காலை மணி பத்து. என் நண்பர் ஒருவர் என் வீட்டிற்கு வந்தார். அவர் வெள்ளையருக்குச் சொந்தமான ஒரு பெரிய ஆலையில் வேலை பார்த்து வந்தார். வந்தவர் பதற்றமாகக் காணப்பட்டார். ஒருவாறு சமாளித்துக்கொண்டு தம்முடைய கம்பெனியின் மிகப்பெரிய அதிகாரி என்னைக் காண வந்திருப்பதாகச் சொன்னார். அவர் சொல்லி முடிப்பதற்குள் குறிப்பிட்ட அதிகாரியே அங்கு வந்துவிட்டார். அந்த மனிதர் மிகவும் அடக்கமாகவும், மரியாதையாகவும் காணப்பட்டார். அவர் எதற்காகவோ தயங்குவது எனக்குத் தெரிந்தது. எதற்காக அப்படித் தயங்குகிறார் என்பதை என்னால் யூகிக்க முடியவில்லை. இதற்கிடையில் என் நண்பர் நின்றுகொண்டே இருந்தார். அவருக்குத் தம் மேலதிகாரியின் எதிரே உட்காருவதற்குப் பயம்! அது மட்டுமன்று, நானும், அவருடைய அதிகாரியும் பேசுவதைக் குறிப்பு வேறு எடுத்துக்கொண்டு இருந்தார்.
அந்த அதிகாரி, மரியாதை காரணமாக என் நலத்தை விசாரித்துவிட்டு, ‘நீங்கள் ஆசிரமத்துக்குப் போவதாக நான் கேள்விப்பட்டேன்’என்று ஆச்சரியத்தோடு விளித்தார். அவர் பேச்சின் த்வனி, ஏதோ செய்யக்கூடாத ஒரு காரியத்தை நான் செய்துகொண்டிருப்பதைச் சுட்டிகாட்டுவதைப் போல இருந்தது. ‘சிலரைப் போல இவரும் ஆசிரமத்தின் புனிதத்தைப் புரியாதவர்’என்று நான் தெரிந்துகொண்டேன். ஆனால், நான் பதிலிறுக்கவில்லை.
அவரும் என் பதிலை எதிர்பார்க்கவில்லை. ‘ஆசிரமத்தால் நடத்தப்படும் விடுதிகளில் நான் அடிக்கடி தங்கியிருக்கிறேன். அங்கு நிலவும் புனிதமான அமைதியை உணர்ந்திருக்கிறேன். அந்த விடுதிகளிலேயே அவ்வளவு அமைதி இருக்குமானால், ஆசிரமத்தில் எவ்வளவு அமைதி இருக்கும்?’என்று கேட்டார் அவர்.
அதைக் கேட்டதும், அவரைப் பற்றி எனக்கு எழுந்த அபிப்பிராயம், ‘இவர் ஏதோ ஓர் இக்கட்டான நிலையில் இருக்கிறார். அதனால்தான் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார்’என்பதாகும்.
என் கணிப்பை உறுதிப்படுத்துவதைப்போல் தமக்குள்ள சிரமத்தைக் கூறினார் அவர். ‘பொதுவாக, நிதானமாகச் செயல்பட முடியவில்லை. ஆசிரம விடுதிகளில் நான் தங்க ஆரம்பித்ததிலிருந்து இந்தச் சிரமம் குறைந்து காணப்படுகிறது’.
மேலும், நான் ஏன் ஆசிரமத்துக்குப் போகிறேன், எனக்கும் ஏதாவது அவருக்குள்ளன போன்ற சிரமங்கள் உண்டா என்றெல்லாம் கேட்டுவிட்டு, மேலும் மேலும் கேள்விகளை அடுக்கிக்கொண்டேபோனார் அவர். கேள்விகளைக் கேட்க வேண்டும் என்பதற்காக அவர் கேள்விகளைக் கேட்பதாகப்பட்டது எனக்கு. ஏதோ ஒரு வேதனை என் தலை மூலமாக இறங்கி, என் உடல் முழுவதும் பரவியதை உணர்ந்தேன். என் கழுத்துப் பகுதியில் வேதனை அதிகமாகத் தொடங்கி, தாங்க முடியாத அளவுக்கு வந்துவிட்டது.
