்ரீ அரவிந்தரின் கட்டிலுக்கு எதிரில் அமர்ந்து சுமார் முப்பது நிமிடங்கள் தியானம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். இது தவிர ஸ்ரீ அரவிந்தருடைய அறையைத் தரிசிக்க வருபவர்கள் யாராக இருந்தாலும், அங்கு ஓரிரு நிமிடங்களே தங்கித் தரிசித்துச் செல்ல வேண்டும்.
ஸ்ரீ அரவிந்தரின் அறையிலிருந்து மேற்குப் பக்கமாகச் சென்றால் இரண்டாவது மாடிக்குச் செல்லும் வழியைப் பார்க்கலாம். இரண்டாவது மாடியில் அன்னையாரின் அறை இருக்கிறது. இது பக்தர்களுடைய தரிசனத்திற்காக வருடம் இரு முறை திறக்கப்படுகிறது. ஆசிரமத்தின் மற்ற பகுதிகளில் சாதகர்களுடைய அறைகள் இருக்கின்றன. இவற்றில் பல மூத்த சாதகர்கள் இருந்துவருகிறார்கள்.
ஆசிரமத்தில் எந்தப் பகுதிக்குச் சென்றாலும், ஓர் ஆழ்ந்த அமைதி நிலவுவதை உணரலாம். தரிசனக் காலங்களில் ஆயிரக்கணக்கான ஆண், பெண்களும், குழந்தைகளும், வயோதிகர்களும் ஆசிரமத்தில் நிறைந்து இருப்பார்கள். ஆனாலும் கூச்சலோ, ஆரவாரமோ சிறிதுகூட இருக்காது. ஆசிரமத்தின் எல்லா இடங்களும் துப்புரவாகக் காட்சி அளிக்கும். எல்லாச் சாதகர்களும் தும்பைப் பூவைப் போன்ற வெண்மை ஒளி வீசும் உடைகளை அணிந்திருப்பார்கள்.
ஆசிரமத்தின் வாசற்கதவுகள் காலை நாலரை மணிக்குத் திறக்கப்பட்டு, இரவு பதினொரு மணிக்கு மூடப்படுகிறது. இதற்கு இடைப்பட்ட நேரத்தில் சாதகர்களும், பக்தர்களும் சமாதியை வணங்கிச் சென்றவண்ணமாக இருப்பார்கள்.
ஆசிரமத்தில் நிரந்தரமாகத் தங்கியுள்ள சாதகர்களுக்கும், விருந்தினராக வருகை தருபவர்களுக்கும் ஆசிரமத்திற்குச் சொந்தமான சமையற்கூடத்தில் உணவு பரிமாறப்படுகிறது. இங்குள்ள உணவு சத்து நிறைந்த உணவாக இருக்க வேண்டும் என்ற நோக்கோடு தயாரிக்கப்படுகிறது. கைக்குத்தல் அரிசி இங்கு மிகுதியாகப் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு வேளையிலும் பத்தாயிரம் நபர்கள் வந்தாலும், காலதாமதம் இல்லாமல் உணவளிக்கக்கூடிய அளவில் வசதிகள் நிறைந்ததாக இந்த உணவுக்கூடம் அமைந்திருக்கிறது. இங்கு புழங்கப்படும் ஒவ்வொரு பாத்திரமும் வெந்நீரில் கழுவப்பட்ட பிறகே உபயோகிக்கப்படுகிறது. சுத்தம், சுகாதாரம் என்ற கடுமையான கட்டுப்பாடுகள் இதன் சிறப்பு அம்சங்கள்.
உடற்பயிற்சி இங்கு முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. சாதர்கள் அனைவரும் உடற்பயிற்சி செய்கிறார்கள். இதற்கு வயது வரம்பு இல்லை. அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள்கூட இந்தப் பயிற்சியில் சுறுசுறுப்பாகப் பங்கு கொள்வார்கள். ‘இறை பணிக்குத் தம்மை அர்ப்பணித்துக்கொள்கிறவர்கள் வைராக்கிய சித்தம் உள்ளவர்களாக இருந்தால் மட்டும் போதாது, நல்ல ஆரோக்கியம் நிறைந்த உடலை உடையவர்களாகவும் இருத்தல் வேண்டும்’ என்பது அன்னையாரின் கொள்கையாகும். இங்கு பற்பல பயிற்சிகளுடன் மல்யுத்தம், கராத்தே போன்ற பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.
