Skip to main content
Karmayogi

Main navigation

  • Home
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home
  2. புஷ்பாஞ்சலி

ஸ்ரீ அரவிந்தர் அன்னை நூல்கள்

இதுவரை உலகத்தில் அவதாரப் புருஷர்கள் ஒவ்வொருவராக வந்திருக்கின்றனர். இரு அவதாரப் புருஷர்கள் ஒரே சமயத்தில் வந்தது இல்லை. முதன்முதலாக அன்னையும், ஸ்ரீ அரவிந்தரும் ஒரே சமயத்தில் அவதரித்தார்கள். மேலும் அவர்கள் இணைந்து செயல்பட்டனர். உலக சரித்திரத்தில் இது ஒரு மாற்றம், புதுமை, உயர்வு. வேத காலத்திலிருந்து, உபநிஷதம், கீதை ஏற்பட்ட நாளிலிருந்து, இராமகிருஷ்ண பரமஹம்ஸர், இராமலிங்க சுவாமி நாள்வரை யோக விஷயங்கள் விளக்கமாக எழுத்தப்படவில்லை. பதஞ்ச யோக சாஸ்திரம், உபநிஷதங்கள், கீதை உள்பட யோக விஷயங்களைச் சுருக்கமாகச் சுட்டிக்காட்டுவதே மரபு; விளக்கமாக எழுதப்படவில்லை என்பது மட்டுமன்று, விளக்கமாக எழுதக்கூடாது என்பதே மரபு. அன்னையும், ஸ்ரீ அரவிந்தரும் இந்த மரபுக்கு விதிவிலக்கு. அவர்கள் எழுதியவை பல்லாயிரம் பக்கங்கள். அவை அனைத்தும் யோகப் பயிற்சியை மட்டுமே விளக்குபவை. மற்ற விஷயங்களைப் பற்றியும் எழுதியிருக்கிறார்கள். எனினும், யோகப் பயிற்சியைத் தெளிவாகப் புரிந்துகொள்ள உதவும் வகையிலேயே எழுதியிருக்கின்றார்கள். அந்நூல்களைப் பற்றிய கட்டுரை கடினமாக இருப்பதே இயற்கை. எளிமையாக எழுதக்கூடியவை அல்ல அவை. என்றாலும், இருவரும் வாழ்க்கையை ஏற்றுக்கொண்டதால், வாழ்க்கையைப் பற்றிய விவரங்களை அனைவரும் புரிந்துகொள்ளலாம் என்பதால், அவர்களுடைய நூல்களை விளக்கும்பொழுது வாழ்க்கையை ஓட்டிவரும் இடங்களை மட்டுமே ஆதாரமாகக்கொண்டு இக்கட்டுரையை எழுத முயல்கிறேன். அந்தக் கருத்துகள் வாழ்க்கையை ஒட்டியவை என்றாலும், வாழ்க்கையின் சிகரமாக அமைந்தவை என்பதால், எல்லாச் சமயங்களிலும் எளிமையாக அமையாது என்பதே உண்மை.

ஸ்ரீ அரவிந்தர் எழுத்து கனமானது. அன்னை எழுதுவது இனிமையானது. குழந்தைகளுக்காக அன்னை பேசியது என்பதால் எளிமையானவை என்பார்கள். குருவுடன் பல ஆண்டுகள் வாழ்ந்த சிஷ்யனுக்கு பரமாத்மாவுக்கும், ஜீவாத்மாவுக்கும் உள்ள வித்தியாசத்தை குருவால் எளிதில் சொல்ல முடிவதில்லை. ஆசிரமத்தில் அன்னை சிறு குழந்தைகளுக்குச் சொற்பொழிவாற்ற வந்தபொழுது, சிறு குழந்தைகள் ஜீவாத்மாவுக்கும், பரமாத்மாவுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று கேட்கிறார்கள். அன்னை பதில் சொல்கிறார். அவ்வளவு உயர்ந்த கருத்துகளையும் அன்னை எளிமையாகச் சொல்ல முயல்கின்றார். ஸ்ரீ அரவிந்தர் எழுத்து மந்திர சக்தி வாய்ந்தது. பாரிசவாய்வால் பீடிக்கப்பட்டவர் ஸ்ரீ அரவிந்தர் புத்தகத்தை 20 நாட்கள் படிக்கக் கேட்டதில் தம் வியாதி குணப்படுவதைக் கண்டார். அன்னை எழுதியவை இனிமையானவை என்றாலும், அதே மந்திர சக்தியை இனிமையுடன் தாங்கிவருவதாகும். தொடர்ந்து படிக்கக்கேட்டால் அல்லது நாமே படித்தால், வியாதியைப் போக்கவல்லது; பிரச்சினைகளையும் தீர்க்கவல்லது. அன்னை எழுதிய 80, 100 வாக்கியங்களை மட்டும் ஒரு சிறு பிரசுரமாக வெளியிட்டு அதை அன்னையின் மந்திரங்கள் எனப் பெயரிட்டுள்ளனர்.

ஸ்ரீ அரவிந்தர் இங்கிலாந்தில் பயின்றவர். எந்த ஒரு கருத்தையும் தெளிவுபடுத்த நீண்ட விளக்கம் எழுதப் பயின்றவர். அன்னை பிரெஞ்சு நாட்டுப் பயிற்சி பெற்றவர். ஆனால் ஸ்ரீ அரவிந்தர் யோக சித்தி பெற்றபின், இந்திய மரபை ஒட்டியே தம் யோகத்தின் தத்துவத்தை நூலாக எழுத முயலவில்லை. தம் கருத்தின் சாரத்தை 547 வாக்கியங்களாக எழுதினார். அதற்குமேல் அவர் எழுதத் திட்டமிடவில்லை. அன்னை வந்து அவரைச் சந்தித்தபொழுது, ரிச்சர்ட் கேட்டுக்கொண்டதன்பேரில் ஸ்ரீ அரவிந்தர் தம் யோகத்தை விளக்கி நூல் எழுதச் சம்மதித்தார். அதனால் எழுதப்பட்ட நூல்களே இன்று நமக்குக் கிடைத்தவை. பிரெஞ்சுப் பயிற்சியுடைய அன்னை இந்திய மரபையொட்டி தாமும் எழுத முன்வரவில்லை. இன்று அன்னையின் நூல்கள் என நாம் பெற்றிருப்பன அவர்கள் அவ்வப்பொழுது, பேசியதை எழுதித் தொகுத்தவையே. நூலாக அன்னை எழுதியவை மிகக்குறைவு. ஸ்ரீ அரவிந்தருடைய நூல்களை பிரெஞ்சில் மொழிபெயர்த்ததே அன்னையின் எழுத்தாக வடிவம் பெற்றவை. ஸ்ரீ அரவிந்தருக்குப் பிரெஞ்சு மொழியில் அதிகப் பயிற்சியும், பற்றும் உண்டு. ஆங்கிலத்தில் அவர் எழுதிய நூல்களில், வாக்கிய அமைப்பு பிரெஞ்சு மொழியின் அமைப்பாகவே இருப்பதால், அவற்றைப் பிரெஞ்சில் மொழிபெயர்ப்பது எளிமையாக இருந்தது என அன்னை கூறுகிறார். ஸ்ரீ அரவிந்தர் தம் முக்கிய நூல்களை 1914 முதல் 1920வரை எழுதி முடித்தார். "ஆர்யா'' என்ற மாதாந்திரப் பத்திரிக்கையை ஆரம்பித்து, அதன் பகுதிகளாகத் தம் நூல்களை எழுதினார். நூல்கள் முடிந்தவுடன் பத்திரிக்கை நின்றுவிட்டது. யோக விஷயங்கள் எழுத்தில் விவரிக்கக் கூடியவையன்று என்ற நியதியை ஒட்டி எழுதாமல் இருந்தவர், ரிச்சர்ட்டும், அன்னையும் கேட்டுக்கொண்டதின் பேரில் எழுத ஆரம்பித்தார். ஆர்யாவை அன்று படித்த வாசகர்களான பேராசிரியர்களும், மற்றவர்களும் ஸ்ரீ அரவிந்தர் எதைப் பற்றி எழுதுகிறார் என்றே தெரிந்துகொள்ள முடியாமல் திகைத்தனர். அவர்களுள் ஒருவர் பகவானுக்கு கடிதம் எழுதி, உங்கள் கட்டுரைகளுக்கு முன்னால் அவை எதைப் பற்றியவை எனக் குறிப்பு எழுதினால் தேவலை என்று கேட்டிருந்தார். பகவானும் இசைந்து குறிப்பெழுதினார். அதுபோன்று குறிப்புகளை இப்பொழுது ஒரு புதிய பத்திரிக்கை ஆரம்பித்து, Archives என்ற பெயரில் நடத்தி, அதில் வெளியிடுகின்றார்கள். இதுவரை வெளிவாராத செய்திகள், கடிதங்கள், குறிப்புகள், புதியதாகத் தேடி எடுத்த சீட்டுகளில் உள்ள செய்திகள் ஆகியவற்றை வெளியிடும் பத்திரிகை இது. ஆறு மாதத்திற்கு ஒரு முறை வருகிறது. ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்க்கு மட்டும் பயன்படுவது என்றாலும், இங்குமங்கும் பகவானைப் பற்றிய சிறு செய்திகள் பல இருப்பதால் அன்பர்கள் விரும்பக்கூடியது. தம் யோகம் வளர்ந்ததை தினக்குறிப்பில் பகவான் எழுதியிருக்கின்றார். சில இடங்களில் ஒவ்வொரு மணியில் நடந்ததைக் குறிப்பிட்டு உள்ளார். தமக்குத் திரிகாலத் திருஷ்டி ஏற்பட்டபொழுது தாம் முன்கூட்டி அறிந்தவைகளில் எவை பலித்தன, எவை பலிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்திய யோகப் பரம்பரைக்கு மாறானது இந்தக் குறிப்பு எழுதும் பழக்கம்; முரணானதும்கூட. இதுபோன்ற நூற்றுக்கணக்கான செய்திகள் கொஞ்சம், கொஞ்சமாக இப்பொழுது வெளிவருகின்றன. பகவானுடைய மனைவி மிருணாளினி எழுதிய கடிதங்கள் பல விட்டுப்போயின. சில பிற்காலத்தில் கிடைத்தன. அவற்றையும் வெளியிட்டுள்ளார்கள். பகவான் புதுவையில் அசரீரியின் ஆணைக்கிணங்க புகலிடம் பெற்றபொழுது, 1910-இல் தங்கியிருந்த வீட்டின் விவரங்கள், வாடகை ரூ.35 என்பது, மனைவியின் கைச்செலவுக்காக மாதம் ரூ.15 அனுப்பியது, அவரது கல்கத்தா பங்களா தோட்டத்து வருமானம் போன்றவையும் இங்குக் காணப்படுகிறது.