அவரோ தாம் ஒரு பெரிய அதிகாரி என்பதைக் கவனத்திற்குக் கொண்டு வந்தவரைப்போல, ஆரம்பத்தில் வெளிப்பட்ட விரும்பத்தகாத தம் மன உணர்வினைக் கட்டுப்படுத்திக்கொண்டு, மிக அமைதியாகக் காணப்பட்டார். அடுத்து நான் என்ன சொல்லப்போகிறேன் என்பதை எதிர்பார்த்துக்கொண்டு இருந்தார். நான் என்ன சொல்வது? அவருக்கு ஏற்பட்டுள்ள சிரமம் சாதாரணமானதில்லை, நாள்பட்ட ஒன்று என்பது எனக்குத் தெளிவாகிவிட்டது. அவரோ எனக்குப் புது அறிமுகம். எதையும் கேட்டுக்கொள்ளக்கூடிய நிலையில் அவர் இல்லை. ஆனால் அவருடைய பிரச்சனையோ மிகச்சிக்கலானது. அதே சமயத்தில் அவரிடம் உள்ள ஏதோ ஒன்று ஆசிரமத்தில் உள்ள அமைதியை நாடுகிறது; அதில் ஆர்வம் கொண்டுள்ளது.
இவற்றை எல்லாம் கவனித்துக்கொண்டிருந்த என் நண்பருக்குப் பாதி வேதனை, பாதி சந்தோஷம். தம்முடைய மேல்அதிகாரிக்கு ஏற்பட்டுள்ள இன்னலை அறிந்துகொண்டபோது அவருக்கு வேதனை. அதே சமயத்தில் அவரை எனக்கு அறிமுகப்படுத்திவைத்ததில் ஒரு சந்தோஷம்.
நான் அன்னை அவர்களைப் பற்றிச் சுருக்கமாகக் குறிப்பிட்டேன். ‘அன்னை என்றால் அமைதி, ஆனந்தம், அன்பு, இன்பம்’என்று விளக்கினேன். ‘அன்னையின் சாந்நித்யம் ஆசிரமத்திலும், மற்றப் பகுதிகளிலும், பாண்டிச்சேரியிலும் பூரணமாக வியாபித்து உள்ளது’என்பதை எடுத்துக் கூறினேன். ‘எல்லா விருப்பங்களையும் பூர்த்தி செய்துவைக்கும் இடம் மகான் ஸ்ரீ அரவிந்தரின் சமாதி’என்பதையும் அவருக்கு விளக்கினேன். அவர் நான் சொன்னவற்றை எல்லாம் மிகவும் கவனமாகக் கேட்டார். பிறகு என்னிடம் விடை பெற்றுக்கொண்டு கிளம்பினார். தம் ஜீப் வரை சென்ற அவர், மீண்டும் திரும்பி வந்து, நான் எப்பொழுது அவர் ஊர் பக்கம் வந்தாலும், தம்மைத் தம் கம்பெனியில் சந்திக்கும்படிக் கேட்டுக்கொண்டார். எனக்கோ கழுத்தில் உள்ள வலி தாங்க முடியாத அளவுக்கு அதிகமாகிவிட்டது.
பிறகு அவர் என்னை அடிக்கடி சந்திக்க ஆரம்பித்தார். அப்பொழுது எல்லாம் அவர் தமக்குள்ள வேதனைகளையும், விவகாரங்களையும் விவரிப்பார். பல கோடி ரூபாய்களை மூலதனமாகக்கொண்ட ஓர் ஆலையில் ஜெனரல் மானேஜருக்கு அடுத்த நிலையில் பெரும்பதவி வகிப்பவர் அவர். நூறாண்டு காலத்திற்கும் அதிகமாக நல்ல நிலையில் நடைபெற்றுக்கொண்டுவந்த அந்த ஆலையில் உள்ள அவருக்கு ஆயிரக்கணக்கில் சம்பளம்; அதோடு பங்களா; ஆலையில் உள்ள எல்லாப் பகுதிகளிலும் செல்லுபடியாகின்ற வரையறை இல்லாத அதிகாரம், மற்றும் உயர் வசதிகள் பலவற்றை ஆலை நிர்வாகம் அவருக்கு அளித்திருந்தது. முப்பது வருடங்களுக்கு முன்னால் அவருடைய தந்தையும், அவருக்கு முன்னால் அவருடைய தந்தையும் இதே ஆலையில், இதே உத்தியோகம் பார்த்தவர்கள். அதனால் வழிவழியாக அவருக்கு நிறையச் சொத்துகள் சேர்ந்திருந்தன.
