தத்துவ ஞானமான சாஸ்திரமும், மனித முயற்சியின் புனித உருவமான உற்சாகமும், சாதகனின் பயிற்சியை யோகானுபவம் ஆக்கும் குருவின் அருளும், இவற்றை எல்லாம் பூர்த்தி செய்யும் காலத்தின் கதியும் ஒருங்கிணைந்து யோக சித்தியை உருவாக்குகின்றன.
சிந்தனைக்குரிய மனித ஜீவனின் ஹ்ருதயத்தில் ‘வேத இரகசியம்’ எனும் பத்மம் மொட்டாக அரும்பியுள்ளது. பரமனின் கடாட்சம் பத்மத்தின் மீது பட்டவுடன், அது இதழ் இதழாகக் கட்டவிழ்கிறது.
பரமனே பத்மத்தின் பிதா. பரம்பொருளின் திருவுள்ளமே மனித உள்ளத்தின் மலர்ச்சி. திருவுள்ளம் இன்றி இதழ் அவிழ்வதில்லை. திருவுள்ளத்தால் தீண்டப் பெற்றால், மலர்வதைத் தடை செய்ய ஒருவர் இல்லை.
ஆன்மாவுக்கு ‘ஆசிரியன்’ என்றொருவன் ஏற்படவில்லை. ‘ஞானம்’ என்னும் மலருடைய மணம் உள்ளிருந்து வரும் உயர்ந்த நறுமணமே. என் இருதயப் பொக்கிஷத்தை எடுத்து இரகசியத்தை வெளியிட்ட பொழுது, உன்னைக் கண்டுகொண்டேன். ‘நீயே நான்’ என்றுணர்ந்தேன். ‘நானாக இருக்கும் உன்னை, நான் மலர்ந்து மணம் வீசி உணர்ந்து உயர்வதே யோக வாழ்வின் சித்தி’ என அறிந்தேன்.
திருக்கதவம் திறக்க, வானுலக அசரீரி அடி எடுத்துக் கொடுப்பது வழக்கம். வையகத்தின் குரல், வானுலகத்தின் குரலாக ஒலிப்பதும் உண்டு. இருதய பீடத்தில் இருந்தே இக்குரல் எழுவதுண்டு. இது அரிது. கிருஷ்ண பரமாத்மாவும் இராமகிருஷ்ண பரமஹம்சரும் குருவை நாடிப் போனது, தெய்வத்தின் குரலைக் கேட்கவே. அவதார புருஷர்களாகிய அவர்கள் கேட்ட குரலே முழு அனுக்ரஹத்தையும் கொடுத்தது. பரம்பரையாக வந்த பயிற்சி சாதாரண சாதகனுக்குப் பலிக்க நாளாகும். நீண்ட பாதையானாலும் நெறி தவறாத ஒன்றாகும் அது. ஆயிரமாயிரம் ஆண்டுகள் அனுபவித்துச் சோதனை செய்த சிறப்புடையது. ‘தவறாத நெறி’ எனப்பட்டது. பயமின்றிப் பயிற்சி செய்யக்கூடியது. பூரண ஞானத்தைத் தேடும் சாதகனுக்கு உன்னதமான சாஸ்திரங்கள் எல்லாம் முற்காலத்தவை என்பதனால், அது முடிவானதொன்றாய் இருக்க முடியாது. எழுத்தில் உள்ள அத்தனை சாஸ்திரங்களும் எட்ட முடியாத பூரணனை நாடுபவனே பூரணயோக சாதகன். உன்னதமான உபநிஷதங்களும், மஹோன்னதமான கீதையும், மகுடமான வேதமும் அவனை ஆன்ம வாயிலுக்கு அழைத்துச் செல்லலாம். வாயிலைத் தாண்டி, சாஸ்திரங்களைக் கடந்த நிலையிலே, அவன் தேடும் ஞானம் இருக்கின்றது. பரம்பொருளே அவனது சாஸ்திரம், பரமனே அவனுடைய யோகம். வகுக்கப்பட்ட வழியும், வழி வழி வந்த பழக்கமே ‘சாஸ்திரம்’ என வழங்கப்படுகிறது. சித்தி அடைந்த குரு வகுத்ததே வழி. அதனின்றும் பிறழ்வது தவறு. ஒரு புதிய கருத்தைத் தெரிவித்தால், ‘அது சாஸ்திரத்தில் இல்லையே!’ என்பது வழக்கம். புதிய யோக அனுபவத்தைத் தடை செய்யும் நியதி ஒன்றில்லை. யுகாந்திர காலமாகச் சோதனை செய்த பெருவழி, சிஷ்யனுக்குத் தெய்வீக பொக்கிஷம். அதன் பயன் அளவற்றது. ஆனால் அதை மாற்றவும், சிறப்பாக உயர்த்தவும் முடியும். பதஞ்சலியின் மார்க்கத்தை விட்டு வேறு வழியிலும் ராஜயோகத்தைப் பயில முடியும். பக்தி மார்க்கம், ஞான மார்க்கம், கர்ம மார்க்கம் ஆகியவற்றை, பல்வேறு பாதைகளிலும் காணலாம். பொதுவான யோக அடிப்படை ஒன்றேயானாலும், மார்க்கங்களும், மற்றவையும் மாறுவது தவறில்லை.