இராமலிங்க சுவாமியைப் பற்றி அறிய விரும்பி, அவரது பாடல் ஒன்றை அன்னையிடம் மொழிபெயர்த்துச் சொன்னபொழுது, முதலடியைக் கேட்டவுடன் அன்னை, "இவர் (Supramental Light) சத்தியஜீவிய ஒளியைப் பெற்றவர்'' என்று சொன்னார். எந்த மொழியானாலும் அந்த ஓசையைக் கேட்டவுடன் அதிலுள்ள சாராம்சத்தை அறியக்கூடியவர் பகவான். பகவான் இந்தியச் சுதந்திரத்திற்காக யோகத்தை மேற்கொண்டவர். இறைவன் ஸ்ரீ அரவிந்தரை 1910-இல், "சுதந்திரத்திற்காக நீ செய்த வேலை போதும். இனி, இறைவனுக்காக, சேவையைப் புதுவை சென்று மேற்கொள்ள வேண்டும்'' என்று பணித்தார். அப்பொழுதெல்லாம் ஸ்ரீ அரவிந்தர் வேதத்தைப் பயிலவில்லை. ஆனால் அவரது யோகம் வேதம் சென்ற பாதையிலெல்லாம் அவரை அழைத்துச் சென்றது. புதுவை வந்து வேதம் பயின்றார். சுப்பிரமணிய பாரதியும் வேதம் படிப்பதில் ஸ்ரீ அரவிந்தருடன் சேர்ந்துகொள்வார். 4 கடவுள்களை வேதம் குறிப்பிட்டதைக் கண்ட ஸ்ரீ அரவிந்தர் சில வருஷங்களுக்கு முன்னால் தாம் அந்த 4 கடவுள்களையும் தியானத்தில் அடிக்கடி பார்த்ததாகவும், 3 பேர்கள் தாம் கேட்டறிந்தவரென்றும், 4-ஆம் கடவுளை அடையாளம் தெரியவில்லை எனவும், வேதத்திலிருந்து அது "இளா'' எனும் தெய்வம் என்று அப்பொழுது தெரிந்துகொண்டதாகவும் பாரதியிடம் குறிப்பிட்டார்.

ஸ்ரீ அரவிந்தர் சமஸ்கிருதத்திலிருந்து ஏராளமாகவும், வங்காளி, கிரேக், லத்தீன், தமிழ் மொழிகளிலிருந்தும் மொழிபெயர்த்துள்ளார். மொழிபெயர்ப்புகள் மட்டும் ஒரு வால்யூமாக (நெ.8) பிரசுரிக்கப்பட்டுள்ளது. அவரது நூற்றாண்டில் அவர் எழுத்துகளைத் தொகுத்து 29 வால்யூம் பிரசுரம் செய்து அவற்றிற்கு (index) அகராதிக் குறிப்பாக 30-ஆம் வால்யூம் பிரசுரம் செய்துள்ளனர்.

தமிழில் திருக்குறள், ஆழ்வார் பாசுரங்களைப் பாரதிமூலம் அறிந்த பகவான், நம்மாழ்வார் பாசுரங்கள் பல இடங்களில் உலக இலக்கியத்தின் சிகரத்தைத் தொடுகிறது என்றும், தமிழ் மொழியின் சிறப்பமைப்பு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க அனுமதிக்காதென்றும் கூறுகிறார். திருக்குறளில் கடவுள் வாழ்த்தான, "அகர முதல எழுத்தெல்லாம்'' என்று தொடங்கும் 10 குறள்களை மொழிபெயர்த்துள்ளார். "வாரணமாயிரம் சூழ வலம் வந்து'' என்று தொடங்கும், "கனாக் கண்டேன் தோழி நான்'' என்னும் பகுதியில் 5, 6 பாசுரங்களை மொழி பெயர்த்திருக்கிறார். நம்மாழ்வார் பாசுரம் 10உம், குலசேகர ஆழ்வார் பாசுரம் 9உம், ஆண்டாள் பாசுரங்கள் 13உம் மொழிபெயர்த்திருக்கின்றார்.

1926வரை சாதகர்களை மாலையில் சிறிது நேரம் சந்தித்து, உரையாடிய ஸ்ரீ அரவிந்தர் 1926-இல் முழுத் தனிமையை நாடினார். சாதகர்கள் தங்கள் யோகப் பிரச்சினைகளை பகவானுக்கு எழுதுவதுண்டு. அவர் பதில் அளிப்பார். இரு சாதகர்களுக்கு மட்டும் தினமும் கடிதம் எழுதும் உரிமை இருந்தது. அவர்கள் எழுதியவை ஏராளமான கடிதங்கள். 1938-இல் பகவான் கீழே விழுந்து, எலும்பு முறிந்தபின்னர் கடிதங்கள் நிறுத்தப்பட்டன. அன்னை பகவானுடைய அறைக்கு மேற்பகுதியிலுள்ள அறையில் வசித்துவந்தார். சுமார் மாலை 4 மணிக்கு, பகவான் அன்னை அறைக்கு வந்து அங்கேயே உட்கார்ந்து பதில்களை எழுதுவார். அவர் வரும் நேரத்தில் எந்தச் சாதகர் அங்கிருந்தாலும், அவர்கள் வெளியே வந்துவிடுவார்கள். பகவானைத் திரும்பிப் பார்க்கக்கூடாது என்று ஏற்பாடு. இரவு நெடுநேரம்வரை கடிதங்களுக்குப் பதில் எழுதுவதுண்டு. ஒரு சமயம் காலை 6 மணிவரையும் எழுதிக்கொண்டிருந்தார். அவர் எழுதும் பதில்களை அன்னை படித்தபின்னரே சாதகர்களுக்கு அனுப்புவார்கள். அப்படி அவர் எழுதியவை 22,000 கடிதங்கள். அவற்றைப் பாகுபாடு செய்து, தொகுத்து 3 வால்யூம்களாக (22, 23, 24) பிரசுரித்திருக்கிறார்கள். இந்தப் பகுதியில் இடம்பெறும் தலைப்புகள்: மதம், இலட்சியம், யோகம், பகுத்தறிவு, விஞ்ஞானம், ஜீவனின் பகுதிகள், இறைவனும் தீய சக்திகளும், அவதார இலட்சியம், விதி, கர்மம், பரம்பரை, பூரண யோகத்தின் அஸ்திவாரம், கர்மத்தால் பலன் பெறும் யோகம், தியானமும் யோகமும், பக்தியும் யோகமும், யோகப் பாதையில் நட்பு, ஆசிரமத்திலும் வெளியிலும் செய்யப்படும் யோகம், யோகானுபவம், சித்தி, திருஷ்டி, பிரபஞ்சம், மூன்று திருவுருமாற்றங்கள், மனம், பிராணன், உடல், இருளின் திருவுருமாற்றம், யோகப் பாதையிலுள்ள இடையூறுகள், தீய சக்திகளின் எதிர்ப்பு ஆகியவை. சாதகர்கள் கீதையைப் பற்றியும், சங்கரர், அத்வைதம், பரமஹம்சர், விவேகானந்தர் என்பதிலிருந்து, "காபி சாப்பிட்டால் யோகம் பாதிக்கப்படுமா?, தமக்குச் சாய்வுநாற்காலி வேண்டும்'' என்பதுவரை பகவானுக்கு எழுதி விளக்கம் கேட்டிருக்கின்றார்கள்.