அவருடைய குடும்பம் வைதிகச் சம்பிரதாயத்தைத் தீவிரமாகக் கடைப்பிடிக்கின்ற ஒன்றாகும். மேலும் அது பரம்பரைப் புகழில் நிலைபெற்ற குடும்பம். தான, தருமங்களில் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் கொடை நலம் மிகுந்த குடும்பம். வைதிகச் சடங்குகளை வழுவாது பின்பற்றக்கூடிய அவருக்கு, வேதங்களின் சில முக்கியப் பகுதிகள் நன்கு பாடம். ஆனால் வேதங்களை அவர் முறையாகப் பயிலவில்லை. ஆனாலும், அவை எத்தனை முக்கியம் வாய்ந்தவை என்பதை உணராவிடினும், அவற்றை அவர் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டிருந்தார். அப்படி ஏற்றுக்கொண்ட பலவற்றையும் அவர் தீவிரமாகப் பின்பற்றினார்.
நாங்கள் மிகவும் நெருங்கிப் பழக ஆரம்பித்த பிறகு, தம்முடைய பிரச்சினையையும் பற்றி அவர் வெளிப்படையாகச் சொல்லலானார். அவருக்குச் செல்வத்தில் ஒருவிதக் குறைவும் இல்லை. ஆனால் அவரை இனம் தெரியாத, எதனால் என்று புரியாத ஒரு வகை எரிச்சல் ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது. அசுரத்தனமான ஒரு கோபாவேசத்திற்கு அவர் அடிமைப்பட்டிருந்தார். குணநலமும், குடும்பப்பாங்கும் நிறைந்த நல்ல மனைவி; ஒரே குழந்தை; நோய் நொடியற்ற ஆரோக்கியமான குடும்பம்; உயர்ந்த உத்தியோகம்; திறமை, நேர்மை, அயராத உழைப்பு ஆகியவை காரணமாக அலுவலகத்தில் நல்ல பெயர்.
இத்தனைச் சிறப்புகள் அவரைத் தழுவி நின்றபோதும், அவருக்கு அமைதி இல்லை, நிம்மதி இல்லை. எப்பொழுதும் அவர் மனத்தில் போராட்டமும், எரிச்சலும் துவம்சப்படுத்திக்கொண்டிருந்தன. எல்லாரும் அவரை மென்மையானவர் என்று எண்ணிக்கொண்டிருந்தனர். ஆனால் அவருக்கோ யாரைக் கண்டாலும் ஓர் எரிச்சல்.
நாளாக, நாளாக அவருடைய எரிச்சல் அதிகமாயிற்றே தவிர, குறையவில்லை. சில சமயங்களில் அவர் கட்டுப்பாட்டையும் மீறி தம்மிடம் வேலை பார்க்கம் அதிகாரிகளிடம் எந்தக் காரணமும் இல்லாமல் கோபக்கனலை அள்ளி வீசிவிடுவார். பிறகு தனிமையில் தம் செய்கைக்காக வருந்துவார். அவர்களை மறுபடியும் அழைத்துப் பேசிச் சமாதானப்படுத்துவார். நிம்மதியாகத் தூங்குகிற ஒருவரைக் கண்டால் அவருக்குப் பொறாமை பொங்கும். அமைதியாகக் காட்சி அளிக்கின்ற ஒருவரைப் பார்த்தால் அவருக்கு எரிச்சல், எரிச்சலாக வரும். இது அவர் விரும்பாத வேதனை. ஆனாலும் தம்மை விட்டு விரட்டி அடிக்க முடியாத வேதனை.