ஸ்ரீ அரவிந்தரின் ‘பூரணயோகம்’ என்பதை ஆரம்பித்தால், அது ஏற்கனவேயுள்ள சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டதில்øல என்பதை அறியலாம். கடந்த கால ஞானம் உயர்ந்ததானாலும், எதிர்காலத்திற்குத் தேவையானதைப் புறக்கணிக்க முடியாது. தான் மலர்ந்து பூரணம் பெற, முழுச் சுதந்திரம் தேவை. காணும் காட்சிகளைக் கடந்த கால நியதிக்கு உட்படுத்த முடியாது. வானுலக மோட்சமே குறி இல்லாத பூவுலக வாழ்வை யோகம் பூரணமாக அரவணைக்கும் பொழுது, அதற்குரிய பழைய பாதையைச் செப்பனிட வேண்டியது அவசியம். பெரியோர் ஆயினும், பெருமையுடைய பாதை ஆயினும், ‘வேகமாகப் பயணத்தை முடிப்பது குறிக்கோள் அல்ல’ என்பதால், அவர்களைப் பின்பற்றி அவர்கள் வகுத்த வழி செல்வதை இரண்டாம் பட்சமாக்கி, பூவுலகில் பூரணனைத் தேடப் புதுப் பாதையை ஏற்படுத்துவது அவசியம்.
மனித வாழ்வை வானுலக வாழ்வாக வாழ்ந்த வேத காலத்து ரிஷிகள், தூரத்து நட்சத்திரங்கள். அவர்களுடைய வேதவாக்கு வேத இரகஸ்யமாக இருக்கிறது. அவர்களுடைய சொல் வழக்கில் இல்லை. யுகங்கள் கடந்ததால், யுக தர்மம் மாறி வருகிறது. வேத ரிஷிகளுடைய இரகசியத்தை இன்றைய உலகுக்குப் புரியும் வகையில் புதிய பாதை அமைப்பதே பூரணயோக சாதகனின் பணி.
பரமனை மட்டுமே விழையும் சாதகன், பக்திக் குரல் எழுப்பிப் பரமபதம் அடைய விரும்புவதில்லை. தவத்தின் சிறப்பால் வையகத்தைத் திறந்து, இறைவன் திருவடியைத் தீண்டி சித்தி பெற்று மகிழும் நிலையில் இல்லை சாதகன். பரமனை அழைத்து, ‘உன் திருக்கதவம் தாள் திறந்து, நான் இருக்கும் இடத்திற்கு நீ வந்து, மனித வாழ்வில் உன்னை மலரச் செய்து, பூலோக வாழ்வை, புனிதயோக வாழ்வாக மாற்ற வரம் அருள்வாய்’ என்று தவக்குரல் எழுப்புவது பூரணயோகம். தனி மனிதன் தன் ஆன்மாவை யோக சித்தியால் கண்டு, ‘பிரபஞ்சத்தின் பிரதிநிதி தான்’ என அந்த ஆன்மாவை உணர்ந்து, பரம்பொருளின் ஏக போக பிரதிநிதியாகவும் தன் ஆன்மா இருப்பதை உணர்வதே பூரண யோகத்தில் “சித்தி” எனக் கருதப்படும்.