1920லேயே அவரது முக்கிய யோக நூல்களும், சரித்திரம், காவியம், இந்தியக் கலாச்சாரம் பற்றிய நூல்களும் எழுதி முடிக்கப்பட்டுவிட்டாலும், சுமார் 10 ஆண்டுகள்வரை அவை முழு நூல்களாகப் பிரசுரிக்கப்படவில்லை. 1923-இல் கல்கத்தாவில் முக்கியச் சில நூல்கள் பிரசுரமாயின. அடுத்து 20 ஆண்டுகளுக்குப்பின் ஸ்ரீ அரவிந்தர் பெயரில் சர்வதேச பல்கலைக்கழகம் ஆசிரமத்தில் ஆரம்பித்தபின், அவர் அதுவரை எழுதிய எல்லா நூல்களும் பல்கலைக்கழகத்தால் பிரசுரிக்கப்பட்டன. அடுத்த 20 ஆண்டுகள்வரை வேறு பிரசுர முயற்சி எடுக்கப்படவில்லை. ஸ்ரீ அரவிந்தர் நூற்றாண்டு விழா 1972-இல் வந்தபொழுது, அவர் கடந்த 60, 70 வருஷங்களாக எழுதிய அனைத்தையும் தொகுத்து நூற்றாண்டு வெளியீடாக, 29 வால்யூம்களாக ஆசிரமம் வெளியிட்டது. இதற்கிடையில் அவரது முக்கியச் சில நூல்கள் அமெரிக்காவில் வெளியிடப்பட்டன. நூற்றாண்டு வெளியீடு மிகச்சிறப்பாக அமைந்தது. இந்தியப் புத்தகப் பிரசுரங்களில் பரிசு பெற்றது. அதேபோல் அன்னையின் நூற்றாண்டு விழா 1978-இல் கொண்டாடப்பட்டபொழுது அவரது எழுத்து 16 வால்யூம்களாக பிரசுரிக்கப்பட்டது. சிறந்த பிரசுரமாக அதற்கும் அகில இந்திய பரிசு கொடுக்கப்பட்டது.

புதுவை வருமுன் ஸ்ரீ அரவிந்தர் உத்தர்பாரா என்ற இடத்தில் சொற்பொழிவாற்றினார். சொற்பொழிவுக்குப் போகுமுன் அவர் மனம் மௌனத்தால் ஆட்கொள்ளப்பட்டதால் அவரால் சிந்திக்க முடியவில்லை. சபையின் முன்னே வெற்று மனத்துடன் தோன்றினார். ஓர் அற்புதமான சொற்பொழிவு பிரவாகமாக உள்ளிருந்து எழுந்து, தெய்வத் திருவாக்காக ஒலித்து வெளிப்பட்டது. அப்பிரசங்கம் மிகவும் புகழ் வாய்ந்தது என்பதால், அச்சிறு பிரசுரம் அனைவரையும் கவர்ந்தது. யோக விளக்கங்கள் நீண்டவையாக இருப்பதால் ஆரம்ப நாளில் முக்கிய கருத்துகளைத் தொகுத்து இரு சிறு வெளியீடுகள் வந்தன.Yoga and its objects, Basis of Yoga நீளம் கருதி இவை எல்லோருக்கும் பயன்படும் அளவில் இருந்ததால், இவ்விரு பிரசுரங்களும் பிரபலமாகிவிட்டன.

கீதையைப் பற்றி ஸ்ரீ அரவிந்தர் ஒரு முழு நூல் எழுதியிருக்கிறார். கீதையைப் புரிந்துகொள்ளும் முறையைத் தெளிவாக விளக்கி, அதிலிருந்து ஆரம்பித்து தெய்வமே குரு, மனிதனாகிய சீடன், குருக்ஷேத்திரம், சமத்துவம், கர்மயோகம், பரம்பொருள், இரகஸ்யத்தின் இரகஸ்யம், விபூதி, பக்தி மார்க்கம், சுபாவம், அதர்மம், பரம இரகஸ்யம், கீதையின் உட்கருவான உட்பொருள் ஆகிய அத்தியாயங்கள்மூலம் ஸ்ரீ அரவிந்தர் விளக்குகின்றார். கீதையின் இரகஸ்யத்திற்கும், பூரண யோகத்திற்கும் உள்ள தொடர்பைக் குறிப்பாக எழுதுகின்றார்.

பூரணயோகம் கீதையின் சாராம்சத்தை முழுவதுமாகத் தன்னுட்கொண்டது என்றாலும், இவையிரண்டும் வேறு. வேதப் பரம்பரையை ஒட்டி புருஷோத்தமனுக்குச் சரணாகதியை அர்ப்பணித்து உலகத்திலிருந்து விலகி கடைசி நிலையான சித்தியைத் தேட முயல்வது கீதை. கீதையில் சக்தி வடிவமான அன்னைக்கு அதிக முக்கியத்துவம் இல்லை. பூரணயோகத்தில் சக்தியான அன்னையும், அன்னைக்குச் சாதகன் செய்யும் சரணாகதியும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவையின்றி, யோகமில்லை. பூவுலகில் தெய்வீக வாழ்வு மலரவேண்டும் என்ற கருத்து, மனித குலம் முழுவதும் இருளிலிருந்து விடுபட வேண்டும் என்ற கருத்துக்கு, கீதையில் முதலிடம் தரப்படவில்லை. அதுவே பூரணயோக இலட்சியம்.

ஸ்ரீ அரவிந்தர் தம் யோகத்தைத் தத்துவமாகவும், பயிலும் முறையாகவும், காவியமாகவும் நமக்களித்துள்ளார். The Life Divine என்பது தத்துவ விசாரத்திற்குரியது. சர்வேஸ்வரனும், சிருஷ்டியும் அதன் பொருள். சிருஷ்டியின் ஆரம்பத்திலிருந்து, மனித வாழ்வு தெய்வீக வாழ்வாக மாறவேண்டியதுவரை, புத்தகம் தன் கொள்கையை விளக்குகிறது. நம் காலத்தில் வந்த புத்தகங்களில் மிக உயர்ந்ததாக இது கருதப்படுகிறது. யோகத்தைப் பயிலும் முறைகளை விளக்குவதற்காக எழுதப்பட்ட நூல் Synthesis Of Yoga. கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம், பூரணயோகம் ஆகிய 4 பகுதிகளைக்கொண்டது. சுமார் 80 அத்தியாயங்கள் அடங்கியது. பூரணயோகத்திற்குச் சாஸ்திரமாக அமைவது இறைவனே. குருவாக இருப்பவனும் இறைவனே என்று நூல் முதல் அத்தியாயத்தில் தொடங்குகிறது. பூரணயோகச் சித்தியடைந்ததற்கு அறிகுறி திரிகாலத்திருஷ்டி இயல்பானதாக அமைவது என்று முடிக்கின்றது.