இந்த வேதனையிலிருந்து மீள அவர் போகாத கோயில் இல்லை, வழிபாடாத தெய்வம் இல்லை, ஏற்காத நோன்பில்லை, செய்யாத பரிகாரம் இல்லை. ஆனால் எதுவும் பலன் அளிக்கவில்லை. பதிலாக, அவருடைய எரிச்சல்தான் அதிகமாகிக்கொண்டிருந்தது. இதற்கு ஒரு விதிவிலக்காக அவர் ஆசிரமத்தின் விடுதிகளில் தங்கி இருந்தபொழுதெல்லாம் வேறெங்கும் கிடைக்காத அமைதி அவருக்குக் கிட்டியது. ஆனாலும் அதை நிலையாகப் பெறுவதற்காக ஆசிரமத்துக்குப் போக அவருக்கு மனம் இல்லை. அதற்குக் காரணம், அவர் வைதிக மார்க்கத்தில் வைத்திருந்த பற்றுதல்தான். இந்த நிலையில் நான் அவருக்கு எந்த யோசனையையும் சொல்கிற அளவில் இல்லை.
மனத்தின் போரை மனிதர் எத்தனை காலம்தான் தாங்கிக்கொண்டு இருப்பார்? இறுதியில் விரக்தி நிலைக்கே வந்துவிட்டார். ‘வேலையை விட்டுவிட்டு ஏதேனும் ஒரு கிராமத்தில் குடியேறினால் எனக்கு அமைதி கிடைக்குமா? அல்லது ஏதாவது ஓர் ஆசிரமத்தில் சேர்ந்து தெய்வகைங்கர்யம் செய்தால் வேதனை நீங்கி, எனக்கு அமைதி கிடைக்குமா?’என்று என்னிடம் கேட்ட அவர், தொடர்ந்து ‘அரவிந்தாசிரமத்தில் சேர்ந்தால் என்னுடைய பிரச்சினைக்கு நிரந்தர வழி கிடைக்குமா?’என்று கேட்டார்.
‘இந்தச் சிறிய விஷயத்திற்காக நீங்கள் இத்தனை பெரிய காரியங்களில் இறங்க வேண்டாம்’என்றேன் நான்.
அவருக்கு ஒன்றும் புரியவில்லை. அவருடைய தலையாய பிரச்சினையை ‘ஒரு சிறு விஷயம்’என்று நான் சொல்லவே, அவருக்கு அது புரியவில்லை. ‘தரிசனக் காலங்களில் அன்னையிடமிருந்து வெளிப்படும் அளவிட முடியாத சக்தியோடு ஒப்பிட்டுப்பார்க்கும்பொழுது, உங்களுடைய துன்பம் ஒரு சிறு விஷயம்’என்று கூறி, அன்னை வழங்கும் தரிசனத்தில் பங்குகொள்ளுமாறு அவரிடம் சொன்னேன். அவர் தரிசனத்திற்குப் போனார். அதிலிருந்து அவருக்கு ஒரு பெரிய அளவில் பிரச்சினையிலிருந்து விடுதலை கிடைத்தது. அதை அடுத்து அன்னையை நேராகக் கண்டு ஆசிகளைப் பெற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொள்ளவே, நான் அவரை அன்னையிடம் அழைத்துச் சென்று, அவருடைய பிரச்சினையை எடுத்துச் சொன்னேன். அன்னை அவருக்குத் தரிசனம் கொடுத்து, ஆசிகளை வழங்கினார்.
ஒரு மாதத்திற்குப் பிறகு நானும், அந்த அதிகாரியும் சந்தித்தோம். ‘அன்னையைத் தரிசித்தபோது நிகழ்ந்ததை உங்களிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அதற்கு இப்பொழுதுதான் நேரம் கிடைத்தது’என்று கூறி, நடந்ததை விவரித்தார். அன்னை அவருக்குத் தரிசனம் கொடுத்தது ஒரு சில விநாடிகள்தாம். அவர் அன்னையாரின் அறைக்குச் சென்றவுடன், அன்னை திரும்பி அவரை ஒரு கணம் பார்த்தார். அந்தக் கணமே அவரைப் பிடித்து ஆட்டிய அசுரத்தனமான கோபம் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டது. அன்னையைத் தரிசித்துப் புதுப் பிறவியை எடுத்தவராக வந்தார்.
அன்னையின் தரிசனம், பாவ விமோசனம்; ஏற்றங்களை அருளும் அரியாசனம்.
