Skip to main content
Karmayogi

Main navigation

  • Home
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home
  2. அன்னையின் தரிசனம்
  3. பாகம் 1
  4. பகுதி 2

04. இருள் நீங்கியது

அவர் ஓர் அமெரிக்கர். பல வருடங்களாக ஸ்ரீ அரவிந்தாசிரமத்தில் சாதகராக இருந்துவருகிறார். ஒரு நாள் அவருடைய வீட்டிலிருந்து அவருக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் அவருடைய மூத்த சகோதரர் திவாலாகி விட்டதாகவும், அதை அவர் சட்டப்படி அறிவிக்கப்போவதாகவும் எழுதப்பட்டு இருந்தது. அந்த நிலை ஏன் ஏற்பட்டது என்ற விவரம் கடிதத்தில் இல்லை. அதனால் அந்த அமெரிக்கச் சாதகர் மிகவும் வருந்தினார்.

பல ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீ அரவிந்தாசிரமத்துக்கு வந்த அவர், அங்கு நிரந்தரமாகத் தங்கிவிட்டார். அச்சமயம் தம்முடைய மொத்த ஆஸ்தியான சில இலட்சங்களை அன்னைக்குக் காணிக்கையாகக் கொடுத்தார். அவர் அங்கே வந்த சில வருடங்களில் அவருடைய தந்தையும், தாயும் தம் மகனைப் பார்ப்பதற்காக ஆசிரமத்துக்கு வந்தார்கள். அப்பொழுது அவர்களுக்கு அன்னையின் தரிசனம் கிடைத்தது.

சாதகரின் மூத்த சகோதரர் எப்படித் திவால் ஆனார் என்பது புரியாத குழப்பமாக இருந்தது. அவர் மிகவும் திறமைசாலி. பல துறைகளில் ஆழ்ந்த அறிவும், அனுபவமும் உள்ளவர். கணிசமான ஊதியத்தோடு ஒரு நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த அவர், அதை விட்டுவிட்டுத் தம் தந்தை நடத்திவந்த தொழிலில் ஈடுபட்டார்.

அது ஒரு சிறு தொழில்தான். ஆனால் திட்டமிட்ட செயல் வகை, திறமையான உழைப்பு ஆகியவை காரணமாக, அந்தச் சிறு நிறுவனம் படிப்படியாக உயர்ந்து வளம் கொழித்தது. இந்த நிலையில் பல்வேறு நாடுகளில் ஏராளமான கிளைகளைக் கொண்ட ஒரு பிரபல நிறுவனம், மேற்கூறிய நிறுவனத்தை வாங்கி அதையும் தம் கிளைகளில் ஒன்றாக ஆக்கிக்கொண்டது. ஆனாலும் அந்நிறுவனம் சுதந்திரமாகச் செயல்படுகின்ற அளவுக்கு எல்லா விதமான உரிமைகளும் கொடுக்கப்பட்டிருந்தன. இந்த ஏற்பாட்டினால் சாதகரின் தந்தைக்கு வழக்கமாகக் கிடைத்துவந்த லாபத்தைவிடப் பன்மடங்கு லாபம் கிடைத்தது.

அவர் வரவு, செலவுகளைப் பார்த்துக்கொண்டார். அவருடைய மூத்த மகன் -சாதகரின் சகோதரர்- சட்டப் பிரச்சினைகளைக் கவனித்துக் கொண்டார். சட்டப் பிரச்சினைகளை அவர் மிகச் சாமர்த்தியமாகக் கையாண்ட காரணத்தால் அவருடைய திறமை தாய் நிறுவனத்தால் அதிகம் பாராட்டப்பட்டது. இன்னும் அதிகமான ஊதியத்தில் ஓர் உயர்ந்த பதவியை ஏற்குமாறு தாய் நிறுவனம் அவரைக் கேட்டுக்கொண்டது.

