குழந்தை கிருஷ்ணன் வாயைத் திறந்தபொழுது, அதில் அண்ட சராசரங்களையும் கண்டாள் யசோதை. அதுபோலவே அன்னையின் வாழ்க்கையில் உள்ள ஒவ்வோர் அம்சத்திலும், உலக சிருஷ்டியின் மகிமையை நம்மால் உணர முடிகிறது. ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தில் சாதகர்களாகத் தம்மை ஈடுபடுத்திக்கொண்ட ஒவ்வொருவரும் பெருந்தியாகங்களைச் செய்தவர்கள்; குடும்பத்தையும், உத்தியோகத்தையும், உலக இன்பங்களையும், பணத்தையும் துறந்து அன்னையின் அன்பையும், அருளையும் நாடி வந்தவர்கள். அவர்களுக்கு எல்லாம் அளவற்ற கருணையும், அளப்பரிய அருளையும் வழங்கியுள்ளார் அன்னை.
அளவுக்கு அதிகமாகவே கொடுப்பவர் அன்னை. அதே சமயத்தில் ‘கட்டுப்பாடு’என்று எடுத்துக்கொண்டால், அதைச் சிறிதுகூடத் தளர்த்தமாட்டார். அவருடைய அன்புக்கு எல்லையே இல்லை. அதை மனித இனமும், இவ்வுலகும் அதிகமாகவே பெற்றன. அன்னையின் அன்பைப் பற்றிக் கூறும் பல கதைகள் உண்டு. கருணை காரணமாகப் பூனைக்குட்டிகளையும் வளர்த்துவந்த அவர், அவற்றிடம் எத்தகைய அன்பைப் பொழிந்தார் என்பது உலகறிந்த ஒன்று. சாதகர் ஒருவரிடம் அன்னை தம் அன்பை வெளிப்படுத்திய நிகழ்ச்சி ஒன்றை இங்கே பார்க்கலாம்.
ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்திலுள்ள சாதகர்களுக்கு நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் சிறப்பாக அமைந்திருக்கும். அவர்கள் அங்கே சேர்வதற்கு முன்னால் இருந்த ஆரோக்கியத்தைவிடப் பன்மடங்கு பெருகிவிடும். அவர்களுடைய முகத்திலும், கண்களிலும் ஆன்மாவின் ஒளி வெளிப்பட்டுப் பிரகாசிக்கும். அங்கிருக்கும் முதிய சாதகர்கள்கூட நல்ல ஆரோக்கியத்தோடு, சுறுசுறுப்போடு செயல்படுவர். இயற்கையின் நியதிப்படி ஒரு குறிப்பிட்ட வயதில் மரணம் அடைய வேண்டியவர்கள்கூட, அந்த வயதிற்கும் மேலாக நீண்ட ஆயுளைப் பெற்று வாழக்கூடிய நிலையைப் பெற்றுவிடுகிறார்கள். அன்னை ஒவ்வொரு சாதகருடைய இதயத்திலும் கலந்திருப்பதே அதற்குக் காரணம்.
இரண்டாவது உலகப் போர் முடிந்த சமயத்தில் ஒருவர் ஸ்ரீ அரவிந்தரிடம் வந்து சேர்ந்தார். ஆண்டுகள் பல கழிந்தன. அவர் முதுமையை அடைந்தார்.
உடலில் என்ன தொந்தரவோ தெரியவில்லை, அவர் அதிகமாக வருந்திக் கொண்டிருந்தார். இவ்வளவுக்கும் அவருக்கு வியாதி எதுவும் இல்லை. ‘முதுமை காரணமாக அவருடைய உடல் உறுப்புகள் தளர்வடைந்திருந்தன. அதனாலேயே அவர் பல தொந்தரவுகளுக்கு ஆளாகியிருக்கிறார்’என்று அவரைப் பரிசோதித்த மருத்துவர் கூறினார்.
அதுவே உண்மை. முதுமை அவரை நோக்கிக் கடுமையான போரைத் தொடுத்திருந்தது. அவருடைய உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டு இருந்தது. அவர் பேச்சை இழந்தார். உடல் அசைவுகள் அற்றுப்போய்விட்டன. மருத்துவர்களும், மற்ற சாதகர்களும் அவரை அக்கறையோடும், அன்போடும் கவனித்துவந்தனர். ஆனால் அவற்றை ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலையில் அவர் உடல் இல்லை. வரவரக் கஞ்சியாக இருந்த ஆகாரத்தைக்கூட அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர் இனி சில நாள்கள்கூட உயிரோடு இருக்க மாட்டார் என்பது தெளிவாகிவிட்டது.