பாண்டிச்சேரி அன்னையின் கருணை வெள்ளம், ‘தம்மை நேசிப்பவர்’, ‘தம்மைப் பூஜிப்பவர்’என்ற வரம்புகளைக் கடந்து, துன்பங்களின் தொல்லைகளுக்குட்பட்ட அனைத்து மனித சமுதாயத்தின் மீதும் பரிவுடன் பாய்ந்தது. ஒரு முறை அன்னையைத் தரிசித்தவர்களின் துயரங்கள் முற்றும் தொலைந்தன; வாட்டங்கள் அடியோடு மறைந்தன. தம்மிடம் ஈடுபாடு இல்லாதவர்களைக்கூட அன்னையின் அருட்சக்தி ஆட்கொண்டு, அவர்களின் வாழ்வை மேன்மைப்படுத்தி இருக்கிறது. அதற்கு விளக்கமாக எனக்குத் தெரிந்த இருவரின் அனுபவங்களை இங்கே காணலாம்.
அவருடைய தந்தைக்கு அவர் ஒரே பிள்ளை. தந்தை காலமாகிவிட்டார். அவர் தம் பிள்ளைக்காக ஒரு வீட்டையும், ஒன்றரை ஏக்கர் அளவுள்ள ஒரு காலி மனையையும், பத்து ஏக்கர் விளைநிலத்தையும் விட்டுச் சென்றிருந்தார். பிள்ளை பட்டதாரி ஆசிரியர். அவருக்கு உள்ளூரிலேயே உத்தியோகம் கிடைத்தது. அவர் சாமர்த்தியம் இல்லாதவர். ஆனால் ‘பெரிய காரியங்களைச் சாதிக்க வேண்டும்’என்ற ஆசை நிறைந்தவர். ஒரு வகையில் அவருக்கு வாழ்க்கை வசதியாக அமைந்துவிட்ட காரணத்தால், தம் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்வதில் அக்கறை காட்டாமல், தம்முள் ஊமைக்கனவுகளை அவர் நிறையவே கண்டுகொண்டிருந்தார்.
அப்பொழுது அந்த ஊரில் வீட்டு மனைகளுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டு இருந்தது. அவருடைய ஒன்றரை ஏக்கர் நிலம் நல்ல இடத்தில் அமைந்திருந்தது. ஆகையால் அதை வீட்டு மனைகளாகப் பிரித்து, விற்று, நல்ல லாபத்தைப் பார்த்துவிட வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தார் அவர்.
அந்த நிலத்தை ஒட்டினாற்போல நகரத்தின் முக்கிய வீதிகள் இருந்தன. எதிரில் பல தரப்பட்ட அரசாங்கக் கட்டடங்களும் இருந்தன. இப்படிப்பட்ட சூழலில் உள்ள ஒரு நிலம் வீட்டு மனைகளாகப் பிரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்தால், நிறைய லாபம் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அவருடைய கணக்குப்படி அந்த நிலம் பதினேழாயிரம் ரூபாய்க்குக் குறையாமல் விலைபோகக்கூடியது. அப்பொழுது (அதாவது 1956இல்) உள்ள நிலவரப்படி அந்தத் தொகையை ஒரு பெரிய வருமானம் என்றே சொல்ல வேண்டும்.
ஒரு நாள் அவர் கவலையும், குழப்பமும் நிறைந்த முகத்தோடு என்னைப் பார்க்க வந்திருந்தார். அவருடைய நிலைக்குக் காரணம், அவர் கூறிய செய்தியிலிருந்து தெரிந்தது. அவருடைய காலி இடத்திற்கு நேர் எதிரில் உள்ள அரசு அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவர், அவரை ஒரு நாள் தேடி வந்தார். வந்தவர் தம்முடைய அலுவலகத்தில் நடந்ததை விவரித்தார். அந்த அதிகாரியும், மற்ற அதிகாரிகளும் சேர்ந்து தங்களுக்காகக் காலனி ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்று முடிவு செய்திருந்தார்கள். அதற்காகக் கூட்டுறவு சொஸைட்டி ஒன்றைத் தொடங்கி, வீடு கட்டுவதற்கு வேண்டிய தொகையைப் பெறவும் தீவிரமாக முயன்றுகொண்டிருந்தார்கள். அரசாங்கம் கூட்டுறவு சொஸைட்டியை ஆரம்பிக்கவும், கடன் வழங்கவும் ஒப்புதல் அளித்திருந்தது. வீடுகள் கட்டுவதற்கு நிலம் மட்டும் வாங்க வேண்டும். அதற்கு அரசாங்கத்தின் உதவி தேவையாக இருந்தது. கலெக்டர்கள் பலர் வருவதும், மாற்றலாகிப் போவதுமாக இருந்தனர். அவர்களில் ஒருவர்கூட அதிகாரியின் காலனிக்குத் தேவையான நிலத்தை வாங்கித் தருவதில் அக்கறை காட்டவில்லை. அதிகாரிகளின் நல்ல காலம், தற்போது வந்துள்ள கலெக்டர் இவரின் நிலத்தை வாங்கித் தருவதில் அக்கறை காட்டினார். அவரின் ஒன்றரை ஏக்கர் நிலத்தை எடுத்துக்கொள்வதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. நிலத்தை அளந்து, அதன் மதிப்புத் தொகை என்னவென்பதும் நிர்ணயம் செய்யப்பட்டுவிட்டது. அரசாங்கம் நிர்ணயம் செய்த அந்த நிலத்தின் மதிப்பு இரண்டாயிரம் ரூபாய். இதுதான் அந்த அதிகாரி கூறிய விவரம்.