அடுத்து, ஆசிரமத்தில் இருக்கும் சிறுவர்களுக்காக ஒரு பள்ளியும், இளைஞர்களின் மேற்படிப்புக்காக ஒரு கல்லூரியும் நடத்தப்படுகின்றன. இங்கு அளிக்கப்படும் கல்வி முறை மற்ற இடங்களில் அளிக்கப்படும் முறைகளுக்கு முற்றிலும் மாறுபட்டது. இங்கு மாணவர்களுக்குப் பூரணச் சுதந்திரம் அளிக்கப்படுகிறது. தனக்கு எந்த ஆசிரியர் தேவை என்று ஒரு மாணவன் விரும்புகிறானோ, அவனே அவரைத் தேர்ந்து எடுத்துக்கொள்ளலாம். எந்தப் பாடங்களைக் கற்க வேண்டும் என்று எண்ணுகிறானோ, அவற்றை அந்த மாணவனே முடிவு செய்துகொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட பாடத்திட்டம் என்றோ, அல்லது ஒரு குறிப்பிட்ட பாடத்தைப் பயில வேண்டும் என்றோ ஒரு வரையறை இல்லை. அதனால் மாணவன், ஆசிரியரைக் கலந்து ஆலோசிக்கத் தேவை இல்லை என்பதில்லை, எதுவும் எல்லை மீறாமல் கண்காணிக்கப்படுகிறது.
இங்குள்ள பள்ளியிலும், கல்லூரியிலும் மாணவர்களும், மாணவிகளும் இணைந்தே பயில்கிறார்கள்; நெருங்கியும் பழகுகிறார்கள். அதனால் அவர்களிடையே சகோதரபாவமே நிலவுகிறது. ‘சிறு நோக்கங்களைத் துறந்து ஆணும், பெண்ணும் இன வேறுபாடின்றிப் பழக வேண்டும்’என்பது அன்னையாரின் கருத்தாகும். இங்குள்ள நூல் நிலையத்தில் பல்லாயிரக்கணக்கான நூல்கள் இருக்கின்றன. அவற்றை மாணவர்களே நேரிடையாகத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
இன்னும் பல துறைகள் ஆசிரமத்தின் அங்கங்களாக இயங்குகின்றன. தச்சுத்தொழிற் பிரிவு, மோட்டார் வாகனங்களைப் பழுது பார்த்து, பராமரிக்கின்ற பிரிவு, பூச்செடிகளைச் சிறு தொட்டிகளில் வளர்த்து ஆங்காங்கு அழகுபட அமைக்கும் பிரிவு, சாதகர்களின் உடைகளைச் சலவை செய்யும் பிரிவு, ஊதுபத்தி தயாரிக்கும் பிரிவு எனப் பல பிரிவுகள் இங்கு உயிர்த்துடிப்புடன் இயங்குகின்றன. இவற்றைத் தவிர ஆசிரமத்திற்குச் சொந்தமான பல தோட்டங்கள் புதுவையில் இருக்கின்றன. இங்குப் பழவகைகள், காற்கறிகள், நெல் போன்றவை பயிரிடப்பட்டு, ஆசிரமத்தின் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றன. இங்குக் கையால் செய்யும் காகித ஆலை ஒன்றும் உள்ளது. அதில் தயார் செய்யப்படும் காகிதங்கள் இந்தியாவில் உன்னதமான இடத்தைப் பெற்றிருக்கின்றன. ஆசிரமத்தில் அச்சுக்கூடம் ஒன்று இயங்கி வருகிறது. இது ஸ்ரீ அரவிந்தாசிரமத்தின் அச்சுத் தேவையைப் பூர்த்தி செய்கிறது. மேலும் இது 1972ஆம் ஆண்டில் ஸ்ரீ அரவிந்தரின் நூற்றாண்டை ஒட்டி அவருடைய நூல்களை முப்பது பகுதிகளாக அச்சிட்டுக் கொடுத்ததற்காக இந்திய அரசாங்கத்தின் முதற் பரிசைப் பெற்றது.
ஏற்றமிகு எதிர்கால சமுதாயத்தை உருவாக்குவதற்காக எழுந்த ‘ஸ்ரீ அரவிந்தாசிரமம்’என்ற சோதனைக்கூடத்தில் கர்மயோகம் பூரண யோகத்தின் ஆதாரச்சுருதியாக அமைந்திருக்கிறது.
******