தம் தந்தையுடன் இருந்துகொண்டே மேலும் மேலும் வருவாயைப் பெருக்கி விடலாம் என்ற உறுதியான நம்பிக்கை இருந்தது அவருக்கு. அதனால் தாய் நிறுவனம் கொடுத்த வாய்ப்பை அவர் ஏற்கவில்லை. கிளை நிறுவனத்தில் அவருடைய தந்தை பிரஸிடெண்டாகவும், அவர் வைஸ்-பிரஸிடெண்டாகவும் இருந்துவந்தார்கள். அவர்கள் பல புதிய யுக்திகளைக் கையாண்டதன் மூலம் வியாபாரம் பன்மடங்காக உயர்ந்தது.

இந்த நிலையில்தான் சாதகராக இருக்கும் அவருடைய இரண்டாவது மகன், இந்தியாவுக்கு வந்து ஆசிரமத்திலேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டார்.

பொதுவாகப் பலர் ஆசிரமத்துக்கு வருவதற்கு ஒரு காரணம் உண்டு. வாழ்க்கையில் வெற்றி பெற இயலாதவர்கள், தமது குறையை மறைப்பதற்காக ஆசிரம வாழ்க்கையை ஒரு போர்வையாக உபயோகிப்பது வழக்கம். சாதகருடைய சகோதரர் அவரைவிடப் பத்து வயது மூத்தவர். அவர் தம் தம்பி ஆசிரமத்தில் சேர்ந்ததற்கு, வாழ்க்கையில் அவரால் வெற்றி பெற முடியாததுதான் காரணம் என்று நினைத்தார். தம்பியைப் பார்ப்பதற்கு அவருடைய பெற்றோர் ஆசிரமத்துக்கு வந்தபோதுகூட அவர்களுடன் அவர் வரவில்லை. வெற்றியைக் குவித்துக்கொண்டிருந்த அவர், வாழ்க்கையில் தோற்றுப்போன ஒருவரை ஏன் பார்க்க வேண்டும் என்று நினைத்திருக்கலாம்!

ஆண்டுகள் பல சென்றன. சாதகரின் தந்தையும், சகோதரரும் தமது நிறுவனத்தை உச்சக்கட்டத்துக்கு உயர்த்தி இருந்தார்கள். வயதாகிவிட்ட தந்தையார், நிறுவனத்தின் முழுப் பொறுப்பையும் தம் மூத்த மகனிடம் ஒப்படைத்துவிட்டு ஓய்வு எடுத்துக்கொண்டார். அந்தச் சமயத்தில் அந்நிறுவனத்தின் மூலதனம் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருந்தது. தந்தையின் பிரஸிடெண்ட் ஸ்தானத்தையும் ஏற்ற சாதகரின் சúôகதரர், புதிய மாறுதல்களைத் தொழிலில் புகுத்தினார். கம்ப்யூட்டர் போன்ற நவீனக் கருவிகள் தொழிலில் உபயோகப்படுத்தப்பட்டன. அதனால் அந்த நிறுவனம் இதற்கு முன்பு இருந்ததைவிடப் பல மடங்கு பெருகி உயர்ந்தது.

இதற்கு நடுவில் மிகப்பெரிய பணக்காரக் குடும்பத்துப் பெண்ணுக்கும், அவருக்கும் திருமணம் நடந்தது. அதற்குப் பிறகு என்ன காரணத்தாலோ, தகப்பனாருக்கும், அவருக்கும் கருத்து வேறுபாடுகள் தோன்ற ஆரம்பித்தன. அவை மேலும் மேலும் வளரவே, இருவருக்குள்ளும் பேச்சுவார்த்தை இல்லாத நிலை ஏற்பட்டது. இப்பொழுது அவர், தொழிலைப் பற்றிய எதையும் தந்தையிடம் கூறுவதில்லை. அதனால் தொழிலின் நிலை என்ன என்பதுகூடத் தந்தைக்குத் தெரியாமல் போய்விட்டது.