இறுதிக் கட்டத்தை நோக்கி விரைந்துகொண்டிருந்த அவருக்கு, பிரியமான அல்லது சந்தோஷத்தைக் கொடுக்கக்கூடியது எதுவாக இருந்தாலும், அதைக் கொடுக்க வேண்டும் என்ற ஒரு முயற்சியில் எல்லாரும் ஈடுபட்டு இருந்தார்கள்.
பேச்சையும், அசைவையும் இழந்துவிட்டாலும், இன்னும் அவர் பிரக்ஞையை இழக்கவில்லை. தம்மைச் சுற்றி நடக்கின்ற எல்லாவற்றையும் அவர் தெளிவாக உணர்ந்துகொண்டார். ஆனால், அவர் தம் மனத்தில் என்ன நினைக்கிறார் என்பதை மற்றவர்களால் உணர்ந்துகொள்ள முடியவில்லை. அவர் மிகக்கட்டுப்பாடான வாழ்க்கையை அனுஷ்டித்தவர். தம் விருப்பங்களையும், தேவைகளையும் அவர் வெளியிட்டுப் பேசியதேயில்லை. அதனால் அவருக்கு எது பிடிக்கும் என்பதை மற்றவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. உறவினர்கள் இருந்தால் அவருக்குப் பிடித்தமானதை அவர் தெரிந்து வைத்திருக்கக்கூடும். ஆனால் அவர் ஆசிரமத்துக்கு வந்தபிறகு, உறவினர்களின் தொடர்பு அவருக்கு இல்லாமல் போய்விட்டது. அதனால் அவருடைய உறவினர்களைக் கேட்கலாம் என்பதற்கும் இடம் இல்லாமல் போய்விட்டது. ஆனால், ‘அவர் எதையோ விரும்புகிறார், எதையோ சொல்ல நினைக்கிறார்’ என்பது மட்டும் புரிந்தது. ஆனால் சொல்ல முடியவில்லை. அந்த அவஸ்தையான நிலையில், எதையோ ஜாடையால் தெரிவிக்க நினைக்கிறார். ஆனால் அதுவும் முடியவில்லை. எதையோ சொல்லத் துடிக்கின்ற துடிப்பும், அது முடியாமல் அவர் தவிக்கின்ற தவிப்பும் அவருடைய கண்களில் அலைமோதின.
அவர் விருப்பம்தான் என்ன? ஆசிரமவாசிகள் அதைத் தெரிந்து கொள்வதில் தீவிரமாக இருந்தார்கள். அநேகமாக எல்லாமே ஓய்ந்துபோனாலும், அவர் பிரக்ஞை மட்டும் ஓயவில்லை. ஏதாவது சொன்னால் அது அவர் காதில் விழக்கூடிய அளவில் மனம் தெளிவாக இருந்தது. சொல்வதையெல்லாம் கேட்க முடிந்ததே தவிர, அவரால் பதிலிறுக்க மட்டும் முடியவில்லை. ஆனாலும் தம்முடைய விருப்பதைத் தெரிவிக்கும் கடைசி முயற்சியில் அவர் ஈடுபட்டார். சைகையாலும், அனுமானத்தாலும் அவர் என்ன நினைக்கிறார் என்பதை ஒருவாறு புரிந்துகொண்டார்கள் சாதகர்கள். அதாவது ‘என்னை அன்னையிடம் கொண்டு செல்லுங்கள்’என்பதே அவர் விருப்பம்.
இந்தச் செய்தியை உடனே அன்னையிடம் தெரிவித்தார்கள். அவரைத் தம் அறைக்குக் கொண்டுவரும்படிச் சொன்னார் அன்னை.