"அகந்தையிலிருந்து விடுபட்ட ஆன்மா, இருளிலிருந்து விடுபட்ட இயற்கை எனும் பிரகிருதி, தூய்மைப்படுத்தப்பட்ட மனோமயப்புருஷன்மூலம் சமத்துவம் செறிந்து ஜீவனில் முழு நம்பிக்கையுடன் செயல்பட்டால் மனிதன் தன் நிலையிலிருந்து உயர்ந்து சத்தியஜீவனாகிறான்'' என்ற மறைபொருளை 25 அத்தியாயங்களில் தெளிவுற விளக்குகின்றார்.

சாவித்திரி என்ற நெடுங்காவியம் 24,000 அடிகளை உடையது. முதல் 14 வரிகளில் எழுத உத்தேசித்த இந்தக் காவியம் 12 புத்தகங்களாக வளர்ந்தது. பகவான், தம் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து எழுதிய நூல் இதுதான். கடைசி நாட்களில் பகவான் சொல்ல, ஒரு சாதகர் எழுதினார். மகாபாரதக் கதையில் வரும் சத்தியவான், சாவித்திரியை உருவகமான பாத்திரங்களாகக் காவியத்தில் அமைத்துள்ளார். "இவை கற்பனைப் பாத்திரங்களில்லை, உயிருள்ள பாத்திரங்கள். படிப்பவருடைய ஜீவனோடு தொடர்புகொண்டு யோக நுணுக்கங்களைத் தெரிவிக்கவல்லவை'' என்று ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார். சத்தியவான் சத்தியத்தைத் தாங்கிவரும் ஆத்மா, மரணத்தின் பிடியிலிருக்கின்றது. சாவித்திரி சூரியனுடைய மகள். உலகை உய்விக்க வந்த தெய்வம். காவியம் சூரிய உதயத்தில் ஆரம்பித்து, இருள் அற்றுப்போன, ஒளி நிரம்பிய தினம்வரை வந்து முடிகிறது. எமனுக்கும், சாவித்திரிக்கும் இடையேயுள்ள விவாதம் உலகப் பிரசித்தி பெற்றது. காரிருள் மன்னனான காலன், "நீ யார்? தெய்வக் குரல் பேசுவதுபோல் பேசுகிறாய்? தெய்வமானால் உன் திருமுகத்தைப் பார்க்கலாம்'' என்றபொழுது, சாவித்திரியின் முகத்திலிருந்து தெய்வ ஒளி அகன்று, பரந்து காலனை எதிர்கொண்டபொழுது, காலன் உருவம் கரைய ஆரம்பித்தது. முடிவில் மரணத்தின் தலைவன் உருவமிழந்து, உயிரிழந்து மறைகிறான். அதன்பின் நாள் என நாம் அறியும் இருள் - ஒளி தினம், ஒளி - ஒளி தினமாக மாறுகிறது. உலகம் இருளிலிருந்து இறுதியாக விடுதலையடைகிறது.

சாவித்திரி படித்த அன்னை, தம் ஆன்மீக அனுபவங்களை ஸ்ரீ அரவிந்தர் காவியமாக எழுதியதாகக் கூறுகிறார். முதல் நாள் இரவு அன்னைக்கேற்பட்ட ஆன்மீக அனுபவத்தை அவர் ஸ்ரீ அரவிந்தரிடம் கூறுமுன்பே, மறுநாள் சாவித்திரியின் பகுதியாக எழுதியதை அன்னை தாம் கண்டதாகக் கூறுகிறார். அணுவைப் பிளப்பதிலிருந்து, கடலினடியில் கப்பல் செல்வதிலிருந்து, மனித மனத்தின் வக்ரபாவங்கள்வரை உலகிலுள்ள அனைத்து நிகழ்ச்சிகளும் சாவித்திரியில் இடம்பெறுவதாக அன்னை சொல்கிறார். "சாவித்திரியைப் படிப்பதெப்படி?'' என அன்னை ஒரு சொற்பொழிவாற்றியுள்ளார். அறிவு அமைதியடைந்து, ஆன்மா விழிப்படைந்து, காவியத்தைப் பயின்றால் ஆன்மீக அருள் நேரடியாகச் சாதகனுடைய ஆன்மாவைச் சென்றடையும் என்கிறார்.

மனம் ஒரு விஷயமாக குழப்பமடைந்த காலத்தில், சாவித்திரியை எடுத்துச் சில நிமிஷம் மௌனமாக இருந்து, கத்தி போன்ற கூரான தகட்டால் புத்தகத்தைப் பிரித்து, கண்ணில் பட்ட வரிகளைப் படித்தால் நமக்கு வழிகாட்டும் என்கிறார் அன்னை. ஒவ்வோர் அடியும் முழு மந்திர சக்தி வாய்ந்தது. தினமும் சாவித்திரியில் சில பக்கங்கள் படிப்பது ஒரு யோகப் பலனை அளிக்கும் என்கிறார் அன்னை. அழுகையில் மூழ்கியவர் சாவித்திரியைப் படித்து, அழுகையை மறந்து சிரித்துக்கொண்டு எழுந்துவந்ததுண்டு.

உலகச் சரித்திரத்தின் போக்கை விளக்கி, மனித குலம் ஒற்றுமையடையும் என்ற கருத்துப்பட Ideal Of Human Unity என்ற புத்தகத்தை எழுதினார். அதில் இந்தியா அடிமைப்பட்டதற்கு ஒரு விளக்கமளிக்கின்றார். ஆன்மீகம் இந்நாட்டில் செழித்து வளர்ந்துள்ளது. அதனால் இந்தியா உலகத்தின் குரு என்ற தகுதியைப் பெற்றுள்ளது; என்றாலும் அஸ்திவாரத்தில் ஆன்மீகம் வளர்ந்துள்ள உயர்வுக்கு நாட்டின் பொருளாதார வளர்ச்சியோ, அரசியல் ஒற்றுமையோ இல்லை. நாடு முழுவதும் ஒன்றாக ஒருபோதும் இருந்ததில்லை. காலம் அதற்குரிய பல வழிகளையும் கடைப்பிடித்து பலனில்லை என்றபின், அந்நிய ஆட்சிமூலம் இந்தியாவின் எல்லாப் பகுதிகளையும் ஒரே ஆட்சியின்கீழ் கொண்டுவரலாம் எனக் கருதி ஆங்கிலேயர் படையெடுப்பை ஏற்பாடு செய்தது என்று ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார்.

சமுதாய வளர்ச்சியைப் பற்றியது Human Cycle என்ற நூல். மேல்நாட்டார் அனைவரும் ஆர்வமாகப் படித்துப் போற்றும் நூல் அது. பாரிஸில் ஒரு புத்தக வெளியீட்டார் ஸ்ரீ அரவிந்தர் நூல்களில் ஒன்றை வெளியிட விரும்பியபொழுது அனைவரும் ஏகமனதாக Human Cycleஐத் தேர்ந்தெடுத்தனர். அன்னையிடம் பிரச்சினை வந்தது. அது உயர்ந்த நூல் என்பதில் ஐயமில்லை. ஆனால் யோக சக்தி படிப்பவரைத் தொட்டு, அவர் ஆன்மா துலங்கவேண்டுமானால் அதற்குரிய நூல் The Synthesis of Yoga தான் என்று அன்னை முடிவு செய்தார்.

The Foundations of Indian Culture "இந்தியக் கலாச்சாரத்தின் அஸ்திவாரம்'' என்பது மற்றொரு முக்கியமான நூல். இந்தியா நாகரீகமடையவில்லை என்று கருதி ஆங்கிலேயர் ஒருவர் எழுதிய நூலுக்கு மறுப்பும், விளக்கமும் கொடுக்க ஸ்ரீ அரவிந்தர் இதை எழுதினார். இந்தியப் பண்பு ஆன்மாவில் உறைகிறது. அகக்கண்ணில்லாத குருடனுக்குப் புலப்படக்கூடியதில்லை இந்திய நாகரீகம். ஓவியம், சிற்பம், இசை ஆகியவற்றை இந்நோக்கில் விமர்சனம் செய்து விளக்குகிறார். அகஅழகை லாவண்யம் என்றும், புறஅழகை சௌந்தர்யம் என்றும் இந்திய மொழி பிரிக்கின்றது. இந்தப் பாகுபாடு மேலைநாட்டிலில்லை. இப்புத்தகத்தில் இடம்பெறும் விவரங்கள் கோயில்கள், சிற்பங்கள், கட்டிடங்களில் தாஜ்மஹால், கும்பகோணம் சாரங்கபாணி கோயில் கோபுரம், திருவானைக்காவல் ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் ஆலயம், சித்தன்ன வாசல் சிற்பம், சுந்தரமூர்த்தியின் விக்ரஹம், தஞ்சாவூர் நடராஜர் சிலை ஆகியவை.