ஆசிரமத்தில் உள்ள சாதகருக்குத் தம் அண்ணனைப் பற்றிக் கிடைத்த விவரம் ஏதோ ஒன்றிரண்டுதான். இப்போது கம்ப்யூட்டர் பிரிவில் ஏராளமான வருவாய்க்கு வழி ஏற்பட்டிருக்கின்றது என்பதும், நகரத்தின் முக்கியப் பகுதியில் நிறுவனத்தின் தலைமையகம் மாற்றப்பட்டுள்ளது என்பது மட்டுமே ஆசிரமத்துச் சகோதரருக்குக் கிடைத்த செய்திகள். இந்தச் செய்திகளும் வேறு நபர்கள் மூலம் கிடைத்தவைதாம். ஆனால் இதே செய்திகள் அருகிலிருந்த தந்தைக்கு மிகத் தாமதமாகவே கிடைத்தன. ஆசிரமத்தில் சாதகராக இருந்துவந்த சகோதரருக்கு அந்தச் செய்திகள் வந்துசேர இன்னும் பல மாதங்கள் ஆகலாம். சில சமயங்களில் எந்தச் செய்தியும் வருவதில்லை. அப்படி வரும் செய்தியும் முழுமையாக இருப்பதில்லை; அரைகுறையாகவே இருக்கும்.

திடீரென்று செய்திகள் வேறு விதமாக வர ஆரம்பித்தன. ‘மூத்த சகோதரரின் தொழில் சரிவர இல்லை’என்ற பொருளில் சாதகருக்கு ஒரு கடிதம் வந்தது. ‘அந்த நிறுவனத்தில் ஆள் குறைப்புச் செய்யப்பட்டது’ என்ற செய்தியும், இப்பொழுது, ‘இங்கே இரண்டு பேரே வேலை செய்கிறார்கள்’ என்ற செய்தியும் அடுத்தடுத்து வந்தன. பிறகு, ‘மூத்த சகோதரர் தொழில் நடத்திவந்த இடத்தைக் காலி செய்துவிட்டு வீட்டிலிருந்தபடியே வேலை செய்து வருகிறார்’என்ற செய்தி கடைசியாக வந்தது.

மிக லாபகரமாக நடந்துவந்த தொழில் திடீரென்று நசித்துப்போகக் காரணம் என்ன? நல்ல வருவாயை ஈட்டித்தந்த கம்ப்யூட்டர் பிரிவு ஏன் கொடுக்கவில்லை? ஒன்றுமே புரியவில்லை. இந்தக் கட்டத்தில்தான் முதலில் குறிப்பிட்ட அந்தக் கடிதம் - மூத்த சகோதரர் திவாலாகிவிட்டதாகவும், அதை அவர் சட்டப்படி அறிவிக்கப்போவதாகவும் எழுதப்பட்டிருந்த கடிதம் - சாதகருக்குக் கிடைத்தது. அந்தச் செய்தி அவரை மிகவும் பாதித்திருக்க வேண்டும். ஒரே கவலையாகக் காணப்பட்டார். பந்தத்தைச் சுலபமாக அறுத்துக் கொண்ட அவரால், பாசத்தை அறுக்க முடியவில்லை.

அவருடைய மனப்பாதிப்பையும், அதற்கான செய்தியையும் அறிந்த நான், அவரிடம் சொன்னேன்: ‘நீங்கள் உங்கள் சகோதரருக்குக் கடிதம் எழுதுவது இல்லை என்பதும், அப்படியே நீங்கள் எழுதினாலும் உங்கள் கருத்துக்கு அவர் முக்கியத்துவம் கொடுக்கமாட்டார் என்பதும் எனக்குத் தெரியும். ஆனால் இப்பொழுது சந்தர்ப்பம் மாறியிருக்கிறது. இந்தச் சமயத்தில் நீங்கள் எதை எழுதினாலும் அதை அவர் ஏற்றுக்கொள்வார் என்று நினைக்கிறேன். அவரைப் பற்றிக் கிடைத்த அரைகுறையான செய்திகளிலிருந்து அவருடைய தொழிலில் என்ன குறை, எந்த இடத்தில் தவறு ஏற்பட்டிருக்கிறது என்பன எனக்குப் புலப்படவில்லை. அவை தெரியாவிட்டாலும் பரவாயில்லை, ஒன்றை மட்டும் முக்கியமாகக் கருத வேண்டும். நீங்கள் இங்கு (ஆசிரமத்தில்) சாதகராக இருப்பதுதான் அது. உங்களுடைய சகோதரரைத் திவாலாகாமல் தடுக்க, நீங்கள் இங்கே சாதகராக இருக்கின்ற ஒன்றே போதுமானது. உங்களுடைய சகோதரருக்கு நேரடியாகவோ அல்லது உங்கள் தகப்பனார் மூலமாகவோ கடிதம் எழுதுங்கள். உங்களுடைய கடிதம் போய்ச் சேர்ந்த உடனேயே பலன் தெரியும்'.

