அன்னையை நேரில் தரிசனம் செய்தவர்களில் பெரும்பாலோர், அவர்களின் அன்புப் பிரவாகத்திற்கு ஆட்பட்டவர்கள். ஓர் இளைஞர் முதன் முறையாக அன்னையைத் தரிசனம் செய்ய அவர்களுடைய அறைக்குள் நுழைந்தார். அக்கணமே தன் உடல் செயலற்றுப் போய் விட்டதை உணர்ந்தார். அதை அறிந்த அன்னை அவரை நோக்கி, தன் அருகே வருமாறு கையால் சைகை செய்தார். அந்த சைகை அந்த இளைஞரை அன்னையின் முன்னால் கொண்டு போய் நிறுத்தியது. அதற்குப் பிறகு செயலற்று இருந்த அவர் உடலோடு சேர்ந்து மனமும் செயலற்று விட்டது. எண்ணமும், செயலும் இல்லாமல் இருந்த அவர், இப்பொழுது தன் உடல் முழுதும் கரைந்து போய்க்கொண்டு இருப்பதை உணர்ந்தார். இருக்கும் உடல் அவரைப் பொறுத்தவரையில் இல்லை. அது ‘கரைந்து’ விட்டது. இப்பொழுது உடல் இருந்த இடத்தில் ஓர் ஒளி தோன்றி, சிறிது சிறிதாக வளர்ந்து பெரிதாகி, பிரம்மாண்டமாகி விட்டது. அதற்கப்புறம் அவருள் இருந்த தன்னைக் காணோம்! தான் ஓர் ஜோதியின் மையத்தில் ஒரு புள்ளியைப் போன்ற வடிவில் கரிய மனித உருவம் இருப்பதைக் கண்டார். அது யாராக இருக்கும்? கூர்ந்து நோக்கிய பொழுது மனித உருவில் காணப்பட்டவர் தன் ஊரைச் சேர்ந்த ஒருவர் என்பது அவருக்குப் புரிந்தது.
அன்னை தன்னைத் தரிசிக்க வருபவர்களுக்கு அளிக்கும் ஜோதி வடிவான வரம் அது. ஓர் அமெரிக்கர், தரிசன சமயத்தில் அன்னை தன் கையைப் பற்றிய பொழுது, தன் நெஞ்சம் நிரம்புவதையும், விரிந்து பெருகுவதையும் உணர்ந்தார். சில கணங்களுக்குள் நெஞ்சேமே வெடித்து விடுவதைப் போன்றதோர் அனுபவத்தால் அவர் மூழ்கடிக்கப்பட்டார்.
தன் தண்ணொளிப் பார்வையின் மூலம் பக்தர்களின் இதயத்தை அடைந்து அனுக்கிரகம் செய்வது அன்னையின் வழக்கம். ஆத்ம விளக்கம் பெற்றவர்கள் தரிசனத்தின் பலனை உள்ளுணர்வில் விழையும் மௌனம், சாந்தி, அனந்தம் (Silence, Peace, Infinity) ஆகியவற்றின் மூலம் உடனே உணர்கின்றார்கள். பக்தியுணர்வு மிக்கவர்கள், அன்னையைத் தரிசித்த மாத்திரத்தில் ‘இனி நான் அன்னைக்கே உரியவன். நான் இனி என் வசம் இல்லை’ என்று உணர்கின்றார்கள். இனிமை நிறைந்த குணசாலிகள் (pleasant personalities) என்றும் அனுபவித்தறியாத ஆனந்தம் அமுதம் போலப் பொங்கிப் பெருகுவதை உணர்கின்றார்கள். ஏனையோர் வாழ்க்கையில் நிகழும் பல நல்ல மாறுதல்களின் மூலம் அன்னையை அறிகின்றார்கள்.
இன்று சமாதி தரிசனத்திற்கு வரும் பலருக்கு இதே போன்ற அனுபவம் ஏற்படுகின்றது. அன்று கிடைத்த அன்னையின் தரிசனமும், இன்று கிடைக்கின்ற சமாதி தரிசனமும் ஒரு வகையில் ஒன்றாகும். சமாதியைத் தரிசிக்கும்போது - குறிப்பாக, முதல் முறை தரிசிக்கும் போது - சிலருக்கு தம் சூட்சும உடல் தம்மை விட்டுப் பிரிந்து வெளியில் சஞ்சரிக்கும் பேறு கிடைக்கின்றது. அப்பொழுது சூட்சுமப் பார்வை கிடைக்கும். சூட்சுமக் குரலும் கேட்கும்.