அனந்தனை அடைய அமைந்த பாதையில் ஆயிரம் பேர் நடக்கலாம். ஆன்மீகப் பெருமக்கள் நடந்ததால் அந்த இராஜபாட்டை உன்னதம் பெறலாம். ஆனால் அது அகன்ற பாதை இல்லை. ஓர் ஆன்மா மற்றதன் பின் செல்லும் ஒழுங்கான பாதை. அதனால் சிறிய பாதை, பரமனைப் பூவுலகுக்கு அழைக்கக் குறுகிய பாதையைப் போட முடியாது. நாம் மேலே போகப் போடப்பட்ட பாதை வழியாக அவன் திருநடம் புரிந்து திரும்பி வரவேண்டும் என்பதால், பூவுலகம் முழுவதும் அவன் திருக்கோயிலாகவும், பூவுலக வாழ்வு முழுவதும் அவனுக்குரிய பாதையாகவும் ஆக வேண்டுமானால், பூரணயோக சாதகன் ஒவ்வொருவனும் தனக்கென ஒரு புதிய பாதையை அமைத்துக்கொள்ள வேண்டும். அவன் முழுவதுமாகத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்வது ஒரேயொரு சட்டத்திற்கே. அதுவே பூரண சுதந்திரமாகும்.
பூரணன் மலர்ந்த பூவுலக வாழ்வே மனித இலட்சியத்தின் மகோன்னதச் சிகரம்.
சாஸ்திர ஞானம் நம்முள் உறைவதைப் போல, இருதயக் குகைக்குள் இருக்கும் ஜகத்குருவே சாதகனுக்குக் குருவாகும். அவனுடைய ஆத்ம ஜோதியில் மனிதப் பிறப்பின் காரிருள் கரைகிறது. காலத்தாலும், கர்மத்தாலும் கட்டுப்படுவது மனித வாழ்வு. காலத்தையும் கர்மத்தையும் கடந்த சுதந்திரம் ஆத்ம ஜோதிக்கு உரியது. ஆனந்தம் அவன் பிறப்புரிமை. பரமனையும், அவனது சிருஷ்டியையும் இணைக்கும் தெய்வீக அன்புக்குப் பிறப்பிடம் அவனே. ஜகத்குரு அழிவற்றவன். ஜகத்குருவின் சுபாவத்தில் இவை எல்லாம் அடங்கியவை. பூவுலக வாழ்வைத், தன் சுபாவத்திற்குரியதாக மாற்றுபவன் அவன். ஆன்மா சாயுஜ்ய பதவி அடைய வேண்டி, தன் கருணா கடாட்சத்தால் ஆன்மாவை அணைத்துக் கொள்கிறான்.
உள்ளுறையும் ஜகத்குருவை முழுமையாகக் கண்டு அறிந்து அதன்படி நடப்பது பூரண யோகத்தின் முழுமுதற்காரியமாகும். அவன் எங்கு வெளிப்படுகிறான்? எப்படி வெளிப்படுகிறான்? இயற்கையின் எல்லாச் செயல்களிலும் வெளிப்படுவது அவனே. வாழ்வின் வழி அவன் வழி. இயற்கையின் இன்றியமையாத நியதிகள், அவன் தன்னை மனிதனுக்கு அளிக்கும் முறைகள். செடியைச் சிறியது எனவும், மரத்தைப் பெரியது எனவும், நாம் கருதுகிறோம். வெற்றியை உயர்ந்ததாகவும், தோல்வியைத் தாழ்ந்ததாகவும் நாம் நினைக்கிறோம். மனிதனுக்குத்தான் வெற்றி - தோல்வி என்பதும், உயர்ந்தது - தாழ்ந்தது என்பதும். ‘தான்’ எனும் அகந்தை உள்ளவரை நல்லது - கெட்டது, சிறியது - பெரியது, வெற்றி - தோல்வி என்ற பாகுபாடு உண்டு. இவை அகந்தையின் அறிவு நிலைக்கு ஏற்றவை. ஆணவ மலம் கரைந்த இடத்தே ஆண்டவன் நிற்கின்றான். நாம் வெற்றியாகக் கண்டதும், தோல்வியாக நினைத்ததும் இறைவனைப் பொறுத்தவரை இரு செயல்களாம். நமக்குள்ள பெருமையும், சிறுமையும் இறைவனுக்கு இல்லை.