‘என் அண்ணனின் மனைவி எனக்கு அடிக்கடி கடிதம் எழுதுவது உண்டு. ஆகவே அவருக்குக் கடிதம் எழுதலாம் என்று நினைக்கிறேன். ஆனால் அண்ணன் என்னை எப்போதுமே ஒரு பொருட்டாக நினைப்பதில்லை. அப்படிப்பட்டவர் என் கருத்தை எப்படி ஏற்கப்போகிறார்?’என்று கேட்டார் சாதகர்.

‘தயங்காதீர்கள். உங்களின் அண்ணிக்கு அன்னையின் கோணத்தில் இருந்து, எப்படி ஒரு நிறுவனத்தை நடத்த வேண்டும் என்று எழுதுங்கள். நிச்சயம் பலன் கிடைக்கும்’என்று அவரை ஊக்குவித்தேன் நான்.

நான் சொன்னதை அவர் ஏற்றுக்கொண்டார். இருவருமாகச் சேர்ந்து அவர் எழுதப்போகிற கடிதத்துக்கு வேண்டிய விவரங்களைச் சேகரித்தோம். அந்தக் கடிதத்தின் இறுதிப் பகுதி, ‘இதுவரை சட்டப்படி திவாலாகிவிட்டதாக அறிவிக்கப்படாமல் இருந்தால், இனி அதை அறிவிக்க வேண்டாம்’ என்று அமைந்திருந்தது. அன்னையிடம் நம்பிக்கை வைத்த பலர், மோசமான வீழ்ச்சியில் இருந்து மீண்டும் புத்துயிர் பெற்ற பல நிகழ்ச்சிகளையும், அன்னையின் கருத்துப்படி என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதையும் கடிதத்தில் விளக்கமாக எழுதியிருந்தோம்.

பிறகு நான், ‘இதில் முக்கியமான ஒன்று உண்டு. அன்னைக்கு ஒரு சிறு காணிக்கையை உங்கள் சகோதரன் அனுப்ப வேண்டும். ஆனால் இப்பொழுதுள்ள நிலையில் அவரிடம் இதை எப்படித் தெரிவிப்பது?’ என்று கேட்டேன்.

‘எங்களுடைய மதக் கோட்பாட்டின்படி ஒரு சிறு தொகையைக் காணிக்கையாகக் கொடுப்பது வழக்கமான ஒன்றுதான்’என்றார் அவர்.

இனிச் சிக்கல் இல்லை. கடிதத்தில் பத்து டாலரைக் காணிக்கையாக அனுப்பும்படி எழுதி, அனுப்பிவைத்தோம்.

இரண்டு வாரங்கள் சென்றன. சாதகருடைய பெற்றோர், ‘திவாலாகி விட்டதாகச் சட்டப்படி அறிவிக்க வேண்டும் என்ற முயற்சி கைவிடப்பட்டது. உன் அண்ணன் நீ எழுதியுள்ள கருத்துகளை ஏற்றுச் செயல்படுவதாகக் கூறினான். அவன் அன்னைக்குக் காணிக்கையாக இருபது டால்களை அனுப்பி உள்ளான். அதோடு நாங்களும் நூறு டால்களைச் சேர்த்துக் காணிக்கையாக அனுப்பியுள்ளோம்’என்ற தந்தி கொடுத்திருந்தார்கள்.

அதற்குப் பிறகு பல மாதங்கள் வரை சாதகரின் சகோதரரைப் பற்றிய எந்தச் செய்தியும் வரவில்லை. ஒரு நாள் அண்ணியிடமிருந்து கடிதம் வந்தது. அது ஒரு சம்பிரதாயக் கடிதந்தான். சாதகர் எழுதிய கடிதத்துக்கு நன்றி தெரிவித்துவிட்டு, அதிலுள்ள கருத்துகளைத் தம் கணவர் கவனமாகப் பின்பற்றுவதாக எழுதியிருந்தார் அவர்.