ஓர் பல்கலைக் கழகப் பேராசிரியருக்கு இயல்பாக சூட்சுமக் குரல் கேட்பதுண்டு. சிறிது காலத்திற்குப் பிறகு அந்த சூட்சுமக் குரல் ஏனோ அவருக்குக் கேட்காமல் போயிற்று. அவர் பெறற்கரியதைப் பெற்று இழந்து விட்டார். அவர் தற்செயலாக ஒருவருடன் சமாதிக்கு வந்தார். உடனே பல ஆண்டுகளாக இழந்துவிட்டிருந்த சூட்சுமக் குரல் மீண்டும் தன்னுள் ஒலிப்பதை உணர்ந்தார். ‘சமாதி சித்தி பெறும் இடம்’ என்று அன்னை கூறி இருக்கின்றார். அன்னையைத் தரிசனம் செய்த ஒருவருக்கு, அன்னை 25 வயதுள்ளவராகக் காட்சி அளித்தார். வேறு பலருக்குத் தரிசன காலத்தில் அன்னையின் முகம் ஸ்ரீ அரவிந்தரின் முகமாக மாறிக் காட்சி அளித்திருக்கின்றது.
இன்று அன்னை பூத உடலில் இல்லை. பாண்டிச்சேரிக்கு வெளியே உள்ளவர்கள் தினந்தோறும் அன்னையின் சமாதியைத் தரிசனம் செய்ய இயலாது. ஆனாலும் அவர்களால் அன்னையை தினமும் தரிசிக்க முடியும்.
‘பூதவுடலில் அன்னையைத் தரிசிப்பது பாக்கியம்’ என்பது உண்மை. ‘சூட்சும உடலில் அன்னையைத் தரிசனம் செய்து, முழு ஆத்ம பலனை அடையலாம்’ என்பதும் உண்மை. அன்னையுடன் இருந்தவர்களும், அன்னையை அடிக்கடி வந்து சந்தித்துக் கொண்டிருந்தவர்களும் சில சமயங்களில் அன்னையின் பிறந்த தினத்தன்றோ (பிப்ரவரி, 21) தரிசன தினத்தன்றோ (ஆகஸ்டு 15) வேலை நிமித்தமாக வெளியூர் செல்ல நேர்வதுண்டு. அல்லது அன்னையே அவர்களை அப்படி அனுப்பி விடுவதும் உண்டு. ‘தரிசனத்தைத் தவற விடுகிறோமே’ என்று அவர்கள் கவலைப்படுவார்கள். அப்பொழுது, ‘‘கவலை வேண்டாம். அங்கேயே தரிசனம் சிறப்பாக அமையும்’’ என்று சொல்வார் அன்னை. அன்னையின் ஆறுதலைப் பெற்றுச் செல்லும் அவர்கள், அங்கேயே சிறப்பான தரிசனத்தைப் பெற்று இன்புற்றிருக்கின்றார்கள். ஏப்ரல் 24, அன்னை புதுவை வந்த புனித தினம். அன்று அன்னையைத் தரிசித்து வாழ்த்துப் பெறுவதை எந்த ஓர் அன்னையின் அணுக்க பக்தரும் இழக்க விரும்பமாட்டார்.
அந்த நாளில் மதர் எஸ்டேட்டில் முந்திரிக்கொட்டை அறுவடை மும்முரமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கும். ‘யாராவது முக்கியமான ஒருவர் அங்கு இருந்தாக வேண்டும் என்ற நிலை. எஸ்டேட்டின் தலைவர், மற்றவர்களைத் தரிசனத்திற்கு அனுப்பிவிட்டு ‘‘எனக்கு இங்கேயே தரிசனம் கிடைக்கும்’’ என்றார். அதே போல அவருக்கு அன்னையின் தரிசனம் கிடைக்கவும் செய்தது.
