எக்ஸ்கர்ஷன், சுற்றுலா என்ற வார்த்தையை என்னிடம் சொல்லாதே, கடந்த பதினைந்து வருஷமாக இந்தச் சொல்லையே என்னால் கேட்டுக் கொள்ள முடியவில்லை. என்னை எக்ஸ்கர்ஷனுக்கு அனுப்புவதாகச் சொல்லி அப்பா ஏமாற்றியதை இவ்வளவு நாள் கழித்தும் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆரம்பத்தில் இந்தச் சொல்லைக் கேட்டுவிட்டால் எனக்கு இரண்டு நாளாகும் எரிச்சல் அடங்க. இன்றும் அது மனதில் ஒரு உறுத்தலாகவே இருக்கிறது. அரைப் பரீட்சையில் கணக்கில் 75 மார்க் வாங்கினால் எக்ஸ்கர்ஷனுக்கு அனுப்புகிறேன் என்றார் தகப்பனார். உயிரைவிட்டுப் படித்தேன். முழு ஆர்வமும் பலன் கொடுத்தது. 80 மார்க் வாங்கினேன்.