அவரை ஸ்ட்ரெச்சரில் படுக்கவைத்து அன்னையின் அறைக்குக் கொண்டு சென்றார்கள் சாதகர்கள். அன்னையைக் கண்டதும் இருண்டிருந்த அவர் முகம் பிரகாசம் அடைந்தது. கண்களில் நீர் மல்கியது. பார்வையில் நன்றியுணர்வு வெளிப்பட்டது. மரணத்தையே வென்றுவிட்ட பெருமிதம் அவருடைய மலர்ந்த இதழ்களில் தோன்றியது.
அன்னை தம் இருக்கையிலிருந்து எழுந்து வந்து அவர் அருகே நின்று கொண்டு கருணை ததும்பும் தம் விழிகளால் அவரைப் பார்த்தார். அந்தப் பார்வையால் அவருடைய பாவங்கள் கழுவப்பட்டன. அவரை இறுகப் பற்றி இருந்த மரணத்தின் பிடி சிறிது சிறிதாக விலகிக்கொண்டே வந்தது. காலத்தின் உயிர்ப்பு அவர் கண்களில் குடிகொண்டது. இப்பொழுது அவர் அவஸ்தைகளுக்கு அப்பாற்பட்டவராக, அன்னையின் ஆளுகையில் தம்மை ஒப்புக்கொடுத்தவராக மாறி, அன்னையிடம் எதையோ தெரிவிக்க முயன்றார்.
அன்னை அவருடைய விருப்பத்தைப் புரிந்துகொண்டுவிட்டார். ஆனால் அங்கே கூடி இருந்த சாதகர்களுக்குத்தான் அது என்னவென்று புரியவில்லை. அன்னையும் அவருடைய மோன மொழியிலேயே அவருக்குப் பதிலிறுத்திருக்க வேண்டும். அவர் உதடுகள் மலர்ந்தன. தம் மார்பையும், அன்னையின் பாதங்களையும் குறிப்பால் தொட்டுக் காட்டினார் அவர். ‘அன்னை ஒருவரே கொடுக்கக்கூடியவர். அன்னையின் திருப்பாதங்களைத் தம் மார்பில் வைத்து அநுக்கிரகம் செய்ய வேண்டும்’ என்று அவர் குறிப்பால் விண்ணப்பித்தார்.
பொருட்செல்வமாக இருந்தாலும், அருட்செல்வமாக இருந்தாலும் வரையில்லாது வழங்குபவர் அன்னை. அதே சமயத்தில் ஒருவர் கேட்கின்றார் என்பதற்காக மட்டும் அன்னை கொடுத்துவிடுவதில்லை. சில வேகைளில் பக்தர்கள் கேட்பதைக் கொடுக்காமல், அச்சமயம் அவர்களுக்கு உண்மையாகவே தேவைப்படுகின்ற வேறொன்றைக் கொடுப்பது அன்னையின் வழக்கம்.
உதாரணமாக, தனக்குப் பத்து வருட காலமாகக் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை என்று அன்னையிடம் வேண்டிக்கொண்டார் ஒரு பக்தர். அன்னை அவருக்கு அருள் புரிந்தார். ஆனால் அவருக்குக் கிடைத்தது குழந்தை பாக்கியம் இல்லை; வேறொன்று. அவர் நிலையில் உள்ள யாருக்கும் சுலபத்தில் கிடைக்க முடியாத மிகப்பெரிய உத்தியோக உயர்வு அது. அப்பொழுது அந்தப் பக்தருக்குக் குழந்தை பாக்கியத்தைவிட, அந்த மிகப்பெரிய உத்தியோக உயர்வே விருப்பமாக இருந்தது. இதை அந்தப் பக்தரும் பின்னொரு சந்தர்ப்பத்தில் ஒப்புக்கொண்டார்.
பக்தர்களோ, சாதகர்களோ எந்த ஒரு புது வேலையைத் தொடங்குவதற்கும் முன்னால் அன்னையிடம் ஆசி வழங்கும்படிக் கேட்பது வழக்கம். சிலர் தங்களுடைய நிறுவனங்களுக்கு ஒரு சின்னம் (emblem) வேண்டும் என்று கேட்பார்கள். அவர்களுக்கெல்லாம் வெவ்வேறு விதமான சின்னங்களை வழங்குவார் அன்னை. பாரத ஸ்டேட் பாங்க் இப்பொழுது உபயோகித்து வரும் சின்னம் அன்னையால் கொடுக்கப்பட்டதுதான். சில பக்தர்கள் அன்னையின் திருப்பாதங்களை வரைபடமாகவும், புகைப்படமாகவும் கொண்டு தம் நிறுவனங்களின் சின்னங்களை அமைத்துள்ளனர். அன்னை தம்முடைய பாதங்களையே சின்னமாக வழங்கியுள்ளது மிக மிகக்குறைவு. பக்தியில் சிறந்த சிலருக்கு மட்டுமே இத்தகைய அரிய வாய்ப்பை, சின்னத்தை வழங்கி இருக்கிறார் அன்னை.