‘தெய்வம்’ (Divine) என்று நாம் அறிந்து கொண்டது இவ்வுலகை சிருஷ்டித்த பரம்பொருளாகும். இறைவன், ஆண்டவன் என்று பலவாறாக அதைக் குறிப்பிடுகின்றோம். நித்தியத்துவம், அனந்தம், ஆனந்தம், ஜோதி, மௌனம், சாந்தி, சக்தி, அழகு (Immoratlity, Infinity, Bliss, Light, Silence, Peace, Power, Beauty) போன்றவை அதன் அம்சங்களாகும். தெய்வத்தைக் கண்ணாரக் காணும் பாக்யம் சிலருக்குக் கிடைப்பதுண்டு. அதுவே தெய்வ தரிசனமாகும்.
‘ஆண்டவன் காட்சி அளித்தார்’ என்கின்றார்கள். சூட்சுமப் பார்வையுள்ளவர்களுக்குத் தரிசனம் சூட்சுமமாகத் தெரிகின்றது. அறிவார்ந்தவர்களுக்கு ஜோதியாகவும், பக்தர்களுக்கு ஆனந்தமாகவும், ஆத்ம விளக்கம் பெற்றவர்களுக்கு அமைதி, மௌனமாகவும் (Peace, Silence) கலைஞர்களுக்கு அழகாகவுமான பல நிலைகளில் அவரவருக்கு ஏற்ற வகையில் கிடைக்கும் வரமே தெய்வ தரிசனமாகும். பக்குவமான ஆத்மாவுக்கு மிக விரைவில் கிடைக்கும் இந்த வரப்பிரசாதம், முயற்சியுள்ளவர்களுக்கு நாள்பட்டே கிடைக்கின்றது.
15 ஆண்டுகளுக்கு அதிகமாக மேல் நாட்டு மடம் ஒன்றில் கடுமையான பயிற்சிகளை (Austerities) மேற்கொண்டு நோன்பு நோற்ற ஒருவர், அன்னையைத் தரிசிக்க வந்த பொழுது ஸ்ரீ அரவிந்தர் சமாதியின் அருகே வந்ததும் என்றும் உணர்ந்தறியா சாந்தியாலும், சக்தியாலும் தோய்ந்து போனார். ‘Samadhi is a spiritual dynamo’ (ஆன்மீக சக்தியின் அளவிறந்த உறைவிடம் சமாதி’) என்றார். அவர் பெற்ற 15 ஆண்டு காலப் பயிற்சி சிறப்பான ஒன்றுதான். என்றாலும் அதன் மூலம் அவருக்குக் கிடைக்காத ஆத்மிக அனுபவம், சமாதி தரிசனத்தின் போது உடனடியாகக் கிடைத்தது.
‘பக்தியும், ஆர்வமும், நம்பிக்கையும் உள்ள எவரும் தம் இருப்பிடத்தில் இருந்து கொண்டே இத்தகைய அனுபவத்தைத் (அநுபூதியை) தினமும் பெறலாம்’ என்பது அன்னை நமக்களித்த வரம். அது நாம் கேட்காமல் பெற்ற வரம். நம்மால் கேட்கத் தெரியாத வரம். அதைப் பெற நாம் என்ன செய்ய வேண்டும்? ஜீவன் முழுதும் நிரம்பும் ஆர்வத்துடன் தரிசனத்தைத் தேட வேண்டும். ஆர்வம் நிறைந்த பக்திக்கும், நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்பட்ட உணர்வுக்கும் பலன் உண்டு. ‘எந்தக் கணத்தில் பெருகி வரும் ஆர்வம் பூரணம் அடைகின்றதோ, அந்தக் கணத்தில் தரிசனம் கிட்டுகின்றது’ என்பது அநுபூதிகளான அன்பர்கள் கண்டறிந்த உண்மை. ‘இம்மாபெரும் பலனைப் பெற்றுத்தரும் நம்பிக்கை, ஆர்வம், உணர்வு, அவற்றின் நிறைவு, பூரணம் ஆகியவற்றை, ஓர் எளிய மனிதன் தன் அன்றாட வாழ்வில் எப்படிப் பெறலாம்?’ என்பதே இக்கட்டுரையின் கரு.
