பகவான் ஸ்ரீ அரவிந்தர் பிறவியிலேயே ஒரு கவி. ஆங்கிலம் தவிர வேறு எந்த மொழியையும் அவர் தீவிரமாகப் பயின்றதில்லை. தாய்மொழியான வங்காளத்தையும் பிற்காலத்திலேயே கற்றுக் கொண்டார் என்பதால் ஆங்கிலமே அவருக்குத் தாய்மொழி போல் அமைந்தது. எனவே சிறு வயது முதல் அவர் இயற்றிய செய்யுள்கள், காவியங்கள், நாடகங்கள், அனைத்தும் ஆங்கிலத்திலேயே உருவம் பெற்றன. “இருளை விழுங்கும் ஒளி” என்ற கருத்து ஆரம்ப காலத்தில் இருந்தே அவரைக் கவர்ந்த கருத்து. மனித ஹிருதயத்திலிருந்து எழும் தெய்வீக அன்பு மரணத்தை வெல்லக்கூடியது என்ற கருத்தை அவர் பாராட்டினார். பகவான் மேற்கொண்ட பூரண யோகம், உலகில் மரணத்தை அழிக்கும் இலட்சியத்தைக் கொண்டது.