சூட்சும உலகில் நம் பூமியில் உள்ள அனைத்துக்கும் பிரதிநிதியுண்டு. உதாரணமாக நாம் நாளை வெளியூர் செல்ல வேண்டுமானால், அந்தச் செயல் சூட்சும உலகில் சில நாட்கள் முன்னதாகவே உருவாகிவிடுகிறது. பூமியின் ஞாபகம், சிருஷ்டியிலிருந்து இன்றுவரை உறையும் உலகம் ஒன்றுண்டு. யோக சக்தியால் அந்த லோகத்தை எட்டியவர் உலகில் நிகழ்ந்த அனைத்தையும் தெரிந்துகொள்ள முடியும். அதேபோல் காவியம், நாடகம், இசை, ஞானம் ஆகியவை உறையும் உலகங்களும் உள்ளன என்று அன்னை கூறுகிறார். Future Poetry என்ற நூல் எதிர்கால இலக்கியம், குறிப்பாகச் செய்யுள் வடிவிலுள்ள காவியம் எப்படியிருக்கும் என்று விளக்குவது. எதிர்காலக் காவியம் ஆன்மீக ஜீவனுள்ள கரு சொல் வடிவம் பெற்றிருக்கும் என்றும், அதன் தூரத்து, முதல் எதிரொலி Wordsworth,Walt Whitman,  ஆகியவர் படைப்பில் காணப்படுகிறது என்றும் ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார்.

கடைசி காலத்தில் ஸ்ரீ அரவிந்தர் Supermindஐப் பற்றி எழுதியவற்றைத் தொகுத்து Supramental Manifestation என்ற ஒரு சிறு புத்தகம் உண்டு. தெய்வீக உடல், தெய்வீக வாழ்வு, ஜோதிமயமான மனம், சத்தியமும் ஜோதியும் என்ற பகுதிகளைக் கொண்டது இந்த நூல். இதை மிக முக்கிய நூலாகக் கருதுவார்கள். சத்தியஜீவியமே பூரணயோக இலட்சியமாதலால், இறுதிக் காலத்தில் தம் இலட்சியத்தை அடைந்தபின் பகவான் எழுதிய புத்தகமாதலால், சாதகர்கள் போற்றும் நூல் இது.

இதுவரை ஆரம்ப நாளிலிருந்து புத்தக வடிவில் ஸ்ரீ அரவிந்தர் எழுதியவை வெளிவந்த பட்டியல் சரியாக 101 தலைப்புகளுள்ளன. நூற்றாண்டு விழாவில் வெளியிட்ட 29 வால்யூம்கள் இந்த 101 தலைப்புகளையும் உள்ளடக்கியது. முதல் வால்யூம் "வந்தே மாதரம் '' என்ற தலைப்புடையது, அவரது அரசியல் கட்டுரைகளடங்கியது; இரண்டாம் வால்யூம் "கர்மயோகி'' என்ற தலைப்புடையது, உத்தர்பாரா பிரசங்கம் உள்பட மற்ற அரசியல் கட்டுரைகளடங்கியது; மூன்றாம் வால்யூம் வால்மீகி, வியாசர், பங்கிம் சட்டர்ஜி, காளிதாஸன் ஆகியவரைப் பற்றியும், ஆவிகளுடன் பேசியதாக எழுதிய கட்டுரைகளும் அடங்கியது; வங்காளியில் பகவான் எழுதியவை 4-ஆம் வால்யூமாக இருக்கிறது; ஐந்தாம் வால்யூம் முழுவதும் அவர் எழுதிய ஆங்கிலப் பாடல்கள்; ஆறாம் வால்யூம் நாடகங்கள்; ஏழாம் வால்யூம் நாடகங்களும், சிறுகதைகளும்; எட்டாம் வால்யூம் மொழிபெயர்ப்புகள்; ஒன்பதாம் வால்யூம் எதிர்காலக் காவியம்; பத்து, வேத இரகஸ்யம்; பதினொன்று, வேத சூக்தங்களின் மொழிபெயர்ப்பு; பன்னிரண்டு, உபநிஷதங்கள்; பதிமூன்று, கீதை; பதினான்கு, இந்திய கலாச்சாரம்; பதினைந்து, அரசியல்; பதினாறு, சத்தியஜீவியம்; பதினேழு, இறைவன் வரும் தருணம்; பதினெட்டு, பத்தொன்பது, லைப் டிவைன்; இருபது, இருபத்தொன்று யோகம்; இருபத்திரண்டு, இருபத்து மூன்று, இருபத்து நான்கு, கடிதங்கள்; இருபத்து ஐந்து, அன்னை; இருபத்து ஆறு, தம்மைப் பற்றி; இருபத்து ஏழு, பிற்சேர்க்கை; இருபத்து எட்டு, இருபத்தொன்பது, சாவித்திரி; முப்பது, அகராதிக் குறிப்பு என்று வெளியிடப்பட்டுள்ளன.

வேதம் உயர்ந்தது என்பதை நாம் வழக்கில், ஒரு கருத்தின் உயர்வைத் தெரிவிக்க, "அதுவே எனக்கு வேதவாக்கு'' என்கிறோம். ஸ்ரீ அரவிந்தர் யோகம் பயில ஆரம்பித்து, சித்தியடையும்வரை வேதத்தைப் பயிலவில்லை. பின்னர் வேதத்தைப் பயின்றார்; அதன் உட்பொருளைக் கண்டார். அதை விண்டுரைக்கும் வாயிலாக வேத இரகஸ்யம் என்ற நூலை எழுதினார். கருத்தை மறைத்துச் சொல்வது வேத மரபு. எந்தக் கருத்து எப்படி மறைத்துச் சொல்லப்படுகிறது, அதை நாம் கண்டுகொள்ள வேண்டிய முறை எது என்பதை விளக்குகிறார். அக்னி சூக்தங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

எட்டு உபநிஷதங்களுக்கு விளக்கம் எழுதினார். வேதம், உபநிஷதம், கீதை, இவற்றை விளக்கப் பயன்படுத்திய முறை எல்லா இடங்களிலும் ஒன்றே. புறத்தோற்றத்தைப் புறக்கணித்து, உட்கருத்தை வெளிக்கொணரும் முறை அவர் கையாண்டது.

அன்னையின் அவதாரச் சிறப்பை சாதகர்கள் முழுவதும் அறியாத காலத்தில், அன்னையையும் ஒரு சாதகராகக் கருதிய நிலையில், அன்னையைப் பற்றி ஒரே இரவில் 4 பகுதிகளை ஸ்ரீ அரவிந்தர் எழுதினார். மிகச்சிறு வெளியீடானாலும், மிகவும் பிரசித்தி பெற்ற வெளியீடாயிற்று. அன்னைக்கு 3 அம்சங்களுண்டு. அவை ஈஸ்வர சக்தியிலுள்ள சக்தியம்சம்; பிரபஞ்சத்தைச் சிருஷ்டித்த அம்சம்; அவதார நிலையிலுள்ள தனிப்பட்ட அம்சம் என்று விளக்குகிறார். அத்துடன் அன்னைக்குரிய சக்திகள் ஏராளம். அவற்றுள் இதுவரை சிருஷ்டியில் 4 அம்சங்களே வெளிப்பட்டுள்ளன. மற்றவை இதுவரை வெளிப்பட சந்தர்ப்பம் ஏற்படவில்லை என்கிறார். மஹாஈஸ்வரி, மஹாகாளி, மஹாலக்ஷ்மி, மஹாசரஸ்வதி ஆகிய நான்கு அம்சங்கள் மட்டுமே இன்று உலகில் தொழிற்படுகின்றன என்கிறார். இப்புத்தகத்தில் ஒரு பகுதி பணத்தைப் பற்றியது. பணம் இறைவனுக்குரியது. ஆன்மீகப் பெருமக்கள் பணத்தைப் புறக்கணித்ததால், பணம் அசுரனின் ஆட்சிக்குட்பட்டுவிட்டது. அதை மீட்டு இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று அப்பகுதியில் எழுதுகிறார்.