‘அடுத்த வாரம் ஆபீஸில் இன்ஸ்பெக்ஷன், அல்லது மகளுக்குத் திருமணம்’ என்றால், நம் மனம் எப்படிப் பொறுப்பால் பூரணம் பெறுகின்றதோ, அதே போன்று அன்னையின் தரிசனம் நமக்குக்கிட்ட வேண்டும்’ என்ற உணர்வால் மனமும், ஜீவனும் பூரணமடைய வேண்டும்.
‘என் மனம் எப்பொழுதும் அலை பாய்ந்து கொண்டே இருக்கின்றது. விடுமுறை நாட்களில் பேச்சுத் துணை இல்லாவிட்டால் வெறுப்பாக இருக்கின்றது. என்னால் சும்மா இருக்க முடியாது. ஏதாவது செய்து கொண்டே இருக்காவிட்டால், என் தலை வெடித்து விடும்’ என்ற நிலையில் உள்ளவர்கள் ஏராளம். ‘புத்தகம் ஒன்று இருந்து விட்டால் போதும். விடுமுறை போவதே தெரியாது’ என்பார் சிலர். மனிதர்கள் பலதரப்பட்டவர்கள். உயர்ந்தோர் என்றும், அல்லாதார் என்றும் விதம் விதமான மனிதர்கள். என்றாலும் எல்லோர்க்கும் பொதுவான ஒரு சிறந்த நேரம் உண்டு. பிறந்த நாள், தரிசன நாள், வாழ்க்கையில் நினைத்தது நிறைவேறிய நாள் என்று வருகின்ற நாட்கள் சிறந்த நாட்கள். அந்த மறக்க முடியாத நாட்களைப் போல அபூர்வமாக ஓர் அனுபவம் அவர்களை வந்து சந்திக்கும். அச்சமயம் மனத்தின் அலைச்சல், தனிமை, வெறுமை ஆகியவற்றை மீறி அன்னை காட்சி அளிப்பதுண்டு. பெரும்பாலோர் பெற்ற பெரும் பேறு அது. வாழ்நாளில் ஒரு முறையோ அல்லது இரு முறைகளோ தாம் அவை ஏற்படும். இது நாம் கேட்காமல் அன்னை தானாகவே அளிப்பது.
ஆபீஸில் இன்ஸ்பெக்க்ஷன் நடக்கும் பொழுது மனம் அதில் ஈடுபட்டிருப்பதால், அலைச்சல் பின்னணிக்குச் சென்று விடுகின்றது. மகளுக்குத் திருமணம் நிகழும் போது மகிழ்ச்சியான சூழல் இருப்பதாலே வெறுமை விரட்டி அடிக்கப்பட்டு விடுகின்றது. நினைத்தது நிறைவேறுகின்ற தருணத்தில் உவகையால் உள்ளம் பூரித்துப் போகின்றது.
வருவது பெரியதனால் இருப்பது இல்லாமல் போய் விடுகின்றது. அன்னை வருகின்ற நேரம் மகோன்னதமானது. அதை உணர்ந்துவிட்டால் மன அலைச்சல் நிற்கும். ஜனாதிபதி வருகின்ற பொழுது போக்குவரத்து நின்று போகிறதே, அதே போல மனம் ஸ்தம்பித்து நிற்கும். ஓயாது கூச்சலிட்டுக் கொண்டிருக்கும் உணர்வு கட்டுக்குள் அடங்கி, பூரணத்தால் பொலிவுற்றிருக்கும். செய்யும் செயல் சிறக்கும். அத்தருணத்தில் அன்னை காட்சி தருகின்றார். அந்த மாதிரியான தருணங்களில் மனிதக் குறைபாடுகள் மனத்தினின்று விலகி மறைந்து விடுவதால், அன்னை அம்மனத்தில் தன்னைத் தோற்றுவிக்க முடிகின்றது. எனவே அன்றாட வாழ்வில் அதுபோன்ற சிறப்புகளோடு செயல்பட்டு அன்னையைப் பற்றிய நினைவை முழுமையாக்கிக் கொண்டால், அன்னை தரிசனம் அன்றாடம் கிடைக்கும்; அடிக்கடியும் கிடைக்கும்.