அன்னையைத் தரிசிப்பது மிகப்பெரிய அருட்பேறு. அன்னையின் கரங்கள் பக்தர்களின் மேல் படுவது என்பது அதைவிடப் பெரிதாகும். அன்னையின் பாதங்கள் பக்தர்களின் மீது படுமானால், அதற்கு இணையானது ஏதும் இல்லை. அன்னையைத் தரிசிக்கச் செல்லும்போது அவருடைய மலர்ப் பாதங்களைத் தொட்டு வணங்குவதைக் கிடைத்தற்கரிய பாக்கியமாகக் கருதுவார்கள் பக்தர்கள். ஆனால் அந்த முதிய பிராயத்துச் சாதகர், அன்னையின் திருப்பாதங்களைத் தம் மார்பின் மீது வைத்து அநுக்கிரகம் செய்யுமாறு கேட்டுக் கொண்டது சமய உலகமே கேட்டிராத ஒன்றாகும்.
அன்னை அன்பின் பிறப்பிடம். அந்தச் சாதகர் கேட்டுக்கொண்டதை ஆமோதிப்பது போலப் புன்னகை செய்தார். அதை அறிந்துகொண்ட அந்த முதியவரின் உள்ளம் களிப்பால் பூரித்தது; நன்றி உணர்வால் அவர் கண்கள் நிறைந்தன. அன்னை தம் பாதங்களை எடுத்து அவர் மார்பில் பதித்தார். அற்புதம்! ஆனந்தம்! அவற்றை அநுபவித்த அந்த முதியவரின் முகம் பிரகாசம் அடைந்தது. அவ்வொளி அவருடைய உடல் முழுவதும் பரவியது. துன்பத்தின் எல்லையில் துவண்டு கிடந்த அவர் நெஞ்சம், இன்பத்தின் எல்லையைத் தொட்டு நெகிழ்ந்தது. அதுவரை கண்ணீரைப் பெருக்கிய அவர் கண்களில், இப்பொழுது கங்கையும், காவேரியும் பெருகின. அவருடைய ஆன்மா இருதயத்தில் ஒடுங்கி இருப்பதற்குப் பதிலாக, அங்கிருந்து வெளிப்பட்டுத் ஸ்தூல உடலில் பரவிப் பிரகாசித்தது.
அன்னையின் அறை முழுதும் அமைதியில் கரைந்தும், கலந்தும்போய் இருந்தது. சிறிது நேரத்துக்குப் பிறகு அந்த முதிய சாதகரை மற்ற சாதகர்கள் வெளியே எடுத்துச் சென்றார்கள். ஆனால் அவருடைய கண்கள் அன்னையின் மீதே லயித்திருந்தன. அன்னையின் கருணையான பார்வையும் அவர் மீதே பதிந்திருந்தது.
அந்த முதிய சாதகரின் கடைசி விருப்பம் இனிதாக நிறைவேறியது. ஆனால், அவர் சாவின் பிடியிலிருந்து தப்பிப் பிழைத்துக்கொண்டுவிட்டார்! நாளுக்கு நாள் அவருடைய உடல்நிலை ஆச்சரியப்படத்தக்க வகையில் ஆரோக்கியம் அடைந்தது. அவர் நோய்ப்படுமுன் எப்படி இருந்தாரோ, அப்படியே பேசவும், நடக்கவும், தம்முடைய காரியங்களைத் தாமே கவனிக்கவும் ஆரம்பித்து விட்டார். இவை யாவும் ஒரு வார காலத்துக்குள் நிகழ்ந்துவிட்டன. அதற்குப் பிறகு அவர் இருபது வருடங்கள் வரை பூரணமான ஆரோக்கியத்தோடு ஜீவித்திருந்தார்.
*****