நடப்பவை அவன் செயல்கள். இயற்கையின் செயலாற்றும் அமைப்பு, அவன் தொழிற்படும் முறை. தோல்வியைத் தன் குறையாக நினைக்கும் மனிதன் அகந்தையுள்ளவரையே அப்படி நினைக்கின்றான். அகந்தை ஒழிந்து, அவனை ஏற்றுக்கொண்ட நிலையில், செயல்கள் அவனுடையவை என்பதை உணரும்போது குறைக்கு இடம் ஏது?
குறைக்கும் உரிமையுடையவன் அவன் அல்லவா? “என்னை ஆட்கொண்டபோதே என் உடைமைகளை எல்லாம் கொண்டாய் அல்லவா? இனி என் செயலுக்கு நாயகன் நீ அல்லவா? எனக்குப் பிழை ஏது? பொறுப்பு ஏது? நான் எங்கே இருக்கிறேன்? என் பிழைகளுக்கு எல்லாம் நீ அல்லவா பொறுப்பு?” என்ற நிலையிலே, யோகம் பூரணயோகமாகிறது.
முழு முயற்சி செய்து அவனைக் காண முனைந்தால், ‘முனைவது நாம்’ என்ற உருவில் அகந்தையேயாகும். இது சுறுசுறுப்பு அடைந்தபின் நாம் காண்பது அனந்தன் இல்லை; அகந்தையே. முயற்சியின் வேகம் பலனைப் பெறத் தடையாக இருக்கும் விந்தையைக் காண்போம். குழப்பம் தெளிந்து, முயற்சியின் சூடு தணிந்து, அமைதியுற்றுத் தெளிவடைந்த பொழுது, உள்ளொளி பெருகி வருவது தெரியும். இடறி விழுந்தவை எல்லாம் பெரிய இடத்திற்கு வருவதற்காகத்தான் என்ற அறிவு ஏற்படும். ‘வளைந்து நெளிந்து சென்ற பாதை எல்லாம் இறைவன் நமக்காக, நம் சுபாவத்தின் தனிச்சிறப்புக்காக அமைத்த இலட்சியப் பாதை’ என்பதை அறிவோம். அப்பொழுது ‘இதைவிட விரைவாக வந்திருக்க முடியாது’ என்பது புலப்படும். ‘தோல்வி’ என்று கண்டு நாம் துவண்டுபோன நிகழ்ச்சிகள் நம் இலட்சியத்தை அடையச் செய்த சிறப்பான சேவையே என்று உணர்வோம். ‘அந்தத் தோல்வி அன்று ஏற்பட்டிராவிட்டால், இன்று பரமன் உள்ள பதவிக்கு வந்திருக்க முடியாது’ என்று புலன்களுக்குப் புலப்படும். அன்று நாம் தோல்வியாக உணர்ந்தது இன்றைய வெற்றிக்கு இன்றியமையாத அஸ்திவாரம். வெண்கலம் போன்ற இன்றைய உடல் திறம் ஏற்பட, அன்று தாயார் புகட்டிய கசப்பு மருந்துகள் வழி வகுத்தன. அன்று மருந்து சாப்பிடக் கூச்சலிட்ட குழந்தை, இன்று தன் உடல் நலத்தின் உயர்வைப் பெருமையாக உணர்கின்றது.
பரமன் இன்று நம் புத்தியில் புலப்படுகிறான். நம் எண்ணத்திற்கு உரு அளிப்பவன் இறைவனே. செயலுக்கு நம்மை உந்தும் சக்தி அவனுடையதே. இறைவனின் அன்பே இதயத்தின் எழுச்சியாகப் பெருகுகின்றது. தலைவனாகவும், நண்பனாகவும், குருவாகவும், காதலனாகவும் நாம் காண்பது இறைவனையே. நம் ஆன்மாவில் சேர்ந்து வரும் புனித ஊற்றும், அது பரவும் தெய்வீக வாழ்வும், அற்புதமாக மிளிரும் ஆயிரம் நிகழ்ச்சிகளும் நம் செயல்கள் அல்ல. பூரணத்திற்குரிய புனிதனுடைய திருவுள்ளமே அவை. ஞானியின் ஈஸ்வரனும், நாத்திகனின் பகுத்தறிவும் யோகத்தின் தலைவனான இறைவனே!