இன்ஸ்பெக்க்ஷன் சமயத்தில் வேலை செய்வது போல நாள் தோறும் வேலை செய்ய முடியுமா? திருமணத்தின் போதுள்ள மகிழ்ச்சி தினமும் வருமா? பரிசு பெற்ற நாளைப் போல எல்லா நாட்களும் இருக்க வேண்டுமானால், தினந்தோறும் பரிசு கிடைத்துக்கொண்டே இருக்க வேண்டும். ‘‘எங்கள் ஆபீஸில் எப்பொழுது வேண்டுமானாலும் இன்ஸ்பெக்க்ஷன் வைக்கலாம். நாங்கள் வேலைகளை சுமத்தி வைக்காமல் அன்றாடம் முடித்து விடுகிறோம்’’ என்பவர்களும் உண்டு. ‘‘உங்கள் வீட்டில் எல்லோரும் மகிழ்ச்சியுடன் காணப்படுகிறீர்கள்! யாருக்காவது திருமணமா?’’ என்று அடுத்தவர்கள் கேட்கும் அளவுக்கு ஆனந்தத்தில் மிதக்கும் குடும்பங்களும் உண்டு.
பொறுப்போடு வேலை செய்யும் பொழுது இன்ஸ்பெக்க்ஷன் பயத்தைத் தோற்றுவிப்பதில்லை. அந்த அச்சம் இல்லாமல் இருக்க வேண்டுமானால், தினமும் இன்ஸ்பெக்க்ஷனைப் போல் நினைத்து வேலை செய்யவேண்டும். ‘‘கல்யாணம் வந்தால் சந்தோஷம் என்றில்லை. நாளெல்லாம் சந்தோஷமே’’ என்று வாழ்க்கையை இலேசாக்கிக் கொண்டவர்களின் வீட்டில் திருமணம் தன்னாலேயே கூடிவரும். செயல் தூய்மை, மகிழ்ச்சி என்பன எல்லாம் வாழ்வில் சிறப்பான அம்சங்கள். இந்தச் சிறப்பை இயல்பாகப் பெற்றவர்கள் அன்னையை ஏற்றுக்கொண்டால், ‘அன்னை தரிசனம்’ அவர்களுக்கு இயல்பாகக் கிடைக்கின்றது. இந்தச் சிறப்பைப் பெறாதவர்கள் அதைப் பெற முயன்றால், அவர்களுக்கும் அன்னை தரிசனம் கிடைக்கின்றது. எவ்வாறெனில், அவர்கள் அன்னை தரிசனத்தைக் குறிக்கோளாக ஏற்றுக்கொண்டால், இந்தச் சிறப்பு வர அது உதவுகின்றது. வாழ்க்கைச் சிறப்பும், இடையறாத அன்னை நினைவும் அன்னை தரிசனத்தைப் பெற்றுத்தரும். முதல் முறையாக அதைப் பெற்ற பிறகு, அதன் எல்லா அம்சங்களும் தானே தெளிவாக விளங்கும். மாதம் ஒரு முறை, வாரம் ஒரு முறை, அன்றாடம் ஒரு முறை என்று எந்த அளவில் மேற்கொண்டாலும், அதற்கேற்ற முயற்சி எது என்பது தெளிவு பெறும்.
பொதுவாக எல்லோரும் கையாள இலகுவான சில கருத்துக்களைச் சொல்ல விழைகின்றேன்.
வாழ்க்கையில் மனிதன் பெறும் பேறு அன்னை தரிசனம். என்றாலும் அதற்கும் மேலே அன்னை தரிசனமும் ஒரு யோகச் சிறப்பாக இருக்கின்றது. சிறப்பான யோக சித்தியை அடைய வழிகோலும் எல்லா முறைகளும் சிறப்பானவையாகவே அமையும்.