கண்கள் இரண்டானாலும், பார்வை ஒன்றே என்பதைப்போல் அன்னையும், ஸ்ரீ அரவிந்தரும் ஒன்றே. அன்னையை உற்றுநோக்கினால் ஸ்ரீ அரவிந்தராகவும் தெரிவதுண்டு. அதுபோல ஒருவர் உருவம் மற்றவராக மாறும் இடத்தில் (Supramental consciousness) சத்தியஜீவியம் இருப்பதாக அன்னை கூறுகிறார். தம் மனமும், உணர்வும், உடலும், எண்ணமும், அசைவும் ஸ்ரீ அரவிந்தருக்கு அர்ப்பணிக்கப்பட்டன என்கிறார் அன்னை. தாம் எழுதும்போது ஸ்ரீ அரவிந்தர் எண்ணத்தில் உதிப்பதைப் பார்ப்பதுண்டு என்கிறார். அதனால் அவர்களைச் சேர்த்துப் பார்ப்பதே முறை. அன்னை சக்தி அம்சம் என்பதால் பிரித்துப்பார்ப்பதும் தவறில்லை என்பதாகும்.

அன்னை எழுதியது ( Prayers and Meditations) பிரார்த்தனையும் தியானமும் என்ற நூல். தம் யோக அனுபவங்களை, இந்தியா வருமுன் அவர்கள் பதிவு செய்த நூல் இது. இது தவிர (Four Austerities and Four Liberations) நான்கு விரதமும், நான்கு விடுதலையும் என்ற சிறு நூலையும் இயற்றியுள்ளார். 16 வால்யூம்களில் பிரசுரமான மற்றவை அனைத்தும் அன்னை ஆசிரமவாசிகளுக்காகவும், சிறு குழந்தைகளுக்காகவும் பேசியவையே.

சிலர் இறைவனுக்கு ஆத்மாவைச் சமர்ப்பணம் செய்கின்றனர். சிலர் தங்கள் சேவையைக் கொடுக்கின்றனர். சிலர் வாழ்வையே அளிக்கின்றனர். சிலர் செல்வத்தைத் தருகின்றனர். ஒரு சிலர் இவை அனைத்தையும், தங்களையும் சேர்த்து அர்ப்பணிக்கின்றனர். அவர்கள் இறைவனின் குழந்தைகள். மற்றவர்கள், இறைவனைப் பொருத்தவரை அர்த்தமற்ற சூன்யங்கள். தங்களைப் பூரணமாக அர்ப்பணம் செய்ய விரும்புவோர்க்கான நூல் என் "பிரார்த்தனையும் தியானமும்" என்கிறார் அன்னை.

இறைவன் என்றால் என்ன? என்ற கேள்விக்கு இனிமையானதும், மிருதுவானதும், ஜோதிமயமானதுமே இறைவன் என்று அன்னை கூறுகிறார்.

அசைவின்றி, அமைதியால் சூழப்பட்டு, வேகமின்றி, இறைவனைத் தரிசிக்கும் ஆர்வத்தாலும் வேகப்படாமல், சலனமின்றி இருத்தல் எல்லா தியானங்களைவிட உயர்ந்தது என்கிறார். ஸ்ரீ அரவிந்தர் தவம் சித்தித்ததால் சத்தியலோகப் பொன்னொளி அவர் உடலில் வந்து சில நாட்கள் தங்கியது. பின்னர் அவர் உடலை நீத்து சூட்சும உலகிலிருந்து தவத்தைத் தொடர்ந்ததால், அந்த சக்தி பூவுலகில் வந்தது. மேலும் பல ஆண்டுகளுக்குப்பின், அந்த சக்தி ஓரளவு வெளிப்பட்டுச் செயல்பட முனைந்தது. 1969-இல் தெளிவுற்று, உருவம் பெற்று, Superman Consciousnessஆக அன்னைமுன் வந்தது என்று கூறுகிறார். ஒரு மாதத்திற்குப்பின், தாம் முழு அமைதியடைந்த நேரத்தில் அது தம்மை வந்து சூழ்ந்து ஆட்கொண்டு ஆனந்தத்திலாழ்த்தியது. தானே வந்தது; பூரணமாக அது இறைவனின் மாட்சி; தான் சற்று அசைய முற்பட்ட உடன் விலகியது என்கிறார்.

நிஷ்டையில் அமராமல், மந்திரஜபம் செய்யாமல், ஸ்தோத்திரம் படிக்காமல், எதையும் நாடாமல், எதையுமே கருதாமல், இறைவனையும் நாடாமல், அமைதியையும் ஆர்வமாகத் தேடாமல், உள்ளே சலனமற்றிருந்தால், ஸ்ரீ அரவிந்தரால் உலகுக்கு அளிக்கப்பட்ட வரப்பிரசாதமான சத்தியஜீவிய சக்தி தானே நம்மைத் தேடிவந்து ஆட்கொள்ளும் என்பதற்கு தம் அனுபவத்தையே உதாரணமாகக் காட்டி எழுதுகிறார் அன்னை. இது 11-ஆம் வால்யூமில் காணப்படுகிறது.

ஸ்ரீ அரவிந்தரைச் சந்தித்த அதே க்ஷணம் தாம் நெடுநாளாகத் தியானத்தில் கண்ட "கிருஷ்ணா'' இவரே என உணர்ந்த அன்னை, அவரைவிட்டு வருமுன் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து தம் பரிபூரணச் சரணாகதியைத் தெரிவித்தார். ஸ்ரீ அரவிந்தர் இருந்தவரை தம் அறையில் தாம் உட்கார்ந்த நாற்காலியை அவர் அறையை நோக்கிப் போட்டிருந்தார். பிறகு மேல் மாடியில் புது அறை கட்டி அங்கு போனபொழுது, தம் நாற்காலியைச் சமாதி நோக்கிப் போட்டுக்கொண்டிருந்தார். "பிரபோ'' என்று தாம் அழைத்தவருக்கு அன்னை தம்மை சமர்ப்பணம் செய்த வகைகளில் இது ஒன்று. தமக்குப் பிறகு பிரசுரிக்க வேண்டும் என்று அன்னை ரிகார்டு செய்து கொடுத்தவற்றுள்ளும், நூற்றாண்டு வால்யூம்களிலும் இதுபோன்ற செய்திகள் அநேகம் விரவிக்கிடக்கின்றன. 13-ஆம் வால்யூம் பெரும்பாலும் ஆரோவில் நகரத்தைப் பற்றி அன்னையின் கருத்துகளாகும்.

1914லேயே அன்னை தம் ஞான திருஷ்டியால் இந்தியா விடுதலையடைந்துவிட்டதென்றும், விடுதலைப் போராட்டமின்றி வெள்ளையர்கள் தாமே போய்விடுவார்கள் என்றும் கண்டார். இந்தச் செய்தியைப் படித்த குழந்தையொன்று, "உங்கள் திருஷ்டியில் இந்தியா இரு துண்டாக இருந்ததா?'' எனக் கேட்டது. அன்னை அதுபோன்ற விவரங்கள் அப்பொழுது தெரியவில்லை எனப் பதில் கூறினார் என்பது 8-ஆம் வால்யூமில் காணப்படுகிறது.

1914-இல் அன்னை புதுவை வந்தபொழுது பெருமழை பெய்தது. அதற்குமுன் 100 ஆண்டுகளாகப் பெய்யாத மழை என்றார்கள்.

16-ஆம் வால்யூமில் அன்னை தம் மகனுக்கு எழுதிய கடிதங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 15-ஆம் வால்யூமில் தரிசனத்திற்காகவும், புது வருஷத்திலும், பிறந்த நாட்களிலும் கொடுத்த செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன.

அன்னையின் பிரார்த்தனைகளில் கீழ்க்கண்டவாறு சில சொற்றொடர்கள் காணப்படுகின்றன.