அவனை ஞானக்கண்களால் கண்டு, சூட்சுமப் புலன்-களால் அறிந்து, ஜீவனில் அவனுடன் ஐக்கியமாகி, ‘புற நிகழ்ச்சிகளே அவனுடைய விஸ்வரூபம்’ எனத் தெளிந்து, இறைவனாக இப்பிறப்பில், இவ்வுடலில் மாறி, ‘திருவுருமாற்றம்’ அடைவதே, மனிதனுக்குப் பிறவியின் பெரும் பயனாகும். அவன் உடைமையான நாம், அவனை நம் சொந்தத் தனியுடைமை ஆக்குவதே நம் சாம்ராஜ்யத்தின் வெற்றிக்கொடி. கனவிலும், நனவிலும், விரைந்த செயலிலும், அயர்ந்த நித்திரையிலும், இரண்டறக் கலந்த நிலையிலும், பிரிந்து நின்ற பிறப்பிலும் இறைவனின் அரவணைப்பைப் புல்லரிக்க உணர்வதே ஜீவன் முக்தி. பூரணயோகத்தின் முழுநிலை இதுவே. ‘பிரகிருதி’ எனும் இயற்கை தன்னுள் பொதிந்துள்ள இறைவனின் இரகசியத்தை நம்முள் வெளிப்படுத்தும் விந்தையே பூரணயோகத்திற்குரிய தவம். மனித வாழ்க்கை இறைவனின் அருளாட்சி செய்யும் ஆன்மீக வாழ்க்கையாக மாறும் பாதை இது.
‘கண்ணால் கண்டதை எல்லாம் நம்புவதையே பகுத்தறிவு’ என நாம் கூறுகிறோம். கண்ணுக்குப் புலப்படாத ஒன்றை நம்புபவனை ‘மேதை’ என நாம் விவரிப்பதில்லை.
‘மூடநம்பிக்கையுள்ள தற்குறி’ என உணர்கின்றோம். எனவேதான் சித்து விளையாடும் சாமியார்களை, உலகம் சக்தியுள்ள கடவுளர்களாக எளிதில் ஏற்றுக்கொள்ளும். இரமண மகரிஷியின் மகத்துவம் எவருக்கும் புரியவில்லை. இலண்டனிலிருந்து ஒருவர் வந்து மகரிஷியின் பெருமையைச் சொன்ன பிறகே, உள்ளூரில் இருந்தவர்கள் சிந்திக்கத் தொடங்கினார்கள்.
பரம்பொருளின் செயலும், அற்புதங்களும் பகுத்தறிவுக்குப் புலப்படாத ஒன்று. மனிதனுடைய தலையாய சிறப்பு அவனுடைய புத்தி. இன்று மனிதன் உள்ள நிலையில் புத்தி நூற்றுக்கு நூறு பங்கு அகந்தையின் ஆட்சியில் இருக்கிறது.
அகந்தையிலிருந்து விலகினால்தான் புத்திக்குத் தன் நிலை விளங்கும். பொய்யை உபயோகித்து மெய்யைத் தேடுவது அகந்தை. அகந்தை ஆனந்தத்தை நாடினால், அவஸ்தையைத் தன் துணையாகக் கொள்ளும் திறன் உடையது. நிறைவை நிரந்தரமாக அடைய குறையைக் கருவியாகக் கொண்டது அகந்தை. அகந்தையின் பார்வை சூன்யம். உயர்ந்த ஆரோக்கியத்தைப் பெற, மதுவை நாடுவதைப் போன்றது, அவன் செயல். இலட்சியப் புருஷனாக வேண்டி இலஞ்சம் வாங்குவதைப் போன்றது மனிதனுடைய அகந்தை. அகந்தை ஒழிந்த பிறகே புத்திக்குப் பூரண சுதந்திரம் ஏற்படும். புத்தியை பகவான் ஸ்ரீ அரவிந்தர், ‘அறியாமையின் கருவி’ என்கிறார். ‘அகந்தை அர்த்தமற்றது என்றால், புத்திக்குப் பூரணம் இல்லை’ என்பது பலர் நிலை. புத்தியைப் பயன்படுத்தவில்லை எனில், பூரண மந்தம் மனத்தை ஆட்கொள்ளும் எனப் பயப்படுகிறோம். 