நில ஆர்ஜிதத்தில் கலெக்டரே ஈடுபட்டிருக்கிறார் என்பதை அறிந்தவுடன், என்னிடம் வந்திருக்கும் அன்பருக்கு ஏமாற்றமும், பயமும் அதிகமாகிவிட்டன. இன்னும் ஓரிரு மாதங்களில் நிலம் தம் கையை விட்டுப் போய்விடும்; அரசாங்க உத்தரவுப்படி வெறும் இரண்டாயிரம் ரூபாயைப் பெற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை என்ற நிலைமை அவருக்கு ஏற்பட்டுவிட்டது. நிலத்தை அரசாங்கம் கைப்பற்றவிடாமல் தடுப்பதற்கு பெரிய அதிகாரிகளின் உதவியையோ, ஆதரவையோ பெறக்கூடிய நிலையில் அவர் இல்லை. அதனால் அவர், ‘உங்களுக்குத் தெரிந்தவர்கள் மூலம் இந்த உதவியைச் செய்ய முடியுமா?’என்று என்னைக் கேட்டார்.
என்னைப் பொருத்தவரையில் எந்தவிதப் பயத்திற்கும் இடம் இருப்பதாகப் படவில்லை. ஆகவே, அவர் கேட்ட கேள்விக்குப் பதிலிறுக்காமல், நான் அவரைப் பற்றிய நினைவில் ஆழ்ந்தேன். அவர் ஒரு தடவை ஸ்ரீ அரவிந்தாசிரமத்துக்குப் போய் வந்ததும், அங்கு அவர் அன்னையைத் தரிசித்ததும் எனக்குத் தெரியும். அவருடைய உறவினர் ஒருவர் வயதில் பெரியவர். அவர் அன்னையின் தரிசனத்துக்குச் சென்றபொழுது இவரை அழைக்கவே, இவரும் அன்னையின் தரிசனத்தில் கலந்துகொண்டார். இது தற்செயலாக நடந்த ஒரு நிகழ்ச்சி. அன்னையைத் தரிசனம் செய்து வந்த எவருக்கும், எந்த ஒரு தீங்கும் வாராது என்பது என் நம்பிக்கை. இந்த உண்மையை எடுத்துச் சொன்னால் அவர் ஏற்றுக்கொள்வாரா என்பது சந்தேகம். ஏனெனில், அவர் அன்னையிடம் பக்தியோ, நம்பிக்கையோ கொண்டவரல்லர். அதனால் அன்னையைப் பற்றிப் பிரஸ்தாபிக்காமல், ‘உங்கள் சொத்து கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணத்தைக் கொண்டு வாங்கப்பட்ட சொத்தாக இருந்தால், உங்கள் நிலம் உங்கள் கையை விட்டுப் போகாது’என்று கூறிவிட்டு மேலும் சொன்னேன்: ‘அந்த நிலம் வாங்கியது சம்பந்தமாக உள்ள விவரங்களை விளக்கமாகக் கூறினால், உங்கள் பிரச்சினைக்கு வழி பிறக்கும் வாய்ப்பு உள்ளது’என்றேன்.