  • நானே நீயாகி, நான் என்பதில்லை எனச் செய். நானோ ஞான சூன்யம்.
  • எண்ணம் உவகையால் ஒளி வீசுகிறது. இதயம் இன்பத்தால் இசையை எழுப்புகிறது.
  • என்னைப் பவித்திரமான அன்பின் தழலெனச் செய்.
  • அளவிறந்த கருணைவாரியாக மாற்று.
  • விண்டுரைக்க முடியாத இறைவா, அனாதியான உன்னை நான் கண்டுகொண்ட நாள் புனித நாளல்லவா?

எலும்பு மாலையுடன் காளி தம்மை வந்து சந்தித்து, முதல் உலகயுத்தத்தில் பாரிஸ் நகருக்கேற்பட்ட நஷ்டத்தைச் சொல்லியதையும், அன்னை அதை ஏற்க மறுத்து, அதற்கெதிராக தம் சக்தியைப் பயன்படுத்தி பாரிசைக் காப்பாற்றியதையும் ஓர் இடத்தில் குறிப்பிடுகிறார்.

ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் நடந்ததை அறிய முடியும் என்று விளக்குகிறார். இரவில் தாம் 13 வயதாக இருக்கும்பொழுது தம் ஜீவன் உயரே சென்று பாரிஸ் முழுவதையும் தன்னுள் அடக்கும் அளவு பரந்து நிற்பதையும், துக்கத்தில் மூழ்கியவர் தம்மை நோக்கி அணி, அணியாக வந்து தம் உடையைத் தொட்டவுடன் துக்கம் அழிந்து மகிழ்ச்சி பெறுவதையும் ஓர் இடத்தில் விவரமாக எழுதுகிறார்.

15-ஆம் வால்யூமில் சத்தியஜீவிய உலகத்தை மறைத்துக் கொண்டிருந்த பொற்கதவைப் பொன்சுத்தியால் அன்னை தகர்த்தெறிந்ததையும், பொன்னொளி பிரவாகமாகப் பூவுலகில் பாய்ந்து பெருக்கெடுத்ததையும், பூமியின் தமோ குணம் பொன்னொளியை விழுங்கியதையும் முழு விவரத்துடன் எழுதுகிறார்.

யோக விஷயங்கள் கடினமானவை. அன்னையின் விளக்கம் எளிமையானது. ஸ்ரீ அரவிந்தர், அன்னை நூல்களைப் பயின்றால் பலவிதமான பலன்கள் ஏற்படும். ஆன்மாவில் யோகப் பலனும், வாழ்க்கையில் பலன் வளமாகவும், உணர்வு செறிந்து பூரிப்பதையும், உடல்நலம் பெருகுவதையும், மனம் நிம்மதியடைவதையும் காணலாம். முக்கியமாக அவர்கள் நூல்களிலிருந்து வாசகர் அறியவேண்டியவற்றை மட்டும் கீழே எழுதுகிறேன்.

யோகம்:

  • வேத இரகஸ்யத்தில் ஆரம்பித்து தந்திர இலட்சியத்தில் பூரணயோகம் முடிகிறது.
  • இறைவனே சாஸ்திரம், ஜகத்குருவே குரு.
  • இறைவனை சாஸ்திரமாகவும், குருவாகவும் அறிந்து, அதற்குரிய பொறுமையைக் கைக்கொண்டால், காலத்தால் கட்டுண்ட மனிதனுக்குக் காலம் கட்டுப்படும்.
  • சகிக்க முடியாத கோளாறு நிறைந்ததாகக் காணப்படும் சிருஷ்டி, இறைவனை அறிந்த சாதகனுக்கு அற்புதக் காட்சியாகத் தெரியும்.
  • ஞானம் முற்றிய நிலையில் பக்தியும், கர்மமும் சித்திக்கும்.
  • பூரணயோகம் இறைவனுடையது. சாதகன் பங்கு சரணாகதி மட்டுமே.
  • இருள் நிறைந்த நம் ஜீவனின் பகுதிகளில் விழிப்படைந்து அமைதியாக இருப்பதே பெருந்தவம்.
  • மனிதனுடைய தொல்லைகள் அனைத்தும் அவன் மனத்தில் உற்பத்தியாவதே.
  • உடலுக்குள்ள சக்தி அளவிலடங்காதது. சித்து விளையாடுவோர் தங்கள் சக்தியை உடலின் ஆழத்திலிருந்து பெறுகின்றனர்.
  • கீதை முடிக்கும் இடத்தில் பூரணயோகம் ஆரம்பிக்கின்றது.
  • தெய்வங்களும், ஆன்மீக முன்னேற்றம் பெற பூவுலகில் அவதரிக்க வேண்டும்.
  • மனிதன் தன் முழு ஆர்வத்தோடு தேடுவதைத் தவறாது அடைவான்.
  • திருவுருமாற்றம் மூன்று நிலைகளையுடையது. சைத்தியப்புருஷனால் ஏற்படும் மாற்றம். ஜீவாத்மாவால் ஏற்படும் மாற்றம். சத்தியஜீவியத் திருவுருமாற்றம்.
  • தெய்வத்தை உலகில் வந்து செயல்பட வைக்க மனித தவத்தால் முடியும்.
  • பரமாத்மாவை ஜீவாத்மா அறிந்தபின்னரே பூரணயோகத்தை ஆரம்பிக்க முடியும்.
  • அன்னையை அறிவது கிடைத்தற்கரிய பாக்கியம். அதுவே ஸ்ரீ அரவிந்தரை அறிவதாகும்.
  • இது இறைவன் வரும் தருணம்.
  • மனிதன் சிருஷ்டியின் முடிவல்லன். அடுத்த கட்டம் சத்தியஜீவன்.
  • இதுவரை மோட்சத்தையடைய சரணாகதியை கடைப்பிடித்தனர். பூரணயோகத்தில் சரணாகதி திருவுருமாற்றத்திற்குரிய கருவி.
  • வாழ்வனைத்தும் யோகம்.
  • பெண்கள் யோகத்திற்கு விலக்கல்லர்.
  • விதி முடிவானதன்று.
  • கர்மம் கரைக்கப்படக்கூடியது.
  • மரணத்தை வெல்ல முடியும்.
  • மரணம், நோய், துன்பம் உலகிலிருந்து அழிக்கப்படும்.
  • சத்தியஜீவியம் உலகுக்கு வந்துவிட்டது, செயல்படுகிறது, சத்திய ஜீவனாகவே உருப்பெற்றுள்ளது.
  • அகந்தை அழிந்தவர் அவதாரங்களாகிய அன்னையும், ஸ்ரீ அரவிந்தருமே.
  • மனிதன் முழுவதும் அகந்தையின் ஆட்சிக்குட்பட்டவன்.
  • அகந்தை அழிந்தபொழுது மனிதன் பிரபஞ்சம் முழுவதும் பரவுகிறான்.
  • ஜீவாத்மாவும், பிரபஞ்சத்தின் ஆத்மாவும், பரமாத்மாவும் மனிதனில் சந்திக்கின்றன.
  • முழு விழிப்புற்ற மனிதன் திருவுள்ளத்தைப் பூர்த்தி செய்ய முடியும்.
  • ஒரு சிலருடைய தவம் பலித்தால் உலகம் இருளிலிருந்து விடுபட முடியும்.
  • யோகத்தின் முதற்படிகளாகக் கருதப்படுபவை:

சைத்தியப்புருஷன் வெளிப்பட்டு ஆட்சி செய்ய வேண்டும். மனத்தில் மௌனம் குடிகொள்ள வேண்டும். அகத்தில் ஏற்படுவதே செயலெனப்படும். அகவுணர்வு விழிப்படைய வேண்டும். முறைகள் என்பவை தவிர்க்கப்பட வேண்டியவை. உண்மையுணர்வே உரிய முறையாகும். தானே முனைதல் தவிர்க்கப்பட வேண்டியது. இருளில் உறையும் ஜீவன் விழிப்புற்றுச் செயல்பட வேண்டும். சாந்தம் ஆட்கொள்ள வேண்டும். அகந்தை அழிய வேண்டும்.