50 ஆண்டு காலத் தவ முயற்சி சித்தி பெற்று அடைய முடியாத உச்சக்கட்ட மௌனத்தை ஸ்ரீ அரவிந்தர் அன்னைக்கும், மற்றொருவருக்கும் அவர்கள் கேட்காமலே கொடுத்து அருளினார். தம் தலையில் ஏதோ அற்புதம் நடப்பதாக அன்னை உணர்ந்தார். தாம் படித்த பதினாயிரம் புத்தகங்களுடைய படிப்பு கரைந்து புத்திக்கு விடுதலை அளிப்பதைப் பார்த்தார். ‘இது தெய்வ அனுக்கிரகம்’ என்று அறிந்தார். அவர் அசையாமல் நன்றியுணர்வுடன் உட்கார்ந்திருந்தார். புத்தியின் அஸ்திவாரங்கள் ஆட ஆரம்பித்தன. 10,000 ஆண்டுகளாகச் சிருஷ்டிக்கப்பட்ட மனித மனத்தின் அஸ்திவாரங்கள் ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தியாக அமைந்துள்ளதை அறிந்தவர் அன்னை. அவை வீறல் விட்டன. அன்னை பொறுமையாக இருந்தார். வெடித்து விழுந்தன. அன்னை நன்றி செலுத்தினார். அருள் வெள்ளம் அன்னையின் தலையில் பாய்ந்து சிதறிய கோட்டையின் அரண்களையும், அரண்மனையையும் சுவடு தெரியாமல் அடித்துக் கொண்டு போயின. அன்னையின் புத்தி அதன் அறியாமையில் இருந்து விடுபட்டு, அகண்ட மௌனத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டது. ‘இது இப்படியே என்றென்றும் நிலைக்க வேண்டும்’ என, அன்னை மௌனத்தின் அடித்தளத்திற்குக் கீழேயிருந்து கருதினார். அருள் சுரந்து, நினைவிழந்து, அறியாமை அகற்றப்பட்டு, அதன் அஸ்திவாரங்கள் இடிக்கப்பட்டு, அருள் வெள்ளத்தால் அவற்றின் சுவடுகள் அழிக்கப்பட்டு, அன்னை அகண்ட மௌனத்தின் பூரணப் புதுமையை முழுமையாகப் பெற்றார். பெற்றவர் தரையில் இருந்து எழுந்து சாஷ்டாங்கமாக பகவானுக்கு நன்றி கலந்த சரணாகதியை நாதத்தின் கீழிருந்து சமர்ப்பித்தார். பகவான், ‘சரணாகதியின் பூரணத்துவம் மனித ஜீவனில் சிருஷ்டியின் ஆழத்திற்குச் சென்றுள்ளதை முதன் முறையாக அன்னையின் நன்றியுள்ள நமஸ்காரத்தில் கண்டேன்’ என்றார்.
தான் அறியாத, தனக்குக் கேட்கத் தெரியாத பரம்பொருளின் வரப்பிரசாதமாகிய அகண்ட மௌனத்தைப் பெற்ற அடுத்தவர், தன் மனம் மடமையின் இருப்பிடமாவதை அறிந்து ‘வீல்’ என்று குரல் எழுப்பி, ‘நான் அறிவை இழந்து இருளில் தள்ளப்படுகிறேன்’ என்று கூச்சலிட்டார். பகவான் கொடுத்த அத்தனையும் விலகியது. அவர் முழுத் திருப்திப்படும் அளவுக்கு அவருடைய சொந்த புத்தி திரும்பி வந்தது. ஸ்ரீ அரவிந்தரிடம் நேரடியாக வரம் பெற்ற ஒரு பேரறிஞரின் நிலை இது. சாதாரண மனிதனால் அகந்தையை விட முடிவதில்லை. அதை விட்டாலும் புத்தியை விட்டொழிக்க முடிவதில்லை. அவனால் கண்ணால் கண்டதை மட்டுமே நம்ப முடியும். காணாத ஒன்றை ஏற்றுக்கொள்ளும் திறன் அவனுக்கு இல்லை. பரம்பொருளும், அதன் செயல்களும், அன்பு நிறைந்த அற்புதங்களும் மனிதனின் கண்களுக்குப் புலப்படுவதில்லை.