‘இருபது வருடங்களுக்கு முன் சொந்த உழைப்பால் சேர்த்த பணத்தைக் கொண்டு என் தந்தை வாங்கிய நிலம் அது’என்ற பீடிகையுடன் தொடங்கிய அவர், நிலம் வாங்கிய விவரங்களை முறையாகச் சொல்ல ஆரம்பித்தார். அவர் சொன்ன முதல் செய்தி இதுதான். ‘என் தகப்பனார் ஒரு டாக்டர். அவர் இராணுவத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார்’.
‘இனி விவரம் தேவை இல்லை’என்று கூறிவிட்டேன். எனக்கு விஷயம் கிடைத்துவிட்டது. ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளின் குடும்பங்களுக்கு அரசாங்கம் பல சலுகைகள் வழங்கியுள்ளது என்பது எனக்குத் தெரியும். மேலும், அவர்களுடைய நலன்களைப் பாதுகாக்கும் நோக்கோடு செயல்பட்டுவரும் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளின் சங்கத்தைப் பற்றியும் கேள்விப்பட்டிருந்தேன். ஆகவே, அவரை அந்தச் சங்கத்தோடு தொடர்புகொள்ளுமாறு ஆலோசனை கூறினேன். அந்தச் சங்கத்தின் தலைமை அலுவலகம் டெல்லியில் உள்ளது. அங்கு அனுப்புவதற்கு என்னையே ஒரு கடிதம் எழுதுமாறு அவர் கேட்டுக் கொண்டார். எழுதிக் கொடுத்தேன். அதை அவர் உடனே டெல்லிக்கு அனுப்பி வைத்தார்.
ஒரு வாரத்திற்குப் பிறகு ஒரு நாள் அவர் சிரித்த முகத்தோடு என்னைப் பார்க்க வந்தார். நடந்த விவரங்களைச் சொன்னார். அவருடைய கடிதம் டெல்லிக்குச் சென்றவுடன், அங்குள்ள ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளின் தலைமைச் சங்கம் இங்குள்ள மாவட்டச் சங்கத்தோடு தந்தி மூலம் தொடர்பு கொண்டு, ‘உடனே கலெக்டரைச் சந்தித்து, அவருடைய நிலத்தை அரசாங்கம் எடுத்துக்கொள்வதைக் கைவிட வேண்டும்’என்று வற்புறுத்துமாறு கேட்டுக் கொண்டது. அதை அடுத்து, மாவட்டச் சங்கம் அவருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, ‘உங்களுடைய நிலத்தை யாரும் தொட முடியாது. கவலை இல்லாமல் இருங்கள்’என்று உறுதி கூறிற்று. டெல்லியிலுள்ள ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளின் தலைமைச் சங்கமும் கலெக்டரோடு தொலைபேசியின் மூலமாக, ‘ஓர் இராணுவ அதிகாரியால் சம்பாதிக்கப்பட்டு, அவருடைய பிள்ளையால் அனுபவிக்கப்பட்டு வரும் அந்த நிலத்தை ஆர்ஜிதம் செய்ய வேண்டாம்’என்று கேட்டுக்கொண்டது. சொல்லப்போனால், ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளின் மாவட்ட அமைப்பில் கலெக்டர் நெருங்கிய தொடர்பு உடையவர். அதாவது, அந்த அமைப்பின் தலைவர் பொறுப்பில் உள்ளவர் கலெக்டர்தாம்.
அதன் பயனாக, அரசாங்கம் அவருடைய நிலத்தைக் கைப்பற்றும் முயற்சியையும், நடவடிக்கையையும் கைவிட்டது. சில ஆண்டுகள் கழிந்தன. வெறும் இரண்டாயிரம் ரூபாய்க்குக் கைமாறிப்போக இருந்த அந்த நிலம், மனைகளாகப் பிரிக்கப்பட்டு விற்கப்பட்டது. அதிலிருந்து அவருக்குக் கிடைத்த வருமானம் நாற்பத்தேழாயிரம் ரூபாய்!
‘விளக்கின் ஒளி இருளை விலக்குவதைப் போல, அன்னையை ஒரு முறை தரிசித்தவர்களின் இடையூறுகள் தொல்லை தாராமல் விலகிப்போகும்’ என்பதற்கு இந்த அன்பரின் அனுபவமும் ஒரு சான்றாகும்.
அன்னையின் தரிசனம், பாவ விமோசனம்; ஏற்றங்களை அருளும் அரியாசனம்.
*****