வாழ்க்கை:

  • கவலைகளை நாம் மறந்தால் அவை கணநேரத்தில் கரைந்துவிடும்.
  • உடல் தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்ளும் திறனுடையது.
  • உடல், அறிவுக்கு உட்படுவதாலேயே நோய்வாய்ப்படுகிறது.
  • மனிதனால் தீர்க்க முடியாத பிரச்சினை அவனுக்கு ஏற்படுவதில்லை.
  • மனம் மகிழ்ச்சியால் நிறைந்திருப்பது இறைவன் நம் ஜீவனில் செயல்பட உதவும்.
  • புற நிகழ்ச்சிகள் அகவுணர்ச்சியின் பிரதிபலிப்புகள்.
  • பாவம் என்பது செயல்லை. மனநிலையைப் பொருத்தது.
  • செய்யும் செயலை ரசிக்கும் மனநிலை பாவத்திற்கு அஸ்திவாரம்.
  • செயலை அர்ப்பணித்துச் செய்தால், பாவத்திற்கு வழியில்லை.
  • வேண்டுமென்றே பிறருக்கு இழைக்கும் தீங்கு தவறாது தன் மீதே திரும்பும்.
  • சத்தியமும், நன்மையும் இறைவனுக்குரியவை. பொய்ம்மையும், தீங்கும் இறைவனால் சிருஷ்டிக்கப்பட்டவையன்று. சிருஷ்டியின் சிறுமையில் உற்பத்தியானவை அவை.
  • நன்மையால் தீமையை அழிக்க முடியாது. தீமை, நன்மை ஆகியவற்றைவிட உயர்ந்த சக்தியாலேயே தீமை ஒழிக்கப்படும்.
  • மன்னிக்க முடியாத குற்றம் என்று ஒன்றில்லை.
  • வாழ்வின் வெற்றி அதன் சத்தியத்தைப் பொருத்தது.
  • எதிர்காலம் ஆன்மீகத்திற்குரியது; மதவழிபாடு இனி மனிதனுக்குத் துணை செய்யாது.
  • சுபாவத்தை ஒட்டிச்செல்லும் வாழ்க்கை சிறந்த வாழ்க்கை.
  • தெய்வம் மனைவியின் ஜீவனில் உறைவதால், மனைவிக்கு உன் அன்பு உரியது; மனைவி என்பதால் மட்டுமன்று.
  • சுபாவத்தை வருத்தும் விரதங்களைவிட சுபாவத்தை வெளிப்படுத்தும் சிறுநிகழ்ச்சிகள் தெய்வீக வாழ்வுக்குரியவை.
  • கடுமையான உள்ளங்கள் கடுமையான விரதங்களை நாடுகின்றன.
  • செல்வம் இறைவனுக்குரியது.
  • பயனுள்ள முறையில் நடமாடிக்கொண்டேயிருப்பது செல்வத்தின் இயல்பு.
  • தொடர்ந்து நடமாடும் செல்வம் பெருகும். ஓரிடமாகப் பணம் இருத்தல் கூடாது.
  • இன்று அசுரனுடைய பிடியில் உள்ள செல்வத்தை, அவனிடமிருந்து பெற்று இறைவனுக்குச் சமர்ப்பிப்பது சாதகனுடைய கடமை.
  • ஆயுள் உடலின் வயதைப் பொருத்ததன்று. மனத்தின் மலர்ச்சியைப் பொருத்தது.
  • மலர்ந்த மனம் இளமையைத் தரும். உலர்ந்த உள்ளம் வயோதிகத்திற்குரியது.
  • உள்ள நிலைக்கு உரிய மறுமொழியைத் தரவல்லது வாழ்க்கை.
  • வாழ்க்கையின் நியதியை முழுமையாக அறிந்தவனால், வாழ்க்கையைத் தாம் எதிர்பார்க்கும் வகையில் செயல்பட வைக்க முடியும்.
  • நல்ல நேரமும், கெட்ட வேளையும் நம்பும்வரைதான் நம்மைப் பாதிக்கும்.
  • அன்னையை மனத்தின் அஸ்திவாரத்தில் ஏற்றுக்கொண்டவனுக்கு அவன் செயல்பட விரும்பும் வேளை நல்ல நேரமாகும். அவன் செயல்பட விரும்புவதாலேயே அது நல்ல வேளையாக மாறிவிடுகிறது.
  • செயலின் உயர்வு கருதி, அர்த்தமற்ற சமூகத்தைப் புறக்கணிக்க முன்வந்தால், அவனுக்கு சமூகத்தைவிட உயர்ந்த வெற்றி காத்திருக்கும்.
  • மனத்தின் தயக்கத்தை உதறித்தள்ளி, செயலின் சிறப்பை ஏற்றுக்கொண்டால், பிறப்பின் அமைப்பால் ஏற்பட்ட வெற்றியை அவன் தாண்டிச்செல்வான்.
  • மற்றவர் கண்ணோட்டத்தில் பிரச்சினையை அணுகுதல், வாழ்க்கையில் அகந்தையை அழிப்பதாகும்.
  • இறைவனை மனிதனில் காண்பது மகிழ்ச்சியை வாழ்வின் மகுடமாகப் பெறுவதாகும்.
  • தெரிந்ததைத் திருப்பித் திருப்பிச் செய்வது மரணத்தை நோக்கிச் செல்வதாகும்.
  • உள்ளத்தின் மலர்ச்சியால் உந்தப்பட்டுச் செயல்பட்டால் இறைவன் வெளிப்படுவான்.
  • காணும் காட்சிகளில் இறைவனின் சுவடுகள் தெரிந்தால், ஜீவன் அவனுக்கு நன்றி சொல்வதாக அர்த்தம்.
  • உணர்வு வாழ்வை உண்மையுடன் நாடினால், எங்கும் எழில் நிறைந்திருப்பதைப் பார்க்கலாம்.
  • வாழ்வைத் திறந்து இறைவனை உள்ளே அழைத்தால், உணர்வில் பேரின்பம் சுரக்கும்.
  • எந்தச் செயலையும் இறைவனின் திருவுள்ளம் பூர்த்தியாகும் செயலாக மாற்ற முடியும்.
  • வரையறையுடன் பேசுவது யோகச் சிறப்புடையது. மனத்தைக் கட்டுபடுத்தி மௌனம் அனுஷ்டிப்பது வறட்சியை வளர்ப்பதாகும்.
  • குறை கூறாதே.
  • அறிவை நம்பாதே.
  • சௌகரியத்தைத் தேடாதே.
  • செய்யும் செயலை ஆர்வத்துடன் செய்.
  • இடையறாது இறைவனை நாடு.
  • உண்ணும் முன்னும், உறங்கும் முன்னும், பேசும் முன்னும், செயல்படும் முன்னும் இறைவனுக்கு உன் செயலைச் சமர்ப்பணம் செய்.
  • எவனொருவனது மனம் அவனுக்கு அடங்குகிறதோ, அவன் தெய்வத்தைவிட உயர்ந்தவன்.
  • அகந்தையை விலக்கி, இறைவனுக்காகச் செயல்படும் நேரம் இறைவன் வரும் தருணம்.
  • மனத்தை விலக்கி, ஜோதியை நாடினால், மனிதனை விலக்கித் தெய்வம் செயல்படும்.
  • கடந்த காலம் காரிருளானதென்றாலும், எதிர்காலம் ஜோதிமயமாக முடியும்.
  • மனத்தின் ஆட்சி இருளின் நிறைவு; அன்னையின் சிறப்பு மகிழ்வின் மலர்ச்சி.
  • மனப்பீடத்தில் அன்னையை அமர்த்தினால் வாழ்க்கையின் அரியாசனத்தில் உவகை பொங்கும் வெற்றி அமரும்.

*******

Book traversal links for ஸ்ரீ அரவிந்தர் அன்னை நூல்கள்

  • மனிதனுடைய உயர்ந்த குணங்கள்
  • Up
  • நிதானம்

Book navigation

  • முகவுரை
  • புஷ்பாஞ்சலி
  • கடன்
  • அன்னையை ஏற்றுக்கொள்ளுதல் என்றால் என்ன?
  • வாழ்வின் மறுமொழி
  • மனிதனுடைய உயர்ந்த குணங்கள்
  • ஸ்ரீ அரவிந்தர் அன்னை நூல்கள்
  • நிதானம்
  • இடைவிடாத பிரார்த்தனை
  • மானஸீக உருவகம்
  • இந்தியா உலகத்தின் குரு
RSS feed
Powered by Drupal