- ‘அன்னை தரிசனம்’ என்று குறிப்பிடப்படுவது, நடைமுறை வாழ்வின் பிடியில் சிக்கிக் தவிக்கும் மனிதன், தன் பிடியினின்று விலகி, அன்னையின் பிடிக்குள் வந்து சேர்ந்து, ‘நான் அன்னையிடம் வந்துவிட்டேன்’ என்று உணர்வதன் அறிகுறியாகும். முதல் நிபந்தனை, தரிசனத்தின் பெருமையை உணர்ந்து, அதைப் பெறுவதற்குப் பூரணமாகவும், ஆர்வமாகவும் விழைவதாகும்.
- எலெக்க்ஷன் அன்றும், இன்ஸ்பெக்க்ஷன் போதும், திருமணத்திற்கு முன்பும் அன்றாட வேலைகளைக் கவனிக்கும் அரசியல்வாதி, ஆபீசர், குடும்பஸ்தன் ஆகியோர் அன்றாடக் கடமைகளை இரண்டாம் பட்சமாகவும், எலெக்க்ஷனை முக்கியமாகவும் கருதிச் செயல்படுகின்றார்கள். அதேபோல அன்னை தரிசனத்தை நாடுபவர்கள், அதற்கு முக்கியத்துவம் கொடுத்து அன்றாடக் காரியங்களில் செயல்பட வேண்டும்.
- தரிசனம் உள்ளுணர்வில் கிடைப்பதாலும், அதைப் பெற நம் சக்தியை (energy) உள்நோக்கிச் செலுத்த வேண்டியிருப்பதாலும் பேச்சிலும், செயலிலும், உணர்விலும் விரையமாகும் சக்தியைச் சேமித்து, நிதானமாகவும், குறைவாகவும் பேச வேண்டும். அவசரமின்றிக் காரியங்களைச் செய்ய வேண்டும். கவனம் சிதறாமல் இருக்கத் தனித்திருந்து வேலை செய்தல் அவசியம்.
- எந்த ஒரு காரியத்தைத் தொடங்குவதாக இருந்தாலும் ஒரு கணம் நிதானித்து அன்னையை நினைவு கூர்ந்து, அன்னைக்கு அந்தக் காரியத்தை அர்ப்பணிக்கப் பழகிக்கொள்ள வேண்டும்.
- ஒவ்வொரு நாளும் படுப்பதற்கு முன்னால், ‘இன்று இந்தக் காரியத்தைச் செய்வதற்காக என்ன செய்தேன்? அதற்கு எதிராக என்னவெல்லாம் செய்தேன்?’ என்று தன்னைத் தானே சோதித்துப் பார்த்து, எதிரான செயல்களை விலக்கிக் கொள்ள வேண்டும்.
- காலைப் பொழுதில் அன்று ஆற்ற வேண்டிய கடமைகளை எல்லாம் அன்னையிடம் சொல்லி, அர்ப்பணம் செய்து, குறிக்கோள் நிறைவேறப் பிரார்த்தனை செய்து, அந்த நாளை அன்னையின் நாளாகத் தொடங்க வேண்டும்.
- நம் வாழ்வில் நம் மனத்துக்குத் தெரிந்த குறைகளை அறவே நீக்க முழு முயற்சி எடுக்க வேண்டும்.
- நம்மைப் பற்றி மற்றவர்கள் கூறும் குறைகளைப் பரிசீலனை செய்து, அவற்றில் உண்மை இருக்குமேயானால், அக்குறைகளை களைய முன்வர வேண்டும்.
- நம்மைப் போன்றவர்கள் கடமை புரிவதில் நம்மை விடச் சிறப்பாக இருந்தால், நாமும் அச்சிறப்பைப் பெற விழைய வேண்டும்.
- கொஞ்சம் கொஞ்சமாக நம் வாழ்வை உண்மையின் முழுமையான பிடியை நோக்கிச் செலுத்த வேண்டும்.
- அன்னை அருளிய ஏதாவது ஓர் இலட்சியத்தைத் தேர்ந்தெடுத்து, அதைப் பின்பற்ற ஆரம்பித்து, ‘ஒரு நாள் அதை முழுமையாக எட்ட வேண்டும்’ என தீவிர ஈடுபாடு கொள்ள வேண்டும்.
- ‘அன்றாடம் அன்னை தரிசனம் சித்திக்க வேண்டும்’ என்ற ஒரு பிரார்த்தனையை மேற்கொள்ள வேண்டும்.
**********