மேலும் சில மாதங்கள் சென்றன. சாதகரின் சகோதரருக்கும், பெற்றோருக்கும் ஏற்பட்டிருந்த பிளவு அதிகமாகவே, சகோதரர் வேறு ஊருக்குத் தம் குடும்பத்தை அழைத்துச் சென்றுவிட்டதாகச் செய்தி வந்தது. மேலும் பல மாதங்கள் ஓடின. நல்ல செய்திகள் வர ஆரம்பித்தன. சகோதரருக்கும், பெற்றோருக்கும் இருந்த மனத்தாங்கல் மறைந்துவிட்டது. அவர்களுக்குள் மீண்டும் தொடர்பு வளர்ந்து நெருக்கம் ஏற்பட்டது. தொழிலில் முன்னேற்றம் விளைந்து கொழித்தது. பிறகு ஒரு நாள் ‘மூத்த சகோதரருக்குத் தொழிலில் நல்ல திருப்பம் ஏற்பட்டுப் பொருளாதார நிலை சீரடைந்துவிட்டது’என்ற செய்தி வந்தது. இந்தச் செய்திகள் மற்றவர்கள் மூலமே கிடைத்தன. சில மாதங்களுக்குப் பிறகு சாதகருக்கு அவருடைய தந்தையிடமிருந்து ‘டிரங்க்கால்’ வந்தது. அவர் தொடர்புகொண்டு பேசினார்.

அன்று தந்தையாரின் பிறந்த தினம். அந்த நன்னாளில் தம் மகனோடு பேச விரும்பிப் போன் செய்திருந்தார் அவர். ‘உன் அண்ணனின் கம்ப்யூட்டர் பிரிவு நல்ல லாபகரத்தோடு முன்னேறிவருகிறது. பெரிய பெரிய நிறுவனங்கள் பல வகையான ‘கம்ப்யூட்டர் புரோக்ராம்'கள் வேண்டும் என்று கேட்டு ஆர்டர்களை அனுப்பியவண்ணம் இருக்கின்றன’ என்று தந்தையார் கூறினார்.

அவர் கூறியதிலிருந்து அவருடைய மூத்த மகன் திவால் நிலையில் இருந்து விடுபட்டுவிட்டார் என்பதும், அவருடைய வாழ்க்கையில் மூடிக்கிடந்த இருள் முற்றும் நீங்கிவிட்டது என்பதும் தெளிவாயின.

இதுதான் அன்னையின் பேரருட்சக்தி. அவரை நெஞ்சார நினைத்தாலே போதும், வாழ்க்கையில் நிமிர்ந்து நிற்பதற்கு. வாழ்க்கையில் நிமிர விரும்புபவர்கள் எல்லாம் அன்னையிடம் தம்மை ஒப்புக்கொடுத்து, வான் அளவுக்கு உயர்ந்து இருக்கிறார்கள்.

*****

Book traversal links for 04. இருள் நீங்கியது

  • 03. அழைத்தால் உடன் வருவார்
  • Up
  • 05. ரிஷ்யசிருங்கர் ராபர்ட்

Book navigation

  • அன்னையின் திருவடிகள்
  • பாகம் 1
    • பகுதி 1
    • பகுதி 2
      • 01. அன்னையின் தரிசனம்
      • 02. தீண்டிய திருவடி
      • 03. அழைத்தால் உடன் வருவார்
      • 04. இருள் நீங்கியது
      • 05. ரிஷ்யசிருங்கர் ராபர்ட்
      • 06. வால்டர்
      • 07. விதிக்கு விதி செய்யும் அன்னை
      • 08. பக்தியால் பல கோடிகள்
      • 09. சிறு காணிக்கை கொண்டுவந்த பெருஞ்செல்வம்
      • 10. கைகொடுத்த கருணை
    • பகுதி 3
    • பகுதி 4
  • பாகம் 2
RSS feed
Powered by Drupal