எனவே கண்ணுக்குப் புலப்படும் ஒன்றை நாடிச் செல்கிறான் மனிதன். அவனுடைய அந்நிலை அறிந்து பரம்பொருளானவர் அவதாரமாக அவன் முன் வருகிறார். பலர் அதை ஏற்றுக் கொள்கின்றனர். கிருஷ்ணனாகவும், புத்தராகவும் பரம்பொருள் மனிதன் முன் காட்சி அளிக்கின்றார். பரமனை அறிய முடியாதவர்களுக்குக் கிருஷ்ண லீலை இதமாக இருக்கின்றது. புத்தர் உபதேசம் புரிகின்றது. அவர்களைத் தெய்வமாக ஏற்றுக்கொள்ள முடிகின்றது. ‘இஷ்ட தேவதை’ என்றும், ‘காளி’ என்றும், ‘அம்பாள்’ என்றும், ‘லலிதா’ என்றும் பரமன் மனிதனை நாடி வருகின்றார்.
இஷ்ட தேவதைகள் சிறு தெய்வங்கள் இல்லை. பரமனுடன் அவை நேரடியான தொடர்பு உள்ளவை. இஷ்ட தேவதைகள் ஆன்மீக முயற்சியின் அகன்ற குறிக்கோளையும் உயர்ந்த உன்னத இலட்சியத்தையும் இணைத்துப் பூர்த்தி செய்யும் திறன் உடையவை. அத்திறன் உச்சகட்டத்தில் இருந்தாலும், இஷ்டதேவதை அவற்றை அந்த ஒரு பக்தனுக்கு மட்டுமே வழங்க முடியும். அவன் மூலம் மற்ற ஒருவருக்கோ, உலகத்திற்கோ வழங்க முடியாது. இஷ்டதேவதையின் நிலை உச்சகட்ட உயர்வுள்ளது என்றாலும், பூரணயோக இலட்சியத்தைப் பூர்த்தி செய்யும் திறன் உடையது அல்ல.
அடுத்த கட்டத்தில் உள்ள மனிதன், உயர்ந்த மனப்பாங்கு உடையவன் எனினும் ஆரம்பக்கட்டத்தில் உள்ள பாமரன், ‘பாமரன்’ எனினும் பரமனை அறியும் பக்தித் திறன் உடையவன். பக்திக்குச் சிறப்பு இருந்தாலும், ‘திறமைக்குச் சிறப்பு இல்லை’ என்பதால், அவனால் அவதாரத்தையும், இஷ்டதேவதையையும் நாடிப் பலன் பெற முடியாது. அருகில் அமர்ந்து, அவர் சொல் கேட்டு ‘குரு’ எனச் சொல்லி, கூப்பிட்ட குரலுக்குக் குற்றேவல் செய்து, அன்பு செலுத்தி, பாதங்களில் வீழ்ந்து பணிந்து, உள்ளத்தால் உணர்ந்து, மனத்தால் வழிபட்டு, வாழ்க்கையில் விரும்பி ஏற்றுக் கொள்ளக் கூடிய குருவை நாடுபவன் பாமரன். பரமன், குருவாக வந்தும் பக்தனுக்கு அனுக்ரஹம் செய்கிறார். பூரணயோகத்திற்கு உடைய குரு உள்ளுறை ஜகத்குருவே என்பதால், சாதகன் கண்ணைத் திறந்து ஜகத்குருவைக் காணும்படி செய்வதே இந்த மனித குருவின் கடமை.
பக்தன் பவித்ரமாக எதையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருப்பதால், சொல்லால் சூழப்பட்ட சூத்திரங்களையோ, மறைபொருளான மந்திரங்களையோ அவனுக்குக் கொடுத்து, யுக இலட்சியத்தை நாடிவந்த சாதகனை உபயோகமற்ற உள்ளூர் சாஸ்திரியாக்கும் தவற்றைச் செய்தல் கூடாது. தன் அந்தரங்க சக்தியாலும், அதனால் ஏற்பட்ட அற்புதச் சூழலாலும் (atmosphere), வேத இரகஸ்யத்தை விண்டுரைத்தலாலும், சாதகனின் ஆன்மா விழிப்பு அடைந்து அனந்தனைக் கண்டு அவனுடன் இணைந்து பூரணயோக ஞானம், உற்சாகத்தால் பூர்த்தியடைய அருள்பவரே உண்மையான மனித குருவாவார்.
***********